2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

"அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி உருவாகுமா?"

Menaka Mookandi   / 2014 ஜனவரி 13 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலில் எப்போது வேண்டுமென்றாலும் "சுனாமி" உருவாகலாம் என்பதற்கு உதாரணம் தமிழக அரசியலில்தான் அவதாரம் எடுத்திருக்கிறது. "இனி காங்கிரஸுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை" என்று சபதம் மேற்கொண்ட தி.மு.க. பொதுக்குழு பற்றி மவுன விரதம் காத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திடீரென்று விழித்துக் கொண்டது. வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்த காங்கிரஸின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், தமிழக காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிப்பவருமான குலாம் நபி ஆசாத் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தை கலக்கியிருக்கிறது என்றே கூடச் சொல்லலாம்.

சில வாரங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஞானதேசிகன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் தி.மு.க.வை தங்கள் இஷ்டம் போல் சாடினார்கள். இளங்கோவன் ஒரு படி மேல் போய், "எங்களைப் பிடித்திருந்த தீய சக்தி விலகி விட்டது" என்று தி.மு.க.வை திட்டித் தீர்த்தார். ஆனால் அந்தப் பேச்சின் ஈரம் காய்வதற்கு முன்பே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கே "கௌரவப் பிரச்சினையாகி" விட்டது. "நம்மைக் கேட்காமல், நமக்கு ஒரு வார்த்தை சொல்லாமல் இப்படி தி.மு.க. தலைவரைச் சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தூதுவரை அனுப்பி விட்டதே" என்ற சோகத்தில் தமிழக காங்கிரஸார் இருக்கிறார்கள். 

குலாம் நபி ஆசாத்தின் சந்திப்பு "தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு" வித்திடுமா- இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், "காங்கிரஸுடனும், பா.ஜ.க.வுடனும் கூட்டணி இல்லை" என்று ஏற்கனவே தி.மு.க.வின் அதிகார மிக்க பொதுக்குழுவே அறிவித்து விட்டது. ஆனால் கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் இறுதி அதிகாரத்தை தி.மு.க. தலைவருக்கு அளித்து பொதுக்குழு தனியாக தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது. கலைஞர் கருணாநிதியைப் பார்த்து விட்டு வெளியே வந்த குலாம் நபி ஆசாத், "நான் எப்போது சென்னை வந்தாலும் கலைஞரைப் பார்ப்பேன். அது போன்றதொரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது. கூட்டணி பற்றியெல்லாம் பேசவில்லை. அதுபற்றி தேர்தல் வரும் போது பேசுவோம்" என்று பேட்டியளித்தார். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய இன்னொரு விசயம், "நாங்களும் தி.மு.க.வும் பத்து வருடங்களாக கூட்டணியாக இருக்கிறோம்" என்பதுதான். அந்த பேட்டியில் இந்த வாசகங்கள் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பிற்குப் பிறகு கருணாநிதி அது பற்றி எதுவும் கூறவில்லை என்றாலும், குலாம் நபி ஆசாத்தை சந்திக்க அவர் சம்மதித்ததே பெரிய நிகழ்வாக காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. காங்கிரஸின் பால் அவர் மனதில் மாற்றம் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சிதான் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் எண்ணுகிறார்கள். முக்கிய காங்கிரஸ் தலைவர் ஒருவர், "ஒன்று கலைஞர் மனதில் மாற்றம் வந்திருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் மாற்றம் ஏற்படுவதற்கான தேவை எதிர்காலத்தில் வரலாம் என்று கலைஞர் கருதியிருக்க வேண்டும். இந்த இரு சமாச்சாரங்களும் இல்லையென்றால் குலாம் நபி ஆசாத்தை அவர் சந்தித்து இருக்க மாட்டார். இது நிச்சயம்" என்று கூறுகிறார். அவர் சொல்வதில் அர்த்தம் இருக்கலாம் என்பது போல்தான் அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஏனென்றால் வழக்கமாக இது போன்ற சந்திப்புகள் முடிந்ததும், கலைஞர் கருணாநிதி பத்திரிக்கையாளர்களை சந்திப்பார். குலாம் நபி ஆசாத் தன்னை சந்தித்ததில் முக்கியத்துவம் ஏதுமில்லை என்று அவர் கருத்துச் சொல்வார். ஆனால் இப்போது அப்படிச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் "கலைஞருடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது" என்று குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியை தி.மு.க.வின் அதிகார பூர்வ பத்திரிக்கையான முரசொலியில் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "எங்களுக்குள் நல்லுறவு இல்லை" என்று கூறி குலாம் நபி ஆசாத்தின் பேட்டியை தி.மு.க.வும் மறுக்கவில்லை. குலாம் நபி ஆசாத் சந்திப்பு பற்றி கலைஞர் கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கிறார்? எல்லாம் அரசியல் மாற்றங்கள்தான் காரணம். அதற்கு முதல் காரணம் விஜயகாந்த்!

விஜயகாந்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் முதல் ப்ரையாரிட்டி. அதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகளை தி.மு.க. செய்து வருகிறது. தொகுதி பேரங்கள் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியில் உள்ளவர்களே விஜயகாந்திற்கும், தி.மு.க.விற்கும் 80 சதவீத பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன என்று பேசுகிறார்கள். தன் பங்கிற்கு " விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சி. வந்தால் மகிழ்ச்சி" என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்து கலைஞர் கருணாநிதியும் பேசி விட்டார். ஸ்டாலினும் பேசி விட்டார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அனைவருமே விஜயகாந்திற்கு "தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள்" என்று அழைப்பு விடுத்து விட்டார்கள். இத்தனைக்கும் பிறகும் விஜயகாந்திடம் இருந்து பாஸிட்டிவான பதில் வெளிப்படையாக வரவில்லை என்ற நெருடல் தி.மு.க.விற்கு இருக்கிறது. அதனால் குலாம் நபி ஆசாத்துடனான சந்திப்பை விஜயகாந்தை வழிக்குக் கொண்டு வரும் ஆயுதமாகக் கூட தி.மு.க. பயன்படுத்தலாம். அதனால் அந்த சந்திப்பு பற்றி தி.மு.க. கருத்துச் சொல்லாமல் இருக்கலாம்.

இதற்கிடையில், ஜனவரி 12-ம் தேதி தே.மு.தி.க.வின் அலுவலகத்தில் நிகழ்ந்த "பொங்கல் விழா"வில்  "எங்கள் கட்சி அனைத்து மதத்திற்கும் பொதுவானது" என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது பற்றிய சந்தேகத்தை விதைத்துள்ளார் விஜயகாந்த். அதே நேரத்தில் "மக்கள் விரோத அ.தி.மு.க.வை மக்கள் தோற்கடிப்பார்கள்" என்று பேசி, அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த இரு விஷயமும் "கலைஞர் கருணாநிதி- குலாம் நபி ஆசாத்" சந்திப்பிற்குப் பிறகு விஜயகாந்த் தரப்பிலிருந்து வெளிவந்துள்ள பாஸிட்டிவான அம்சம்.

ஆனால் இன்னமும் யாருடன் கூட்டணி போகப் போகிறார் என்பதை விஜயகாந்த் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பிப்ரவரி 2-ம் தேதி மாநாடு போட்டு அதில் அறிவிக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.  விஜயகாந்த் கூட்டணி பற்றி தெளிவான முடிவை வெளிப்படையாக எடுக்கவில்லை என்பதால், காங்கிரஸ் தரப்பிலிருந்து வரும் சமிஞ்ஞையை புறக்கணிக்க வேண்டாம் என்று கலைஞர் கருணாநிதி கருதியிருக்கக்கூடும்.

அது மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் கூட்டணி யுக்தி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் தனித்துப் போட்டி என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்கப் போகிறார்களா, அல்லது ஏதாவது ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப் போகிறார்களா என்பதை தி.மு.க.வால் இன்னும் அறுதியிட்டு முடிவு எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் காங்கிரஸுக்கு தி.மு.க.வும், தி.மு.க.விற்கு காங்கிரஸும் தேவைப்படும் என்ற சிந்தனை தி.மு.க. தலைவர் கருணாநிதியிருக்க எழுந்திருக்க நியாயமிருக்கிறது. இப்படி பல்வேறு சிந்தனையோட்டங்களின் விளைவுதான் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கவும் வைத்திருக்கிறது. அதே போல் குலாம் நபி ஆசாத் சந்திப்பு "மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கூட்டணி பற்றி இல்லை" என்று தி.மு.க. தலைவர் மறுத்துப் பேசமுடியாமலும் இருக்கிறது என்றால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இது ஒரு புறமிருக்க, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க.) பொதுச் செயலாளர் வைகோ தனது மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஜனவரி 11-ம் தேதி கூட்டம் போட்டார். அதில் பேசிய வைகோ, "பா.ஜ.க.விடம் நான் பத்து தொகுதிகள் அடங்கிய பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அதில் 7 தொகுதிகளில் நாம் போட்டியிடுவோம். நான் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிடுவேன்." என்றவர் கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார். அவர் மேலும் பேசிய போது, "நாம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கப் போகிறோம்.

பிப்ரவரி 8-ம் தேதி நரேந்திரமோடி சென்னை கூட்டத்திற்கு வரும் போது அக்கூட்ட மேடையில் நானும் பங்கேற்பேன். இது தவிர பாட்டாளி மக்கள் கட்சி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் தே.மு.தி.க. வரும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை" என்று கூறியிருக்கிறார். இதில் தே.மு.தி.க. வரும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்ற வைகோவின் பேச்சு, தி.மு.க.வுடன் தே.மு.தி.க. போவதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று வைகோ நினைக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது.

அது வெறும் தி.மு.க- தே.மு.தி.க. அணியா அல்லது தி.மு.க.- தே.மு.தி.க.- காங்கிரஸ் அணியா என்பது பற்றியும் ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் வைகோ. அவர், "ஒரு வேளை தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் அணி உருவானால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. விரும்பலாம். அது போன்ற நேரத்தில் ம.தி.மு.க. அக்கூட்டணியில் இடம்பெறாது. நாம் பாராளுமன்றத் தேர்தலை தனித்து சந்திப்போம்." என்று மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால் இந்தப் பேச்சில் வைகோ எவ்வளவு தூரம் உறுதியாக இருப்பார் என்பது இப்போது தெரியாது. ஏனென்றால் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலை ம.தி.மு.க. புறக்கணித்ததால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்து போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2014 பாராளுமன்றத் தேர்தலிலும் ம.தி.மு.க. தனித்துப் போட்டி என்றால் எத்தனை ம.தி.மு.க. நிர்வாகிகள் அது போன்ற அக்னிப்பரீட்சைக்கு தயாராவார்கள் என்பது கேள்விக்குறியே! கடைசி நேரத்தில் வைகோவே கூட, "அ.தி.மு.க. வருவதற்கு முன்பே நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோம்" என்று கூறி விட்டு, அந்தக் கூட்டணியிலேயே கூட வைகோ தொடரலாம்.

ம.தி.மு.க.வையும், அக்கட்சி நிர்வாகிகளையும் உற்சாகத்தில் வைக்க, அவர் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க இது போன்ற யுக்திதான் (அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி) கை கொடுக்கும் என்பது 21 வருடம் தனிக்கட்சி நடத்திய வைகோவிற்கு தெரிந்திருக்கும் என்று முழுமையாக நம்பலாம். வைகோவிற்கு ஒரு காலத்தில் தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி அதை உணருகிறார் என்றே தெரிகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. என்று ஒரு அணி அமைந்தால், காங்கிரஸையும் விட்டு விட்டு தேர்தலை சந்தித்து எத்தனை தொகுதிகளில் ஜெயிக்க முடியும் என் கேள்வி அவர் மனதிலும் எழுந்திருக்கும்.

அதனால்தான் அ.தி.மு.க. கூட்டணியின் முழு உருவம் தெரியும் வரை எந்த ஆப்ஷனையும் க்ளோஸ் பண்ணாமல் இருக்கிறார் கருணாநிதி. அதில் ஒன்றுதான் காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத்தையும் சந்தித்தது. அவர் பற்றி வேறு கருத்து எதுவும் சொல்லாமல் அமைதி காப்பது- இந்த அமைதி மற்ற கட்சிகளையும் யோசிக்க வைத்துள்ளது என்பதே உண்மை.

மொத்தத்தில் தமிழக தேர்தல் களம் திடீரென்று குழப்பத்தில் நிற்கிறது. தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் அணி உருவாகுமா? அல்லது காங்கிரஸ்- தே.மு.தி.க. தனி அணியா? என்பது தெளிவாகவில்லை. அ.தி.மு.க- கம்யூனிஸ்டுகள் ஒரு அணியா? அல்லது அ.தி.மு.க.- பா.ஜ.க.- ம.தி.மு.க. தனி அணியா? என்பதும் இன்னும் முழு வடிவம் பெறவில்லை. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் மூன்றாவது சக்தியாக தேசிய கட்சியான காங்கிரஸின் ஆதிக்கம் குறைந்து, விஜயகாந்தின் செல்வாக்கு அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதுதான்.

மூன்றாவது சக்தி மாநிலக் கட்சியாக இருக்கும் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. என்பதால், தேசியக் கட்சிகளாக இருக்கும் காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் இந்த முறை திராவிட கட்சிகள் முதல் மரியாதை கொடுக்கவில்லை. "தே.மு.தி.க." வை மையப்படுத்தியே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அரசியல் கூட்டணி பற்றி முடிவு செய்ய நினைப்பதால்தான் ஒட்டுமொத்த தேர்தல் கூட்டணிக் களமும் இன்னமும் குழம்பிப் போய்க் கிடக்கிறது. அதை "காங்கிரஸ்- தி.மு.க." இடையே அரும்பும் உறவும், வைகோவின் ஆவேச உரையும் மேலும் குழப்பி வைத்திருக்கிறது. திராவிடக் கட்சிகள் (அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.) இரண்டிற்கும் தை பிறந்தால் வழி பிறக்குமா? குறைந்த பட்சம் தமிழக தேர்தல் கூட்டணி குழப்பங்களாவது தீருமா? என்பது தை மாதம் முடிவதற்குள் அம்பலத்திற்கு வந்து விடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X