2025 மே 17, சனிக்கிழமை

ஓரவஞ்சனை கபடநாடகம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 14 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஞ்சி லுரமுமின்றி
       நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ-கிளியே
       வாய்ச்சொல்லில் வீரரடீ...

இது பாரதியாரின் 'நடிப்பு சுதேசிகள்' என்ற தலைப்பின் கீழுள்ள கவிதையடிகளில் ஒரு பந்தியாகும். அவ்வரியில் உள்ளவை, இக்கால தமிழ் அரசியல்வாதிகளுக்கு சாலப் பொருந்தும். தற்கால தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டு அரசியலை விடவும் அறிக்கை அரசியலில் மகா வல்லவர்கள். 

ஒரு விடயம் கிடைத்துவிட்டால் மற்றொரு விடயம் கிடைக்கும் வரையிலும் உடும்புப் பிடிபோல் அதிலேயே ஒட்டிக்கொள்வர். அதிலும் சில தமிழ் அரசியல்வாதிகள், நாடாளுமன்றக் கதிரையைச் சூடாக்குவதில் மட்டுமே குறியாக இருப்பர். அது வேறுவிடயமாகும்.

நாட்டின் அண்மைக்கால அரசியலைப் பொறுத்தவரையில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனரா அல்லது வெளியேறினரா என்ற வாதப்-பிரதிவாதங்கள் சூடுபிடித்திருந்தன.

மறுபுறத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, தீபாவளி கொடுப்பனவு விவகாரங்கள் சூடுபிடித்திருந்தன. தீபாவளித் தள்ளுபடியாக, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெரிதாகப் பேசப்பட்டது. 

அதற்கிடையில், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு கருவாக இருந்த சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் இறைபதம் அடைந்துவிட்டார். 

அறிக்கை அரசியல்வாதிகள், மேற்குறிப்பிட்ட விடயங்களை வைத்து அறிக்கை அரசியலை நகர்த்தினர். அதில், தீபாவளி வாழ்த்துச் செய்தியாகவும் சோபித தேரருக்கு அனுதாபச் செய்தியாகவும் இருந்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம், முஸ்லிம் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், தமிழ்மொழி பேசும் அறிக்கை அரசியல்வாதிகளுக்கு தீனிபோட்டுவிட்டன.

அதில், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மட்டும்,  ஓரளவுக்கேனும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நீதிமன்றம் வரையிலும் சென்றிருந்தது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம், செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இன்னும் இருக்கின்றது. இந்நிலையில், அடிப்படைச் சம்பளத்தில் ஒரு சதத்தையேனும் அதிகரிக்கமாட்டோம் என்று முதலாளிமார் சம்மேளம் தெரிவித்துவிட்டதாக, தொழிலுறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துவிட்டார்.

அதற்காக முதலாளிமார் சம்மேளனத்தை கண்டித்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை நிந்தித்தும், எதிர்காலங்களில் விடப்படுகின்ற அறிக்கைகள் அனல்பறக்கும். 

இந்த தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் இரண்டு அறிக்கைகளை விட்டிருந்தனர்.

அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், 09ஆம் திகதி அனுப்பியிருந்த அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளில் முதற்கட்டமாக 32 பேருக்கு பிணை வழங்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

அமைச்சர் மனோகணேசன், 10ஆம் திகதியன்று அனுப்பியிருந்த அறிக்கையில், பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணைக் கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இணங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த இரண்டு அறிக்கைகளுமே, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலானவையாகும். 

அமைச்சர்களே, நீங்கள் இருவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தீர்கள் தானே, அப்போது உங்கள் வாய்களில் கொழுக்கட்டைகளா இருந்தன? அல்லது ஆமாஞ்சாமி போட்டுவிட்டு அறிக்கை விட்டீர்களா? இன்றேல், அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் தலையாட்டிப் பொம்மைகளாக இருந்து அறிக்கைவிட்டீர்களா?

தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்றால், அவர்கள் எவ்வாறான பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்று கேட்கவில்லையா? அல்லது, அக்கூட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அதிகாரிகள் எவரும் கலந்துகொள்ளவில்லையா?

பிணையா, நிபந்தனைகளுடன் கூடிய பிணையா அல்லது கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையா என்பதைக் கேட்டு அறிவித்திருந்தால், தங்களுடைய உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பி நீதிமன்ற வாயில்களில் தவமாய்த் தவங்கிடந்தவர்கள் முன்கூட்டிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பர். 

உங்களுக்கு முன்கூட்டிய சிந்தனை இன்மையால், அரசியல் கைதிகளை அழைத்துச்செல்ல வந்தவர்கள், எவ்விதமான முன்னேற்பாடுகளும் இன்றி வந்துவிட்டனர். இறுதியில், எங்கிருந்து அழைத்துவரப்பட்டனரோ அங்கேயே அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.

கம்பிக்குள் இருக்கின்ற தங்களுக்கு, தீபாவளிக்காக ஏற்றப்பட்ட ஒளியுடன் வாழ்விலும் ஒளிவீசும் என்றிருந்தவர்களின் வாழ்க்கையில், மீண்டும் இருள் சூழ்ந்துகொண்டுவிட்டது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்புக் கூறவேண்டும்.

தங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கையில், அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உறுதிமொழியுடன் நிறைவு செய்துவைத்தார். 

உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழியுடன் அதனைக் கைவிடுவதும் தமிழ் அரசியல்கைதிகளின் வரலாற்றில் தொடர் கதைகளாகவே இருந்தன. அதனடிப்படையிலேயே, நல்லாட்சி அரசாங்கத்தின் உறுதிமொழியை நம்பி அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

தீபாவளிக்குப் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் மாதம் 11ஆம் திகதியன்று காலை 11 மணிக்கு, தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிவுறுத்தல் கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்குச் கொண்டுவர, கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகலவின் உத்தரவின் பேரில் அத்தனை பேரும், நவம்பர் மாதம் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அந்த அரசியல் கைதிகளில் 31 பேர், மாலை மூன்று மணிக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டனர். காலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை மாலையில் குறைந்து விட்டது. ஒருவருக்கு என்ன நடந்தது என்றுதெரியவில்லை. 

பிணைகளோ, கடும் நிபந்தனைகளுடன் கூடியவை. வந்திருந்தவர்களோ சாதாரணமானவர்கள், பிணையாளிகள் சொந்த ஊர்க்காரர்களாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையால், நீதிமன்ற வாயிலில் காத்திருந்த உறவுகள் கண்ணீருடன் ஊர்களுக்குப் புறப்பட, கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்த அரசியல் கைதிகள் தீபாவளி ஒளியை அணைத்து, இருள்சூளும் கம்பிகளுக்குப் பின்னால் செல்வதற்காய் கம்பிகளால் வேயப்பட்ட பஸ்ஸில் ஏற்றப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, பிணைக் கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இணங்கும் என்று அமைச்சர் மனோ கணேசன் விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி அசாத் நவாப், 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களின் கீழ், சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு கோரி நின்றார். 

இங்குதான் அமைச்சர் மனோ கணேசனின், 'பிணைக் கோரிக்கைக்கு இணங்கும்' என்பது பொய்த்துவிட்டது. அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு, பிணையாகி இப்போது கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையாகிவிட்டது.

சந்தேகநபர்களை, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா இவ்விரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பிணையாளிகள், சந்தேகநபர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியாது என்றாலும், யதார்த்தத்தின் அடிப்படையில் பார்த்தோமேயானால், பத்துக்கு மேற்பட்ட வருடங்களாக, அதுவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் இருக்கின்ற ஒருவருக்கு சரீரப் பிணை வழங்குவதற்கு தலா 10 இலட்சத்துக்கு யார்தான் முன்வருவர்.

அத்துடன்;, கிராமசேவகரின் சான்றிதழ் ஊடாக உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. தனக்கு அறிமுகமில்லாத ஒருவருக்கு கிராமசேகவர் சான்றிதழ் வழங்கமாட்டார். அவ்வாறிருக்கையில், பத்துக்கு மேற்பட்ட வருடங்களாக சிறையில் இருப்பவர்களுக்கு எவ்வாறு சான்றிதழ் வழங்குவார். 

சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்த நீதவான், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை வவுனியா அல்லது கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சமுகமளித்து, கையொப்பமிடுமாறும் கட்டளையிட்டிருந்தார். 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வதிவிடம் மாற்றப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கவனத்துக்குக் கொண்டுவருமாறும் நீதவான் கட்டளையிட்டிருந்தார். 

குற்றஞ்சாட்டப்பட்டு 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக சிறையில் இருக்கின்ற ஒருவரின் வதிவிடம் எவ்வாறு மாற்றப்படும் என்பது சந்தேகத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தும் கேள்வியாகும். அக்கேள்விக்குச் சட்டத்தில் பதிலிருக்கும்.

'தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தில் 48 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு சிறைச்சாலையிலும் 116 பேர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்படுபவர்களாகவும், 52 பேர் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத கைதிகளாகவும் ஆக மொத்தம் 216 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்' என சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்திருந்தார்.

இதில், எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு பிணைக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்பது இன்னுமே புரியாத புதிராக இருக்கின்றது.
இந்தப் பிணை விடயத்தில் அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதனும் மனோ கணேசனும் தெளிவாக இருந்திருப்பார்களாயின், அரசியல் கைதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவினரேனும் விடுதலை செய்யப்பட்டிருப்பர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக ஏதோவொரு வகையில் தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தாலும் அவர்களைப் புலிப் பயங்கரவாதிகள் என்று சித்திரித்து அவர்களை விடுவிக்கக்கூடாது என்பதில் தென்னிலங்கை கடும்போக்கு சிங்கள பேரினவாதிகள் களத்தில் இறங்கியிருந்தனர்.

விடுவிக்கப்படவேண்டிய தமிழ் அரசியல் கைதிகளில் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள் என்று தெரியாத மலையக அரசியல்வாதிகள், என்னா நடந்தா நமக்கென்னா, என்று அடுப்புச் சாம்பலில் 
தூங்கும் பூனைகளைப் போல் இருக்கின்றனர்.

ஆகமொத்தத்தில், பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் சார்பில் நகர்வு மனுக்களைத் தாக்கல் செய்து, பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து வெளியே வந்தால், அவர்கள் வாழ்வு பிரகாசிக்கும். வெளியே வராவிட்டால் அறிக்கை அரசியல்வாதிகளின் வாழ்க்கை ஜொலிக்கும்.


You May Also Like

  Comments - 0

  • மனோ Sunday, 15 November 2015 09:39 AM

    எமது இனத்தின் அவலத்தைப் போக்க இத்தகை ய வமர்சனங்களும் விமர்சகர்களும்தான் உதவ முடியும். அழகன் கனகராஜின் துணிச்சலான விமர்சனமும் ஆழமான சிந்தனை மிக்க கருத்துக் கண்ணோட்டமும. பாராட்டுக்கு உரியவை. நன்றி இன்னும் இவைபோல் பதிவு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .