2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்திய உச்சநீதிமன்றம் காப்பாற்றும் மனித உரிமை

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் உத்தரவு பிறப்பித்திருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் 1,382 சிறைச்சாலைகள் இருக்கின்றன. அவற்றுள் மத்திய சிறைச்சாலைகள் 123. மற்ற சிறைச்சாலைகளில் மாவட்ட அளவிலான சிறைச்சாலைகள், கிளை சிறைச் சாலைகள், பெண்கள் சிறைச்சாலைகள், சிறுவர் சிறைச்சாலைகள் என்று பல்வேறு வகையான சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலை. முக்கிய அரசியல் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்ததுண்டு.
 
இந்திய சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் 3.23 லட்சம் பேர்தான். ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 3.81 லட்சம் கைதிகள் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Record Bureau) வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த 3.81 லட்சம் கைதிகளில் 2.54 லட்சம் கைதிகள் அனைவரும் விசாரணை கைதிகள் (Undertrials) என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் மூன்று வகை விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். ஜாமினில் வெளிவர முடியாத குற்றங்களைச் செய்து நீதிமன்றத்தால் ஜாமின் மறுக்கப்பட்டவர்கள் ஒரு வகை. ஜாமினில் வெளிவரமுடியாத குற்றத்தைப் புரிந்து கைது செய்யப்பட்டு, ஜாமின் கிடைத்தும் நீதிமன்றம் விதித்த ஜாமின் தொகையையோ அல்லது உத்தரவாதத்தையோ (Surety) நிறைவேற்ற முடியாதவர்கள் இரண்டாவது வகை. ஜாமினில் வெளிவரும் குற்றங்களைப் புரிந்திருந்தாலும் ஜாமின் தொகை கட்ட முடியாததால் ஜாமினில் வர மறுத்து சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் மூன்றாவது வகை. இப்படி சிறைச்சாலைகளுக்குள் இருக்கும் கைதிகளின் மனித உரிமை பற்றி அக்கறை காட்டியுள்ள உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்ய சில விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
 
பொதுவாக விசாரணைக் கைதிகளின் பிரச்சினை இந்தியாவில் 1973 வாக்கில் ஒரு தனிக்குழுவே (Working Group) வைத்து விவாதிக்கப்பட்டது. “இந்திய சிறைச்சாலைகள் ஏன் கைதிகள் நிரம்பி வழியும் இடமாக இருக்கிறது” என்பது பற்றி அப்படியொரு ஆய்வு நடந்தது. பிறகு 1979இல் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.ஆர். கன்னா என்பவர் இந்திய சட்டக் கமிஷனின் (Law Commission of India) தலைவராக இருந்த போது சிறைகளில் இருக்கும் “விசாரணைக் கைதிகளின் நிலைமை” குறித்து ஆய்வு மேற்கொண்டு அது பற்றி விரிவான பரிந்துரைகளை அப்போது சட்ட அமைச்சராக இருந்த சாந்தி பூஷனிடம் கொடுத்தது. (இவர் இந்தியாவைக் கலக்கும் பிரபல 2-ஜி ஊழல், நிலக்கரிப் பேர ஊழல், சி.பி.ஐ. டைரக்டர் மீது புகார் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களைத் தாக்கல் செய்து வரும் பிரசாந்த் பூஷனின் தந்தையாவார்) அதில் “வழக்குகளை நான்கே மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்” என்பது ஒரு முக்கியப் பரிந்துரை. வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து விட்டால், விசாரணைக் கைதிகள் பெரும் அளவில் சிறைகளில் இருக்க மாட்டார்கள் என்று நீதியரசர் கன்னா கருதினார்.
 
இதன்பிறகு 1996 வாக்கில் “காமன் காஸ்” (Common cause) வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அவ்வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக் கைதிகள் விடுதலை செய்ய 9 கட்டளைகளைப் பிறப்பித்தார்கள். அவர்கள் செய்த குற்றத்திற்கு தகுந்தாற்போல் இந்திய தண்டனைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தண்டனை அடிப்படையில் அந்த விடுதலை இருந்தது. ஆனாலும் விசாரணைக் கைதிகள் சிறைச்சாலைகளில் குவிந்து கிடப்பதை குறைக்க முடியவில்லை. இதனடிப்படையில் 1999 வாக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் விசாரணை கைதிகள் விடுதலை பற்றி விரிவாக ஒரு கடிதமே எழுதியது. ஆனாலும் நிலைமையில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை.
 
இந்நிலையில் 2000ஆம் வாக்கில் இந்திய சுப்ரீம் கோர்ட் அனைத்து மாநிலங்களுக்கும் வேறு மாதிரி ஒரு உத்தரவைப் போட்டது. தங்கள் மாநில சிறை சாலைகளில் இருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையை சுப்ரீம் கோர்ட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது. அதில் தகவல் கொடுக்காத மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதமே விதித்து மனித உரிமைகள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டது. இது போன்ற காலகட்டத்தில் 1973ம் வருடத்திய இந்திய குற்றவிசாரணை நடைமுறைச் சட்டத்திற்கு (Criminal Procedure Code) 2005-ம் ஆண்டு ஒரு திருத்தம் (Amendment)  கொண்டு வரப்பட்டது. குற்றவழக்குகளை விசாரிப்பது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்குவது, வழக்கில் தீர்ப்பளிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்கு விசாரணை நடைமுறை இந்த சட்டத்தின்படிதான் இந்திய நீதிமன்றங்களில் நடைபெறுகிறது. ஜாமின் பெறும் அத்தியாதத்தில் இந்த திருத்தத்தின் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்தினார்கள். அப்பிரிவு 436A.
 
இந்தப் பிரிவு என்ன சொல்கிறது? குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் விசாரணை கைதி அந்த குற்றத்திற்கான சிறை தண்டனையில் பாதி வருடங்களை கழித்து விட்டால், அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்யலாம் என்பதுதான் இந்த பிரிவின் முக்கிய அம்சம். மனித உரிமைகளை மதிக்கும் மகத்தான பிரிவு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டது. அதாவது ஏழு வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கும் குற்றத்தைப் புரிந்து விட்டு, கைது செய்யப்பட்டு, ஜாமின் கிடைக்காமல், விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் ஒருவர் மூன்றரை வருடங்கள் சிறையில் கழித்து விட்டால் அவரை ஜாமினில் விடுதலை செய்யலாம். சிறைச்சாலை இருக்கும் மாவட்ட போலீஸ் அதிகாரியும், மாவட்ட நீதிபதியும் சம்பந்தப்பட்ட சிறைச்சாலைக்குச் சென்று இது போன்ற உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்று இருக்கிறது. இந்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தில் உள்ள 436A பிரிவை ஞாபகப்படுத்தி, விசாரணைக் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
 
இந்தப் பிரிவிலேயே இப்படி விடுதலை செய்யப்படுவோருக்கு இன்னொரு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட பிறகு அவரை போலீஸ் விசாரணைக்கு அழைக்கக் கூடாது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் விசாரணைக் கைதி ஜாமினில் விடுவிக்க மட்டுமே சலுகை. அந்த கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட மாட்டாது. இதை விட முக்கியமாக விசாரணைக் கைதி வேண்டுமென்றே தன் வழக்கை இழுத்தடித்து அதன் காரணமாக அவர் சிறையில் இருந்திருக்க நேர்ந்தால், அந்த இழுக்கடிக்கப்பட்ட காலத்தை பாதித் தண்டனை அனுபவித்த காலத்தில் கணக்கிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் “மனித உரிமைகளை” மதிக்க கைதி விடுதலை, விடுதலை செய்யப்பட்ட பிறகு போலீஸ் தொந்திரவு இல்லாமல் இருக்க பாதுகாப்பு, அதே நேரத்தில் வழக்கை குற்றம் சாட்டப்பட்டவே “இழுத்தடிப்பதை” தடுத்து, வழக்குகள் விரைந்து முடிப்பதற்கான சூழ்நிலை என்று மூன்று முக்கிய அம்சங்கள் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் மாதத்தில் எவ்வளவு பேர் விடுதலையானார்கள் என்பது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
இந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒவ்வொரு தலைமை நீதிபதிகளும் சாதாரண மனிதனின் உரிமைகளைக் காப்பாற்ற அரிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். சமீப காலமாக மனித உரிமைகள், தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை, ஊழல் வழக்குகள் போன்றவற்றில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி வருகிறது. தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே. கபாடியா மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (Central Vigilance Commissioner) தலைவர் நியமனமே செல்லாது என்று தீர்ப்புக் கூறினார். நீதிமன்றத்தின் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் அது ஒரு முக்கியத் தீர்ப்பு. தலைமை நீதிபதியாக பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிரடித் தீர்ப்பை வழங்கினார். “சத்ருகன் சவுகான்” என்பவரது வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளுக்கு உள்ள உரிமைகளை விரிவாகப் பட்டியலிட்டு 12 கட்டளைகளை பிறப்பித்தார். இது மனித உரிமைகள் மற்றும் வாழும் உரிமை போன்றவற்றில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. தூக்குத் தண்டனை விவகாரத்தில் புதியதொரு அத்தியாயத்தை துவக்கி வைக்க இந்த மனித நேயத் தீர்ப்பு உதவியது. அதன் விளைவாகத்தான் ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆர்.எம்.லோதா வருகின்ற செப்டம்பர் 27-ம் திகதி ஓய்வு பெறுகிறார். அவர் அளித்த இந்த “விசாரணைக் கைதிகள்” விடுதலை பற்றிய உத்தரவு மனித உரிமைகளைக் காப்பாற்றும் நீதிமன்றங்களின் முயற்சியில் மேலும் ஒரு மைல்கல்! இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நீதித்துறை இப்படி மனித உரிமைகளின் பக்கம் ஸ்திரமிக்க தூண் போல் நிற்பது மற்ற நாடுகளுக்கு ஒரு வழி காட்டி!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X