2025 மே 17, சனிக்கிழமை

அரசியல் கருவிகளா மனித உரிமைகள்?

Thipaan   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் குழுவின் தலைவராக சவூதி அரேபியாவைச் சேர்ந்த பைஸால் பின் ட்ரட் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவிலுள்ள சவூதி அரேபியாவுக்கான தூதுவரான இவர், தனது நியமனத்தை அண்மையில் பெற்றுக் கொண்ட செய்தியானது, உலகம் மீது அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையினதும் அதன் மனித உரிமைகள் பேரவையினதும் மீதான சந்தேகங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

ஐக்கிய நாடுகளும் அதன் மனித உரிமைகள் சபையும், மேற்கத்தேய நாடுகளாலும் வல்லரசுகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு, அரசியல் கருவிகளாவே அவை காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு, தற்போது மீண்டும் எழுப்பப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பான அதிக குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ள நாடுகளுள் ஒன்றாக, சவூதி அரேபியா காணப்படுகிறது. அந்நாட்டின் ஷரியா சட்டத்தின் அமுல்படுத்தலானது, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமைகள் அமைப்புகளின் விமர்சனங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறது.

பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதில் அந்நாட்டின் பின்னடிப்பு, பாலியல் அடிமைகள், இஸ்லாத்தை விட்டு வெளியேறுவோருக்கான அந்நாட்டின் தண்டனைகள், முறையற்ற உறவுகள் என அந்நாடு கருதும் உறவுகளுக்கான அந்நாட்டின் தண்டனைகள், சமபாலுறவாளர்களுக்கான தண்டனைகள், அந்நாட்டின் அரசுக்கும் மன்னருக்குமெதிரான கருத்துக்களை வெளிப்படுத்துவோருக்கான தண்டனைகளென, கருத்துச் சுதந்திரத்தினை நசுக்குதல் என, அந்நாட்டின் மனித உரிமைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டே வருகின்றன.

திருட்டுக்கள், மதுபோதை, சிறிய பாலியல் குற்றங்கள் ஆகியவற்றுக்கு, கசையடி வழங்குவது, கல்லெறிந்து கொல்வது என, அந்நாட்டின் தண்டனைகள் கொடூரமானவை.  மதத்தை விட்டு வெளியேறுதல், சமபாலுறவு, அரசுக்கெதிரான எதிர்ப்புகள், திருமணத்துக்கு மாற்றான உறவுகள் போன்ற பல்வேறுபட்ட குற்றங்களுக்கு, தலையைத் துண்டித்து, பகிரங்கமான மரண தண்டனை என, அவை அச்சமூட்டும் வகையில் தொடர்கின்றன.

அண்மைக்கால இரு உதாரணங்களாக, மதத்தை விட்டு வெளியேறினார், மதச்சார்பற்ற கருத்துக்களைப் பரப்பினார் எனக் குற்றஞ்சாட்டி, வலைப்பதிவரான றெய்‡ப் படவிக்கு வழங்கப்பட்டுள்ள 1,000 கசையடித் தண்டனை என்பது, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறுபட்ட சர்வதேசக் கவனத்தின் காரணமாகவும் அழுத்தத்தின் காரணமாகவும், ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 50 கசையடிகளில், ஒரு வாரம் மட்டுமே அவருக்குக் கசையடி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவரை விடுதலை செய்வதிலோ அல்லது தண்டனையைக் குறைப்பதிலோ, சவூதி அரசாங்கம் கவனஞ் செலுத்தவில்லை.

மறுபுறத்தில், 21 வயதான இளம் சவூதி அரேபியர் ஒருவர், அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் எனவும் சட்டரீதியற்ற ஆயுதங்களை வைத்திருந்தார் எனவும் தெரிவித்து, மரண தண்டனையை எதிர்நோக்குகிறார். இதில் முக்கியமானது, அவர் கைது செய்யப்படும் போது அவருக்கு 17 வயதென்பதாகும். அத்தோடு, சட்டரீதியற்ற ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுப் பொய்யானது எனவும், அரசியல் செயற்பாட்டாளரான அவரது தந்தைக்கு எதிரான நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட முயற்சிக்கப்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாறு, மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ளாத நாடொன்றின் தூதுவரே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் குழுவுக்குத் தலைமை தாங்குவதென்பது கேலிக்குரியதே தவிர, வேறொன்றுமில்லை. சவூதி அரேபியாவின் பல தசாப்தகால மனித உரிமைகள் நிலைமைகளுக்குப் பின்னரும் கூட, மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகள் அல்லது எச்சரிக்கைகள், காத்திரமான அளவில் வழங்கப்பட்டதேயில்லை.

இதில், சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளும் கேலியானவை தான். கடிகாரம் செய்து, அதைக் குண்டு என சந்தேகித்துக் கைது செய்யப்பட்ட அஹமட் மொஹமட் என்ற மாணவனுக்காக ஒன்றுசேர்ந்த சர்வதேச சமூகங்கள், றெய்‡ப் படவிக்காகவோ அல்லது ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞனுக்கோ, அவர்களுக்கான மோசமான தண்டனைகளுக்கோ எதிராக, பெரியளவிலான ஆர்ப்பாட்டங்களையோ அல்லது கண்டனங்களையோ வெளியிட்டதாகக் காணோம். தங்களுக்குப் பொருத்தமான நேரங்களில் மாத்திரம் மனித உரிமைகள் விடயத்தைக் கையிலெடுத்துப் போராடுவதென்பது, வெறுமனே பச்சோந்தித் தனமே ஆகும்.

ஏனெனில், மனித உரிமைகளுக்கான காவலராகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் எச்சரிக்கைகளுக்கு அந்நாடு சிக்கிக் கொண்டதேயில்லை. ஒரு நாட்டில் எண்ணெய் வளம் (அல்லாதுவிடின், வேறேதாவது பெறுமதியான வளங்கள்) காணப்படின், அந்நாட்டில் 'ஜனநாயகத்தை' நிலைநாட்டுவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கும் அமெரிக்கா, சவூதி அரேபியா விடயத்தில் மாத்திரம் எப்போதுமே தன்னை விலத்தியே காணப்பட்டு வந்திருக்கிறது.

அதுவும், வரலாற்று முக்கியமிக்க இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி, சவூதி அரேபியாவின் மன்னர் இறந்ததைத் தொடர்ந்து, இந்திய விஜயத்தை முன்னதாகவே நிறைவுசெய்து கொண்டு, சவூதி அரேபியா விரைந்திருந்தார். இவ்வாண்டு இடம்பெற்ற அரபு நாடுகளுடனான மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சவூதி அரேபியாவுடனான நட்பை 'அதி விசேடமான நட்பு' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், சவூதி அரேபியா மீதான ஐக்கிய நாடுகளின் மௌனத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதேபோல், இம்முறை சவூதி அரேபியாவின் 'மனித உரிமைகள் பற்றிய கரிசனத்துக்கு' வழங்கப்பட்டிருக்கும் 'அங்கிகாரத்தையும்' பார்க்க வேண்டியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் என்பது முக்கியமானதொரு நிறுவனம். அவசியமானதொரு நிறுவனமும் கூட. அது குறித்தான கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. மாறாக, அதன் செயற்பாடுகள் குறித்தும் அதன் போக்குக் குறித்தும் போதுமான கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். அது வெறுமனே அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான தளமாக மாறிவிடக் கூடாது.

இலங்கை விவகாரத்திலும் கூட, தற்போதைய அரசாங்கமானது அமெரிக்காவினது விருப்பத்துக்குரிய அரசாங்கமென்பதால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடமிருந்து குறைவான அழுத்தத்தை எதிர்கொள்ளுமெனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில், யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், இதுவொரு குற்றவியல் விசாரணையல்லவெனவும் வெறுமனே மனித உரிமைகள் விசாரணையென்பதால், பெயர்களெவையும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால், கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த அறிக்கையில் பெயர்கள் காணப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் பெயர்கள் வெளியாகுவதைத் தாங்கள் தடுத்ததாகவும், ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், அறிக்கையிலிருந்த பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இது, இரு தரப்பு மீது கேள்விகளை எழுப்புவதோடு, அதை விட முக்கியமானதாக ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.

ஆகவே, மனித உரிமைகள் என்ற முக்கியமான விடயம், பேரம் பேசலுக்கும் அரசியல் இலக்குகளை அடைவதற்கும் அரசியல் நெருக்குவாரங்களையும் சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி, மனதுக்கு நெருடலானதாகவும் ஒட்டுமொத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவும் மாத்திரமே காணப்படுகிறது.

மனித உரிமைகள் சபையின் குழுவின் தலைமைப் பதவிக்கு சவூதி அரேபியா நியமிக்கப்படுதலென்பது, ஐக்கிய நாடுகள் சபையில் காணப்படும் பல்வேறுபட்ட குறைபாடுகளின் சிறியளவிலான அறிகுறி மாத்திரமே என்பது வெளிப்படை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .