2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் அரசாங்கம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இரண்டு நாள் பயணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் தென்படத் தொடங்கியுள்ளன.

திடீர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு ஒன்றை விடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இவ்வருடத் துவக்கத்திலிருந்தே, முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக் கூடும் என்ற ஊகங்கள் பரவலாக அடிபடத் தொடங்கியிருந்தன.

ஆனால், அரசாங்கமோ அதனை அடியோடு நிராகரித்து வந்தது.

2016 நவம்பர் வரை, ஜனாதிபதித் தேர்தலோ, 2015 ஏப்ரல் வரை நாடாளுமன்றத் தேர்தலோ நடத்தப்படாது  என்று அடித்துச் கூறியது அரசாங்கம்.
ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்த பின்னர் தான், அடுத்த தேர்தல் என்ற இறுமாப்பில் இருந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் அண்மைக்காலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒன்றில் இதுபற்றிக் கேட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தால், எந்தத் தேர்தலையும் நடத்த தயாராக இருப்பதாக கூறியிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அதையடுத்து, அந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதாகவும், தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்றும் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க.

அவர் அதனை அறிவித்து சில மாதங்களாகி விட்டன.

கடைசியாக மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் வரையில் அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்து அவ்வளவாக அக்கறைப்பட்டிருக்கவில்லை.

ஆனால், தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர், முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்தும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டம் குறித்தும் செய்திகள் வெளியாவது அதிகரித்துள்ளது.

அரசாங்கத் தரப்பில் இருந்து தேர்தல்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் வெறுமனே எதிர்க்கட்சிகளைக் குழப்பும் நோக்குடையதாக மட்டும் கருதிவிடக் கூடியவையல்ல. அரசாங்கத் தரப்பிலுள்ள குழப்பங்களையும் அது பிரதிபலிக்கிறது.

தென், மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, முன்கூட்டியே தேர்தல்களை நடத்தி ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் அரசதரப்பிடம் உருவாகியுள்ளது.

குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான முயற்சிகள் இப்போது தீவிரமடைந்துள்ளன.

முன்கூட்டியே தேர்தலை நடத்துவதால் அதிகபட்சம் ஒரு ஆண்டு பதவிக்காலத்தையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இழக்க நேரிடும்.
அதற்கடுத்து வரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, இந்த ஒரு வருடப் பதவிக்காலத்தை தியாகம் செய்யவும் தயாராகி விட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்வதில் அவர் சில சட்டச் சிக்கல்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டியாக வேண்டியுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதியுடன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
ஜனாதிபதி ஒருவர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பு அனுமதிக்கிறது.

இது 18வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, நடைமுறையில் இருந்தது.

இதன்படிதான், முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் தற்;போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமது முதலாவது பதவிக்காலம் முடிய முன்னரே ஜனாதிபதி தேர்தலை அறிவித்து, தமது இரண்டாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

ஆனால், இப்போதுள்ள சிக்கல் இவற்றுக்கு அப்பாற்பட்டது.

அதாவது, இரண்டாவது பதவிக்காலத்தில் இருக்கும் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, மூன்றாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிடுவதற்கு வழிசெய்யும் 18ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ள நிலையில், அவ்வாறு தனது ஆறாண்டுப் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும்.

அதாவது 18ஆவது திருத்தச்சட்டம், இரண்டாவது தடவை ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவர் அதற்கு மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டக்கட்டுப்பாடுகளை மட்டும் தான் நீக்கியிருக்கிறது.

இரண்டாவது பதவிக்காலத்தில் இருக்கும் ஒருவர் அதற்குப் பின்னர், முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு வழியுள்ளதா என்று எதையும் கூறவில்லை.

எனவே, இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதுபோன்ற விடயங்களில் அரசியலமைப்பு ரீதியான மயக்கங்கள், சந்தேகங்கள் ஏற்படும் போது அதனைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு உயர்நீதிமன்றத்துக்கே உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலம் எப்போது முடிகிறது என்ற சர்ச்சை ஒன்று உருவான போது, அதனைத் தீர்க்கும் ஆலோசனையை உயர்நீதிமன்றமே முன்வைத்தது.

அது அவருக்குப் பாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோலத்தான், இரண்டாவது முறை பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நாளான நவம்பர் 19ஆம் திகதிக்குப் பின்னர், முன்கூட்டியே தேர்தலை நடத்த முடியுமா, இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியது உயர்நீதிமன்றமேயாகும்.

அதேவேளை, இப்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு  அதுவும், நவம்பர் 19ஆம் திகதிக்கு முன்னரே அதற்குரிய அழைப்பை விடுப்பதற்கு அதிகாரமுள்ளதா என்று உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏனென்றால், நாட்டின் அரசியல் சூழல் மற்றும் ஜோதிடர்களின் கணிப்பு ஆகியவற்றைக் கொண்டு, ஜனாதிபதித் தேர்தல் பின்தள்ளப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுவும் கூட அரசாங்கத்துக்கு சிக்கலாக மாறியிருக்கிறது.

பாப்பரசரை இலங்கைக்கு வரவழைக்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு இப்போது தான் அது கைகூடியுள்ளது.
1995 ஜனவரி மாதம் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் இலங்கைக்கு வந்திருந்தார். அதற்குப் பின்னர் பாப்பரசர் ஒருவர் இலங்கை வருவது இதுவே முதல் முறை.

நாடொன்றில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், பாப்பரசர் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதில்லை என்பது வத்திக்கானின் மரபு.

ஆட்சியாளர்கள், பாப்பரசரின் பயணத்தை தமது அரசியல் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை இது.
இதன்படி பார்த்தால், பாப்பரசர் வந்து சென்ற பின்னர் தான், அதாவது ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரே, தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், 35 தொடக்கம் 65 நாட்களுக்கு இடையில், ஜனாதிபதி தேர்தலை நடத்தலாம்.
அவ்வாறாயின், ஜனாதிபதி தேர்தல் நடத்த மார்ச் மாதம் வரையாகி விடும்.

ஆனால், அதுவரை பொறுத்திருப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

எனவே, பாப்பரசரின் வருகையையும் பாதிக்காமல், அடுத்த ஆண்டு மார்ச் ஏப்ரல் என்று தேர்தல் தள்ளியும் போகாமல் இருக்க வேண்டும் என்றால், ஒரே வழி, பாப்பரசரின் வருகைக்கு முன்னர், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக அதாவது, அடுத்த வருடம் ஜனவரி 13ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாயின,; அதற்குரிய அறிவிப்பு வரும் நவம்பர் 19ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்பட வேண்டியிருக்கும்.

ஜனாதிபதியே தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றாலும், அதற்குப் பின்னர், வேட்புமனு மற்றும் தேர்தல் திகதியை தீர்மானிக்கின்றவர் தேர்தல் ஆணையாளர் தான்.

அவர் 35 தொடக்கம் 65 இற்;கு இடைப்பட்ட நாட்களுக்குள் தேர்தலை நடத்தலாம்.

எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்காண்டு பதவிக்காலம் முடிவடைய முன்னர் அதற்குரிய அறிவிப்பை வெளியிட்டால் தான் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும்.

ஆனால், அவ்வாறு நான்கு வருடங்கள் முடிய முன்னரே, தேர்தலுக்கு அழைப்பு விட முடியுமா என்று ஆராயும் பொறுப்பும் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது.

இதற்கு உயர்நீதிமன்றத்தின் விதப்புரையை அரசாங்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் உயர்நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு தான், ஜனாதிபதி தேர்தல் எப்போது என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.
அதேவேளை இன்னொரு சிக்கலும் இதற்குள் இருப்பதாகத் தெரிகிறது.

அதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ, மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர் கூறும் காரணம், 18வது அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்பட முன்னர், அரசியலமைப்பின் 31/2  பிரிவின் கீழ் தான், மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்றும், எனவே மூன்றாவது தடவை போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது ஒன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான காழ்ப்புணர்ச்சியில் அவர் கூறிய கருத்தாகத் தெரியவில்லை.
முன்னர் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சரத் என். சில்வாவுக்கும் இடையில் மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன.
இப்போது அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவரது கருத்தை, சட்டத்தை அடிப்படையாக கொண்டது என்றே கருத வேண்டும்.

இந்நிலையில் மூன்றாவது தடவை தான், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கூட ஒருவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தின் விதப்புரையைக் கோரலாம்.

உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கும் விடயத்தில் அவர், அவ்வளவாகத் தயக்கம் காட்டுவார் என்று எண்ணுவதிற்கில்லை.
ஏனென்றால், 18ஆவது திருத்தச்சட்டம் இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை கெடுத்து விட்டது.

குறிப்பாக உயர்நீதிமன்றமே அரசாங்கத்தின் கைப்பாவையாகவும் அதன் தேவைகளை நிறைவேற்றும் ஒன்றாகவும் மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இத்தகைய நிலையில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று முன்னர் உயர்நீதிமன்றதில் நீதியரசர்களாக இருந்தவர்களே வெறுப்புடன் கூறியிருக்கிறார்கள்.

அதிலும் தற்போது தலைமை நீதியரசராக இருக்கும் மொகான் பீரிஸ், முன்னர் சட்டமா அதிபராக இருந்தவர்.
இதுபோன்ற சாதகமான விடயங்கள் அரசாங்கத் தரப்பில் இருப்பதால் எந்தச் சட்டச் சிக்கல்கள்கள் குறித்தும் அலட்டிக் கொள்ளாமல் அரசாங்கமோ, ஜனாதிபதியோ உயர்நீதிமன்றத்தின்  கருத்தை அறிய முற்படலாம்.

எனவே, ஜனதாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுப்பதற்கு பெரிதான எந்த தடைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

அந்த துணிச்சல், முன்கூட்டியே தேர்தலை நடத்தும் துணிச்சலை அரசதரப்புக்குக் கொடுக்கலாம்.

அதுவும், வரும் செப்ரெம்பர் 20ஆம் திகதி நடக்கவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தலின் முடிவு, ஜனாதிபதித் தேர்தல் பற்றிய முடிவுகளில் கூடுதல் தாக்கம் செலுத்துவதாக அமையும்.

ஏனென்றால், இந்த தேர்தலில் ஆளும்கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்தும் சரிவது உறுதிப்படுத்தப்படுமானால் துரிதமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கும்.

போர் வெற்றி மாயைகள் உடைந்து வரும் நிலையில், ஊவா மாகாணசபைத் தேர்தலில் முன்னைய அளவுக்கு அரசதரப்பு வாக்குகளைப் பெற முடியாது என்பதால், பாப்பரசரின் வருகைக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாகும் என்றே நம்பப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X