.jpg)
"இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?" என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கேள்வி தமிழகத்தில் "கொமன்வெல்த்" புயலை தீவிரமாக மையம் கொள்ள வைத்துள்ளது. ஆங்காங்கே மாணவர்கள், மற்ற தமிழ் அமைப்புகள் எல்லாம் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். குறிப்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சென்னை வந்து கலைஞர் கருணாநிதியை சந்தித்து விட்டுச் சென்ற பிறகு வெளிவந்துள்ள இந்த "உருக்கமான கடிதம்" மத்திய அரசுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உறவின் உச்சகட்ட உரசலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த கடிதத்தில் இசைப்பிரியாவின் கொலையை மட்டும் குறிப்பிட்டு கலைஞர் கருணாநிதி எழுதவில்லை. அத்துடன் இதுவரை இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகள், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற கொலைகள் போன்ற பலவற்றையும் பட்டியலிட்டுள்ளார்.
சிதம்பரத்தின் சந்திப்பைத் தொடர்ந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி கூட "உலகம் முழுவதும் உள்ள 9 கோடித் தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்திய பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது" என்ற கருத்தை உயர்மட்டக்குழுவில் சொல்லியிருப்பதாகத் தகவல்கள் சிறகடித்துப் பறக்கின்றன. மத்திய அமைச்சரவையில் உள்ள இரு மூத்த அமைச்சர்கள் தமிழகத்தில் எழுந்துள்ள "கொமன்வெல்த்" தீயை அணைக்கப் போராடுகிறார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. "இசைப்பிரியா" தொடர்பான சனெல்-4 காட்சிகள் தமிழகத்தில் பட்டி தொட்டிகள் எல்லாம் பரவிக்கிடக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் வகையில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கின்றன. கண்டன அறிக்கைகள் குவிகின்றன. இன்னும் சொல்லப் போனால் பாட்டாளி மக்கள் தலைவர் டாக்டர் ராமதாஸ் "கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும்" என்றே அறிக்கை விட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே இசைப்பிரியா கொல்லப்பட்டது குறித்து பல அறிக்கைகள், சி.டி.க்கள், போராட்டங்கள் என்று நடத்தி முடித்து விட்டார். இன்னும் சொல்லப்போனால் இசைப்பிரியா விவகாரத்தை தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றவர் முதலில் வைகோ என்றே சொல்லலாம். இப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலில் இதை கையிலெடுத்து விட்டார். உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் கடிதத்தை எழுதி விட்டார். இன்னும் சொல்லப் போனால் அந்த கடிதம் வைகோவின் அறிக்கை போல் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் விதத்தில் அமைந்திருக்கிறது என்ற சொல்ல வேண்டும். ஒரு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் அமைக்கும் நிகழ்ச்சி. இன்னொரு பக்கம் இசைப்பிரியா கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம். இதுபோன்ற விவகாரங்களுக்குள் இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டு விவகாரமும் தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
எப்போதும் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி இதனால் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது என்றே காங்கிரஸ் தலைவர்கள் உணருகிறார்கள். "தமிழர்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் பங்கேற்கக் கூடாது" என்று கருத்துக் கூறியிருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிதான் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் கமிட்டியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றால், தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச முடியாது என்பதை கூட்டணிக் கமிட்டித் தலைவர் என்ற முறையில் அந்தோணி உணர்ந்துள்ளார். அதனால்தான் இந்தக் கருத்தை அவர் கூறியிருக்கிறார். முன்பு "நான் கலந்து கொள்வேன்" என்று சொன்ன இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூட, "கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை" என்று கூறி வைத்துள்ளார். "இசைப்பிரியா குறித்து வெளியான சனெல்-4 காட்சிகள் உண்மையானதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று சிதம்பரம் கூறியிருப்பதும் இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது.
இந்த அடிப்படையில் பார்த்தால் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கான பதில் தேடும் பொறுப்பு ஜூனியர் அமைச்சர்களான ஜி.கே.வாசன், சுதர்ஸனன் நாச்சியப்பன், நாராயணசாமி போன்றவர்களிடமிருந்து விலகி சீனியர் அமைச்சர்களான அந்தோணி, சிதம்பரம், சல்மான் குர்ஷித் போன்றவர்களிடம் போயிருக்கிறது. காங்கிரஸைப் பொறுத்தமட்டில் "நாடாளுமன்றத் தேர்தலா?" அல்லது "கொமன்வெல்த் மாநாடா" என்ற கேள்விக்குப் பதில் தேட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி நிற்கிறது. இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கோ, "தமிழர்களின் உணர்வா?" அல்லது "வெளியுறவுக் கொள்கையா" என்ற நூல்கண்டு சிக்கலை அவிழ்க்க முடியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை முக்கியம் என்ற அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் முடிவு எடுத்தால், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்பதும், அதற்கான கூட்டணி கிடைக்காமல் தவிக்க வேண்டியதிருக்கும் என்பதும்தான் இப்போதைக்கு இருக்கின்ற பேராபத்து.
மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இன்றைய திகதியில் இருக்கும் ஒரேயொரு ஆறுதல் இன்னும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது பற்றி அறிக்கை விடவில்லை என்பதுதான். ஆனால் அதனாலேயே காங்கிரஸுக்கு தமிழகத்தில் கூட்டணி கிடைத்து விட்டது என்றும் சொல்ல முடியாது. குறிப்பாக போருக்குப் பிறகு இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா "இலங்கை மீது பொருளாதாரத் தடை", "பொது வாக்கெடுப்பு" போன்ற பல தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்தவர். ஆகவே தமிழகத்தில் உருவாகும் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் திடீரென்று தமிழக முதல்வரும் இந்த விடயத்தில் களத்தில் இறங்குவார் என்பது காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்காத ஒன்று அல்ல!
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத்தில் ஒரு சிந்தனை உலா வருகிறது. அதாவது "எப்படியிருந்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கிடைக்காது. ஆகவே, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்திய வெளியுறவுக் கொள்கையை தமிழகத்தின் உணர்வுகளைக் காரணம் காட்டி விட்டுக் கொடுக்க வேண்டாம்" என்ற சிந்தனை சில மேல்மட்டத் தலைவர்களிடத்தில், குறிப்பாக கட்சியின் "லகானை" கையில் வைத்திருப்போரிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே 40 தொகுதிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்ற அந்த மேல்மட்டத் தலைவர்களின் எண்ணம் நிறைவேறினால், பிரதமர் மன்மோகன்சிங் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் என்றே டெல்லி வட்டாரச் செய்தி. ஆனால் கடந்த பல நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு தமிழகத்திலிருந்து செல்லும் எம்.பி.க்கள்தான் கைகொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் அதிக எம்.பி.க்கள் வெற்றி பெறும் கூட்டணி வைக்கும் தேசியக் கட்சியான பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் ஆகியவற்றில் ஒன்றுதான் ஆட்சி அமைத்துள்ளன. இந்த அளவுகோலை எண்ணிப்பார்த்தால், பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்கலாம். இதுதான் இப்போதைக்கு காங்கிரஸின் டெல்லி விவகாரத்தை நன்கு உணர்ந்த தமிழகத் தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது!