Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணம் பாரிய இடர்பாடுகளைத் தாண்டி சாதகமான சில பக்கங்களை நோக்கி நகர்வதாக கொள்ள முடியும். தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சிகள் அதனையே பிரதிபலிக்கின்றன. கைதுக்கான காரணங்கள் தெரியாமல் முடிவின்றிய சிறை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டவர்களை மீட்டெடுப்பது தொடர்பில், இருப்பதில் இலகுவான- சாத்தியமான வழிகளை பரிசீலிப்பது அவசியம். அதற்கான முனைப்புக்களில் தமிழ்த் தரப்பு தொடர்ச்சியான அக்கறையோடு இருக்க வேண்டிய தருணம் இது.
பொதுமன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பினை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அதற்கான வழிகளும், சாத்தியங்களும் நடைமுறை அரசியல் சூழலில் காணப்படுகின்றனவா?, என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. தென்னிலங்கையில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணியிருக்கு (ஜே.வி.பி) அரசாங்கம் பொதுமன்னிப்பை அளிக்க முடியுமானால், தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொதுமன்னிப்பினை வழங்க முடியாது? என்கிற நியாயமான கேள்வி தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக இருப்பது.
அந்தக் கேள்வியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் நேரடியாகவும் எழுப்பியிருக்கின்றார். இதே கேள்வியை, சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரம் ஜனாதிபதியிடம் எழுப்பவில்லை. ஆரம்பத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்பி வந்திருக்கின்றது.
பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் அரங்கில் அதன் தாற்பரியத்தை புறந்தள்ளி, ஒரேநாளில் தமிழ் அரசியல் கைதிகளை மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வார் என்றோ, அதற்கான அனுமதியை கடும்போக்கு சிங்களக் கட்சிகளும், தளங்களும் வழங்குமென்றோ எதிர்பார்க்க முடியாது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இருக்கும் அரசியல் அதுதான். அந்த அரசியலுக்குள் விரும்பியோ விரும்பாமலோ மைத்திரிபால சிறிசேன சிக்கிக்கொள்ள வேண்டும். சிக்கிக் கொண்டிருக்கின்றார். அது, குறுகிய அரசியல் தான். ஆனால், அப்படியான குறுகிய அரசியல் தான் இலங்கையில் கோலொச்சி வந்திருக்கின்றது. அதற்கு சிங்களத் தரப்பு, தமிழ்த் தரப்பு, முஸ்லிம் தரப்பு என்கிற வேறுபாடுகள் எல்லாம் கிடையாது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான முனைப்புக்கள் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் மேல் மட்டத்தில் வந்த நாள் முதல், அதனை குறுகிய அரசியல் நலன் சார்ந்து அணுகும் முறைமையும் அதிகரித்து வந்திருக்கின்றது. அது, சாத்தியமான வழிமுறைகளை இனங்கண்டு நகரும் அரசியலைப் புறந்தள்ளி, வைக்கோல் பட்டறை நாய்களின் செயற்பாடுகளை ஒத்ததாகவும் இருக்கின்றது.
அந்தச் செயற்பாடு பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அனைத்துப் பொறுப்புக்களையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்திவிட்டு விலகி நின்று இரைச்சலை எழுப்பிக் கொண்டிருக்கின்றது. இரைச்சல்களினால் பிரச்சினை தீர்ந்த வரலாறுகள் இல்லை. மாறாக, பிரச்சினையை தீவிரமாக்கியிருக்கின்றன. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான முனைப்புக்களுக்கு முழுமையான அங்கிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கோர முடியாதோ, அதோபோலவே, அவர்கள் மீது முழுமையான பொறுப்பையும் சுமத்த முடியாது. இது, தமிழ்த் தரப்பின் கூட்டுப் பொறுப்புச் சார்ந்த பிரச்சினை.
'தமது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் உயிரிழந்தாலும், அதற்கான முழுமையான பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்.' என்று அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியொருவர், யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் கைதிகளின் உணர்வுகள் சார்ந்து அந்தக் கூற்று வெளிப்பட்டிருக்கின்றது. ஆனால், அதனை கையாளும் தரப்புக்களிடம் குறிப்பிட்டளவான நியாயமும்- எதிர்கால முனைப்புக்கள் தொடர்பிலான அடிப்படைகளும் இருக்க வேண்டும். மாறாக, குறுகிய அரசியலை முன்னிறுத்துவதற்கான அதனைப் பயன்படுத்திக் கொள்வது என்பது மக்களை பெரும் எரிச்சலுக்குள் தள்ளும். அது, ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும்.
இலங்கையின் அரசியல் சார்ந்து, அதன் நடைமுறைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெளிவான புரிதல் உண்டு. அதனை, மற்றவர்கள் அல்லது கற்றவர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் தரப்புகள் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. 67 வருட அரசியல் அதனை அதிகமாக மக்களுக்கு கற்பித்திருக்கின்றது.
அப்படியான நிலையில், குறுகிய அரசியல் நகர்வுகளை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், அதனை சாதகமாக பயன்படுத்தி அரசியல் அரங்கில் இலாபங்களை ஈட்டலாம் என்று நம்புவதெல்லாம் முட்டாள்தனமானது. அது, அந்தத் தரப்புக்களின் பாரிய வீழ்ச்சியாக அமையும்.
பொதுமன்னிப்பு என்பது, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்படக் கூடியது. தமிழ் அரசியல் கைதிகளில் அநேகர் இன்னமும் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டிருப்பவர்கள். அதுவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றவர்கள். அந்தக் சட்டம் எவ்வளவு சர்வாதிகரமானது, அதன் போக்கு எப்படிப்பட்ட என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நிலையில், இருப்பதில் சாத்தியமான வழிமுறைகளை அடைவது முக்கியமானது.
ஒரு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருதல் அல்லது பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பது, சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விடாப்பிடியாக இருப்பதனூடு சாத்தியப்படுவதில்லை. மாறாக, விட்டுக் கொடுப்புக்களினூடு சாத்தியமாக்கப்பட வேண்டியது. அதுதான், சீக்கிரத்தில் பிரச்சினைகளைத் தீர்க்கும். அதன்போக்கில், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டளவு வெற்றிகரமான போக்கில் கையாண்டிருக்கின்றது என்று கொள்ள முடியும். அதாவது, முடியுமான கைதிகளை பிணையில் விடுவித்தல் மற்றும் புனர்வாழ்வினூடு விரைவில் விடுதலையை சாத்தியமாக்கல் என்பன.
பிணையில் விடுவிக்கப்படுபவர்கள் வழக்கு விசாரணைகளின் போக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில் அதனை அதன் போக்கில் அணுக முடியும். குறிப்பாக, தண்டனைக் காலம் (அதிகமானவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள். அதுவும் தண்டனைக் காலத்தில் கொள்ளப்படும்) அல்லது பொதுமன்னிப்புக்கான கோரிக்கைகள் சார்ந்தது. புனர்வாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறு அணுகப்படும் அல்லது அதற்கான கால எல்லை எவ்வளவு என்ற கேள்விகள் எழுகின்றன.
புனர்வாழ்வின் பின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்- நீதிமன்ற சார்ந்த வழக்குகள் எவ்வாறு கையாளப்படும் என்பது தொடர்பில் பூரணமான பதில்களை அரசாங்கம் இன்னமும் வைக்கவில்லை. அது, தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டினை வெளியிடுவது தற்போதைக்கு அவசியமானது. அதுதான், தமிழ் அரசியல் கைதிகளின் உண்மையான விடுதலை தொடர்பில் குறிப்பிட்டளவு நம்பிக்கைகளை ஏற்படுத்தும். அதற்கான, முனைப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றையெல்லாம் தாண்டி, பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையில், இவ்வாறான நிலைமை நீடிக்கும் சாத்தியம் உண்டு. அப்படியான நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற நாளாந்த வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான சட்டத்தினை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதும் அவசியமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் அதனை வலியுறுத்தியிருக்கின்றது.
ஆட்சி மாற்றமொன்றுக்கு ஒத்துழைத்தவர்கள் என்கிற வகையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் சார்ந்து நடந்து கொள்ள வேண்டிய தேவையும் மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்டு. அதன் சார்பிலான நெகிழ்வு மனநிலையை அவர் வெளிப்படுத்தியாக வேண்டும். ஆனால், அது, ஒரே நாளில் எல்லாவற்றையும் சாத்தியமாக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு அல்ல. நடைமுறை சார்ந்த அணுகுமுறையோடு நிகழும் மாற்றங்கள் தான் அந்த மாற்றங்கள் தொடர்பிலான நம்பிக்கையை உறுதி செய்யும்.
மாறாக, குறுகிய அரசியல் நோக்கங்கள் சார்ந்த முனைப்புக்களும், தீர்மானங்களும் அதிகாரங்கள் மாறுகின்ற போது மாற்றமடையக் கூடியன. அதுவும், பௌத்த சிங்கள பேரினவாதம் கோலொச்சும் நாட்டில் அது இயல்பாக இடம்பெறக் கூடியவை. அப்படியான நிலையில், நிலையான அடைவுகள் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் என்று யார் கையாண்டாலும் அதன் நோக்கம் ஒன்றுதான். இங்கு, மூவரும் சாத்தியமான வழிகள் தொடர்பிலேயே சிந்திக்கின்றார்கள். பேசுகின்றார்கள் என்று கொள்ளலாம். மாறாக, ஒருவர் மற்றவரை மீறிய வல்லமையோடு செயற்பட்டிருக்கின்றார்கள் என்று கொள்ள முடியாது.
ஏனெனில், மூவரும் தென்னிலங்கை அரசாங்கத்தோடும், அதன் அரசியலோடும் போராட வேண்டியிருக்கின்றது. மாறாக, சி.வி.விக்னேஸ்வரனை தமது அரசியலுக்காக இப்போது தத்தெடுக்க முயலும் சில தரப்புக்கள் குட்டையைக் குழப்பி அதில் மீன்பிடிக்க முயல்கின்றன. அந்தக் காட்சிகள் பிணத்தின் மீதான அரசியல் செய்யும் முனைப்புக்களுக்கு ஒத்தவை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எவ்வளவு விரைவாக சாத்தியமாக்கப்பட வேண்டுமோ, அதேயளவுக்கு அந்தப் பிரச்சினைகளை வெற்றிகரமாக கையாள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியமானது. ஏனெனில், அதுதான், அவர்கள் மீதான விமர்சனங்களை புறந்தள்ள உதவும். அப்படிப்பட்ட நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை ஏனோ தானோ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாள்கின்றது என்று கொள்ள முடியாது.
சாத்தியமான வழிகளின் போக்கில் நிதானமாக நகர்ந்து வந்திருக்கின்றது. அது, நிலையான விடுதலையை சாத்தியமாக்கித்தர வேண்டும். அதுதான், சிறைக் கம்பிகளுக்கும் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அச்சுறுத்தலற்ற உண்மையான வெளிச்சத்தினை காட்ட உதவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025