2025 மே 19, திங்கட்கிழமை

"இலங்கையில் சர்வதேச விசாரணை இல்லையென்றால் காங்கிரஸுடன் தி.மு.க. நிச்சயம் இருக்காது"

A.P.Mathan   / 2013 மார்ச் 18 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிப்பது சந்தேகம். நிச்சயமாக தி.மு.க. நீடிக்காது" என்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் திடீர் அறிவிப்பு சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை திடுக்கிட வைத்துள்ளது. "தி.மு.க.தானே. சமாளித்துக் கொள்ளலாம்" என்று இருந்த காங்கிரஸின் நிலைப்பாடு, குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அகில இந்திய தலைமைக்குச் சொன்ன தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது மாயமாய் மறைந்துவிட்டது. ஏனென்றால் 18 எம்.பி.க்கள் உள்ள தி.மு.க. மத்திய அரசிலிருந்து வெளியேறினால் 237 எம்.பி.க்கள் மட்டுமே உள்ள கட்சியாக காங்கிரஸ் மாறிவிடும். இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 272 என்ற "மேஜிக்" நம்பருக்கு 35 எம்.பி.க்கள் குறைவு என்ற நிலையில், "எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல் வரலாம்" என்ற சந்தர்ப்பம் தானாகவே இந்திய அரசியில் வந்து குந்திக் கொள்ளும் நிலை உருவாகி விடும்.

மத்திய பட்ஜெட் தாக்கல்பட்டு இன்னும் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இப்போதுதான் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மாதிரியொரு சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை இந்திய அரசிற்கு ஆபத்தாக முடிந்து விடுமோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டமும், அனைத்துக் கட்சியினரின் போராட்டமும் அந்த அளவிற்கு இலங்கை தமிழர் பிரச்சினையில் உணர்வுகளை உசுப்பி விட்டுள்ளது. "இனியும் மத்திய அரசை ஆதரிப்பது தி.மு.க.வின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிடும்" என்ற முடிவிற்கு வந்துவிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி இப்படி அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். இலங்கையில் நடந்தது "இனப்படுகொலை", "போர்குற்றம்" என்ற வாசகங்களை அமெரிக்க தீர்மானத்தில் இடம்பெறச் செய்து, மனித உரிமைகள் குறித்த "காலவரையறைக்குட்பட்ட சர்வதேச விசாரணை" என்ற இந்தியா சேர்க்க வலியுறுத்த வேண்டும் என்று "கெடு" விதித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் முக்கிய பொறுப்பு. அமெரிக்க தீர்மானத்தில் ஓட்டெடுப்பு பற்றியும், தி.மு.க. கெடுபிடி பற்றியும் நடைபெற்ற ஓர் ஆங்கில சேனலின் விவாதத்தில், "இலங்கையில் நடைபெற்றது போர் அல்ல. அது தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை. அதில் "சில" மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது" என்ற ரீதியில் பேசினார். இந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஞானதேசிகனின் இந்த கருத்து தி.மு.க. தலைவர்களை கொந்தளிக்க வைத்தது. உலகமே இலங்கையில் நடைபெற்றது போர் என்று கூறிக் கொண்டிருக்கும் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் மட்டும் "அது போர் அல்ல" என்று வாதம் செய்து கொண்டிருக்கிறாரே என்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட எரிச்சல் பட்டார்கள்.

ஞானதேசிகன் பேட்டிகளில் மட்டும் இப்படிச் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் பேசும் போதுகூட, "இலங்கை தமிழர் பிரச்சினையை உணர்ச்சிகரமான பிரச்சினையாக பார்த்து கருத்துக்களை சொல்லக்கூடாது" என்ற ரீதியிலேயே பேசினார். அவ்வப்போது பத்திரிகை பேட்டிகளிலும், தமிழகத்தில் உள்ள சென்டிமென்டிற்கு எதிராகவே கருத்துச் சொல்லி வருகிறார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள், "தமிழக மக்களின் உணர்வுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்" என்று சொல்லும் அதேவேளையில், ஞானதேசிகன் மட்டும் "சுருதி மாறி" பேசிக் கொண்டிருப்பது தமிழகத்தில் உள்ள மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கே அவர் மீது வெறுப்பை ஏற்றி விட்டிருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வதற்கு இப்படிப் பேசுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரே கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதனால் ஞானதேசிகனின் பேட்டிகளும், பேச்சுக்களும் தி.மு.க.வின் அறிக்கைக்கு வலு சேர்த்த விடயம் என்றாலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களின் ஆவேசப் பேச்சுகளுக்குக் கூட ஆறுதல் சொல்ல முன்வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒருமுறை தமிழக எம்.பி.க்கள் எழுந்து நின்று "அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கப் போகிறீர்களா இல்லையா? இந்தியாவின் முடிவு என்ன சொல்லுங்கள்?" என்று கேள்வி எழுப்பியபோது, சல்மான் குர்ஷித் எதுவுமே சொல்லாமல் அவையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அப்போதே தி.மு.க. எம்.பி.க்கள் மட்டுமின்றி அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட ஆவேசப்பட்டார்கள். இப்படி தமிழகத்தின் உணர்வுகளை "கிள்ளுக்கீரை" போல மத்திய அரசு பார்க்கிறது என்ற "கோபமே" தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும், குறிப்பாக மாணவர்களையும் ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஏறக்குறைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது இருந்த "மாணவர்கள் ஒற்றுமை" இன்று தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையில் உருவாகியிருக்கிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கொடுத்துள்ள அழுத்தத்திற்கு காங்கிரஸ் சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் நடந்தது "இனப்படுகொலை" என்பதும், "சர்வதேச விசாரணை" என்பதும் நிச்சயமாக தி.மு.க. விட்டுக்கொடுக்கும் விடயங்களாக இருக்க முடியாது. ஏனென்றால் இப்போதே தி.மு.க. இலங்கை பிரச்சினைக்காக பந்த் நடத்தினால், "திசை திருப்பும் செயல்" என்று அறிக்கை விட்டுள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. "அமைச்சரவையிலிருந்து விலகுவோம்" என்று அறிவித்துள்ளதை, "தி.மு.க. நடத்தியுள்ள நாடகங்களில் கடைசி கட்டம் இது" என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் "கிண்டல்" செய்துள்ளார். முன்பு 2009இல் இலங்கையில் போர் நடைபெற்ற போது தி.மு.க. திண்டாடியதற்கு முக்கியக் காரணம் அப்போது தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தது காங்கிரஸ் அளித்த 35 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்தான். ஆகவேதான் காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கு தன் எம்.பி.க்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தது. அன்றைய நிலையில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தாலும் கூட, மத்திய அரசு தப்பித்திருக்கும். ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி கவிழ்ந்திருக்கும். இந்தமுறை அந்த "நிர்ப்பந்தம்" தி.மு.க.விற்கு இல்லை. மாநிலத்தில் ஆட்சியும் இல்லை. ஆகவே மடியில் கனமில்லை என்ற தோரணையில் காங்கிரஸுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறேன் என்று அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்தாலும், ஒரு "திரும்பி வரமுடியாத நிலைக்கு" தி.மு.க. சென்று விட்டதாகவே அனைவரும் நினைக்கிறார்கள்.

காங்கிரஸிடமிருந்து தி.மு.க. வெளியேறட்டும் என்ற காத்திருக்கிறது அ.தி.மு.க. ஏனென்றால் இப்போது அந்தக் கட்சிக்கு இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க. போன்ற கட்சிகள் தன் பக்கம் இருக்கும் நம்பிக்கையில் இருக்கிறது. இன்றைய தமிழக அரசியல் நிலவரம் தன்னந்தனியாக நிற்கும் காங்கிரஸ் கட்சி பக்கம் யாரும் கூட்டணிக்குச் செல்ல முடியாத "நெருப்பு வளையத்தை" உருவாக்கியிருக்கிறது. ஆகவே காங்கிரஸிலிருந்து தி.மு.க. வெளியேறியவுடன், அந்தக் கட்சி விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் சேர்ந்து விடக்கூடாது என்பதில்தான் அ.தி.மு.க. தலைமையின் அடுத்தகட்ட கவனம் முழுவதும் இருக்கும். தமிழக அரசியல் அணியை மனதில் வைத்தே இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கருத்துக்களை சொல்லி வருகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியோ "தமிழக அரசியல் அணி" பற்றி கவலைப்படாமல், தங்கள் தலைவர் ராஜீவை இலங்கை தமிழர் பிரச்சினையில் பறிகொடுத்தோம் என்ற ஒரே நோக்கில் அரசியல் பண்ணுகிறது. அதுமட்டுமின்றி, அந்த எண்ணவோட்டம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுக் கொடுப்பதில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கு இருக்கும் தயக்கத்தையும் வெளிப்படுத்துகிறது என்றே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கருதுகின்றன.

இந்த நிலைப்பாட்டை மாற்ற காங்கிரஸ் கட்சியால் பத்து வருட கால ஆட்சி கையில் இருந்தது. ஆனால் அதனை கோட்டை விட்டு நிற்கும் அந்தக் கட்சி இனி எஞ்சியிருக்கும் காலத்தில் "அந்த இமேஜை" மாற்றிவிடப் போகிறதா என்பது மில்லியன் டொலர் கேள்வி. 1998 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எப்படி தனிமைப்படுத்தப்பட்டதோ, அதை "இருண்ட காலம்" இப்போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் உதயமாகத் தொடங்கிவிட்டதோ என்று மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களே "மிரண்டு" போய் நிற்கிறார்கள். 1965இல் இந்தி திணிப்பிற்கு எதிராக தொடங்கிய "மாணவர்கள் போராட்டம்" காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பியது. அன்றிலிருந்து 46 வருடங்கள் இன்னும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 1989 சட்டமன்ற தேர்தலின்போது அப்போது கட்சி தலைவராக இருந்த மறைந்த ராஜீவ் காந்தி 13 முறை தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் சென்றார். மூலை முடுக்கெல்லாம் போய் பிரசாரம் செய்தார். "தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்றாக எங்களுக்கு வாக்களியுங்கள்" என்று போராடிப் பார்த்தார். ஆனாலும் கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை. அதுபோன்ற பிரகாசமான வாய்ப்பு அதன் பிறகு காங்கிரஸுக்கு வரவேயில்லை. இப்போதும் இலங்கை தமிழர் பிரச்சினையில் "மாணவர்கள் போராட்டம்" தொடங்கி, சூடுபிடித்து நிற்கிறது. "காங்கிரஸ் எதிர்ப்பு" என்ற கனல் தமிழகத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் சவாரி செய்து கொண்டிருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது. காங்கிரஸின் இந்த நிலைமையைப் பார்த்து மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் "ஹேப்பி" மூடில் இருக்கின்றன!

You May Also Like

  Comments - 0

  • விஜயகுமார் Monday, 18 March 2013 03:35 PM

    இதை 2009 மே மாதமே செய்திருந்தால் என் மக்கள் கொஞ்சம் பேர் பிளைதிருப்பார்கள்...

    Reply : 0       0

    ss Thursday, 21 March 2013 01:31 AM

    உண்மைதான் நண்பரே! ஆனால் ஒன்று... தமிழக மக்கள் என்றுமே உங்கள் பக்கம்தான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X