2025 மே 15, வியாழக்கிழமை

அடுத்த உரைக்கு இதே ஆளுநரா, இல்லையா?

Thipaan   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்றம், எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி, ஆளுநர் ரோசய்யாவின்  உரையுடன் கூடுகிறது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றப்படாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் ரோசய்யா, உரை நிகழ்த்தவுள்ளார்;. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சியின் செயற்றிட்டங்கள் இந்த உரையில் இடம்பெறும். எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை தமிழக சட்டமன்றத்தில் உதிரிக் கட்சிகள் ஏதுமில்லை. எதிர்க்கட்சிகள் தவிர, அரசியல் கட்சிகளும் இல்லை. குறிப்பாக, 1991இல் சட்டமன்றத்துக்குள் நுழைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு எம்.எல்.ஏ இல்லை. 

2006இல் முதன் முதலாக சட்டமன்றத்துக்குள் நுழைந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, இந்த முறை உறுப்பினர்கள் இல்லை. அதே 2006ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்;குள் நுழைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் யாரும் சட்டமன்றத்துக்குச் செல்லவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பாரம்பரியமாக தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இம்முறை எம்.எல்.ஏக்கள் இல்லை. 2006இல் தன் கணக்கைத் தொடக்கிய தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இந்த சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை. இது தவிர, 1996இல் சட்டமன்றத்துக்குள் நுழைந்த புதிய தமிழகம் கட்சி, 2011இல் சட்டமன்றத்துக்குள் நுழைந்த மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளுக்கும் இந்த முறை சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை.

இந்நிலையில், தமிழக சட்டமன்றம் வித்தியாசமான காட்சியை இந்த முறை சந்திக்கிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க, அதற்கு வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க, மூன்றாவது கட்சியாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள். பாரம்பரியமிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினர். இவர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் தமிழக சட்டமன்றத்தில், இந்த முறை வாசிக்கப்படும் ஆளுநர் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஏனென்றால் வாழ்த்திப் பேச வேண்டுமென்றால், அதை அ.தி.மு.க உறுப்பினர்கள் மட்டுமே பேச வேண்டும். எதிர்த்துப் பேச வேண்டும் என்றாலும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே செய்ய வேண்டும். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பணியைச் செய்யலாம் என்றாலும், வலுவான நிலையில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தி.மு.க இருப்பதால், அவர்களின் சார்பிலேயே எதிர்ப்புக் குரல் அதிகம் எழும்.

கடந்த காலங்களில், தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் சரி, அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் சரி, காட்சிகள் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக, தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க எதிர்த்துப் பேசினால், அதற்குப் பாராட்டுத் தெரிவிக்க தி.மு.க வின் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் இருப்பர். அதேபோல், அ.தி.மு.க ஆட்சியில், தி.மு.க எதிர்த்துப் பேசினால் அ.தி.மு.கவை ஆதரிக்க சில கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பர். அ.தி.மு.க ஆட்சியில் இருந்த கடந்த காலத்தில், சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பத்திரிகைகள் 'ஜெயா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்' என்றே அழைத்த நிகழ்வுகள் எல்லாம் உண்டு.

அதேபோல், கடந்த சட்டமன்றத்தில் கூட, பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ, ஏன் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களும் அ.தி.மு.க ஆட்சியைப் பாராட்டிப் பேசும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த முறை அப்படியொரு வாய்ப்பு ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவுக்கு இல்லை. ஏனென்றால், எதிரில் இருப்பது தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் மட்டுமே. ஏறக்குறைய தமிழகத் தேர்தல் களத்தில் எப்படி 'அ.தி.மு.க, தி.மு.க' என்ற அரசியல் உருவானதோ, அதேபோல் சட்டமன்றத்துக்குள்ளும் இப்போது 'அ.தி.மு.க, தி.மு.க' என்ற அரசியல் தோன்றியிருக்கிறது.

இப்படியொரு சட்டமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, ஏற்கெனவே இருந்த பேரவைத் தலைவர் தனபாலிடமே இம்முறையும் வந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக சபாநாயகராக இருந்தவர் தனபால், அதற்கு முன்பு அமைச்சர் பதவியிலும் இருந்தவர். ஆகவே, சபையை நடத்தும் நெளிவு சுளிவுகளை அவர் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கின்றார். துணைச் சபாநாயகராக, பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட தனபாலை, அவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

அப்போது சபாநாயகரை வாழ்த்திப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின், 'வயலின் கம்பிகளை இருபுறமும் இழுத்தாலும் இசை வரும். அது போல் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் பொதுவானவராக சபாநாயகர் இருக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அதேபோல் முதலமைச்சர் ஜெயலலிதாவும், 'ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல' என்றார். இந்த இரு தலைவர்களின் பேச்சுக்களையும் பார்த்தால், வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடர் சமூகமான சூழ்நிலையில், மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கவும் அரசாங்கத்தின் திட்டங்களை எடுத்துச் சொல்லவும் பயன்படும் என்றே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் கருதுகின்றனர்.

சட்டமன்றத்துக்குள் இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவும் நேரத்தில், முதல் முறையாக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை ஆற்ற வரும் ஆளுநர் ரோசய்யா மீது, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து விட்டது. தமிழகத்தில் நடைபெற்ற இரு தொகுதிகளின்  தேர்தல்களை (அரவாக்குறிச்சி, தஞ்சாவூர்) வரலாறு காணாத பண விநியோகம் என்று குற்றம் சாட்டி தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஆளுநரே, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி 'அந்த இரு தொகுதிகளின் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும்' என்று அறிவுறுத்தினார். தேர்தல் நடத்துவது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநரொருவர் கடிதம் எழுதியது முதல் முறை. இக்கடிதம் பற்றி ஆராய்ந்து முடிவு எடுத்த இந்திய தேர்தல் ஆணையம், 'ஆளுநர் இப்படியொரு கடிதத்தை எழுதியதை தவிர்த்திருக்க வேண்டும்' என்றும், 'அக்கடிதத்தில், விரைவில் தேர்தலை நடத்த ஆளுநர் சுட்டிக்காட்டிய காரணங்கள் பொருத்தமற்றவை' என்றும் உத்தரவு பிறப்பித்தது.

அரசியல் சட்டப்படி அமைந்துள்ள தேர்தல் ஆணையம், இன்னொரு அரசியல் சட்ட பதவியில் வீற்றிருக்கும் ஆளுநரைக் கடிந்து கொண்டது, இந்திய தேர்தல் வரலாற்றில் இதுதான் முதல் முறை. இவ்வாறு, தேர்தல் ஆணையத்தால் கடிந்து கொள்ளப்பட்ட ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலம், வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்பாகத்தான், தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள அ.தி.மு.க அரசாங்கத்தின் முதலாவது ஆளுநர் உரையை வாசிக்கப் போகிறார் ரோசய்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே 'இந்தியத் தேர்தல் ஆணையம் கடிந்து கொண்ட நிலையிலும்' 'அடுத்து பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா' என்ற கேள்விக்குறியுடனும் தன் முதல் ஆளுநர் உரையை வாசிக்கப் போகிறார் ஆளுநர் ரோசய்யா.

அடுத்து வரும் ஆளுநர் உரைகளை அவரே வாசிப்பாரா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. ஜூன் 14 ஆம் திகதி, ஆறாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அங்கு சந்தித்துப் பேசி, தமிழக அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அப்போது ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என்பதே இன்றைய நிலை. ஒரு மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் போது அந்த மாநில முதல்வரை மத்திய அரசாங்கம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்ற மரபு, ஏற்கெனவே இருக்கிறது. அந்த வகையில் ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பதாக இருந்தாலும் சரி, அவருக்குப் பதில் வேறு ஒருவரை நியமிப்பதாக இருந்தாலும் சரி தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி கலந்து ஆலோசிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தாக்கல் செய்யப்படும் முதல் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படப் போகும் அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றித்தான் இப்போது அனைவரது கவனமும் இருக்கிறது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆளுநர் உரை ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால், அரச அதிகாரிகள், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் அ.தி.மு.க அரசாங்கத்தின் ஆளுநர் உரையை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

அதனால்தான் வருகின்ற ஜூன் 15 ஆம் திகதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அன்றைய தினம் ' தி.மு.க உறுப்பினர்கள், அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்பதற்கு ஆலோசனை வழங்கப்படும் என்றே தெரிகிறது. தமிழக சட்டமன்றம் அ.தி.மு.க, தி.மு.க என்ற இரு பெரும் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியாக இனி வரும் ஐந்து வருடங்கள் கலக்கலாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .