2025 மே 19, திங்கட்கிழமை

"காங்கிரஸை வீழ்த்துவதே என் இந்திய நாடாளுமன்ற தேர்தல் லட்சியம்": வைகோ

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரறிஞர் அண்ணாதுரையின் 105ஆவது பிறந்த நாளை திராவிடக் கட்சிகள் அனைத்தும் தடபுடலாகக் கொண்டாடியிருக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில், "நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்கட்சி வரிசையில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) சார்பில் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதி," அ.தி.மு.க. அரசுக்கு எதிராக மக்கள் கருத்தினை உருவாக்கும் முயற்சியில் தன் தொண்டர்களை" உசுப்பி விட்டுள்ளார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவர் வேலூரில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க.வின் முப்பெரும் விழாவினை சென்னைக்கு மாற்றியிருக்கிறார். (முப்பெரும் விழா என்பது அண்ணா பிறந்த நாள், தி.மு.க. பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள். இந்த மூன்று நிகழ்வுகளும் செப்டெம்பர் 15,16,17 ஆகிய மூன்று திகதிகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது). இந்த இரு கட்சிகளையும் தவிர்த்து "நாம்தான் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாட முழுத் தகுதியானவர்கள்" என்று அறிவித்து, தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள விருதுநகரில் (காமராஜர் பிறந்த மாவட்டம்) அண்ணா பிறந்த நாள் மாநாட்டை நடத்து முடித்து இருக்கிறார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க.) பொதுச் செயலாளர் வைகோ.
 
இம்மூவரின் "அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டத்தில்" வைகோவின் அறிவிப்புதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது. 1993இல் தொடங்கப்பட்ட கட்சிக்கு இப்போது வயது 20. இந்த இருபது வருட காலத்தில் அக்கட்சியின் தேர்தல் வெற்றி என்பது உச்சாணிக் கொம்பிற்குப் போய் திரும்பியுள்ளது. சுமார் 6 சதவீதம் வரை வாக்காளர்கள் உள்ள கட்சியாகத் திகழ்ந்த ம.தி.மு.க. மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றது. 1998, 1999, 2004 ஆகிய மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி பெற்ற வெற்றியால் ம.தி.மு.க.விற்கு டெல்லி நாடாளுமன்றத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அங்கு பிரதமராக இருந்த அதல் பிஹாரி வாஜ்பாயிடம் வைகோவிற்கு தனி மதிப்பே இருந்தது. எந்த நேரத்திலும் அவரது வீட்டுக் கதவைத் தட்டி தமிழக பிரச்சினைகள் பற்றிப் பேச முடியும் என்ற அந்தஸ்து வைகோவிற்கு இருந்தது. ஆனால் 19 மாதகால "பொடா சிறைவாசத்திற்கு"ப் பிறகு வந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடாதது ஒரு வரலாற்றுப் பிழையாக அமைந்து விட்டது என்று ம.தி.மு.க. சீனியர்களும் மனம்நொந்து பேசினார்கள். அதன் பிறகு 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல் எல்லாமே ம.தி.மு.க.விற்கு சவாலாக அமைந்து விட்டன. 
 
ஆனாலும் ஒரு சட்டமன்றத் தேர்தலிலேயே (2011) போட்டியிடாமல் இருந்த ம.தி.மு.க.வின் "அரசியல் எதிர்காலம்" இனி அம்பேல்தான் என்று அனைத்து அரசியல் தலைவர்களுமே ஆருடம் கணித்தார்கள். அதை முறியடித்தது மாநிலம் முழுவதும் பல்வேறு பொதுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி வைகோ மேற்கொண்ட பாதயாத்திரைகள்தான்! அதில் முக்கியமானது மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் வைகோ நடத்திய பாதயாத்திரை. இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற கோபம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மீது படர்ந்திருந்த நேரத்தில் வைகோவின் பிரசாரம் தமிழக மக்கள் மனதில் குடிகொண்டது. அதுவும் இலங்கையில் நடந்து முடிந்த போருக்குப் பிறகு தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய மாணவர்கள் போராட்டம் வைகோவின் இடைவிடாத பிரசாரத்தின் அடையாளம் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு மாணவர்கள் படிக்கும் கல்லூரி வாசல்களிலும், ஹாஸ்டல் வாசல்களிலும் ம.தி.மு.க.வினரை நிற்க வைத்து "இலங்கை தமிழர்கள் படும் தொல்லைகள் அடங்கிய சி.டி.கள்" "போர் முனையில் கொல்லப்பட்ட தமிழர்களின் கோரக் காட்சிகள் அடங்கிய சி.டி.கள்" போன்றவற்றை விநியோகித்தார். இதனால்கூட வைகோ இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
இதுபோன்ற காலகட்டத்தில்தான் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த வைகோவை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென்று சந்தித்தார். அந்த சந்திப்பு "அ.தி.மு.க.- ம.தி.மு.க. கூட்டணி மீண்டும் உருவாகும்" என்ற வியூகத்திற்கு உரம் போட்டது. வைகோவும் அந்த இமேஜை அப்படியே நகர்த்திச் செல்லவே விரும்பினார். இந்த "பாதயாத்திரை சந்திப்பிற்கு"ப் பிறகு வைகோவின் அறிக்கைகள் எல்லாமே பல விஷயங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவுகளை பாராட்டும் வகையிலேயே அமர்ந்திருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், "தமிழ் ஈழம் அமைய தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட போது "வரலாறு பொன்மகுடம் சூட்டும்" என்று பாராட்டி அறிக்கையே விட்டார் வைகோ. ஆனால் "நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் போட்டி. அ.தி.மு.க. தனித்துப் போட்டி" என்றெல்லாம் அ.தி.மு.க. தலைமை செய்த அறிவிப்புகள், பிரகடனங்கள் வைகோவை வியக்க வைத்தது. அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியுடன் சந்திக்கப் போகிறதா அல்லது உள்ளாட்சித் தேர்தல் போல் தனியாக சந்திக்கப் போகிறதா என்ற கேள்வி வைகோ போன்றவர்களின் மனதினைப் போட்டு குழப்பியிருந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
 
"அ.தி.மு.க.விற்கு கூட்டணி தேவையில்லை" என்ற விதத்தில் அக்கட்சி தலைமை பயணிக்கிறதோ என்ற சந்தேகம் வைகோவிற்கு பிறந்தது. அந்த நேரத்தில் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வைகோ விடுத்த அறிக்கைக்கு தமிழக அரசின் விவசாயத்துறை அமைச்சர் தாமோதரன் பதிலறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையில் "காமலைக்கண்ணுக்கு காண்பெதல்லாம் மஞ்சம்" என்றும், "அரசியலில் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பேசுகிறார்" என்றும் சாடினார். இந்த அறிக்கை வைகோவின் பாதையை திசை திருப்பியது. "இனி நாம் நம் அரசியலைச் செய்வோம்" என்ற நினைப்பை வைகோவிற்கு கொடுத்தது. அதனால் அ.தி.மு.க. அரசையும் விமர்சித்தார். தி.மு.க.வையும் விமர்சித்தார். "இரு கட்சிகளுக்கும் நான்தான் மாற்று. ம.தி.மு.க.விற்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்" என்ற கோஷத்தை முன் வைத்தார்.
 
இந்தக் கோஷம்தான் செப்டெம்பர் 15ஆம் திகதியன்று விருதுநகரில் நடைபெற்ற 105ஆவது  அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் பங்கேற்ற வைகோவின் பேச்சில் எதிரொலிக்கிறது. "இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த, ஊழலில் முதல் பரிசை வென்று விடக் கூடிய அளவிற்கு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை தோற்கடிப்பதே என் முதல் பணி" என்று அறிவித்துள்ளார். "அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்று. காங்கிரஸ் என் முதல் எதிரி" என்ற வகையில் தன் வியூகத்தை வைகோ அந்த பிரமாண்டமான அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்மொழிந்திருக்கிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் "காங்கிரஸ் என் முதல் எதிரி" என்பதுதான் வைகோ அறிவித்துள்ள கூட்டணி வியூகம்.
 
இதன் பின்னணியில் பல்வேறு அர்த்தங்கள் நிரம்பியிருக்கின்றன. தமிழகத்தில் முக்கியமாக கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள் இரண்டு. ஒன்று அ.தி.மு.க. இன்னொன்று தி.மு.க. இந்த இரு கட்சிகளின் கூட்டணிகளிலும் காங்கிரஸ் இடம்பெறவில்லை என்றால், "காங்கிரஸ் எதிரி" என்ற கோஷம் வைகோவிற்கு கை கொடுக்கும். அப்படியொரு வேளை தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. போன்ற கட்சிகளின் கூட்டணி அமையுமானால், "காங்கிரஸ் எனக்கு எதிரி" என்ற கோஷம் அ.தி.மு.க., பாரதீய ஜனதாக் கட்சி போன்ற கட்சிகளுடன் தனக்குள்ள "கூட்டணி ஆப்ஷனை" க்ளோஸ் பண்ணாமல் வைத்துக் கொள்ள உதவும் என்று வைகோ கருதுகிறார். ஒரு வேளை அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி இல்லை என்ற நிலை உருவானால், இந்தக் கோஷம் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து தன் தலைமையிலேயே ஒரு கூட்டணியை அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக வரலாம் என்றும் எண்ணுகிறார் வைகோ. அதனால்தான் தமிழகத்தில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையத்தை தனியார் மயமாக்கும் போதும் அதை அன்று பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் சொல்லி தடுத்தேன். இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் விற்கக்கூடாது என்றும் அன்று வாஜ்பாயிடம் மன்றாடித் தடுத்தேன் என்று "வாஜ்பாய் புகழ்" பாடியிருக்கிறார் வைகோ.
 
இறுதியில், "நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. இந்த முறை போட்டியிடுவது உறுதி" என்று விருதுநகர் மாநாட்டில் பிரகடனம் செய்திருக்கிறார் வைகோ. ஆனால் எப்படி? என்ன வியூகம்? என்பது பற்றி விளக்காமல் விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் அவரது பேச்சில், "எதிரிகளின் வியூகம் முதலில் வெளிவரட்டும். பிறகு நம் வியூகத்தை வெளியிடுவோம்" என்று பூடகமாகப் பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி, "காட்டாறு நம்மை நோக்கி பாய்ந்து வருகிறது. அது நம்மிடம் வரும்போது கடப்போம்" என்று அறிவித்துள்ளவர், "ஒருவேளை காட்டாறு நம்மை அடித்துச் சென்று விட்டால் என்ன செய்வது?" என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். "ம.தி.மு.க. இப்படி பல சோதனைகளை சந்தித்து வெளிவந்திருக்கிறது. அப்படியொரு சூழ்நிலையையும் சந்திப்போம்" என்று அறிவித்துள்ளார். இந்தப் பின்னனியில் இருப்பது ஒருவேளை ம.தி.மு.க. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகவே நிற்க வேண்டிய நிர்பந்தம் உருவானாலும் அதை சந்திக்கத் தயார் என்பதை வைகோவின் விருதுநகர் பேச்சிலிருந்து வீறுகொண்டு எழுந்துள்ள ஆவேசம்! "முல்லைப் பெரியாறு பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, மின்வெட்டுப் பிரச்சினை, கூடங்குளத்தில் அணு உலை அமைக்கும் பிரச்சினை, ஸ்டர்லைட் ஆலைப் பிரச்சினை, மதுவிலக்கை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் கொடுக்கும் பிரச்சினை உள்ளிட்ட மாநில மக்களின் நலன் பாதிக்கும் பிரச்சினை என்றாலும் சரி, இலங்கை தமிழர் பிரச்சினை என்றாலும் சரி போராட்டங்களையும், போர்குரல்களையும் எழுப்பியிருக்கிறோம். இலங்கை தமிழர்களுக்காக எங்களை விடப் போராடியவர்கள் இருக்க முடியாது. இந்திய அரசினைத் தட்டிக்கேட்டவர்கள் இருக்க முடியாது. அதனால் நாம்தான் தமிழக மக்களுக்கு மாற்று. அந்த மாற்றத்தைக் கொடுக்க ம.தி.மு.க.வை ஆதரியுங்கள்" என்ற தொணியில் வைகோ விருதுநகர் மாநாட்டில் உரையாற்றியிருக்கிறார்.
 
"எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள். உங்கள் நலன் பற்றி நாங்கள் பேசுகிறோம். போராடுகிறோம்" என்பதுதான் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எடுத்து வைத்துள்ள முழக்கம். மூன்று தேர்தல்களில் அடுத்தடுத்து சோதனைகளைச் சந்தித்த வைகோ இவ்வளவு வீராவேசமாகப் பேசுகிறாரே என்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமைகளே வியப்படைந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. "தேர்தலில் போட்டி" என்ற முடிவை எடுத்து விட்ட வைகோ, "காங்கிரஸ் என் முதல் எதிரி" என்ற வியூகத்தை வகுத்திருக்கிறார். அதை முன்னெடுத்துச் செல்ல கூட்டணி அமைப்பது என்ற முடிவிலும் வைகோ உறுதியாக இருக்கிறார். ஆனால் யாருடன் கூட்டணி என்பதை மட்டும் அறிவிக்காமல் இருப்பதே விருதுநகரில் நடைபெற்ற "அண்ணா மாநாட்டு சஸ்பென்ஸ்"!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X