2025 மே 19, திங்கட்கிழமை

"தி.மு.க. சங்கரமடமல்ல": மத்திய அமைச்சர் மு.க. அழகிரி

A.P.Mathan   / 2013 ஜனவரி 07 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) தலைவர் பதவிக்கு யார் என்ற போட்டி மீண்டும் தொடங்கியிருக்கிறது. "எனக்கு வாய்ப்பு வந்தால் ஸ்டாலினை தலைவர் பதவிக்கு வழிமொழிவேன். ஏற்கனவே பேராசிரியர் அன்பழகன் (தி.மு.க. பொதுச் செயலாளர்) முன் மொழிந்திருக்கிறார்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். சென்னையில் ஜனவரி 6ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி அறிவித்து கட்சிக்குள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் "வாரிசு அலை" வீச வைத்திருக்கிறார். தி.மு.க. தலைவரின் இந்த அறிவிப்பிற்கு பின்னணி இல்லாமல் இல்லை.

சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி 2000 உறுப்பினர்கள் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தவர் தி.மு.க. பொருளாளராக இருக்கும் மு.க. ஸ்டாலின். அந்த விழாவில் பேசிய கலைஞர் கருணாநிதி, "என் உயிருள்ளவரை சமுதாய மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபடுவேன். எனக்குப் பிறகு என்ற கேள்வி எழுகிறது. இதோ இங்கே மேடையில் அமர்ந்திருக்கின்ற என் தம்பி ஸ்டாலின் எனக்குப் பிறகு அந்தப் பணியை தொடருவார்" என்றார். இதுதான் புதிய "வாரிசு அரசியல்" போட்டிக்கு வித்திட்ட நிகழ்ச்சி. ஏற்கனவே பல முறை ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்ற முறையில் "சிக்னல்" செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர். உதாரணமாக 2001 சட்டமன்றத் தேர்தலின்போது வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "ஸ்டாலின்தான் முதல்வராக வர வேண்டும் என்றால் அதைத் தடுக்க யாரால் முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். அப்போது தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தாக்கல் செய்த நான்கு தொகுதிகளின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்த நேரம். டான்சி வழக்கில் நீதிமன்றம் அளித்த தண்டனையைக் காரணம் காட்டி இந்திய தேர்தல் கமிஷன் அப்படி அந்த வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்திருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் அதையே பிரசாரமாக மாற்றினார் அப்போது முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா. "தன் மகனை (ஸ்டாலினை) முதல்வராக்க என்னை தேர்தலில் நிற்க விடாமல் செய்து விட்டார்" என்று மக்கள் மன்றத்தில் சூளுரைத்தார். இதற்கு பதில் அளிக்கும் போதுதான் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, "ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று இருந்தால் அதை யார் தடுக்க முடியும்?" என்று பேசினார். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. அதனால் "ஸ்டாலின் அடுத்த முதல்வர்" என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.

இதன்பிறகு கட்சியில் ஸ்டாலினின் முக்கியத்துவம் அதிகரித்தது. தி.மு.க.வின் பொருளாளர், 2006-2011இல் துணை முதல்வர் என்றெல்லாம் பல்வேறு முக்கியப் பதவிகளுக்கு வந்தார். இதனால் "அடுத்து ஸ்டாலின்தான் முதல்வர்" என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்களிடத்தில் ஏற்பட்டது. சென்ற முறை தி.மு.க. ஆட்சியிலிருந்தபோதே ஸ்டாலின் ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்த்தப்படுவார் என்ற செய்திகள் சிறகடித்துப் பறந்தன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. அதற்கு காரணம் குடும்பத்திற்குள் ஸ்டாலினுக்கு இருந்த எதிர்ப்பு. "கலைஞர் இருக்கின்ற வரை அவர்தான் முதல்வர்" என்று மத்திய அமைச்சராக இருக்கும் மு.க. அழகிரி "எதிர்ப்பு" காட்டத் தொடங்கினார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யும் பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு வந்தது. அதன்படியே காங்கிரஸ் வேட்பாளர்களும் கூட பிரசாரத்திற்கு ஸ்டாலினையே நம்பியிருந்தார்கள். "கலைஞரின் மகனாக உங்களிடம் கரம் கூப்பி வாக்கு கேட்கிறேன்" என்று தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற பிரசாரம் மேலும் பலம் பெற்றது. ஆனாலும் இந்தமுறை மு.க. அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி என்று மூன்று முனைகளிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது.
அந்த எதிர்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்ற ஆட்சி முடியும் வரை ஸ்டாலினை முதல்வராக்கவில்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோது செய்யாத மாற்றத்தை இப்போது எதிர்கட்சியாக இருக்கும்போது செய்ய முடியாத "கஷ்ட காலத்தில்" இருக்கிறார் அவர். இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் முலயாம் சிங் யாதவ் தன் மகன் அகிலேஷ் யாதவிற்கு வழி விட்டு, அவரை உத்தரபிரதேச மாநில முதல்வராக்கிய பிறகு, தமிழகத்தில் ஸ்டாலின் கோரிக்கை வலுப்பெற்றது. "ஏன் தளபதியை (தி.மு.க.வினர் இப்படித்தான் ஸ்டாலினை அழைப்பார்கள்) தி.மு.க. தலைவராக்கக் கூடாது?" என்ற கேள்வி பீறிட்டுக் கொண்டு வருகிறது. ஸ்டாலினும் இந்த விடயத்தில் பொறுமை இழந்து காணப்படுகிறார்.

ஏனென்றால் இந்தியாவில் வாரிசு அரசியலில் தங்கள் தலைவர்களுக்குப் பிறகு விரைவில் பிரதமரானவர்களும், முதல்வரானவர்களும்தான் அதிகம். நேருவிக்குப் பிறகு இந்திரா காந்தி, அவருக்குப் பிறகு ராஜீவ் காந்தி இப்படித்தான் பதவிக்கு வந்தார்கள். பரூக் அப்துல்லாவிற்கு பதில் உமர் அப்துல்லா இப்படித்தான் காஷ்மீர் முதலமைச்சரானார். கர்நாடகாவில் தேவகவுடாவிற்கு பிறகு குமாரசாமி கர்நாடக முதல்வரானார். ஒரிஸ்ஸாவில் நவீன் பட்நாயக்கும் அப்படித்தான் முதலமைச்சரானார். இப்போது உத்தரபிரதேசத்தில் முலயாம்சிங் யாதவிற்கு பதில் அகிலேஷ் யாதவ் வெகு குறைந்த காலத்திலேயே இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வராகிவிட்டார். ஆனால் ஸ்டாலின் மேயராக இருந்துவிட்டார். அமைச்சராக இருந்துவிட்டார். துணை முதல்வராகவும் இருந்துவிட்டார். ஆனால் முதல்வராக "நீண்டதொரு வெயிட்டிங்" என்ற நினைப்பு அவரையும் வாட்டுகிறது. அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தொண்டர்களையும் வாட்டுகிறது. அதனால்தான் ஸ்டாலின் இந்தமுறை தலைமை தனக்கு வருகிறதோ இல்லையோ, தானே கட்சிக்குள் தலைவர்போல் செயல்படத் தொடங்கினார்.

சமீப காலமாக தி.மு.க.வில் உள்ள இளைஞர் அணி தாய்க்கட்சிக்கு ஓர் "இணையான அமைப்பு" போலவே செயல்பட்டு வருகிறது. ஸ்டாலினே இளைஞரணியின் தலைவர். அவரே பொறுப்புகளைப் போடுகிறார். அவரே கூட்டத்திற்கான அழைப்புகளை விடுக்கிறார். நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துகிறார். முன்பு 2001 முதல் 2006 வரை தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார். இப்போது 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் "செயல்வீரர்கள்" கூட்டம் நடத்துகிறார். "தேர்தல் நிதி வசூல் செய்வதைக் கூட தானாகவே செய்கிறார். தலைமையிடம் கன்சல்ட் பண்ணவில்லை" என்ற ஒரு கருத்து கட்சிக்குள் நிலவுகிறது. ஜனவரி 6ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் அனைத்து மாவட்டங்களிலும் பெருமளவில் நிதி திரட்ட வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதினைந்து தினங்களுக்கு முன்பே ஸ்டாலின் தேர்தல் நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. "கட்சிக்குள் ஒரு கட்சிபோல் இளைஞரணியை நடத்தி வருவது" தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு டென்ஷனை ஏற்படுத்தியது. அதனால்தான் "எனக்குப் பிறகு ஸ்டாலின் சமுதாய மேம்பாட்டிற்கு பாடுபடுவார்" என்றும், இப்போது "எனக்கு ஒரு வாய்ப்பு வந்தால் ஸ்டாலினை அடுத்த தலைவராக கட்சியின் பொதுக்குழுவில் வழிமொழிவேன்" என்று அறிவித்துள்ளார். ஸ்டாலின் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் "அழுத்தத்தை" சமாளிக்கவே இந்த அறிவிப்பே தவிர, உடனடியாக ஸ்டாலினை தி.மு.க.வின் அடுத்த தலைவராக அறிவிக்கும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிவிப்பில் உள்ள "எனக்குப் பின்னால்", "வாய்ப்பு வந்தால்" என்ற வார்த்தைகள் இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக தி.மு.க. தலைவராக கருணாநிதி இருக்கின்ற வரை "ஸ்டாலினை வழிமொழிய" வாய்ப்பு வராது என்பதுதான் உண்மை நிலைவரம்.

ஆனால் இந்த ஒட்டு மொத்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (கலைஞரின் இன்னொரு மகன்) மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. "எனக்குப் பிறகு ஸ்டாலின்" என்று கருணாநிதி அறிவித்தவுடன் பேட்டியளித்த மு.க. அழகிரி, "தலைவரை நியமிக்க தி.மு.க. ஒன்றும் சங்கரமடமல்ல (சங்கர மடம் என்பது "மகாப்பெரியவர்" என்று அழைக்கப்படும் சந்திரசேகரஸ்வாமிகள், இப்போது ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருக்கும் மடம். பொதுவாக மடங்களில் மடாதிபதிகள் நியமிக்கப்படுவதுதான் வழக்கம். தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் அல்ல) என்று ஏற்கனவே தலைவர் கலைஞர் கூறியிருக்கிறார். அதையே சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்" என்று கடுப்படிப்பது போல் பேசினார். இந்த பேட்டியை "தனக்கு எதிராகவே மு.க. அழகிரி கருத்துச் சொல்கிறாரே" என்று நினைத்த கலைஞர் கருணாநிதி, மு.க. அழகிரியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். மண்டலச் செயலாளராக இருந்தாலும், தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அது மட்டுமின்றி மு.க. அழகிரி மண்டலச் செயலாளராக இருக்கும் தென்மாவட்டங்கள் அடங்கிய கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் திகதி ஒரு மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அது கன்னியாகுமரி கடலுக்குள் நிற்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அ.தி.மு.க. அரசு சரியாக பராமரிக்காமல் சிதிலமடையச் செய்கிறது என்பதை கண்டித்தே அந்த ஆர்பாட்டம். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குவது கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் இப்போது திடீர் மாற்றம். தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் அந்த கண்டன ஆரப்பாட்டம் நடக்கும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். ஆனால் அழகிரி பங்கேற்பது பற்றிய அறிவிப்பு இல்லை.

தமிழகத்தின் "தென் மாவட்டங்கள்" என்றால் தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் "அழகிரியின் கோட்டை" என்பார்கள். அங்கு அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. ஆனால் இந்தமுறை தி.மு.க. தலைவரே அழகிரியை முன்னிறுத்தாமல் அங்கே ஒரு பெரும் போராட்டத்திற்கு அறிவிப்பு செய்திருக்கிறார். "எனக்குப் பிறகு ஸ்டாலின்" என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரியின் போக்கே இதற்கு காரணம். அதனால்தான் மா.செ. கூட்டம் முடிந்து நிருபர்களை சந்தித்தபோது அழகிரியின் "சங்கரமடம்" கருத்துப் பற்றி கேட்டதற்கு, "சமுதாயப் பணியை எனக்குப் பிறகு தொடர்ந்து ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று நான் குறிப்பிட்டதை சில ஏடுகள் விஷமத்தனமாக வெளியிட்டன. அந்த விஷமத்தனத்தை நம்பிக்கொண்டு யாராவது எதிர்கருத்து தெரிவித்திருந்தால் அது அவர்களின் புரியாமையைத்தான் குறிக்குமே தவிர வேறு அல்ல" என்று மிகவும் காட்டமாகவே கூறியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அழகிரி புரியாதவர் என்ற கடுமையான கருத்தை இதுவரை அவர் வெளியிட்டதில்லை. இதுதான் முதல் முறை.

அ.தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை தமிழகத்தில் தி.மு.க. வேகப்படுத்துகிறது. 14 மணி நேரத்திற்கும் மேற்பட்ட மின்வெட்டு, காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு கிடப்பது எல்லாம் அ.தி.மு.க. அரசின் மீது அதிருப்தியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் அதிருப்தியடையும் வாக்காளர்கள் தி.மு.க. பக்கம்தான் திரும்புவார்கள் என்று அக்கட்சி தலைமை நினைக்கிறது. அப்படியொரு சூழ்நிலையில், "தி.மு.க.விற்குள் யார் தலைவர்?'' என்ற சர்ச்சை பெரிதாக வெடித்து அது வாக்காளர்களின் மனநிலையில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று பழுத்த அரசியல்வாதியான முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைக்கிறார். அதனால்தான் "வாய்ப்பு வரும்போது அடுத்த தலைவராக ஸ்டாலினை வழிமொழிவேன்" என்று பீடிகை போட்டு, ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்ற இமேஜை மேலும் கட்சிக்குள்ளும் சரி, தமிழக அரசியலிலும் சரி ஏற்படுத்துகிறார். ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையை ஜெயிக்கவும், மாற்றுக் கூட்டணி ஒன்றை உருவாக்கவும் இந்த நேரத்தில் ஸ்டாலின் தலைமை போதாது, தானே களத்தில் நின்றால் மட்டுமே அதை சாதிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தி.மு.க. தலைவர். ஏனென்றால் ஏறக்குறைய 40 வருடங்களாக "கருணாநிதி- எம்.ஜி.ஆர்", "கருணாநிதி ஆதரவு- ஜெயலலிதா ஆதரவு" என்று தமிழக வாக்காளர்கள் பிரிந்து நின்று வாக்களித்துவிட்டார்கள். அவர்களை திடீரென்று "ஸ்டாலின் ஆதரவு- ஜெயலலிதா ஆதரவு" மாற்றி வரவிருக்கின்ற முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை அவர். மேலும், "வருங்கால பிரதமர் ஜெயலலிதா" என்று அ.தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்ற நிலைமையில், வாக்காளர் மனதில் இது போன்றதொரு மாற்றத்தைக் கொண்டு வருவது தேர்தல் வெற்றிக்கு உதவாது என்றே தி.மு.க. தலைவர் கருணாநிதி கருதுகிறார். அதனால்தான் "எனக்குப் பிறகு", "வாய்ப்பு வந்தால்" என்ற அடைமொழிகளைப் பயன்படுத்தி ஸ்டாலினை தி.மு.க.வின் அடுத்த வாரிசாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில் தன் மகள் கனிமொழியையும் கட்சிக்குள் ஒரு "பவர் சென்டராக" உருவாக்க முயலுகிறார் தி.மு.க. தலைவர் என்பதும் அவர் கனிமொழிக்கு சமீப காலத்தில் கொடுக்கும் முக்கியத்துவம் உணர்த்துகிறது. அதைப் புரிந்து கொண்ட ஸ்டாலினும் ஜனவரி 5ஆம் திகதி நடந்த கனிமொழியின் பிறந்த நாள் அன்று அவரது இல்லத்திற்கே சென்று வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் எதிர்காலம்தான் கட்சிக்குள் இப்போது மிகப்பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X