2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

‘அஷ்ரபின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயினால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வர்டோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது.

அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர்

சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ‘எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம்’ நூலுக்கு அஷ்ரபோடு நீண்டகாலம் மிக நெருக்கமாக இருந்தவரும் அரசியல், சமூக ஆய்வாளருமான எம்.பௌஸர் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வரிகளே இவையாகும்.  இந்த மரணத்தின் பின்னால் இருந்த பாரதூரத்தைச் சொல்வதற்கு இவை மட்டுமே போதுமானவையாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான எம்;.எச்.எம். மரணித்து எதிர்வரும் 16ஆம் திகதியுடன் 25 வருடங்கள் நிறைவடைகின்றன. இன்று எத்தனையோ பழைய கோப்புக்கள் தூசுதட்டப்பட்டு விசாரணைகள் எடுக்கப்படுகின்ற போதிலும், அவரது மர்ம மரணம் பற்றிய கோப்பு மட்டும் தூசுதட்டப்பட்ட, உண்மை இன்னும் வெளிக் கொணரப்படவில்லை.

ஒரு பெரும் முஸ்லிம் தலைவரின் இந்த மரணம் படுகொலையாக இருக்கலாம் என்ற பலமான சந்தேகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கின்ற போதிலும், முஸ்லிம்கள் ஒரு சமூகமாக தமது மறைந்த தலைவரின் மரணத்திற்காக நீதி வேண்டிப் போராடவில்லை.

அஷ்ரபை வைத்து இன்று வரை பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்ற றவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த விசாரணைகளுக்காகத் தாம் அதிகாரத்தில் இருந்த போது, முன்னிற்கவும் இல்லை. அதிகாரமில்லாத காலத்தில் அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

அஷ்ரபிடமிருந்து இமாலய அனுகூலங்களைப் பெற்றுக் கொண்ட சந்திரிகா குமாரதுங்க ஒரு விசாரணைக் குழவை நியமித்தார். அது தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆனால், உண்மையை அவர் வெளியில் கொண்டு வரத் தவறிவிட்டார். குறைந்தபட்சம் இந்த விசாரணை அறிக்கையின் முழுமையான பிரதிகூட சுவடிகள் திணைக்களத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை எனச் சொல்லப்படுகின்றது.

முஸ்லிம்களுக்காகத் தனித்துவ அடையாள அரசியலை வடிவமைத்து, மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸையும் தன்னையும் உருவாக்கியிருந்த ஒரு மிகப் பெரும் தலைவர்தான் அஷ்ரப்.அவரது மரணத்தின் பின்னால் உள்ள உண்மைகள் இவ்வாறு மறைக்கப்படுகின்றது என்றால், விசாரணை அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போகின்றன என்றால், அரசியல் தரப்பினர் மௌனம் காக்கின்றனர் என்றால் இதற்குப் பின்னால் ‘ஏதோ ஒரு சதித்திட்டம்’  இருக்கின்றது என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு எழத்தானே செய்யும்?

குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்திற்கு முன்னரான முஸ்லிம் அரசியல் என்பது வேறு விதமாக அமைந்திருந்தது. அஷ்ரப் காலத்து அரசியல் முற்று முழுதாக வேறுபட்டிருந்தது. அரசாங்கத்தோடும் தமிழ் அரசியல்வாதிகளோடும் உறவுகளைப் பேணி வந்தார் அவர்.

ஆனால், சமகாலத்தில், சிங்கள இனவாத அரசியல்வாதிகளும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறையைப் பிரயோகித்த போது, அவற்றைப் பகிரங்கமாகவே நெஞ்சை நிமிர்த்திப் பேசக் கூடிய தைரியம் அவருக்கு மட்டுமே இருந்தது.

அவர் மீதும் ஒருசில விமர்சனங்களை முன்வைப்போர் உள்ளனர்.
 ஆயினும், முஸ்லிம்களின் அபிலாஷை, காணிப் பிரச்சினைகள், முஸ்லிம் தனியலகு, கரையோர மாவட்டம், இனப் பிரச்சினை தீர்வில் உரிய பங்கு என தனது சமூகத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்த தலைவர் அஷ்ரப் மட்டும்தான்.

எனவே, அஷ்ரப் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இன்னும் பலருக்கு ஒருவித தலையிடியாக இருந்தார் என்பதை அன்றைய அரசியல் உள்ளரங்கம் தெரிந்தோர் அறிவார்கள். 

பெரும்பான்மைக் கட்சிகளின் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வல்லமையை மு.கா. பெற்றிருந்தது இது அக்காலத்தில் தேசிய அரசியலில் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இருந்த சிங்களக் கட்சிகளுக்கு நல்லதாகப் படவில்லை.
 
கொழும்பை மையமாகக் கொண்டு முஸ்லிம்களுக்கான அரசியலை காலகாலமாகச் செய்து வந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட, முஸ்லிம் அரசியல் கிழக்கை நோக்கி நகர்வதை அறவே விரும்பவில்லை என்றும், எப்போதும் அஷ்ரபை பற்றி நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டே இருந்தார்கள் என்றும் சொல்வார்கள். 

முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் நோக்கிப் போகாமல் விடுவதற்கு மு.கா.லின் அரசியல்மயமாக்கமும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம். இந்தப் பின்னணியில், விடுதலைப் புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதிய தமிழ் அரசியல்வாதிகளும் அஷ்ரபின் பலத்தையும் நெஞ்சுரத்தையும் தமக்கு சாதகமானதாகப் பார்க்கவில்லை.

மிக முக்கியமாக, முஸ்லிம்களுக்கு எதிரான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களுடன் இலங்கைக்குள் நுழையும் வெளிநாடுகள், வெளிநாட்டுச் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் அஷ்ரப்பும் அவரது அக்காலத்து அரசியல் தோழர்களும் உறுதியாக இருந்தனர்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை சேகு இஸ்ஸதீன், அஷ்ரப் உள்ளிட்டோர் எதிர்த்தது ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் நோர்வே போன்ற வெளிநாட்டுச் சக்திகளின் உள் வருகையை அஷ்ரப், ஜனாதிபதி சந்திரிகா ஊடாக தடுத்தார் என்று நம்பகரமாகச் சொல்லப்படுகின்றது.

இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தை என்ற ஒரு விடயம் வந்தபோது, அது குறித்து அஷ்ரபிடம் ஆலோசனை கேட்டார் சந்திரிகா அம்மையார்,
‘இந்த திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கிற்கோ எனது சமூகத்திற்கோ எந்த நன்மையும் இல்லை. எனவே, இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சந்திரிகாவிடம் அஷ்ரப் சொன்னதாக அஷ்ரபை அதற்கு முதல் நாள் இரவும் கூட, சந்தித்திருந்த  முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுவ்லா கூறுகின்றார்.  

ஆகவே, தலைவர் அஷ்ரப் உண்மையிலேயே திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றால், சம்பந்தப்பட்டோர் எதிர்பார்த்த மாறுதல்கள், பலன்கள் அவர்களுக்குக் கிடைத்ததாகவே சொல்ல முடியும். இந்தப் பின்னணியில் அஷ்ரப் மரணம் என்ற விடயமும் மூடிமறைக்கப்பட்டது எனலாம்.
 இதனை பௌஸர், மேற்படி நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

“2002இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய்நகர்த்தலே அஷ்ரப் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.

ஒரு நாட்டில் ஒரு விடயத்தைச் செய்வதற்கு முன் தமது நிகழ்ச்சி நிரலை தங்குதடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்’ என்கின்றார்.

விபத்துக்குள்ளான ஹெலியில் தலைவர் அஷ்ரபுடன் கதிர்காமத்தம்பி என்ற ஒருவரும் சென்றிருந்தார். அவருக்கு விடுதலைப் புலிகள் பின்னர்  மாவீரர் பட்டம் வழங்கியதாகவும் அவர் கொண்டு சென்ற பையிலேயே குண்டு இருந்திருக்கலாம் என்றும் அக்காலத்தில் பேசப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அஷ்ரபுடன்  பெரியதம்பி என்று ஒருவரும் பயணித்துள்ளார் என்ற புதிய தகவலும் ஆச்சரியமளிக்கின்றது.

ஆகவே, நன்றாகக் கவனியுங்கள்,.... அஷ்ரபின் மரணத்திற்கு முன்னரான நிலை.... அதன் பிறகு தற்போது வரையான முஸ்லிம் அரசியலின் போக்கு எல்லாவற்றையும் பார்த்தால் வலுவான ஆனால் நியாயமான சந்தேகம் ஒன்று உருவாகின்றது.
அஷ்ரப் எல்லாவற்றையும் இழுத்துப் பிடிக்கின்றார். பிறகு அவாது மரணம் நிகழ்கின்றது...... பேரியலும் ஹக்கீமும் இணைத் தலைவர்களாகின்றனர். பிறகு ஹக்கீம் தனித் தலைவராகின்றார்.

அதன் பிறகு எந்த தங்கு தடையுமின்றி, அஷ்ரப் தடுத்த நோர்வே உள்ளே வருகின்றது, எல்லாம் ‘அவர்கள்’ திட்டமிட்டபடி நடக்கின்றது. ஹக்கீம் எதிர்க்கலில்லை. முஸ்லிம்களுக்கு உரிய  இடம் இல்லை என்பதை அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதன்பிறகு, இன்று வரையான காலத்தில் முஸ்லிம் அரசியல் கெட்டுக் குட்டிச் சுவராகி இருக்கின்றது. கிட்டத்தட்ட முஸ்லிம் கட்சிகளும் சரி முஸ்லிம் மக்களும் சரி 1970களில் இருந்த நிலைமைக்கு, மீண்டும் பெருந்தேசியக் கட்சிகளை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர்.

சமூகத்திற்கான அரசியல் உண்மையில் தெருவில் நிற்கின்றது.
ஆகவே, வெளிநாட்டுச் சக்தி, உள்நாட்டில் ஒரு தரப்பினர், புலிகள் எனப் பல தரப்பினர் ஒரு கூட்டுச் சதித்திட்டத்தைத் தீட்டி, தமது இலக்குகளுக்குத் தடையாக இருந்த அஷ்ரப் என்ற பெருவிருட்சம் வேரறுத்துள்ளதுடன்?

அதன் மூலம் நீண்டகால அடிப்படையில் முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்தின் அசல் தன்மையைச் சீரழித்துள்ளனரா? என்பதுதான் கவலையும் ஆபத்தும் உறைந்த கேள்வியாகும்;.

இந்தக் கேள்விக்கு விடை காணப்படாவிட்டால், இதே உத்தியை இனியும் ‘அவர்கள்’ பிரயோகிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .