2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புதிய பயணம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசியலில் விநோதம் பிறந்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் இணைந்து செயற்பட்டுள்ளன. குறிப்பாக துணை சபாநாயகர் தேர்தல், நீதித்துறை நியமனம் தொடர்பான நீதிபதிகள் ஆணையம் அமைப்பது போன்ற விடயங்களில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் தோளோடு தோள் நின்று பணியாற்றியுள்ளன. ஆனால், அவைக்கு வெளியில் வழக்கமான அரசியல் போரில் குதித்துள்ளன. இந்த வித்தியாசமான நாகரிகம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் வகையில் அமைந்திருப்பது வியக்கத்தக்க முன்னேற்றம்.

சுதந்திர தின உரை வேற்றுமை!

அவைக்கு வெளியில் என்றால் இந்தியாவின் சுதந்திர தின விழா உரை பற்றி எதிர்கட்சிகள் கூறியிருக்கும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவின் 68ஆவது சுதந்திரதின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்புரையாற்றியிருந்தார்.

இதற்கு முன்பு பல பிரதமர்கள் இது போன்ற உரை நிகழ்த்தியிருந்தாலும், மோடியின் உரை பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பெரிய அளவில் பேசப்பட்டது இதுதான் முதல் முறை. குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை பற்றிக் கூட இவ்வளவு பிரபல்யமாகப் பேச்சு எழுந்தது இல்லை. அந்த அளவுக்கு மோடியின் உரை நாடு முழுவதும் ஒரு மோகத்தை உருவாக்கியிருக்கிறது.

அவர், தனது உரையில் ஏற்கெனவே குடியரசுத் தலைவர் உரையிலும், பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் சொல்லப்பட்ட விடயங்களைத்தான் விவரித்துப் பேசினார் என்றாலும், சுதந்திர தினத்தன்று நாட்டின் உயர் பதவியிலிருக்கும் பிரதமரிடம் இருந்து வந்த நம்பிக்கையூட்டும் அந்த வார்த்தைகள் இந்திய மக்களுக்கும் சரி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் சரி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

குண்டு துளைக்காத உடை அணியாமல் இந்த முறை டெல்லி செங்கோட்டையிலிருந்து உரையாற்றினார் நரேந்திரமோடி. மழை பெய்தால் கூட எனக்கு குடை பிடிக்க வேண்டாம்; என்று முன் கூட்டியே அறிவித்தார். இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை ஏற்றும் வைபவத்தில், சாதாரண மனிதர்களும் பங்கேற்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி. நான் பிரதமர் அல்ல.

இந்த நாட்டின் முதல் வேலையாள் என்று மோடி கூறியது அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். இன்னும் சொல்லப்போனால் சுதந்திர தின உரையில் ஒரு நல்ல பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரை என்ன என்பதை ஆசிரியர் ஒருவர் கல்வி நிலையங்களில் வகுப்பு எடுப்பதைப் போல் எடுத்தார் மோடி என்றே சொல்ல வேண்டும்.

அவரது உரையில் மிக முக்கியப் பங்கு வகித்தது நாடு முழுவதும் கழிப்பிட வசதிகள் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்பதாகும். ஏனென்றால், பெண்களின் பாதுகாப்புக்கு அது மிக முக்கியம். சுகாதாரமான இந்தியாவுக்கு அது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கின்ற மோடி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை கழிப்பிடங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் பெண்கள் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை தீர்க்கமான முடிவாக அறிவித்துள்ளார்.

அடுத்து பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவது பற்றி பேசியிருக்கிறார். இந்தியாவில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான பிறப்பு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண் சிசு கொலைகளை அறவே கைவிடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோல், கற்பழிப்பு என்பது இந்த நாட்டுக்கு ஏற்படும் அவமானம் என்பதைச் சுட்டிக்காட்டி, அது போன்ற குற்றங்களில் எந்த ஆண்மகனும் ஈடுபடாத வகையில் பெற்றோர் ஆண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று பாடம் எடுத்துள்ளார்.

பெற்றோரைப் பார்த்து, நீங்கள் பெண் குழந்தைகளிடம் எங்கே போகிறாய், எதற்காக இதைச் செய்கிறாய் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறீர்கள். அதே கேள்வியை ஆண் குழந்தைகளைப் பார்த்தும் எழுப்புங்கள். நற்குணங்கள் தானாகவே வந்து விடும். கற்பழிப்புச் சம்பவங்கள் நடக்காது. இளைஞர்கள் தீவிரவாதிகளாகவோ, நக்ஸலைட்டுகளாகவோ மாறும் ஆபத்தும் உருவாகாது என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியுள்ள அதே நேரத்தில் மாவோயிஸ்டுகள், வன்முறைப் பாதையை விட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

நாம் ஏன் இறக்குமதிக்காக காத்திருக்க வேண்டும். நம் நாட்டில் இளைஞர்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கும் பிரதமர், எங்கு வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள். அதுவும் தரமான பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். நமக்கு இறக்குமதியும் தேவைப்படாது. ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதனால் வாருங்கள். இந்தியாவை படைப்போம் என்பதுதான் நரேந்திரமோடியின் சுதந்திரதின முழக்கம்.

அது மட்டுமின்றி, வறுமையை ஒழிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட சுதந்திர தின விழாப் பேருரையைப் பின் தொடர்ந்துள்ள மோடி, வறுமை ஒழிப்பை இந்தியா முன்னெடுத்துச் செல்லும். அனைத்து சார்க் நாடுகளும் இணைந்தால் இந்த பிரதேசத்திலேயே வறுமையை ஒழித்து விடலாம் என்று எடுத்துரைத்துள்ளார்.

இப்படி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசியுள்ள நரேந்திரமோடியின் பேச்சு பற்றி பா.ஜ.க.வினர் பாராட்டியிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, இதில் எதுவும் புதிதாக இல்லை என்று சாடியிருக்கிறது.

தேர்தல் பிரச்சார மூடிலேயே பிரதமர் இருக்கிறார். அவர் எப்போது அரசு நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீதாராம் எச்சூரி, மோடியின் நடைக்கும் (walk), அவரது பேச்சுக்கும் (talk) நிறைய வித்தியாசம் இருக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்துவது, ஊழலை ஒழிப்பது போன்றவற்றில் இந்த அரசின் செயற்றிட்டங்கள் என்ன என்பது வெளியிடப்படவில்லை என்று வாதிட்டுள்ளார்.

ஆனால், சட்ட அமைச்சராக இருக்கும் ரவிசங்கர் பிரசாத்தோ, சுதந்திரதின உரையில் அனைத்து பாலிஸி முடிவுகளையும் அறிவித்து விட முடியுமா. மோடி பிரதமரான பிறகு நிர்வாகத்தைச் சீர் செய்திருக்கிறார்.

ஆளுக்கொரு திசையில் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு துறைகளை ஒருமுகப்படுத்தியிருக்கிறார் என்று கூறி இதை மறுத்துள்ளார். சுதந்திரதின உரை விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இப்படியொரு வேற்றுமை. ஆனால், இவர்களுக்குள் இனம் புரியாத ஒற்றுமை நீதித்துறையின் சுதந்திரத்தை குறைப்பதில் ஏற்பட்டிருக்கிறது.
நீதிபதிகள் நியமனத்தில் ஒற்றுமை!

நீதிபதிகள் நியமிக்கும் முறையில் இந்தியாவின் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலும், ஆட்சியிலிருக்கும் அரசின் அதிகாரத்தைக் கூட்டும் வகையிலும் கொண்டு வரப்பட்ட நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம், மசோதாவை அனைத்துக் கட்சிகளுமே ஒரு சேர நின்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியிருக்கிறது.

குறிப்பாக அந்த மசோதாவைக் கொண்டு வந்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை ஒஹோவென்று புகழ்ந்துள்ளார்கள். இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய ரவி சங்கர் பிரசாத், இது நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் அல்ல. மாறாக குடியரசுத்தலைவருக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அவருக்குள்ள அதிகாரத்தை நீதிபதிகள் நியமனம் விடயத்தில் மீட்கும் மசோதா என்று கூறினார். இதை காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரித்தன.

மாநிலக் கட்சிகளான அ.தி.மு.க., திரினாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மாநில அளவிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு இது போன்றதொரு ஆணையம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும், தேசிய அளவில் கொண்டு வரப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு வரவேற்பு வழங்கின.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய சுதர்ஸனன் நாச்சியப்பன், 1993க்குப் பிறகு நீதிபதிகள் நியமனம் என்பது ஆட்சி அதிகாரத்திலிருந்து மாறி, நீதித்துறை வசம் போய் விட்டது. கூட்டணி அரசுகள் நடைபெற்றதால் அதை மீட்க முடியவில்லை. இப்போதாவது ஆட்சிக்கு இது பற்றி உள்ள அதிகாரத்தை சட்ட அமைச்சர் மீட்டிருக்கிறார். அவரை பாராட்டுகிறேன் என்றே கூறியிருக்கிறார்.

இப்படி ஏகோபித்த பாராட்டு, வரவேற்பு ஆகியவற்றுடன் இந்தியாவில் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆறு உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு. இதன் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார்.

அவருக்கு துணையாக இரு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருப்பார்கள். அரசு சார்பில் இந்திய சட்ட அமைச்சர் உறுப்பினராக இருப்பார். அது தவிர பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்கட்சி தலைவர் அல்லது அதிக எம்.பி.க்கள் உள்ள எதிர்கட்சி ஆகியோர் அடங்கிய குழு இரு எமினென்ட் பெர்ஷன்களை நியமிக்கும். மொத்தத்தில் அரசு பக்கம் மூன்று பேர், நீதித்துறை பக்கம் மூன்று பேர் என்ற அளவில் நீதிபதிகள் தேசிய ஆணையம் உருவாகியிருக்கிறது.

இந்த புதிய நீதித்துறை நியமனத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், ஆணையத்தில் உள்ள ஆறு பேரில் யாராவது இரண்டு பேர் ஒரு நீதிபதியின் நியமனத்தை எதிர்த்தால் அவர் பெயரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆகவே நீதித்துறை பரிந்துரைக்கும் ஒருவரை ஆட்சித்துறையில் இருக்கும் இரு உறுப்பினர்கள் எதிர்க்கலாம். ஆட்சித்துறை பரிந்துரைக்கும் ஒருவரை நீதித்துறையில் உள்ள இருவர் எதிர்க்கலாம். நீதித்துறையும், ஆட்சித்துறையும் கருத்தொற்றுமை அடிப்படையில் செயற்பட்டால் மட்டுமே நீதிபதிகள் நியமனம் எந்த விவகாரமும் இன்றி நடைபெறும் என்ற அளவுக்கு புதிய நீதிபதிகள் ஆணையம் இந்தியாவில் ஏற்படுத்துப்பட்டுள்ளது.

இது தவிர இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவோர் சேவை மூப்பு அடிப்படையில் மட்டுமல்ல அவருக்கு திறமையும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று 1998 முதல் இரகசியமாக இருந்து வரும் நடைமுறை இப்போது அரசியல் சட்டத்திலேயே இடம்பெற்றிருக்கிறது.

அதுதான் நீதிபதிகள் நியமனம் குறித்த 121 ஆவது இந்திய அரசியல் சட்ட திருத்தத்தின் நிஜ பின்னணி, இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, மத்தியில் அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகள் ஆணையம் ஒருவரை நேரடியாக பரிந்துரைக்கலாம் என்று இருக்கும் ஷரத்து பற்றி கவலையே படாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் (இந்த கட்சிகள் பேசும் மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது) இந்த மசோதாவை போட்டி போட்டுக் கொண்டு ஆதரித்துள்ளன என்பதுதான்.

துணை சபாநாயகர் தேர்தலிலும் ஏற்பட்ட ஒற்றுமை!

நீதித்துறை விடயத்தில் ஒற்றுமை போல் இன்னொரு விடயத்திலும் எதிர்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. அது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தேர்வு செய்வது குறித்தது.

வழக்கமாக ஆளுங்கட்சிக்கு சபாநாயகர் என்றால் எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி போகும். இப்போது பா.ஜ.க.வின் சார்பில் சுமித்ரா மகஜன் சபாநாயகராக இருப்பதால், துணை சபாநாயகர் பதவி காங்கிரஸுக்கு கொடுக்க முன் வந்தது ஆளும் பா.ஜ.க. ஆனால், எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து கொடுப்பதில் பா.ஜ.க. தயக்கம் காட்டிவிட்டு, இப்போது துணை சபாநாயகர் பதவி கொடுக்க முன்வருவது ஏன் என்று சுட்டிக்காட்டி அக்கட்சி அப்பதவியை மறுத்து விட்டது.

அதனால் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக 37 எம்.பி.க்களை வைத்திருக்கும் அ.தி.மு.க.வுக்;கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டு, மு. தம்பித்துரை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் வேட்பாளரை காங்கிரஸ் வழி மொழிந்திருக்கிறது. எதிர்கால தமிழக அரசியலில் இந்த ஒற்றுமை கூட்டணியாகக் கூட மாறும் போக்கு தென்படலாம்.

ஆக சமீப காலமாக அரசியல் கட்சிகளுக்குள் உருவாகியுள்ள இந்த புதிய வகை கூட்டணி (அவைக்குள் ஒற்றுமை, வெளியில் வேற்றுமை) இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. நான் பெரும்பான்மை அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. கருத்தொற்றுமை அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கப் போகிறேன்.

அனைவரும் இந்திய வளர்ச்சிக்கு கட்சி வித்தியாசமின்றி போராடுவோம் என்று கூறி,  முன்னாள் பிரதமர்களையும், இதற்கு முன் இருந்த ஆளுங்கட்சிகளையும் இந்திய வளர்ச்சிக்கு காரணமானவர்கள் என்று பாராட்டியிருக்கிறார் நரேந்திரமோடி. இந்த துவக்கம், பிரதான கட்சியான காங்கிரஸுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியையும் வழங்கி அரவணைத்துச் சென்றால், இந்திய அரசியலில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே ஒரு புதுவிதமான அரசியல் பயணம் தொடரும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X