2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளை எவ்வழியோ செய்த்தும் அவ்வழியே

Thipaan   / 2014 செப்டெம்பர் 14 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி தமது பதவியை ஏற்றுக்கொண்ட புதிய ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் செய்த் ராத் செய்த் அல்-ஹுசைனுக்கு (Zeid Ra'ad Zeid al-Hussein) இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், அதனை இலங்கையில் பொறுப்பு வாய்ந்த எந்தவொரு அரச நிறுவனமும் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை.

கடந்த 7ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதமர் ஷின்யோ அபே, மறு நாள் நாடு திரும்பு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளியிட்ட கூட்டறிக்கை மூலமே அவ் அழைப்பைப் பற்றி நாடு அறிந்து கொண்டது.

அந்த மிக நீண்ட அறிக்கையிலும் நடுப் பந்தியொன்றுக்குள் தெளிவாக தெரியாத வகையில் மேலும் பல கருத்துக்களைக் கொண்ட நீண்டதோர் வசனத்துக்;குள் தான் இந்த அழைப்பைப் பற்றிய தகவல் செருகப்பட்டு இருந்தது.

'இலங்கை அரசாங்கம் குறிப்பாக, ஐ.நா. மனித உரிமை பேரவையுடனும் அதன் பொறிமுறைகளுடனும் மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்துடனும் தொடர்ந்து செயல்படுவதையும் ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பையும் ஜப்பான் பிரதமர் வரவேற்றார்' என அந்த கூட்டறிக்கையின் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இலங்கை அரசாங்கத்துக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் இடையே அல்லது இலங்கை அரசாங்கத்துக்;கும் ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்;கும் இடையே கடந்த ஐந்தாண்டு காலமாக மிகவும் கசப்பான உறவே இருந்து வருகிறது. அந்த நிலையில் தான் இலங்கை அரசாங்கம் புதிய உயர் ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த முக்கிய தகவலை இந்த கூட்டறிக்கையின் மூலமாவது பல ஊடகங்கள் அறிந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையிலும் அது ஒரு வகையில் மறைக்கப்பட்டு இருந்தமையே அதற்குக் காரணமாகும்.

புதிய உயர் ஸ்தானிகரோடு நற்புறவை வளர்த்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது.

ஆனால், முன்னாள் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையுடன் ஏற்பட்டதைப் போல் புதிய உயர் ஸ்தானிகருடனும் எதிர்க் காலத்தில் முறுகல் நிலை ஏற்பட்டால் இன்று அவருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பு நாளை அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கலாம்.

எனவே, இந்த அழைப்பை மூடி மறைத்து வைத்துக் கொள்வதே நல்லது என்று அரசாங்கத்தின் தலைவர்கள் நினைத்திருக்கிறார்கள் போலும்.
குறிப்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையையும் ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தையும் இலங்கையில் சிங்கள மக்களில் பெரும்பாலானோர் வெறுப்புடன் பார்ப்பதால் அரசாங்கம் இவ்வாறு சிந்திப்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இந் நாட்டில் பலர் இந்தப் பிரச்சினையை அறிவைக் கொண்டல்லாது உணர்ச்சிவசப்பட்டே அணுகுகிறார்கள் என்பதை கடந்த 2ஆம் திகதி முன்னாள் மனித உரிமை ஸ்தானிகருக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து தீக்குளித்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

ஒரு பிரச்சினைக்காக உயிர் துறப்பதை அனுமதிக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க, தாம் என்ன செய்கிறோம் என்பதை இந்த இராணுவ வீரர் அறிந்திருக்கவில்லை என்பது நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவருக்கு எதிராக இந்த இராணுவ வீரர் தீக்குளித்ததன் மூலம் தெரிகிறது.

அத்தோடு நாடும் அந்த இராணுவ வீரரை மறந்து விட்டது. அவர் தீக்குளித்தார் என்று செய்தி வெளியிட்ட பல ஊடகங்களும் மறு நாள் அவர் உயிரிழந்த செய்தியை வெளியிடவில்லை. அவர் உயிரை மாய்த்துக் கொண்டது மட்டுமே இறுதி விளைவாகும்.

இந்தக் கட்டுரையின் நோக்கத்தோடு சம்பந்தப்படாவிட்டாலும் இது போன்ற மற்றொரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். மாடு அறுப்பதை எதிர்த்து கடந்த வருடம் வெசாக் தினத்தன்று தலதா மாளிகை முன்பாக  பிக்கு ஒருவர் தீக்குளித்தார்.

ஆனால், அவரையும் நாடு அத்தோடு மறந்துவிட்டது. இந்த வருடம் வெசாக் தினத்தன்று அவரது ஞாபகார்த்தமாக மாடு அறுப்பதை எதிர்க்கும் எவரும் ஒரு மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றியதாக செய்திகள் வெளிவரவில்லை.

அரசாங்கம் புதிய மனித உரிமை உயர் ஸ்தானிகருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தது மட்டுமல்லாது அரசாங்கத்தின் தூதுக் குழுவொன்று இம் மாத இறுதியில் நியூயோர்க் நகரில் நடைபெறும். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்லும் போது அவரை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

வழமையாக இது போன்ற சந்திப்புகள் இடம்பெறுவதால் நவநீதம் பிள்ளை மனித உரிமை உயர் ஸ்தானிகராக பதவியில்  இருந்தாலும் இம் முறை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்லும் போது இலங்கை தூதுக் குழு அவரையும் சந்திக்கலாம். ஆனால் புதிய உயர் ஸ்தானிகருக்கு விடுத்த அழைப்பு முக்கியமானதோர் விடயமாகும்.

புதிய உயர் ஸ்தானிகர் முன்னாள் உயர் ஸ்தானிகரை விட இலங்கை விடயத்தில் வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றுவார் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது போலும் அல்லது அவரை முன்னாள் உயர் ஸ்தானிகரை விட இலங்கை விடயத்தில் வித்தியாசமாக நடந்து கொள்ளச் செய்ய அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது.

செய்த் ராத் அல் ஹுசைன் மனித உரிமை உயர் ஸ்தானிகராக பதவியேற்றவுடன் அவரை வாழ்த்தி வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவருக்கு அனுப்பிய கடிதத்திலும் இலங்கை அரசாங்கம் அவருடன் புதிய மற்றும் யதார்த்தபூர்வமான உறவை மேற்கொள்ள காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், செய்த் ராத் அல் ஹுசைன் இலங்கை விடயத்தில் நவி பிள்ளையை விட வித்தியாசமாக நடந்து கொள்வாரா என்பது சந்தேகமே.

ஏற்கெனவே அவர், இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாகவும் முன்னாள் மனித உரிமை உயர் ஸ்தானிகரைப் பற்றியும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்தின் இந்த எதிர்ப்பார்ப்புக்கு முரணாகவே அமைந்துள்ளன.

கடந்த 8ஆம் திகதி மனித உரிமை பேரவையின் 27ஆவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது புதிய மனித உரிமை உயர் ஸ்தானிகர் என்ற முறையில் அதனை ஆரம்பித்து வைத்த செய்த் ராத் அல் ஹுசைன், நவி பிள்ளையை இவ்வாறு பாராட்டினார்.

'அவர், இதுவரை காலமும் ஐ.நா. அமைப்பில் இருந்த மிகவும் சிறந்த மூத்த அதிகாரிகளில் ஒருவராவார். அதேவேளை, அவர் மிகவும் திறமையானதும் கௌரவமானதுமான மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஆவார்.

சில அரசாங்கங்களை வெறுப்பூட்டினாலும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பாகுபாடு காட்டப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்தார்.
அவர்களுக்கு அவரது குரலும் பேனாவும் அவசியமாகின. அவர் பின்பற்றிய வழிமுறைகளையே பின்பற்றுவதாக நான் உறுதியளிக்கின்றேன்.'

செய்த்தின் உரையின் இந்தப் பகுதி இலங்கை அரச தலைவர்களின் காதில் விழுந்த மிகவும் கர்ண கடூரமான பகுதியாகத் தான் இருக்க வேண்டும். அவரது உரையில் மற்றொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.

'எனக்கு முன்னிருந்த மனித உரிமை உயர் ஸ்தானிகர் வலியுறுத்திய மற்றொரு விடயம் என்னவென்றால் மனித உரிமைகளை மீறியவர்களும் சர்வதேச சட்டத்தை மீறியவர்களும் அவற்றுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.

தண்டனையற்ற நிலைமையானது மேலும் குற்றமிழைக்கவும் பழி வாங்கலுக்கும் தவறான பாடங்களுக்கும் வழி சமைக்கும். குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்று உத்தரவாதமளிப்பதற்காக பொறுப்புக்களை ஏற்பதும் பகிரங்கமாக குற்றங்களை ஏற்றுக் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்.'

அவ்வாறு ஏறத்தாழ நவி பிள்ளையையின் வாரத்தைகளாலேயே உரையாற்றிய அவர் நேரடியாகவே இலங்கையைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

'மனித உரிமை பேரவையினால் சிபாரி;சு செய்யப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணைக்கு நான் பெரும் முக்கியத்துவத்தை வழங்குகிறேன். மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகம் இந்த அமர்வின் இறுதிக் கட்டத்தில் அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்.

நீதியினதும் நல்லிணக்கித்தினதும் நன்மைக்காக இந் நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் இலங்கையை ஊக்குவிக்கின்றேன்.
இலங்கையில் மனித உரிமை சமூகத்துக்;கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு எதிராகவுமான மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சுகிறேன்.

அத்தோடு நாட்டில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் நான் கண்டிக்கின்றேன்.'

நவி பிள்ளை தொடர்ந்தும் மனித உரிமை உயர் ஸ்தானிகராக இருந்திருந்தால் அவரும் இலங்கை தொடர்பாக இதை விட வித்தியாசமாக எதனையும் கூறுவார் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

புதிய மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஜோர்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் என்பதாலேயே அரசாங்கம் அவரை தம் பக்கம் வளைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறது, முயற்சிக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் மற்றும் வன்முறைகளுக்கு பின்னால் இருப்பதாகவும் அவற்றை கண்டும் காணாததைப் போல் இருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டப்பட்டு வந்த போதிலும் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்குகளில் உதவி வரும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் ஜோர்தானும் ஒரு நாடாகும்.

எனவே தான் நவி பிள்ளையை விட வித்தியாசமான முறையில் செய்த் ராத் அல் ஹுசைன் இலங்கைப் பிரச்சினையை அணுகுவார் என்று இலங்கை அரசாங்கம் நினைக்கிறது போலும்.

ஆனால், அரசாங்கத்தின் அந்த எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா என்பதைப் பற்றி தற்போது பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

பிள்ளை செய்ததை விட வித்தியாசமான எதனையும் செய்த் ராத் அல் ஹுசைனிடம் எதிர்ப்பார்க்க முடியாது என அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளும் அண்மையில் கூறியிருந்தன.

ஆனால், அவர்களும் ஹுசைனின் மேற்படி உரையின் பின்னரே அவ்வாறு கூறுகின்றனர். அதாவது அவர்களும் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்து இருந்துள்ளனர் போலும்.

நவி பிள்ளை இந்திய வம்சாவளியைக் கொண்ட தென்னாபிரிக்க தமிழ் பெண்ணாவார். அவரது தமிழ் இனத்துவத்தின் காரணமாக அவர் புலிகள் அமைப்புக்கு சாதகமானதோர் நிலைப்பாட்டில் உள்ளார் என இலங்கையில் பலர் கருதுகிறார்கள்.

அவர் பக்கச்சார்பானவர் என இலங்கை அரசாங்கமும் பல முறை குற்றஞ்சாட்டியுள்ளது. சிலவேளைகளில் அவரும் அந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதைப் போல் நடந்து கொண்டு உள்ளார்.

கடந்த வருடம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது முள்ளிவாய்க்காலில் வைத்து போரில் இறந்தவர்களை நினைவுகூர அவர் எடுத்த முயற்சி அதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

அப்போது அவர் புலிகளை நினைவுகூருவதாக கூறவில்லை தான். ஆனால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் அவ்வாறானதோர் நிகழ்ச்சியை நடத்த முயற்சித்தால் எவரும் சற்று வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்பதையும் அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.

அரசாங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் அந்த முயற்சியை கைவிட்டார்.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதில் தமது இனமான தமிழ் இனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டார் என அரசாங்கம் நவி பிள்ளைக்கு எதிராக குற்றஞ்சாட்டினாலும் அந்த விடயத்தில் செய்த் ராத் அல் ஹுசைனுக்கு எதிராக குற்றஞ்சாட்ட முடியாது.

அதேவேளை ஜோர்தானியராக இருந்தாலும் இலங்கைக்காக மனித உரிமை பேரவையின் செயற்பாடுகளை மாற்ற அவருக்கும் போதிய காரணங்கள் இல்லை.

இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று பிரேரணைகளையும் அமெரிக்காவின் தலைமையிலேயே பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

செய்த் ராத அல் ஹுசைன் நவி பிள்ளையை விடவும் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்றே கூறப்படுகிறது.

நவி பிள்ளை இஸ்ரேலின் அண்மைக்கால படு பாதகச் செயல்களை எதிர்த்ததன் காரணமாகவே முன்னைய மனித உரிமை உயர் ஸ்தானிகர்களைப் போல் 8 ஆண்டுகள் பதவியில் வைத்திருக்காது அவரை 6 ஆண்டுகளில் ஓய்வு பெறச் செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு செய்த அமெரிக்கா செய்த்தை விரும்புகிறது. எனவே அவரது அமெரிக்கச் சார்புத் தன்மை தெளிவாகிறது. இலங்கை அரசாங்கத்துக்;கும் மனித உரிமை பேரவைக்கும் இடையிலான பிணக்கானது தற்செயலல்ல.

போரின் இறுதிக் கட்டத்தின் போது போரை நிறுத்துமாறு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறின.  ஆனால், புலிகளின் தலைவர்கள் அரச பிடியில் சிக்கிக் கொண்டதைப் போல் கிளர்ச்சிக் குழுவொன்று சிக்கிக் கொண்டால் எந்தவொரு நாட்டிலும் அரசாங்கம் ஒன்று அந்த சந்தர்ப்பத்தை கைவிடாது.

அரசாங்கம் இவ்வாறு மேற்கத்திய நாடுகளின் ஆலோசனையை மதிக்காததால் அந் நாடுகளுக்கு எற்பட்ட மனக்குறைவு இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந் நாடுகளை தூண்டியது.

மனித உரிமை தான் அந்த நாடுகளின் அக்கறையென்றால் ஆகக் கூடுதலான தண்டனை வழங்கப்பட வேண்டிய இஸ்ரேலை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் எவ்வாறு ஆதரிக்க முடியும்?

மறுபுறத்தில் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் பொறிமுறையொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போர் முடிவடைந்து ஒரு வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு உத்தரவாதமளித்திருந்தார்.

ஆனால், போர் முடிவடைந்து ஐந்தாண்டுகள் கழிந்தும் போரின் போது இடம் பெற்ற ஒரு குற்றத்திற்காகவேனும் ஒருவராவது தண்டிப்பது ஒரு புறமிருக்க இன்னமும் நீதிமன்றத்துக்காவது கொண்டுவரப்படவில்லை.

இந்தக் காரணிகள் அவ்வாறே இருக்க செய்த் வந்தார் என்பதற்காக சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான நிலைமைகள் எதுவும் மாறப்ப போவதில்லை.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X