2025 மே 19, திங்கட்கிழமை

மஹிந்தவுக்காக காத்திருக்கும் வெற்றியும் தோல்வியும்!

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடியான காலகட்டத்துக்குள் இருக்கிறார். ஐக்கிய நாடுகளின் விசாரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசுக்கு எதிரான அல்லது அடங்கா அரசியல் முன்னெடுப்புக்கள், இந்தியாவோடு இன்னும் இன்னும் நெருக்கத்தை விரும்பினாலும் மோடி அரசாங்கம் வெளிப்படுத்தும் பெரியண்ணன் மனநிலை உள்ளிட்டவற்றை (தற்போதைய) நீண்டகால நெருக்கடியாக மஹிந்த ராஜபக்ஷ உணர்க்கிறார்.

அவரின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவுற்று மூன்றாவது பதவிக்காலம் நோக்கிய பயணத்திலும், அந்த நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டு நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்தப் போகின்றது. அதை, அவர் உணர்ந்தே வைத்திருக்கிறார்.
 
இலங்கையின் அரசியல் சூழ்நிலை என்பது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முன்னால் அவ்வளவு பலமாக இருந்ததில்லை. அதாவது, அரசாங்கமோ, எதிர்க்கட்சிகளோ ஜனாதிபதி என்கிற பதவிக்கு முன்னால் மிகவும் மட்டுறுத்தப்பட்ட பலத்துடனேயே இருக்கின்றன.

அதிகாரங்களின் மொத்த இருப்பிடமாக 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி' முறைமை இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரத்தினை வரைந்து அங்கிகரித்த நாடாளுமன்றத்தின் நிலை கூட பல நேரங்களில் செல்லாக்காசாகி விடுகிறது.
 
அப்படிப்பட்ட அதிகாரங்களுக்கான ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டின் முதற்பகுதியில் நடத்தப்படலாம் என்கிற நம்பிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதை, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் அவ்வப்போது உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இரண்டு தடவைகளுக்கு மேலாக ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்கிற அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டதன் பின், ஜனாதிபதியாக வருகின்ற நபரை எதிர்த்து அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்குள் இன்னொருவர் வளர்வது என்பது சாத்தியமே இல்லாதது.

அப்படியான நிலையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்.

அது, அவரின் மூன்றாம் கட்ட ஜனாதிபதி பயணத்துக்கான ஆரம்பமாக இருக்கும். அதை, இலங்கை மக்களுக்கு ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக வீழ்த்தக் கூடிய சக்தியொன்று தற்போது இல்லை. 

சீரான அரசாங்கமொன்று நாடொன்றின் வளர்ச்சியிலும், முன்னோக்கிய பயணத்திலும் எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு பலமான எதிர்க்கட்சியொன்றின் தேவையும் அவசியமானது. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கை பலமான எதிர்க்கட்சியொன்றைக் கொண்டிருக்கவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் பல நேரங்களில் எந்தவித அவதானத்தையும் பெற முடிவதில்லை. பெயரளவிலான எதிர்க்கட்சியாக மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் வரிசையின் இரண்டாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவ்வப்போது கடுக்காய்களைக் கொடுக்கிறது. அது, அவரை கோபத்தின் உச்சத்தில் கொண்டு சேர்க்கிறது.
 
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்கு பற்றி ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வந்திருக்கின்றன.

அதாவது, மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எதிர்கொண்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில், தமிழ் மக்கள்  வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் வெற்றியைப் பெற்றார் என்பது. ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை அடுத்து அந்தத் தேர்தலை வடக்கு தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தனர். அப்படியான சந்தர்ப்பமொன்றிலேயே ரணில் விக்ரமசிங்கவை சுமார் 190,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி கொண்டிருந்தார்.
 
அவரின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலத்துக்கான தேர்தலின் வெற்றியில் 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்' அழிக்கப்பட்டது மாத்திரமே காரணமாக அமைந்தது. 30 வருடங்களாக கோலோச்சி வந்த விடுதலைப் புலிகளை சர்வதேசத்தின் ஆதரவோடு 2009, மே மாதத்தோடு முற்றுமுழுதாக அழித்து நாட்டை ஒருமைப்படுத்திய தலைவர் என்ற பிம்பம் சிங்கள மக்களிடம் இன்னமும் இருக்கின்றது.

நாட்டில் தொடரும் சீரற்ற ஆட்சி தொடர்பில் இருக்கின்ற அதிருப்தியைத் தாண்டும் அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ மீதான அபிமானமும், நாட்டை பாதுகாத்த தலைவர் என்ற பிம்பமும் சிங்கள பெரும்பான்மை மக்களிடம் உண்டு. அதை, இன்னமும் தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.
 
அந்த நடவடிக்கைகளின் போக்கில் அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் விசாரணையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசிற்கு எதிரான போக்கையும் முன்வைக்கின்றன. (அதைத்தாண்டி இனக்குரோத- முரண்பாடுகள் நாட்டுக்குள் தோற்றுவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் உண்டு. அவை தொடர்பில் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்)
 
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் முன்னெடுத்துள்ள விசாரணைகள் என்பது மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தப்போகின்றது.

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களில், மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், மோதல்களில் ஈடுபட்ட தரப்பில் ஒருதரப்பான விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின், விசாரணைகள் என்பது இன்னொரு தரப்பான இலங்கை அரசினை நோக்கிய அழுத்தங்களை அதிகமாக வழங்கும்.
 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மார்ச் மாத கூட்டத் தொடர்களில் இலங்கை மீதான பிரேரணை வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் அதை குறிப்பிட்டளவு சமாளித்து வெற்றி கொண்டு விடலாம் என்று நம்பியது.

ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆளுமை மிக்க திட்டங்களின் முன் அவ்வளவு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எவ்வளவு திருத்தங்கள் செய்யப்பட்டாலும், இறுதியில் இலங்கை ஐக்கிய நாடுகளின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
 
இந்த விசாரணைகள் எதிர்வரும் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமைக்கு சர்வதேச ரீதியில் குறிப்பிட்டளவான இடையூறுகளை ஏற்படுத்தும்.

ஆனால், ஐக்கிய நாடுகளின் விசாரணையை சிங்கள பெரும்பான்மை மக்களிடம் காட்டியே தன்னுடைய வெற்றியை மஹிந்த ராஜபக்ஷ தக்க வைத்துக் கொள்ளுவார்.

நாட்டை ஒருங்கிணைத்த தங்களது தலைவரை சர்வதேசம் தண்டிக்க அனுமதிக்கக் கூடாது என்கிற கோஷம் அல்லது ஊடுருவும் உணர்ச்சியூட்டப்பட்ட மனநிலை என்பது எதிர்த்தரப்பு வேட்பாளரை கண்டு கொள்ள அனுமதிக்காது.
 
ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே நாங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்று உயர்நீதிமன்றத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துவிட்ட போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் குறித்து சிங்கள பெரும்பான்மை மக்களிடம் நம்பிக்கை இன்னமும் வரவில்லை.

தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விடுதலைப் புலிகளின் பிரதிபலிப்பாக உணரும் சிங்கள மக்களும், அவர்களை அப்படியான மனநிலையிலேயே வைத்திருக்கும் இனவாத அரசியலும் தென்னிலங்கையில் தொடர்கின்றது.

அப்படியான அரசியலொன்று தொடர்ச்சியாக தங்களை ஆட்சிபீடத்தில் வைத்திருக்கும் என்று நாட்டின் பிரதான கட்சிகள் நம்புகின்றன.
 
அப்படியானதொரு நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசாங்கத்துடனான மோதல் போக்கு கொண்ட அரசியல் என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உந்துசக்தியாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் இன்னமும் பிரிவினைக் கோஷங்களோடு இருக்கிறார்கள் என்கிற உருவகம் சிங்கள மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

அது, தொடர்கிறது. ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்ற அறிவிப்பும் அதன் போக்கிலேயே கொண்டு செல்லப்படுகின்றது.

 தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமொன்றுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு கோரும் நடவடிக்கைகளின் போக்கிலேயே ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கின்றது என்கிற அடிப்படை தொடர்பில் யாரும் சிந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

மாறாக, புலம்பெயர் புலிகள், ஐக்கிய நாடுகளுக்குள் இருக்கும் புலிகள், வடக்கிலுள்ள புலிகள் என்கிற வரையறைகள் முன்வைக்கப்பட்டு சிங்கள மக்களின் மனதில் புலிகள் தொடர்பிலுள்ள வெறுப்பை  தங்களுடைய வெற்றியாக அறுவடை செய்யப்போகிறது அரசாங்கம். அதற்கான களங்கள் எப்போதும் திறந்தேயிருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது ஜனாதிபதி பதவிக்காலத்துக்கான  வெற்றியிலும் விடுதலைப் புலிகள் என்ற பங்கு எப்படியோ வந்து சேர்ந்துவிடும்.
 
இன்னொரு பக்கம் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகளைக் காட்டி சிங்கள மக்களின் மனதை அரசாங்கத்தோடு வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கத்திலுள்ள அடிப்படைவாதக் கட்சிகள் முன்னெடுக்கின்றன.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தைச் செய்ய வேண்டும் எண்ணத்திலேயே மேற்கு நாடுகள் ஈடுபடுகின்றன என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு சிங்கள மக்களிடம் பெருமளவு எடுபடும்.

அடிப்படையிலேயே மேற்கு நாடுகள் குறித்த எதிர்நிலை மனப்பான்மை என்பது இலங்கையில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
அதுதான், ரணில் விக்ரமசிங்களை அதிக தோல்விகளைக் காண வைத்த காரணங்களுக்குள் ஒன்றாகவும் இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெல்வதற்கான பிரதான காரணங்களாக இவையிருக்கின்றன. இவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்வதற்கு எதிர்க்கட்சிகளினால் அவ்வளவுக்கு முடியாது.
ஆனால், அரசாங்கத்தின் ஆட்சி மீதான அதிருப்தி என்பது சிங்கள மக்களிடத்திலும் உண்டு. அதனை பெருமெடுப்பில் உருமாற்றும் திறனை எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. குற்றச்சாட்டுக்கள் அளவோடு எதிர்க்கட்சிகள் ஒதுங்கி விடுகின்றன.

ஆனால், அவற்றை மக்களிடம் நெருக்கத்தில் சென்று வெற்றிக்கான வழியாக பாவிக்கும் செயற்திறன் அற்று இருக்கின்றன. ஆக, ஆட்சியின் மீதான அதிருப்தி என்பது இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பறிக்கும் காரணியாக இருந்து விடாது.
 
இப்படியான நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். ஆனால், அதன் பின்னர் அவரின் ஆட்சி எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் என்பது பெரும் தலையிடியாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் விசாரணைகளின் பின்னரான அறிக்கை. அது, (பெரியளவில் இல்லாவிட்டாலும்) விளைவிக்கப்போகும் இடைஞ்சல்கள் நீள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கை அல்லது ஜனாதிபதியின் அழுத்தங்களைக் கண்டு கொள்ளாத  மனநிலை அடக்கியாள முடியாததாக இருக்கும்.

இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமொன்று இருக்கின்றது. அதாவது, இலங்கையை சர்வதேச ரீதியில் சிக்கல்களுக்கும் தள்ளும் நிலையை இந்தியா வெளிப்படுத்தாது. ஆனால், தன்னுடைய கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்கும் முயற்சிகளை அது மேற்கொள்கின்றதோ என்ற எண்ணம் மேலேழுகிறது.

ஏனெனில், காங்கிரஸ் தலைமையிலான (இந்திய மத்திய) அரசாங்கம் கொண்டிருந்த நெருக்கத்தை, தற்போதைய மோடி தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் பெரிதாக வெளிப்படுத்தவில்லை.

மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து சந்தித்து இலங்கை அரசாங்கத்தை சங்கடப்படுத்தியிருக்கிறது. அதுபோக, மோடியை இலங்கைக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை.

இவ்வாறான நிலைகளைப் பார்க்கின்ற போது, இன்னும் சில வருடங்களுக்கு இலங்கையை பெரியண்ணன் மனநிலையோடு இந்தியா கையாள முயலும் என்பதை எதிர்பார்க்கலாம். அது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றியின் பின்னரான இடையூறுகளில் ஒன்றாக இருக்கும்.

ஆக, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றி பெற்றாலும், சர்வதேச ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவரின் செயற்பாடுகள் அமையப்போகின்றன.

உள்நாட்டுக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரங்களைக் கோரப்போகின்றது. இன்னொரு பக்கம் இந்தியாவின் அணுகுமுறை என்பன சேர்ந்து வெற்றியை அவ்வளவுக்கு அனுபவிக்க விடாது தள்ளாட வைக்கப்போகின்றது. ஆக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு காத்திருக்கும் வெற்றி அவ்வளவு அமுதங்களை வழங்கிவிட வாய்ப்பில்லை!



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X