2025 மே 19, திங்கட்கிழமை

"கூட்டணி வைத்து இந்திய நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பேன்": விஜயகாந்த்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா" செப்டெம்பர் 21ஆம் திகதி தொடங்கி 24ஆஆம் திகதி வரை நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார். இறுதிநாளில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். ரஜினி, கமல் முதல் அத்தனை சினிமா நட்சத்திரங்களும் இந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வருகின்ற செப்டெம்பர் 26ஆம் திகதி திருச்சியில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திமோடி பிரசாரத்திற்கு வருகிறார். இந்த நிகழ்வுகள் ஒரு புறமிருக்க, தமிழகத்தின் தென் கோடி மாவட்டமான தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி தன் கட்சியினரை திரட்டியிருக்கிறார் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த். அக்கட்சி தொடங்கிய ஒன்பதாவது வருடத்தின் தொடக்க விழாப் பொதுக்கூட்டம் இது!
 
கூட்ட மேடைக்குப் பின் "2016நம் லட்சியம். அதை அடைவது நிச்சயம்" என்ற அக்கட்சியின் அடிப்படை நோக்கம் "தாரக மந்திரம்" போல் எழுதப்பட்டு, அதன் முன்பு நின்று கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். இந்த ஒன்பது வருடங்களில் இரு உள்ளாட்சி தேர்தல்கள், இரு சட்டமன்றத் தேர்தல்கள், ஒரு நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை சந்தித்துள்ளார். இவற்றுள் 2011 சட்டமன்றத் தேர்தலை மட்டும்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணியாகச் சந்தித்தார். அதில் வெற்றியும் பெற்று தமிழகத்தின் பிரதான எதிர்கட்சித் தலைவரானார். இனி 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறார். அதற்கான வியூகம் என்ன என்பதை இந்தக் கூட்டத்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பொதுக்கூட்டத்திலும் அதற்கு "சஸ்பென்ஸ்" வைத்து விட்டு மேடையை விட்டு இறங்கிச் சென்று விட்டார். ஆனால் அவர் பேச்சில் "அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும்" என்ற உறுதி மட்டும் தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பும் அக்கட்சியின் தொண்டர்களின் மனநிலையை தனக்கு ஏற்ற ஒரு கூட்டணி அமைக்க தயார் செய்வது போல் இருந்தது விஜயகாந்தின் மேடைப் பேச்சு.
 
பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் என்று அனைத்துக் கட்சிகளையுமே அட்டாக் பண்ணித்தான் பேசினார். ஆனால் தன் மீது 34 அவதூறு வழக்குகளைப் போட்ட அ.தி.மு.க. மீது மட்டும் அவர் மேடையில் வெறுப்பைக் கக்கியதைப் பார்க்க முடிந்தது. அக்கூட்டத்தில், "வியூகம் அமைப்பது சுலபம். இப்போது கூட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் இவுங்க (அ.தி.மு.க.) என்ன ஆவாங்க"? "வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவுங்களா (அ.தி.மு.க.) நம்மலா (தே.மு.தி.க.) பார்த்து விடுவோம்" என்று ஆற்றிய உரைகள் எல்லாம் யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லிக் கொண்டே ஏதாவது ஒரு கட்சியுடன் அ.தி.மு.க.வை தோற்கடிக்க கூட்டணி வைக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் ஆசையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது. அது மட்டுமல்ல. அக்கூட்டத்திலேயே ஒரு சபதமும் எடுத்தார். அது, "இன்னைக்குச் சொல்லுகிறேன். அ.தி.மு.க. ஜெயிக்கவும் கூடாது. ஜெயிக்க விடவும் கூடாது" என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு, "உங்களுக்கு அந்த மனசு இல்லையா"? மனசில் கை வச்சுச் சொல்லுங்க" என்று மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த தொண்டர்களைப் பார்த்து விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
 
விஜயகாந்திற்கு கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை என்றால் இப்படியெல்லாம் ஒரு சபதத்தை அதுவும் பொதுக்கூட்ட மேடையில் எடுக்க மாட்டார். அதிலும் குறிப்பாக "அ.தி.மு.க.வை ஜெயிக்க விடக்கூடாது" என்று விஜயகாந்த் சொல்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அவர் மட்டும் தனியாக நின்று தமிழக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் அது நடக்காது. அவரும் காங்கிரஸும் சேர்ந்து நின்றால் கூட அந்த இலக்கை எட்ட முடியாது. அவரும், பா.ஜ.க.வும் நின்றால் கூட தேர்தலில் அ.தி.மு.க.வை ஜெயிக்க விடாமல் செய்ய முடியாது. அவருக்கு இருக்கின்ற ஒரு வழி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, காங்கிரஸையோ அல்லது பா.ஜ.க.வையோ தன்னுடன் வைத்துக் கொண்டுதான் அ.தி.மு.க.வை ஜெயிக்கவே விடாமல் செய்ய முடியும். இதில் ஏதாவது ஓர் இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விஜயகாந்த் தூத்துக்குடி கூட்டத்தில் அப்படி பேசியிருக்கிறார். இதை முன்னெடுத்துச் செல்லவே நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு மாநாடு போடவிருக்கிறார். இந்தக் கூட்டத்திலேயே அவர், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மாநாடு போடுவேன். அதற்காக நூறு ஏக்கர் பரபரப்பளவு உள்ள ஒரு பகுதியை தேடிக் கொண்டிருக்கிறேன். அந்த மாநாட்டிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டும். உங்கள் கருத்தைக் கேட்ட பிறகு, உங்கள் உத்தரவுப்படி கூட்டணி பற்றி முடிவு எடுப்பேன்" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
 
கூட்டணி பற்றி இவ்வளவு உறுதியாக இருக்கும் விஜயகாந்த் ஏன் இப்போதே தி.மு.க.வுடனோ, காங்கிரஸுடனோ, அல்லது பா.ஜ.க.வுடனோ நெருங்கிச் செல்லவில்லை என்ற கேட்கலாம். அதற்கு காலம் கனிந்து வரட்டும் என்று காத்திருக்கிறார் என்பதே இதன் உட்பொருள். கூட்டணி என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு. அதே மாதிரி அந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பதும் அந்த நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுதான். தொகுதி பங்கீட்டில் எந்த கட்சி தலைவருமே பலமிழக்கவோ அல்லது தங்களது ஆளுமைத் திறனை விட்டுக் கொடுக்கவோ விரும்ப மாட்டார்கள். அதனால் கடைசிவரை சஸ்பென்ஸாக வைத்து திடீரென்று ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து, தொகுதிப் பங்கீட்டையும் முடித்துக் கொள்வார்கள். இந்த யுக்தியைக் கடைப்பிடிக்காமல் முன்கூட்டியே "இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி" என்று அறிவித்து விட்டால், அந்தக் கூட்டணியில் அறிவித்தவருக்கு கிடைக்க வேண்டிய உரிய தொகுதிப் பங்கீடு கிடைக்காது. இது தேர்தல் பாலபாடம் கற்றவர்கள் அறிந்த பச்சை உண்மை. அதனால்தான் இப்போதை இந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறேன் என்பதை அறிவிக்காமல், கூட்டணி அமைப்பதற்கு காலநேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
 
"கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை" என்பதை மற்ற கட்சித் தலைவர்களும் உன்னிப்புடன் பார்க்கிறார்கள். குறிப்பாக பாரதீய ஜனதாக் கட்சி இதில் அக்கறை செலுத்துகிறது. அ.தி.மு.க.வுடன் தங்களுக்கு கூட்டணி கிடைக்காது என்ற நிலையில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் "தமிழக கூட்டணி வியூகம்" என்ன என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவர் வருகின்ற 26ஆம் திகதி திருச்சியில் பேசப் போகும் கருத்துக்களில் இருந்துதான் மோடியின் வியூகம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த வருகைக்குள் இப்போதே பா.ஜ.க.விற்கு வேண்டியவர்கள் சிலர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை திரைமறைவில் நடத்தி வருவதாகத் தகவல். "உங்களுக்கு 2016 சட்டமன்றத் தேர்தல்தான் லட்சியம். அதை அடைவதற்கு நாங்கள் கை கொடுக்கிறோம். இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எங்களுக்கு கை கொடுங்கள்" என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
 
இந்த அழைப்பின் பேரில் விஜயகாந்த் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு இரு காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்று பா.ஜ.க. தரப்பில் எடுக்கப்படுவது உண்மையான முயற்சியா அல்லது நம்மைக் காட்டி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு பா.ஜ.க. முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தில் விஜயகாந்த் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம் ஹைதராபாத்திற்கு வந்த நரேந்திரமோடி அங்கு நின்று கொண்டே தமிழக அரசைப் பாராட்டினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அவருக்கும் நெருங்கிய அரசியல் உறவு இருக்கிறது. அதனால் அவரை எதிர்த்துக் கொண்டு நம்முடன் கூட்டணிக்கு வருவாரா நரேந்திரமோடி என்ற தயக்கம் விஜயகாந்திற்கு இருக்கிறது. இது ஒரு புறமிருக்க, பா.ஜ.க.வுடன் மட்டும் சேர்ந்து கூட்டணி வைப்பது அ.தி.மு.க.வை ஜெயிக்க விடாமல் செய்வதற்கு உதவுமா என்பதிலும் விஜயகாந்திற்கு ஏகப்பட்ட சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், "பலமான கூட்டணி இருந்தால்தான் அ.தி.மு.க.வை சந்திக்க முடியும். நாம் போட்ட சபதத்தை நிறைவேற்ற முடியும்" என்பது விஜயகாந்தின் வியூகம். ஆகவே இந்த இரு காரணங்களின் அடிப்படையில் விஜயகாந்த் இன்னும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது பற்றி முடிவு எடுக்கவில்லை.
 
தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சு, திருச்சியில் நரேந்திரமோடி கூட்டத்திற்கு முன்பு பா.ஜ.க. விடுத்துள்ள அழைப்பு பற்றி முடிவு எடுக்காதது, அனைத்து முக்கியக் கட்சிகளையுமே சாடும் அவரது மனப்பான்மை- இது அனைத்துமே வருகின்ற தேர்தலில் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுவேன் என்பதற்கான அடையாளம் அல்ல. அதற்கு மாறாக "நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி அமைப்பேன். அதுவும் அ.தி.மு.க.வை ஜெயிக்க விடாமல் செய்வதற்கேற்ற வலுவான கூட்டணியை அமைப்பேன்" என்பதற்கான சமிஞ்ஞைகள்! விஜயகாந்தின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் அமைதியாக தங்கள் கட்சியின் போராட்ட வியூகங்கள், பொதுக்கூட்ட வியூகங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட தங்கள் கட்சியின் தலைமையில் உள்ள மத்திய ஆட்சியின் சாதனைகளை "நவீன தொழில்நுட்பங்கள்" மூலம் விளக்கத் தொடங்கி விட்டார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X