Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
அரசாங்கத்துக்கு எதிராக பாரியதொரு எதிர்ப்பலையை உருவாக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்துச் செய்ய அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையை பாவித்து இவ்வாறானதோர் அலையை உருவாக்க எதிர்க்கட்சிகள் இப்போது முயல்வதாக தெரிகிறது.
தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்தவுடன் நாட்டில் பாரியதொரு மாற்றம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆயினும் பெரும் பொருளாதார நெருக்கடி ஒன்றிலிருந்து நாடு சிறிது சிறிதாக மீளும் நிலையில் உள்ளதால் அவ்வாறானதொரு மாற்றம் ஏற்படவில்லை.
மக்களின் இந்த ஏமாற்றத்தைப் பாவித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பொய்யர்கள் என்றதோர் அபிப்பிராயத்தை உருவாக்க எதிர்க்கட்சியினர் எடுத்த முயற்சி ஓரளவு வெற்றி பெற்றமை உண்மை தான். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் அது தெரியவந்தது.
அதன்படி, 2022இல் இடம்பெற்ற ‘அரகலய’ என்றழைக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தைப் போன்றதொரு நிலைமையை எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த போதிலும் அந்தளவுக்கு நாட்டின் நிலைமை மோசமானதாக இல்லை.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டமும் அக்கட்சிகளுக்குக் கைகொடுக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி இந்த சிறப்புரிமை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இது வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களின் விதவைகளுக்கும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள், மாதாந்த கொடுப்பனவுகள், அலுவலக கொடுப்பனவுகள் உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகள் இரத்து செய்யப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளின் விதவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் அச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரத்து செய்யப்படும்.
எனினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம்
இச்சட்ட மூலத்தின் மூலம் இரத்து செய்ய முடியாது. ஏனெனில், ஜனாதிபதிகளின் ஓய்வூதியமானது சாதாரண சட்டமொன்றின் மூலமன்றி அரசியலமைப்பின் மூலமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களது ஓய்வூதியத்தை இரத்து செய்வதாக இருந்தால் அதற்காக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு 158 பாராளுமன்ற உறுப்பினர்களின் (மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல்) ஆதரவு இருப்பதால் அதனையும் அரசாங்கத்தால் மிக எளிதில் நிறைவேற்ற முடியும்.
அரசாங்கம் இச்சட்ட மூலத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்தயையே குறி வைத்துள்ளது என்று அம்முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே கூறியிருந்தார்.
மஹிந்தவுக்கு வழங்கப்பட்டு இருக்கும் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக அண்மையில் எழுந்த சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டு சில வேளை அவர் இவ்வாறு கூறியிருக்கலாம்.
மஹிந்தவுக்கு கொழும்பு விஜேராம மாவத்தையில் வழங்கப்பட்டுள்ள வீடு, 350 கோடி ரூபாய் பெறுமதியானது என அரச மதிப்பீட்டுத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது என்றும், அது அமைந்துள்ள கொழும்பில் மிகவும் பெறுமதி வாய்ந்த பிரதேசத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரச தலைவர்கள் கூறினர்.
நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியைச் சந்தித்த காலத்தில் ராஜபக்ஷ 47 கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் செலவழித்து மற்றொரு வீட்டையும் இணைத்து அவ்வீட்டைப் புதுப்பித்து உள்ளதாகவும், அதன் படி 30,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அவ்வீட்டை 46 இலட்சம் ரூபாய் மாத வாடகைக்கு விட முடியும் என மதிப்பீட்டுத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளதாகவும் அரசாங்கம் மேலும் குறிப்பிடுகிறது.
இரண்டு போர் கொண்ட ஒரு சிறிய குடும்பம் இவ்வளவு பாரிய அரச விடுதி ஒன்றை வைத்திருப்பது பொதுச் சொத்தை அபகரிப்பதாகும் என்று வாதிடும் ஜனாதிபதி அனுரகுமார அவ்வீட்டை அரசாங்கத்திடம் கையளிக்குமாறும் அதற்குப் பதிலாக சாதாரண வீடொன்றை அவருக்கு வழங்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
எழுத்து மூலமாக அறிவித்தால் மஹிந்த அவ்வீட்டிலிருந்து வெளியேறுவார் என்று பொதுஜன முன்னணி அதற்குப் பதிலளித்திருந்தது. ஆனால், அரசாங்கம் அவ்வாறு அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்குமான இந்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளது.
அரசாங்கத்தின் கருத்தை மறுக்கும் பொதுஜன முன்னணியினர் புலிகளின் பிடியிலிருந்து நாட்டை பாதுகாத்த தலைவர், இது போன்றதொரு அரச வீட்டை வைத்திருக்கத் தகுதி பெற்றவர் என்றும் அவரது பாதுகாப்புக்கு அது அத்தியாவசியமானது என்றும் வாதிடுகின்றனர்.
எனவே, இந்த வர்த்தமானி அறிவித்தலைப் பயன்படுத்தி அவர்கள் மஹிந்த மீது அனுதாப அலை ஒன்றை உருவாக்கி அரசாங்கத்தின் இந்த முயற்சியை முறியடிக்க முற்படலாம்.
இரு சாராரின் வாதங்களின் நியாயத்தன்மை எவ்வாறாக இருந்தாலும், நாட்டின் அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்றும் அரசியலானது பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் ஓர் உத்தியாகவோ, பணம் சம்பாதிக்கும் தொழிலாகவோ இருக்கக் கூடாது என்றும் அது மக்கள் நலனுக்காகத் தியாக சிந்தையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணியென்றும் மக்கள் விடுதலை முன்னணி பல தசாப்தங்களாக வலியுறுத்தி வருகிறது.
அதன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியும் பெரும்பாலும் அந்த நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. எனவே, இச்சட்ட மூலமானது மஹிந்தவையோ மற்றுமொரு தலைவரையோ குறி வைத்து கொண்டுவரப்பட்டது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
மக்கள் பிரதிநிதிகளாகக் கடமையாற்ற முன்வந்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம், ஏனைய சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளை இரத்து செய்வதாகத் தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும், பொதுத் தேர்தலின்போதும், வாக்குறுதி அளித்தது. அதனை அப்போது எந்தவோர் அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ எதிர்க்கவில்லை.
எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது மக்கள் ஆணையுமாகும்.
அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்யக் கோரி தாம் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார். அதனையும் எவரும் எதிர்க்கவில்லை.
அவர் அவ்வாறானதொரு பிரேரணையை முன்வைக்காத போதிலும், ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அந்நோக்கத்திற்காகக் கடந்த பெப்ரவரி மாதம் தனி நபர் பிரேரணை ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதனையும் எவரும் எதிர்க்கவில்லை.
ஆனால், இப்போது அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சலுகை ரத்து செய்யும் சட்டங்களைக் கொண்டு வருவதை எதிர்க்க முற்பட்டுள்ளனர். ரவி கருணாநாயக்க மேற்படி தனி நபர் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்த போதிலும் அவரது கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணிலும் மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்வதற்கான மேற்படி சட்ட மூலத்தை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது, ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று ரணில் கூறுகிறாரா? அது என்ன நியாயம்? இந்தப் பிரச்சினை அரசியல் கட்சிகளின் சித்தாந்த செல்வாக்கிலிருந்து விடுபட்டு நடுநிலையாகவும் நியாயமாகவும் அணுக வேண்டியதொன்றாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் சில கொடுப்பனவுகளை வழங்குவதை எவரும் எதிர்க்க முடியாது. அவர்கள் அவற்றைப் பெறாவிட்டால் அப்பதவிகளின் மூலம் நிறைவேற்ற வேண்டிய பணிகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
ஆனால், அப்பதவிகளைப் பாவித்து பொதுப் பணத்தைச் சூறையாடலாமா? வருமானம் பெறுவதற்கான தொழிலாக அரசியலைக் கருதலாமா? ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் சட்டமியற்றுகிறார்கள் அப்பதவிகள் தொழில்களாக மாறினால், அவர்கள் தமது நலன்களை முன்னிலைப்படுத்தி சட்டமியற்றி கொள்ள மாட்டார்களா? அதுவே இது வரை நடைபெற்றது.
மஹிந்த தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி 350 கோடி ரூபாய் பெறுமதியான வீட்டை வைத்திருக்கிறார். மைத்திரிபாலவும் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொழும்பு பஜட் வீதியில் அமைந்துள்ள பாரிய மாளிகை ஒன்றை வாழ்நாள் முழுவதுமாக வைத்திருக்கத் தாமே தலைமை தாங்கும் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றார். ஓரிரு வாரம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமன் ரத்னப்பிரிவுக்கும் பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனமொன்றுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது.
பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பல முறை இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றிருக்கிறார்கள். தமக்கு வாகனம் விலை கொடுத்து வாங்கப் பண வசதி இல்லாவிட்டால் அந்த வாகன அனுமதிப் பத்திரத்தைப் பல கோடி ரூபாய்க்கு விற்றுக் குறைந்த விலைக்கு வாகனம் ஒன்றை வாங்கி மிகுதியை சேமிக்கிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகமாகும். ஐந்து வருடம் பாராளுமன்றத்தில் இருந்தால் ஒருவருக்கு உடனே ஓய்வூதியம் கிடைக்கிறது.
அரச ஊழியர்களுக்குப் போல் அதற்கு வயதெல்லை இல்லை.
மறுபுறத்தில், அதிகாரத்தைப் பாவித்து சட்டப்பூர்வமாகவும் சட்ட விரோதமாகவும் பணம் சம்பாதிக்காது முழு நேர அரசியல்வாதியாக ஒருவர் பல வருடங்கள் பாராளுமன்றத்தில் நேர்மையாக இருந்தால் அவரது இறுதிக் காலம் அவருக்குக் கஷ்ட காலம் ஆகலாம். எனவே, மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு வந்தோம் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு சம்பளம் வழங்கினாலும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய சலுகைகளை நன்றாக ஆராய்ந்தே வழங்க வேண்டும்.
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago