2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

‘அரசியலில் ஈடுபட பொருளாதாரம் ஒரு தடையல்ல’

Kogilavani   / 2017 ஜூன் 11 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியலில் ஈடுபடப் பொருளாதார நிலையைக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை. ஒரு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண், அப்பிரதேசத்தில் போட்டியிட்டு இலகுவில் வெற்றிபெறலாம். அப்பெண்ணுக்காக களத்தில் இறங்கிப் பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் தயாராகவுள்ளோம். அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால் ஒரு பெண்ணை இலகுவில் மக்கள் பிரதிநிதியாக்கிவிடலாம்” என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க்கல்வி அமைச்சருமான அனுசியா சிவராஜா கூறினார்.   

“பெண்களின் நடத்தையில் கைவைக்கும் ஊனமுற்ற இந்தச் சமூகத்துக்கு சாட்டையடி கொடுக்க வேண்டுமெனில், பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி சபை முதல் நாடாளுமன்றம் வரை அதிகரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.  

மலையகப் பெண்களின் அரசியல் பங்கேற்பானது அதிகரிக்கப்பட வேண்டுமென வலிந்துகூறும் அவர், அதற்கான தளங்கள், அதிகமாக இருந்தபோதிலும் பெண்களின் முன்வருகையானது, பூச்சியமளவிலேயே உள்ளதாகவும் சாடுகின்றார்.  

மலையகப் பெண்களின் அரிசியல் பிரவேசத்துக்கு இன்றுவரை முன்னுதாரணமாகக் கூறப்படும் அவர், தான் கடந்துவந்த பாதைகளைத் தமிழ்மிரர் பத்திரிகைக்குப் பிரத்தியேகமாகக் கூறியபோது,  

“எனது தந்தை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்தார். எமது குடும்பம் மிகவும் பெரியது. எனது தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். எனக்கு 6 சகோதரிகளும் 5 சகோதரர்களும் உள்ளனர்.  

எனது தந்தை தொழிற்சங்கவாதியாக இருந்தாலும்கூட, தனது பெண் பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்துக் கரைசேர்க்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். 

நான் கண்டியிலுள்ள குட்செபர்ட் கொன்வன்ட் விடுதியில் தங்கியே எனது ஆரம்பக் கல்வியைக் கற்றேன். எனது பள்ளிப்பருவம் முழுதும் விடுதியிலே கழிந்தது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பின்பே எனது வீட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவரை விடுமுறைகளில் மட்டும் வீட்டுக்குச் சென்று வருவேன்.  

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின், மேற்படிப்பைத் தொடர வேண்டுமென்பதில் குறியாக இருந்தேன். எனினும், எனது தந்தை அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். ‘ஒரு பெண்ணுக்கு மேற்படிப்புத் தேவையில்லை. உனக்கு ஒரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்.

எனவே, மேற்படிப்புப் பற்றிய கனவைக் கலைத்துவிட்டு, திருமண வாழ்க்கைக்குத் தயாராக இரு’ என அவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். தந்தையின் கட்டளையை என்னால் மீற முடியவில்லை. அதனால், எனது ஆசைகள் நிர்மூலமாகின. வீட்டில் எனது பொழுதுகள் வீணாகக் கழிவதை உணர்ந்த நான், தந்தையின் பிரத்தியேகச் செயலாளராகச் செயற்படத் தொடங்கினேன். பிரத்தியேகச் செயலாளராகக் கடமையாற்றும்போதே எனது தந்தை, எனக்குத் திருமணத்தை முடித்துவைத்துவிட்டார். 21ஆவது வயதில் திருமண பந்தத்தில் நுழைந்தேன்.  

மண வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பாக நிறுவனமொன்றுக்கு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்தேன். எனது கல்வித் திறமையைப் பார்த்த அந்நிறுவனம், உடனடியாக வேலையில் வந்து சேரும்படி கடிதம் அனுப்பியிருந்தது. எனினும், எனது புகுந்த வீடு, நான் தொழிலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. அதனால், அந்த வாய்ப்பைத் தவறவிட்டேன். முழுமையாகக் குடும்ப வாழ்வில் ஈடுபடத் தொடங்கினேன்.  

1971ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அவ்வாண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட காணி சுவீகரப்புச் சட்டத்தின் கீழ், எனது தந்தையின் காணியும் அதேபோன்று எனது மாமனாரின் காணியும் முற்றுமுழுதாக அரசுடமையாக்கப்பட்டது. இது எமது வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அதுவரை சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த எனது கணவரின் குடும்பம், பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டது. எனவே, தொழிலுக்குக் கட்டாயம் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கணவருக்கு ஏற்பட்டது. அதனால், கொழும்பிலுள்ள நிறுவனமொன்றில் முகாமையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். அவர் பணிக்குச் சேர்ந்த குறுகிய காலத்தில் நோய்வாய்ப்பட்டார். எனவே, எனது குடும்பத்தைப் பொறுப்பேற்றுக் காக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அடிப்படைக் கல்வியைத் தவிர, வெளியுலக வாழ்க்கைக்குப் பரீட்சயப்படாத நான், கொழும்பை நோக்கிப் பயணித்தேன். மனதில் பயம் மட்டுமே எங்கும் வியாபித்திருந்தது. இருந்தும் துணிவுடன், இ.தொ.காவின் தலைமைக் காரியாலத்தில் பகுதிநேரப் பணியாளராகக் கடமையாற்றத் தொடங்கினேன்.  

இங்கு தொழில் கல்விப் பிரிவில் பணியாற்றும் வாய்ப்பே எனக்குக் கிடைத்தது. பெருந்தோட்டப் பகுதியிலிலுள்ளவர்களுக்குக் கல்வியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தோட்டங்கள் தோறும்சென்று கருத்தரங்குகளை நடத்த வேண்டும். பஸ்ஸில் பயணித்த அனுபவமேனும் இல்லாத எனக்கு ஓர் அச்ச நிலை இருந்தது. இருந்தும் என்னைச் சுதாகரித்துக்கொண்ட நான், துணிந்து என் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினேன்.  

கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு பஸ்ஸில் செல்வதும் அங்கு கருத்தரங்குகளை முடித்துவிட்டுப் பின்னர் கொழும்புக்குப் பயணிப்பதுமாக எனது தொழிலமைந்தது. குறுகிய வட்டத்துக்குள் வாழப் பழகிக்கொண்ட எனக்கு இந்தப் பயணங்கள் புதுப்புது அனுபவங்களைத் தந்தன.  

இந்தத் தொழிலுக்கூடாக வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளும் வந்தன. அந்த வாய்ப்புகளையும் நான் தவறவிடவில்லை. இவற்றை எனது புகுந்த வீடு விரும்பாவிட்டாலும்கூட அவற்றை நான் பொருட்படுத்தாது எனது பயணத்தைத் தொடர்ந்தேன். முன்வைத்த காலைப் பின் வைக்கவில்லை.  

பெண்ணின் வளர்ச்சிக்கு இந்த சமூகம் எப்போதும் முட்டுக்கட்டையாகவே இருக்கின்றது. இது எனது அனுபவத்துக்கூடாக நான் அறிந்துக்கொண்ட விடயம். அவ்வளவு இலகுவில் ஒரு பெண் வளர்ச்சியடைந்துவிட முடியாது. பெண்ணின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிடுவதற்காக அவளது நடத்தையில் கைவைக்கும் இந்தச் சமூகம், என்னையும் விட்டுவைக்கவில்லை. எப்போதும் என் நடத்தையில் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் குழுவினரின் மத்தியிலேயே நான் எனது பணியைத் திறம்படத் தொடர்ந்தேன். 

அவதூறான பேச்சுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது காதில் விழும் பேச்சுகளை நான் ஒரு பொருட்டாகவேனும் மதிக்கவில்லை.   

தொழிற்சங்க ரீதியில் நான் ஒரு மட்டத்திலேயே பணியாற்றிவந்தேன். அகலக்கால் வைக்கவில்லை. கட்டங்கட்டமாக எனது வளர்ச்சிபடிநிலை அமைந்தது. அரசியல் பிரவேசம் என்பதும்கூட நான் எதிர்பார்க்காத ஒன்று. வீடமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலத்தில், இயந்திரக் கூட்டுத்தாபனத்தில் முகாமையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு, எனது கணவருக்கூடாக எனக்குக் கிடைத்தது.   

பெரும்பான்மையினத்தவர்களை அதிகமாகக் கொண்ட அந்த நிறுவனத்தில் முதன்முதலாக ஒரு பெண் முகாமையாளராக, நானே பதவியேற்றேன்.

இழுத்துமூடுமளவுக்கு நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்த நிறுவனத்தை ஒருவருடத்தில் வளர்ச்சியடையச் செய்தேன். ஒவ்வொரு நாளும் அந்நிறுவனத்தைப்பற்றியும் அதன் செயற்பாடுகள் இலாப நட்டங்களையும் நன்கு ஆராய்ந்தேன். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாகச் செய்து ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தை வளச்சிப்பாதைக்குக் கொண்டு வந்தேன்.  

இந்நிறுவனத்தின் தலைமைத்துவப் பொறுப்பை வழங்கி, எனது திறமையைச் சோதித்துப் பார்த்த இ.தொ.கா, என்னைப் பெண்களின் பிரதிநிதியாகத் தேர்தலில் பிரவேசிக்கக் கோரியது. மலையகப் பெண்களின் வளர்ச்சிக்கு உனது வழிகாட்டல் தேவை எனக்கூறிய கட்சியின் தலைமைத்துவம், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் என்னைப் போட்டியிடுமாறு பணித்தது.   

அதுவரை எனது வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்த எனது கணவர், அரசியலில் நுழைய வேண்டாமென கண்டிப்பாக உத்தரவிட்டார். பெண்கள் அரசியலில் பங்கேற்பதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனக் கருதிய அவர், என்னை அரசியலுக்குள் போக வேண்டாமனெ வலிந்து கூறினார். எனினும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் எனது கணவருடன் கதைத்து அவரது சம்மதத்தை வாங்கினர். இதனால், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தேன். தேர்தல் பிரவேசம், அதுவும் முதலாம் வாய்ப்பு. 

பணப்பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.  

தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைக் கட்சி எனக்கு வழங்கினாலும் தனிப்பட்ட பிரசாரத்துக்காக நான் எனது சொந்தப் பணத்தையே செலவு செய்யவேண்டியிருந்தது. தேர்தல் பிரசாரத்துக்காகச் செலவிடும் அளவு பணபலம் எனக்கு இருக்கவில்லை. எனது கணவரின் வைப்பிலிருந்த பணம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்காகச் செலவிடப்பட்டது. அதைத்தவிர எனது நண்பர்களும் உறவினர்களும் பணம் வழங்கி உதவினர்.  

ஹம்பகமுவை, தேர்தல் தொகுதில் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. என்னுடன் இரண்டு ஆண்களாக மூவர் இத்தொகுதியில் போட்டியிட்டோம். வாகனங்களில் சென்று பிரசாரம் செய்யுமளவு வாகன வசதி என்னிடம் இல்லை. நானும் மலையகத்தைச் சேர்ந்தவள் என்பதால் அம்மக்களின் மனநிலையை ஓரளவு புரிந்து வைத்திருந்தேன்.

என்னுடைய பிரசாரங்கள் பெருமளவில் கால்நடையாகவே இருந்தன.  
காலையில் 7 மணிக்கு ஆரம்பமாகும் எனது தேர்தல் பிரசாரம், மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்துவிடும். மலையகத்தில் காலையில் 7 மணிக்குத் தொழிலாளர்கள் ஒன்றுகூடுவார்கள். இதனைப் பெரட்டுக்களம் என அழைப்பார்கள்.

இந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான், காலை 7 மணியானவுடன் பெரட்டுக்களத்தில் கூடும் மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்பேன். பின்னர் 10 மணிக்கு தொழிலாளர்களுக்குத் தேநீர் இடைவேளை வழங்கப்படும். 10 மணிக்கு தொழிலாளர்களை நேரடியாகச் சென்று சந்திப்பேன். தேயிலை மலைகளுக்குச் சென்று பெண் தொழிலாளர்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

ஆண் தொழிலாளர்கள் 1 மணியளவில் வீடுகளுக்கு வந்துவிடுவர். பகல் 1 மணியையும் எனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்வேன். இவ்வாறே எனது தேர்தல் பிரசாரம் இருந்தது.  

மலையகத்தில் அதுவும் இந்திய வம்சாவழித் தமிழரில் பெண்ணொருவர் முதன்முறையாகத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் என்பதை எனது சமூகம் முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதைவிட ஒரு தொகுதியிலிருந்து தெரிவாகும் பிரதிநிதி அம்மக்களுக்கு முறையான சேவையைச்செய்யாவிட்டால் அந்தக் கோபத்தை மக்கள், பிரிதொரு பிரதிநியிடமே காட்டுவர். மக்களது மனதில் நிறைந்திருந்த அந்தக் கோபத்தையும் நான் எதிர்கொண்டேன்.   

அதனைவிட, நான் பெண் என்பதால் அநேகமானவர்கள் என்னை ஏளனக் கண்கொண்டே பார்த்தனர். பிரசாரத்தில் ஈடுபடச் சென்றால் “வேலை வெட்டியில்லாமல் வந்துவிட்டாள்” என காதுபடக் கூறியது இன்னும் நினைவிலுள்ளது. இவற்றைப் பொருட்படுத்தாத நான், எனது பயணத்தைத் தொடர்வதிலே முழுமூச்சாய் நின்று செயற்படலானேன்.

முதலாவதுமுறை மாகாண சபையில் போட்டியிட்டு இரண்டாவது நபராகத் தெரிவானேன்.   

மத்திய மாகாண சபைக்கு முதன்முதலில் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாளி பெண் நான் என்பதில் பெருமிதம் அடைந்தேன். அந்தத் தருணத்தில் நான் கடந்து வந்த பாதைகளை மீட்டுப்பார்த்தபோது மெய்சிலிர்த்தது.  

இரண்டாவது தேர்தலை 2009ஆம் ஆண்டு எதிர்கொண்டேன். இந்தத் தேர்தலில் சிறிதளவில் பின்னடைவு ஏற்பட்டது. கட்சியின் தெரிவுப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நான் இருந்ததால் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்துக்குச் சென்ற பின்னர் அவ்விடத்துக்கு என்னைத் தெரிவு செய்தனர். 

இதனால், 2009ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் கல்வியமைச்சராக நியமிக்கப்பட்டேன். மத்திய மாகாணத்தில் முதல் பெண்ணமைச்சராக நான் தெரிவு செய்யப்பட்டமை மேலும் என்னைப் பெருமிதமடையச் செய்தது.  

இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கில் 2013ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விளகினேன். அதற்குப் பின்பு இந்தியாவிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் கடமையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. அதனையும் தலையாய கடமையாக ஏற்று எனது பணியைச் சிறப்பாகச் செய்தேன்.   

குறுகியகாலம் இலங்கையிலிருந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பதால், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை எதிர்கொண்டேன். எனினும் ஒரு பெண் என்ற ரீதியில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

அரசியல் என்றுவரும்போது, வெற்றி - தோல்வி சகஜமானது. ஆனால், தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாது, சமூகத்துக்குச் சேவைகளைச் செய்ய வேண்டும். அதுவே, உண்மையான அரசியல் பிரதிநித்துவத்துக்கு அழகாகும். எனது நிலைப்பாடும் அதுவே.   

அரசியலில் பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மேடைப் பேச்சுகளில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், பெண்களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய இந்தச் சமூகம் விரும்புவதில்லை. ஆண்களுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றது. 

தடைகளைத் தாண்டி பெண்கள் வந்தாலும் அவர்களது நடத்தைகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமை மாறவேண்டும்.   

என்னைப் பொறுத்தவரைஅரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்படும். வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சமூகத்தின் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு பெண்களும் இன்னும் அடிமைக்கோலத்திலே வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் துணிந்து அரசியலில் பங்கேற்க வேண்டும்.  

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது, உள்ளூராட்சி சபை முதல் நாடாளுமன்றம்வரை பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதற்காக, 30 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குகின்றது. ஆனால், அரசியலில் ஈடுபடப் பெண்கள் முன்வருவதில்லை.

மலையகத்தைப் பொறுத்தவரையில் பெண்களின் பங்களிப்பே அதிகமாக உள்ளது. ஆனால், மலையகப் பெண்கள் அரசியலில் பங்கேற்க முன்வருதில்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். மலையகத்தில் கல்வி கற்கும் ஆண்மாணவர்களைவிட பெண் மாணவர்களே அதிகமாக உள்ளனர். இதேவேளை, இலங்கையில் கல்வி கற்ற பெண்களின் தொகை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் மீதான அச்சம் வேரோடு பிடுங்கு எறியப்பட வேண்டும். தடைகளைத் தாண்டி அரசியலில் பிரவேசிக்க நினைக்கும் பெண்கள், எம்மைப்போன்ற மூத்த அரசியல்வாதிகளின் ஆலோசனையைப் பெற விரும்பினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராகவே உள்ளேன்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X