Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
சிரியாவின் அலெப்போவில் நடக்கும் பேரழிவை, உலகம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது என்பது தான், உலக முஸ்லிம்களில் கணிசமானோரினதும் உலக மக்களில் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அக்கறை கொண்டோரினதும் குரலாக, அண்மைய சில வாரங்களாக இருந்து வந்தன.
இவ்வாறு கவலைப்பட்டோருக்கு நிம்மதியளிப்பது போன்று, சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவில், அந்நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு எதிராகப் போராடிவரும் போராளிகள், தங்களது பின்னடைவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர், போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட கிழக்கு அலெப்போவிலிருந்து, பொதுமக்களும் போராளிகளும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள், ஓரிரு நாட்களில் நிறைவுபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு, கிழக்கு அலெப்போவிலிருந்து போராளிகள் முழுமையாக வெளியேறினால், ஜனாதிபதிக்கெதிரான தமது போரில், அவர்கள் சந்தித்த மிகப்பெரிய இழப்பாக இது அமையும். மறுபக்கமாக ஜனாதிபதிக்கு, மிகப்பெரிய வெற்றியாக அமையும். ஆனால், இவையெதுவுமே, அமைதியான சிரியாவுக்கு வழிவகுக்காது என்பது தான், கசப்பான உண்மையாகும்.
சிரியா அல்லது அலெப்போ பற்றிய கீழைத்தேய ஊடகங்களின் செய்திகளை (அல்லது கட்டுரைகளை அல்லது கேலிச் சித்திரங்களை) பார்த்திருந்தால், “சிரியா எனும் மைதானத்தில் ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் விளையாடுகின்றன. ‘பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்கு உயிர் போகிறது’ என்பது போல, சிரியாவின் அப்பாவி மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்” என்ற பாணியிலான இலகுபடுத்தும் விடயங்களைத் தான் அறிந்திருக்கக்கூடும்.
ஆனால் யதார்த்தமென்பது, இதைவிடச் சிக்கலானது. உண்மையைச் சொன்னால், ரஷ்யாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் பங்கு, முக்கியமானது என்றாலும் பிரதானமானவை கிடையாது. சிரிய சிவில் யுத்தத்தின் சிக்கல் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அதன் வரலாறைச் சிறிதளது புரிந்து கொள்ள வேண்டும்.
துனிஷியாவில் 2011ஆம் ஆண்டு ஆரம்பித்த அரேபிய வசந்தத்தின் தொடர்ச்சியாக, சிரியாவில் சர்வாதிகாரம் புரிந்துவந்த ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கெதிராக எதிர்ப்புகள் எழுந்தன.
இதில், அரேபிய வசந்தத்துக்கு ஆதரவாக, சுவரில் வர்ணப்பூச்சுகளால் எழுதிய பாடசாலை மாணவர்களில் 15 பேர், சிரியப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதிலொருவர், கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, மார்ச் மாதமளவில், பாரியளவு ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன.
ஜனநாயகத்துக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்குமாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய அல்-அசாத், நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்றார். பல்லாயிரம் பேரைச் சிறை வைத்தார். அந்த ஆர்ப்பாட்டங்கள், வெறுமனே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற கோரிக்கையிலிருந்து, “அல்-அசாட், தனது பதவியிலிருந்து விலக வேண்டும்” என்ற நிலைக்கு மாறின. அசாத்தைப் பதவி விலக்குவதற்காக, பல போராளிகள் குழுக்கள் புறப்பட்டன. ஆயுத மோதல் உருவானது.
இந்த இரு தரப்புகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதலைப் பயன்படுத்திக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ், சிரியாவில் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அரசாங்கமும் போராளிகளும், ஒருவரையொருவர் போரிடுவதுடன், தமது பொது எதிரியான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிராகவும் போரிட்டன.
அரேபிய வசந்தத்துக்கு, ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவு காணப்பட்டது என்ற போதிலும், ஆரம்ப கட்டத்தில் சிரிய விடயத்தில், அமெரிக்கா தலையிட்டிருக்கவில்லை. ஆனால், நிலைமை மேலும் சிக்கலடைய, சிரியா மீது அழுத்தம் வழங்க ஆரம்பித்தது. இந்தக் குழப்பம் ஆரம்பித்து 5 மாதங்களில் பின்னரே, அதாவது ஓகஸ்டிலேயே, அசாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை, அமெரிக்கா முன்வைத்தது.
இதன் பின்னர், 2012ஆம் ஆண்டு ஜூன் இலேயே, போரில் ஈடுபட்டிருந்த போராளிக் குழுக்களுக்கு உதவியளிக்க, அமெரிக்கா ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறுபக்கமாக, 2015ஆம் ஆண்டு செப்டெம்பரில், இந்தப் போரில் முதன்முறையாக, தனது விமானத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டது. ஜனாதிபதி அசாத்துக்கு ஆதரவாகப் போரில் இணைந்த ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, சிரியப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, போராளிகள் மீதான தாக்குதல்கள் என ரஷ்யா குறிப்பிட்ட தாக்குதல்களால், பொதுமக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.
ஆரம்பத்தில் போராளிகளுக்கு அதிகளவு உதவிகளை வழங்கிய ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும், தாங்கள் மிதவாதிகள் என எண்ணிய போராளிகள் குழுக்களில் பல கூட, ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா போன்ற குழுக்கள் போலவே, இந்தப் போராளிக் குழுக்களும், தனிய இஸ்லாமிய இராச்சியமொன்றை உருவாக்கவே போரிடுகின்றன என்பதைப் புரிந்து கொண்டதும், தமது உதவிகளைக் குறைத்தன/நிறுத்திக் கொண்டன.
இப்போது, அலெப்போவில் அசாத்தின் படைகளுக்குக் கிடைத்துள்ள வெற்றிக்கு, போராளிகளுக்குப் போதுமான வெளிப்புற உதவிகள் கிடைக்காமை, முக்கியமான காரணமாகும்.
வெளிநாட்டுத் தலையீடுகள் இவ்வாறிருக்க, சிரியாவின் வரலாறை எடுத்துப் பார்த்தால், தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடு, பல தசாப்தங்களாக நிலவி வந்த குழப்பங்களின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தற்போதைய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் தந்தை ஹபீஸ் அல்-அசாத், 1971ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.
இராணுவப் புரட்சி மூலமே ஆட்சிக்கு வந்த அவரது ஆட்சியில், முஸ்லிம்கள் மாத்திரமே சிரியாவின் ஜனாதிபதியாக வர முடியும் என்ற அரசியலமைப்பு விதியை அவர் மாற்றினார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
குறிப்பாக, சுமார் 75 சதவீதம் சுன்னி இன முஸ்லிம்களைக் கொண்ட சிரியாவில், வெறுமனே 10 சதவீதம் மாத்திரமே காணப்படுகின்ற ஷியா முஸ்லிம்களில் ஒருவரான ஹபீஸ் அல்-அசாத் கொண்டுவந்த அந்த மாற்றத்தை, சுன்னி முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஷியா முஸ்லிம்களை, முஸ்லிம்கள் என்றே ஏற்றுக் கொள்வதில்லை என, சுன்னி முஸ்லிம்களில் தீவிரப் போக்குடையவர்கள் கருதுவதும் இதில் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது.
எனவே தான், பஷார் அல்-அசாத்துக்கு எதிராகப் போராடும் குழுக்களில் அனேகமானவை எல்லாமே, சுன்னி இன முஸ்லிம்களைக் கொண்டு காணப்படுவதையும், அசாத்துக்கு ஆதரவளிக்கும் ஈரான், ஈராக் போன்ற நாடுகள், ஷியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவையாகும். ஆதரவாகப் போரிடும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவும், ஷியா முஸ்லிம் குழுவாகும். (எகிப்து, இதில் விதிவிலக்கு.
அந்நாட்டில் சுன்னி முஸ்லிம்களே பெரும்பான்மையினர்). ஆகவே, இதில், முஸ்லிம்களுக்கு இடையில் காணப்படும் பிரிவினையில் வெளிப்பாடு தான் என்பதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, சர்வதேச சமூகத்தை, ஒட்டுமொத்தமாகக் குறைகூறிவிட முடியாது.
ஆனால் மறுபக்கமாக, சர்வதேச சமூகத்தின் தோல்வியை வெளிக்காட்டும் விடயங்களையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும். அலெப்போவில் பேரழிவுகள் உருவாக ஆரம்பித்த பின்னர், தமது தோல்வியை ஏற்றுக் கொள்வது போல, “இனிமேல் இவ்வாறான அழிவுகள் இடம்பெறுவதை அனுமதிக்கக்கூடாது.
அதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும்” என, உலகத் தலைவர்கள் அனைவரும் கூறத் தொடங்கினார்கள். இது, பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் “உயிரிழந்தோருக்கு எமது அஞ்சலி. நாம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். எமது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் அவர்களுடன்” என்று அரசியல்வாதிகள் சொல்வதைப் போன்றது தான்.
ஏனென்றால், இந்த நூற்றாண்டில் நடந்த மாபெரும் அழிவுகளான கொங்கோ பேரழிவுகள், உக்ரைனில் 1932ஆம் 1933ஆம் ஆண்டுகளில் நடந்த பேரழிவுகள், யூதர்கள் மீதான இன அழிப்பு உள்ளிட்ட இரண்டாம் உலகப் போர், கம்போடிய இன அழிப்பு, ஹலப்ஜா இரசாயனத் தாக்குதல், ருவன்டா இன அழிப்பு, ஸ்ரெபிரெனிக்காவில் முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு, குரொன்ஸி மோதலில் ஏற்பட்ட கணக்கெடுக்கப்படாத உயிரிழப்புகள், இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஏற்பட் உயிரிழப்புகள் என, அனைத்தின் போதும், “இனி இவ்வாறு நடப்பதை அனுமதிக்கக்கூடாது” என்ற அதே பல்லவி பாடப்பட்டது.
ஆகவே, சிரிய அழிவுக்குப் பின்னர், ஏனைய நாடுகளில் நடக்கக்கூடிய அழிவுகளைச் சர்வதேச நாடுகள் - குறிப்பாக ஐ.நாவும் வல்லரசுகளும் - தடுத்து நிறுத்திவிடும் என்பது, வானத்தில் வெள்ளைக் காகத்துக்காகக் காத்திருப்பது போன்றது தான்.
உண்மையில், அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து, இவ்வாறான விடயங்களைத் தடுப்பது என்பது தான் சவாலாக இருக்கிறது. வல்லரசு நாடுகள் ஒவ்வொன்றுக்கும், தங்களுக்கான சுயநல நோக்கங்கள் இருக்கின்றன. தங்களது வெளிநாட்டுக் கொள்கையை மீறிச் செயற்படுவதற்கு அவை தயாராக இல்லை.
எனவே தான், ரஷ்யா, சீனா போன்றவை ஒரு பிரிவாகவும் ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்றவை மற்றைய பிரிவாகவும் காணப்படுகின்றன. சிரியாவில் பஷால் அல்-அசாட்டுக்கு ரஷ்யா ஆதரவளிக்க, ஐக்கிய அமெரிக்கா எதிர்க்கிறது. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இறுதிக் கட்டத்திலும் அதன் பின்னரான இராஜதந்திர அழுத்தங்களின் போதும், ரஷ்யாவின் ஆதரவு, இலங்கைக்கு இருந்தது. ஐக்கிய அமெரிக்காவோ, இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டது. இந்த நிலைமை தான், இனிவரும் முரண்பாடுகளிலும் நீடிக்கப் போகிறது என்பது தான் வருத்தம் தருகிறது.
இந்த நிலைமையை, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டுவிட்டர் பயனர் ஒருவர் பதிந்த டுவீட், இலகுவாக எடுத்துரைத்தது. “இன்னும் 20 ஆண்டுகளில், ‘அலெப்போ’ எனத் தலைப்பிடப்பட்ட திரைப்படமொன்று, 7 ஒஸ்கார் விருதுகளை வெல்லும். அப்போது அனைவரும், ‘இவ்வாறானதொன்று, மீண்டுமொருமுறை நடப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது’ என்று சொல்வர்” என்று அந்த டுவீட் தெரிவித்தது. சர்வதேச சமூகத்தின் தோல்வியை, இதை விட அழகாகக் கூறிவிட முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .