2026 ஜனவரி 17, சனிக்கிழமை

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

Editorial   / 2026 ஜனவரி 16 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேனிஷா.  உதயகுமார்,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி,பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

 

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின்  வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற  பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி  நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது. ஆசிரியர்களின் ஆடை மற்றும் வெளித்தோற்ற  விழுமியங்கள் என்பது வெறும் தனிநபர் விருப்பம் சார்ந்ததல்ல. அது ஒரு தொழில் முறை தகுதி சார்ந்த விடயமாகும். ஆசிரியர்களின் ஒழுக்க விழுமிய முறைமை தொடர்பாக சுற்றறிக்கை இலக்கம்  2012/37 குறிப்பிடுகின்றது. 

ஆசிரியர்களின் தோற்றப்பொலிவானது ஆசிரியர்கள் அணியும் உடை அவர்கள் பணியின் மீதான  அக்கறையை காட்டுகிறது. அவர்கள் அடர் நிறங்களை தவிர்த்து மென்மையான மற்றும்  கண்களுக்கு இதமான நிறங்களை தேர்ந்தெடுப்பது வகுப்பறையில் ஒரு அமைதியான சூழலை  உருவாக்கும். ஆசிரியர்கள் அணியும் ஆடை தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 1990/25 ஆம் இலக்கச் சுற்றறிக்கை கூறுகின்றது. அதாவது இன்றும் அடிப்படை வழிகாட்டியாக  கருதப்படும் இதில் பெண் ஆசிரியர்கள் சேலை அல்லது கண்டி உயரிய(ழுளயசi) அணிவதும்  ஆண்கள் காற்சட்டை மற்றும் முழுக்கை சட்டை மற்றும் அரைக்கை சட்டை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 இல் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு புதூர் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம்  பெண் ஆசிரியர்கள் தமது கலாச்சார மற்றும் மத அடையாளங்களை பேணுவதில் பெரும்  சவால்களை எதிர்கொண்டனர். இது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்ற வரை சென்றதோடு  பொது நிர்வாக அமைச்சினால் ஆடை ஒழுங்குமுறை குறித்த புதிய சுற்றறிக்கை (18/2019)  வெளியிடப்படவும் காரணமானது.

மேலும் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஆசிரியர்களின்  ஆடை விதிமுறைகளில் சில நெகிழ்வுத்தன்மை கோரப்பட்டது. அதாவது 2022 ஆம் ஆண்டு  மினுவாங்கொடை போன்ற பகுதிகளில் ஆசிரியர்கள் சேலைக்கு மாற்றாக வசதியான உடைகளை  அணிந்து ஒரு புரட்சியை ஏற்படுத்தினர். தற்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் இளம் ஆசிரியர்கள் சேலையை விட வசதியான ஆனால் கண்ணியமான உடைகளை  அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து  வருகின்றனர். இருப்பினும், அரச பாடசாலைகளில் இன்னும் சேலையே உத்தியோபூர்வ ஆடையாக உள்ளதை குறிப்பிடலாம்.

 

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றார். யாதும் ஒரே யாவரும் கேளிர் என்ற உயரிய சிந்தனை கொண்ட ஆசிரியர் தன் தோற்றத்திலும் ஒரு சமநிலையை பேண  வேண்டும். அதாவது தலைமுடி முதல் காலணி வரை ஒவ்வொன்றும் ஒரு ஒழுங்குக்கு உட்பட்டிருக்க வேண்டும். கலைந்த தலைமுடியும் கசங்கிய ஆடையும் ஒருவரிடம் இருக்கும் சோம்பலை  சுட்டிக்காட்டும்.  எனவே ஆண் ஆசிரியர்கள்  Kfசவரம் செய்து இஸ்திரி செய்யப்பட்ட உடையை முறையாக (In shirt) அணிவது மிகச்சிறந்ததாகும். இது அந்த ஆசிரியரின் கடமை உணர்வையும் அவர் தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பையும் மாணவர்களுக்கு மௌனமாக போதிக்கும்.

ஆசிரியரின் தோற்றத்தினால் ஏற்படும் நன்மைகளாக மாணவர் மத்தியில் மதிப்பும் மரியாதையும்  உண்டாகும், ஆசிரியர் சிறந்த முன்மாதிரியாக திகழ்வார், ஆசிரியரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,  தொழில்முறைத் தகுதி அதிகரிக்கும், ஆசிரியர் நேர்த்தியாக இருக்கும்போது மாணவர்களின் கற்றல்  சூழலில் கவனக்குவிப்பு அதிகரிக்கும். வகுப்பறையில் கட்டுப்பாட்டை பேண ஆசிரியரின் கம்பீரமான தோற்றம் உதவுகிறது. நல்ல தோற்றம் ஆசிரியரின் கற்பித்தல் ஆர்வத்தை உயர்த்துகிறது. ஆசிரியர்  தன்னை சுத்தமாக வைத்திருக்கும் போது, மாணவர்களுக்கு தூய்மையை போதிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் பார்த்தே கற்றுக் கொள்வார்கள் போன்ற பல நன்மைகள் ஏற்படுகிறது.

மேலும் வெவ்வேறு நாடுகள் ஆசிரியர்களின் தோற்றத்தை அவரவர் கலாசாரம், காலநிலை, மற்றும் கல்வி தத்துவங்களுக்கு ஏற்ப வரையறுத்துள்ளன. அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற  நாடுகளில் ஆசிரியர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட தேசிய உடை கிடையாது. அங்கு தொழில்முறை  சாதாரண உடை என்பது பொதுவான விதிமுறை ஆகும். ஜப்பானிய ஆசிரியர்கள் மிகவும்  முறையான ஆடைகளை பேணுவதில் உலகப் புகழ்பெற்றவர்கள். அவர்கள் பொதுவாக கருப்பு அல்லது சாம்பல் நிறத்திலான சூட் அணிவதை கடமையாகக் கொண்டுள்ளனர். இது பணியின் மீதான அவர்களின் தீவிரத் தன்மையையும் ஒழுக்கத்தையும் காட்டுகிறது.

ஆசிரியரின் தோற்றம் என்பது ஒரு கற்பித்தல் கருவி ஆகும். இது மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் தூய்மையையும் கலாசாரப்பற்றையும் போதிக்கிறது என குறிப்பிடலாம். தன் தோற்றத்தில்  ஒழுக்கத்தை கடைபிடிக்கும் ஆசிரியரே மாணவர்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமரும் தகுதியை பெறுகிறார். ஆடம்பரத்தைத் துறந்து அறிவின் அடையாளமாகத் திகழும் ஆசிரியரின் தோற்றமே வருங்காலச் சமுதாயத்தைச் செதுக்கும் உளியாகும்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X