Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜனகன் முத்துக்குமார்
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் ஆகியோர், ஒரே நேரத்தில் APEC, ASEAN நிலையங்களுக்கு விஜயம் செய்கின்ற விடயம், உண்மையிலேயே அசாதாரணமானது. ஜனாதிபதி ஜின்பிங், நவம்பர் 15 முதல் 21 வரை APEC க்கு விஜயம் செய்துள்ள அதேநேரம், நவம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற பிரதமர் லீயின் ASEAN விஜயம் ஆகியன, சீனாவின்
“அகன்ற பசுபிக்” வல்லாண்மையை நிலைநிறுத்த ஏதுவான நிகழ்ச்சி நிரலொன்றின் கீழ் இடம்பெறுவதாகவே காணப்படுகின்றது.
சீனாவின் வெளியுறவுக் கொள்கை, கடந்த ஆண்டுகளில் கண்ட மாற்றங்களை நோக்கின், ஜனாதிபதி ஜின்பிங் பதவிக்கு வந்தபின், “அகன்ற பசிபிக்”, அதற்கும் அப்பால் மூலோபாய கேந்திர முக்கிய இடமொன்றைத் தக்கவைக்க சீனா முயல்வதன் ஒரு முனைப்பாடாகவே, ஜனாதிபதி ஜின்பிங், பிரதமர் லீ ஆகியோரின் குறித்த உத்தியோகபூர்வமான வருகைகள் அமைகின்றமை வெளிப்படையானது.
ஜனாதிபதி ஜின்பிங்கின் வெளியுறவுக் கொள்கை, பசுபிக் சமுத்திரத்தில் ஒருதலைப்பட்சவாதம், வர்த்தகப் பாதுகாப்புவாதம், பூகோளமயமாக்கல் எதிர்ப்பு ஆகியவற்றை நிராகரிப்பதுடன், வர்த்தகத்திலும் இதர விடயங்களிலும், எல்லா நாடுகளும் பங்காளிகளாக வேண்டும் என்றே அமைகின்றது. இவற்றின் அடிப்படையிலேயே சீனாவின் வெளிவிவகாரக் கொள்கைகள் வகுக்கப்படுவதுடன், இதுவே சீனாவின் குறித்த பிராந்திய வல்லரசாண்மையை வலிமைப்படுத்தக்கூடிய இராஜதந்திர நகர்வாக அமையும் என, சீனா நம்புகின்றது.
வளர்ந்துவரும் நாடு என்ற முறையில் சீனா, தென் பசிபிக் பகுதியில் தனது முதலீட்டையும் வர்த்தகத்தையும் விரிவுபடுத்துவதில் நிச்சயமாக ஆர்வமாக உள்ளது. இது தொடர்பிலான நகர்வில் முதலாவது நகர்வாகவே, பப்புவா நியூ கினிக்கு, சீன ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட விஜயம் பார்க்கப்பட வேண்டியதாகும். மேலும், இவ்வாண்டின் முற்பகுதியில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் பப்புவா நியூ கினி இணைந்தமை, சீனாவின் பட்டுப்பாதை கட்டுமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் பசிபிக் தீவுகளின் நாடாக அமைகின்றமை ஆகியன, ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத விடயங்கள் அல்ல. இதே இராஜதந்திர முனைவுகளுடனேயே, இவ்வாரம் நடைபெறும் APEC உச்சிமாநாட்டில் சீனா கலந்துகொள்வதுடன், அதன்படி பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு, இலத்திரனியல் பொருளாதாரம், நிலையானதும் பிராந்தியத்துக்குரியதுமான வளர்ச்சி ஆகியவற்றில், குறித்த உச்சிமாநாடு கவனம் செலுத்துகின்றமை சீனாவின் நிகழ்ச்சிநிரலே ஆகும்.
மறுபுறம், ASEANக்குப் பிரதமர் லீ விஜயம் செய்வதும், அதன்போது அவர், சீன - ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட நாடுகளில் ஒத்துழைப்பு, பரஸ்பர நன்மைக்கான அவசியத்தை வலியுறுத்தியமை ஆகியனவும், கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் சீனா தொடர்ச்சியாகக் கொண்டுள்ள ஈடுபாட்டையே காட்டுகின்றது.
1960களில் இருந்து, உலகப் பொருளாதாரம் மய்யம், வடக்கு அத்லாண்டிக்கில் இருந்து ஆசிய - பசிபிக் பகுதிக்கு மாற்றப்பட்டு, இப்பிராந்தியத்தில் அதன் மாறும் வளர்ச்சி, எண்ணற்ற வர்த்தகப் பரிவர்த்தனைகளையும் வேலைகளையும் உருவாக்கி, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றமையை மறுக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில், ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே, பெரும்பாலான வர்த்தக ஒப்பந்தங்களும் அதிகப்படியான பொருளாதாரக் கட்டமைப்புகளும் காணப்படுகின்றன.
APEC, ASEAN ஆகிய இரண்டு பிராந்திய பொருளாதாரக் கூட்டுகளும், மிக உறுதியான பொருளாதார மய்யங்களை, குறித்த பிராந்தியத்தில் தோற்றுவித்துள்ளன. APEC ஆனது அவுஸ்திரேலியாவால் தொடங்கப்பட்டது, இப்பிராந்திய அமைப்பு, 21 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியன அடங்குவதுடன், இது உலகப் பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகப் பரிவர்த்தனையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ASEAN என்பது, வளர்ந்துவரும் பத்து நாடுகளைக் கொண்ட ஓர் அமைப்பு என்பதுடன், சர்வதேச அரசியலில் இருந்து சவால்களைச் சந்திக்க அவர்கள் வலுவாக இல்லை என்றாலும், ஆசியான் பங்குதாரர்களுடன் இணைந்து, ஸ்திரமானதொரு பொருளாதார மாதிரியைக் கொண்டுள்ளது. இவ்விணைப்பானது, கிழக்கு ஆசிய, பசிபிக் பிராந்தியத்தின் முழுமையான பொருளாதார ஒருங்கிணைப்புக்குப் பெரிதும் உதவுகின்றது.
இந்நிலையிலேயே, இணைந்த பசுபிக் அமைப்பு (டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் - TPP), பிராந்திய அகன்ற பொருளாதாரக் கூட்டு (RCEP) ஆகியவற்றிலிருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியமையானது, சீனாவுக்கு ஒருதலைப்பட்சமாக பிராந்திய பொருளாதார வல்லரசாகும் வாய்ப்பைத் தந்துள்ளது எனலாம் என்பதும், அதன் காரணமாகவே பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பை வலுவாக்கக்கூடிய APEC, ASEAN ஆகியவற்றின் முனைவுகளில் சீனா அதிகம் அக்கறை காட்டுகின்றது. இதன் அடிப்படையிலேயே, சீனத் தலைவர்களின் அண்மைய விஜயங்கள், சர்வதேச மட்டத்தில் பொருளாதார முனைவுகளிலும் அரசியல் நிலைமைகளிலும் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படவேண்டியனவாக அமைகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago