2025 மே 14, புதன்கிழமை

SAITM வேண்டுமா, வேண்டாமா?

Administrator   / 2017 பெப்ரவரி 06 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.சேகர்  

தனது பிள்ளையை ஒரு வைத்தியராக்குவது என்பது, பெரும்பாலும் சகல பெற்றோர்களினதும் கனவாக அமைந்துள்ளது. இதற்காகவே, சிறு பராயம் முதல் அந்தக்குழந்தைக்குப் பிடித்ததைச் செய்ய விடாமல், தமக்குப் பிடித்ததைப் பலவந்தமாகவேனும் திணித்துச் செய்ய வைக்கும் பெற்றோரையும் நாம் சமூகத்தில் காண்கிறோம்.   

இவ்வாறிருக்க, பெற்றோரின் தேவைகளுக்காக அல்லது விருப்பத்துக்காக மாத்திரம், இலங்கைக் குழந்தையொன்று வைத்தியராக மாறிவிட முடியாது. அதற்காக, கற்கைகளைத் தொடர்ந்திருந்தால் மட்டும் போதாது.

கற்கைகளைப் பூர்த்தி செய்து, வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை மருத்துவ சங்கத்தினால், வைத்தியர் எனும் சான்று, அந்தஸ்து அந்த நபருக்கு வழங்கப்படுகிறது.

ஏனெனில், மருத்துவம் என்பது உயிர்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட விடயம் என்பதாகவும் அதன் தரம் உயர்ந்த மட்டத்தில் பேணப்பட வேண்டும் என்பதாகவும் அண்டைய நாட்டைப் போன்று, சந்திக்கு சந்தி வைத்தியர்கள் உருவாகிவிடக்கூடாது, இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பது இச்சங்கத்தின் எண்ணக்கருவாக அமைந்துள்ளது.  

சரி, அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகும் பாக்கியம் அல்லது பேறு, அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

மருத்துவ பீடத்துக்குத் தெரிவாக வேண்டும் என பல அர்ப்பணிப்புகளுடன் பயிலும் மாணவர்கள், பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் Z-புள்ளிகள் வெளியானதும் சில சந்தர்ப்பங்களில் ஒன்று, இரண்டு புள்ளிகளால் தமக்குரிய வாய்ப்பைத் தவறவிட்ட சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை, இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு வருடம் காத்திருக்க நேரிடுகிறது, அல்லது மாற்றுத்துறைகளுக்குச் செல்ல நேரிடுகிறது.  

க.பொ.த. உயர் தர பரீட்சையை எடுத்துக்கொண்டால், கலை, வர்த்தகம் மற்றும் இணைந்த கணிதம் போன்ற பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில், பல்கலைக்கழகம் செல்லப் போதியளவு புள்ளிகள் கிடைக்காவிடினும், தனியார் துறையில் தமது பிரிவில் தொடர்ந்து கல்வியை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள், இலங்கையில் தற்போது பெருமளவு காணப்படுகின்றன. ஆனாலும் உயிரியல் துறையை பொறுத்தமட்டில் இவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே அமைந்துள்ளன.  

உயிரியல் துறையில் பயிலும் அனைவரையும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பதற்கு அரசாங்கத்திடம் போதியளவு வசதிகளும் இல்லை.

இந்நிலையில், வசதி வாய்ப்பு படைத்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள், வெளிநாடுகளில் காணப்படும் தனியார் மருத்துவ கல்வி நிலையங்களில் மருத்துவ கற்கையை தொடரச் செல்கின்றனர். குறிப்பாக, ரஷ்யா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தனியார் மருத்துவக் கற்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

இவ்வாறு பெரும் தொகையைச் செலவிட்ட பின்னர், அங்கு வழங்கப்படும் சான்றிதழொன்றைக் கொண்டு இங்கு வந்து, இங்கு இலங்கை மருத்துவ சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சான்றளிப்புப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர், அவர்களுக்கு இலங்கையில் வைத்தியர்களாகப் பணியாற்றுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.  

இந்நிலையில், சுமார் கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கையில் இயங்கும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியான, தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகம் (SAITM) சம காலத்தில் பலத்த சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்துள்ளதையும் நாடாளுமன்றத்திலும் பேசப்படும் ஒரு விடயமாக உள்ளதையும் அவதானிக்க முடிகிறது. 

 இது தனியார் கல்வியகம் எனவும் இதன் மூலம் வழங்கப்படும் கற்கைகளின் தரம் கேள்விக்குறியானதாக அமைந்துள்ளதாகவும், இவற்றில் தமது கற்கைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களை தேசிய மருத்துவ கட்டமைப்பினுள் உள்வாங்குவதற்கு முடியாது எனவும் இலங்கை மருத்துவ சங்கம், பலத்த எதிர்ப்பை வெளியிட்ட வண்ணமுள்ளது.  

இந்நிலையில், நாட்டில் அமுலிலுள்ள சட்ட விதிமுறைகளின் பிரகாரம் தமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், மருத்துவக் கல்லூரியாக இயங்குவதற்கு வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சட்ட அனுமதி தமக்கு உள்ளதாகவும் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தர நிர்ணயங்களின் பிரகாரம் பரீட்சைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மாணவர் சேர்ப்பின் போது அவர்களின் அடிப்படைத்தகைமைகள் குறித்து கடுமையான கவனிப்புகள் பேணப்படுவதாகவும் அக்கல்வியகம், அறிக்கைகள் ஊடாகத் தெரிவித்துள்ளது.  

இவ்வாறு குறித்த கல்வியகத்தில் தமது பட்டத்தைப் பூர்த்தி செய்து, அரச வைத்தியசாலைகளில் தமது இடைக்கால மருத்துவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கத்திடம் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மருத்துவ சங்கம் மறுப்புத் தெரிவித்திருந்தது. குறித்த கல்வியகத்தின் தரம் குறித்து இந்தச் சங்கம் சந்தேகத்தை எழுப்பியிருந்தது.  

இந்நிலையில், இந்த மாணவர்கள் குறித்த சங்கத்தின் செயற்பாடுகள் நிறைவேற்றப்படாமை குறித்து சுகாதார அமைச்சருக்கு எதிராக, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கல்வியகத்தின் மருத்துவ பட்டதாரி மாணவர்களுக்கு சாதகமாக, கடந்தவாரம் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.  

இவர்களுக்கான வைத்தியர் சான்றை வழங்குமாறு, இலங்கை மருத்துவ சங்கத்துக்குப் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும், இந்தச் சான்றை வழங்குவதற்கு குறித்த மாணவர்கள் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கல்வியகம் அறிவித்துள்ளது.  நாட்டுக்கு, திறமையான வைத்தியர்களின் தேவை அதிகரித்த வண்ணமுள்ளது.

அரச வைத்தியசாலைகளுக்கு மேலாக, தனியார் வைத்தியசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன், நாளாந்தம் புதிய புதிய நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர்.   இவர்களுக்கு சிகிச்சைகைளைப் பெற்றுக்கொடுப்பது என்பது அரச வைத்தியசாலைகளினால் மட்டுமே முடியுமான காரியமாக அமைந்துவிடாது.

தனியார் வைத்தியசாலைகளில் நவீன வசதிகள் காணப்படுகின்றன.   இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்வியகங்களின் மூலமாக பெருமளவு முதலீடுகள் நாட்டில் மேற்கொள்ளப்படும் என்பதுடன், உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்படும் நவீன வசதிகள் பற்றிய போதனைகளையும் உள்நாட்டவர்களுக்குப் பயில முடியும்.

மேலும் பல இலட்சம் ரூபாய்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி எமது எதிர்கால சந்ததிகளை அனுப்பி பயில வைப்பதன் மூலம் ஏற்படும் அந்நியச் செலாவணி இழப்பை எதிர்கொள்ள வேண்டியதில்லை. 

பெற்றோருக்கும் பெருமளவு பணத்தை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செலவிட வேண்டியதில்லை. தமது பிள்ளைகளை தமது கண்காணிப்பில் வைத்திருக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.  

இலங்கையில், இது போன்ற மேலும் சில தனியார் மருத்துவக் கல்வியகங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். அவற்றின் தரத்தை உறுதி செய்வது அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சினதும் அதன் கீழ் இயங்கும் பொதுச்சுகாதார அமைப்புகளினும் கடமையாகவும் பொறுப்பாகவும் அமைந்திருக்க வேண்டும்.

 SAITM கல்வியகத்தில், இலங்கை மருத்துவ சங்கத்தினால் தெரிவிக்கப்படுவதைப் போன்று தரம் குறித்து பிரச்சினைகள் காணப்படின், அவற்றைச் சீர் செய்து கொள்வதற்கான பரிந்துரைகள் அவர்களால் வழங்கப்பட வேண்டும். குறித்த கற்கைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களை, அரச போதனா வைத்தியசாலைகளில் இணைத்து அவர்களுக்கு பயிற்சிகளைத் தொடர வாய்ப்பளிக்கப்படலாம்.  

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தலையீட்டின் மூலமாக கல்வியகத்தின் மருத்துவ பீடத்தின் செயற்பாட்டை பகுதியளவு அரச பொறுப்பின் கீழ் (Semi Government) கொண்டு வர முடியும். குறித்த கல்வியகத்தின் செயற்பாடுகள் பங்காண்மை அடிப்படையில் காணப்படுகிறது. 

குறித்த பங்குகளை அரசாங்கம் கொள்வனவு செய்து அந்தக் கல்வியகத்தின் செயற்பாடுகளில் பொறுப்பை தானும் ஏற்கலாம். இதன் மூலமாக தேசிய வைத்திய மேற்பார்வை அதிகாரிகள் குறித்த கல்வியகத்தின் தரத்தை கற்கைகளின் தரத்தை, வசதிகளின் தரத்தை தேவையேற்படும் போது பரிசோதிக்கலாம்.  

பொறியியலாளராவது, சட்டத்தரணியாவது, கணக்கியலாளராவது, விமானியாவது போன்ற கனவுகளைத் தனியார் கற்கைகளின் மூலமாக எய்தும் உரிமையைப் போன்று மருத்துவக்கல்வி மற்றும் வைத்தியராக திகழ்வது எனும் இலங்கையரொருவரது உரிமையையும் நாட்டில் பேண முடியும். நாட்டின் பொருளாதாரம் சுபீட்சமடைவதற்கு இன்னும் பல SAITMகள் அதாவது, தனியார் மருத்துவக் கல்வியகங்கள் உருவாக்கம் பெற வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X