2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவை உலுக்கியுள்ள தீர்ப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவை உலுக்கிய இரண்டாவது மிகப்பெரிய நட்ட கணக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

218 நிலக்கரி சுரங்கங்கள்  சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஓகஸ்ட் 25ஆம் திகதி தீர்ப்பளித்திருக்கிறது. புதிய பிரதமராக நரேந்திர மோடி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழ்நிலையில், அவருக்கு முன்பு இருந்த பிரதமர் எடுத்த முடிவை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியிலிருப்போர் அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் மத்திய அரசில் இருப்போருக்கும் சரி, மாநிலத்தில் முதல்வர்களாக இருப்போருக்கும் சரி, உச்ச நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்த போது அடுக்கடுக்கான புகார்கள் அணி வகுத்தன. முதலில் பொதுநலவாய விளையாட்டுபோட்டி ஊழல். அடுத்து ஆதர்ஷ் ஸ்கேம் மூன்றாவதாக 2 ஜி அலைக்கற்றை ஊழல். இதில் தான் இந்திய ரூபாய்ப்படி 1.76 இலட்சம் கோடி நட்டம் என்று இந்திய கணக்காய்வுத் தலைவரின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, இந்திய அரசியலில் பெரும் பிரளயம் ஏற்பட்டது.
 
அந்த வழக்கில்தான் தி.மு.க.வின் சார்பில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா கைது செய்யப்பட்டார். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டார்.

அந்த விவகாரத்தில் எழுந்த அமுலாக்கப்பிரிவு வழக்கில் கடந்த வாரம்தான் கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

இப்படி பரபரப்பாகப் பேசப்பட்ட 2ஜி வழக்குக்குப் பிறகு கிளம்பியதுதான் இந்த நிலக்கரி விவகார வழக்கு. நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு இந்திய ரூபாய்ப்படி 1.86 இலட்சம் கோடி இழப்பு என்று இந்திய கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்திய அரசியலை துவைத்துப் போட்ட இந்த இரு அறிக்கைகளும் அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனங்களாக அமைந்தன
 
சி.ஏ.ஜி. அறிக்கை, இந்திய நாடாளுமன்றத்தை உலுக்கியது. அனல்பறக்கும் வாத விவாதங்கள் நடைபெற்றன. இது விடயத்தில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே ஆணித்தரமாக அறிவித்தார் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்.

ஆனாலும் இந்த விவகாரம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மனோகர் லால் ஷர்மா என்ற வழக்கறிஞர். 1993 முதல் 2010 வரை அமுலாக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு விசாரணை 14.9.2012 அன்று நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரசாந்த் புஷன் என்ற வழக்கறிஞர், கொமன் காஸ் என்ற அமைப்பின் மூலம் 19.11.2012 அன்று பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.

1993 முதல் 2010 வரை விடப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை இரத்து செய்ய வேண்டும், சட்டவிரோத ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று இந்த இரு பொதுநல வழக்குகளினூடாக இரு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கும் இப்படித்தான் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு விடயங்கள் பற்றித்தான் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச் விசாரணையைத் தொடங்கினர்.
 
நீதிமன்ற விசாரணை தொடங்கியதும், மத்திய அரசின் சார்பில் சட்டமா அதிபராக இருந்த வாகன்வதி, தனது முதல் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மத்திய அரசின் பதில் மட்டும் 11 பகுதிகளையும் 2,607 பக்கங்களையும் கொண்டது. நிலக்கரி ஒதுக்கீட்டு கடிதம் கொடுத்ததால் அந்த நிறுவனத்துக்;கு நிலக்கரி எடுக்கும் உரிமை வந்து விடாது.

சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் உரிய உரிமம் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் வாதாடி நிலக்கரி தொடர்பான சட்டங்களில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்களைப் பட்டியலிட்டார் வாகன்வதி.
 
அது மட்டுமின்றி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விடயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், ஆராய்ச்சிக் குழு மூலமே அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

1993 இலிருந்து 2011 வரை நடைபெற்ற நிலக்கரி ஒதுக்கீடுகள் மொத்தம் 218 ஆகும். இவற்றில் தனியார் நிறுவனங்களுக்கு 105ம், அரச நிறுவனங்களுக்கு 99ம் ஒதுக்கப்பட்டன.

அத்துடன், அல்ட்ரா மெகா பவர்திட்டங்களுக்காக 12ம், நிலக்கரியிலிருந்து லிக்யுட் திட்டங்களுக்காக 2ம் என ஆக மொத்தம் 218 ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்ட பிறகு 41 ஒதுக்கீடுகள் இரத்து செய்யப்பட்டன. மொத்தத்தில் 194 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை இரத்து செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தில் முன்பு இருந்த ஒட்டு மொத்த வழக்கு.

இந்த நிலக்கரி சுரங்கங்கள், ஏழு மாநிலங்களில் பரவிக் கிடக்கின்றன. ஜார்கன்ட், சட்டிஷ்கர், ஒடிஷா, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய இந்த ஏழு மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள்தான் இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளைச் செய்ய ஐந்து ஆராய்ச்சிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் மூன்று குழுக்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், இரு குழுக்கள் பா.ஜ.க. ஆட்சியிலிருந்த போதும் உருவாக்கப்பட்டுள்ளன.
 
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர்களாக இருந்த மறைந்த நரசிம்ம ராவ், முன்னாள் பிரதமராகியிருக்கும் மன்மோகன் சிங் ஆகியோர் காலத்தில் இந்த குழுக்கள் உருவாகியிருக்கின்றன.

பா.ஜ.க. சார்பில் பிரதமராக இருந்த வாஜ்பாய் காலத்தில் இரு குழுக்கள் உருவாகியுள்ளன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றம் வரை போனதற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கே காரணமாவார்.

இந்த நிலக்கரித் துறையை தன் பொறுப்பில் வைத்திருந்ததுதான் இதற்கு முக்கிய காரணமாகியது.

இந்தியாவில் உள்ள பிரபல வழக்கறிஞர்களான சாந்திபுஷன், ஹரிஸ் சால்வே, வேணுகோபால், மனோகர் லால் ஷர்மா என்று அனைவரும் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தார்கள்.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தன. மத்திய அரசும் தங்களுக்கு உள்ள அதிகாரம் பற்றி அலசி அனைத்து விடயங்களையும் உச்ச நீதிமன்றம் முன்பு எடுத்து வைத்தது.
 
இறுதியில், இந்த நிலக்கரி ஒதுக்கீடுகளை இதுவரை 36 கூட்டங்கள் மூலம் மத்திய அரசு செய்திருக்கிறது. அந்த ஆராய்ச்சிக் குழுக்கள் அனைத்திலுமே உருப்படியான, வெளிப்படையான நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.

மனு போடும் கம்பெனிகளின் தரம் என்ன, திறமை என்ன என்பது பற்றியெல்லாம் ஒரு ஒப்பீடும் செய்யப்படவில்லை. ஒதுக்கீடுகள் ஒரு தலைப்பட்சமாக இருக்கின்றன.

மனதை செலுத்தி அந்த குழுவில் முடிவுகள் முன்னெடுக்கப்படவில்லை. சில கூட்ட அறிக்கைகளைப் பார்த்தால், விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்ததற்கான ஆதாரங்களே இல்லை என்று சகட்டு மேனிக்கு குறை கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 36 கூட்டங்களில் செய்யப்பட்ட அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் இரத்து செய்துள்ளது.
 
இந்த அடிப்படையில் 218 ஒதுக்கீடுகளில் 12 தவிர அனைத்து ஒதுக்கீடுகளும் இரத்து செய்யப்பட்டுவிட்டன.

அதாவது 206 ஒதுக்கீடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இதில் ஏற்கெனவே வழக்கு விசாரணையில் இருக்கும் போதே மத்திய அரசே இரத்து செய்த 41 ஒதுக்கீடுகளும் அடங்கும். அதே நேரத்தில் அல்ட்ரா மெகா பவர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 12 நிலக்கரி சுரங்கங்களை இரத்து செய்யவில்லை.

அதே நேரத்தில் அந்த சுரங்கங்களிலிருந்து வியாபார நோக்கத்துக்காக நிலக்கரி திருப்புவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசின் ஒதுக்கீடுகளை இப்படி இரத்து செய்வது முதல் முறையல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இருந்த போது பெட்ரோல் குழாய் ஒதுக்கீட்டு சர்ச்சை எழுந்தது.

உடனே அப்போதைய பிரதமர் வாஜ்பாய், 3,158 பெட்ரோல் குழாய் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய உத்தரவிட்டார். ஆனால், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, பிரதமரின் உத்தரவை இரத்து செய்த உச்ச நீதிமன்றம் அந்த ஒட்டுமொத்த விசாரணையையும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் தலைமையில் ஒப்படைத்தது.
 
அதில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இருந்தார். அந்த கமிட்டி தனது 21 பகுதிகளைக் கொண்ட அறிக்கையைக் கொடுத்தது. அதன்படி 297 பெட்ரோல் குழாய் ஒதுக்கீடுகள் முறைகேடானவை என்று கூறி, அதன்படி அந்த ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அப்போது பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வெளியானது. ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவ்ராஜ் பட்டீல் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் வந்தது. அப்போதும் 122 அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்து இந்திய உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியது. இப்போது 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.
 
இவற்றுள் அல்ட்ரா மெஹா பவர் திட்டத்துக்காக உள்ள 12 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி ஒதுக்கீடுகள் சட்டவிரோதம் என்று முடிவு அறிவிக்கப்பட்டு இருப்பதால், அடுத்து இந்த ஒதுக்கீடுகளை என்ன செய்வது என்பது பற்றி அனேகமாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கீழ் தனியாக ஒரு குழு அமைக்கப்படும்  என்று தெரிகிறது.

இந்த நிலக்கரி ஒதுக்கீடு இரத்து பெரிய பரபரப்புடன் பேசப்பட்டாலும், இதில் சென்றமுறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஒரு நல்லதும் நடைபெற்றிருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை இரத்து செய்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின் படி, இயற்கை செல்வங்களை எப்படி ஒதுக்கீடு செய்வது என்று ஒரு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது.
 
அதன்படி குறிப்பிட்ட முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், இப்படித்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள். இதை தங்கள் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், அரசியல் சாசன பெஞ்ச் கொடுத்த இந்த வழிகாட்டுதலுக்குப் பிறகு அன்றைய மின் நிலைமையைக் கருதி, ஏலத்தின் அடிப்படையில் நிலக்கரி ஒதுக்கீடு செய்யாத அரசின் நிர்வாக முடிவினை ஒரு தலைப்பட்சமானது என்றோ, காரணமில்லாதது என்றறோகூறி நீதிமன்றம் தiயிட்டு விசாரிக்க ணிடியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் பார்த்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ய ஏலம் வேண்டாம் என்ற நிர்வாக முடிவு தவறல்ல. ஆனால், அந்த ஒதுக்கீடு வழங்கப்பட நடைமுறை தவறு என்ற ரீதியில் செல்கிறது.

இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு சாதகமான சூழலாகவே தெரிகிறது.

இப்படி ஒரு சூழல் உருவாவதற்கு காரணமாக இருந்தது 2ஜி அலைக்கற்றை வழக்கில் இயற்கை வளங்களை எப்படி விநியோகிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டு, அதற்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய அறிவுரை.

அந்த வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நடத்திய காங்கிரஸின் தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோடு போயிருக்கிறது என்றே கருத வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் எந்த ராஜாவால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இமேஜ் சரிவு ஏற்பட்டது என்று காங்கிரஸார் பிரசாரம் செய்கிறார்களோ, அதே ராஜாவின் வழக்கினால்தான் இப்போது காங்கிரஸின் இமேஜும் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

கொள்கை முடிவு எடுப்பது அரசு நிர்வாகம். அதை சரியா என்று எடை போடுவது உச்சநீதிமன்றம். சட்டங்களை நிறைவேற்றுவது நடாளுமன்றம். அந்த சட்டம் சரியானதா என்பதை அலசி ஆராய்வது உச்சநீதிமன்றம்.

இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் கொண்டு வந்த சட்டப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
 
இப்போது உச்சநீதிமன்றம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதம் என்று மட்டுமே அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஒதுக்கீடுகள் வழங்கிய விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

எப்.ஐ.ஆர்.போடப்பட்ட விசாரணைகள், சுற்றிவளைப்புக்களை துரிதமாக நடந்து வருகின்றன.அந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று பொது நல மனு தாக்கல் செய்தவர்களின் கோரிக்கை பற்றி இப்போதையை தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தீர்ப்பின் ஆரம்பத்திலேயே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பற்றி மட்டுமே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். என்னதான் நீதித்துறையை நிர்வகிக்க ஜூடிஷியல் கமிஷன் நிர்வாகத்தில் இருப்போர் கொண்டு வந்தாலும், ஆட்சி செய்வோர் அத்துலறினால் அந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் இரத்து செய்யும் என்பது மீண்டுமொருமுறை இந்திய ஜனநாயகத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X