2025 மே 17, சனிக்கிழமை

ஆயுதக் கப்பல் மிதக்குமா மூழ்குமா?

George   / 2015 நவம்பர் 09 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தசாப்தகால ஆட்சியை நிறைவுக்கு கொண்டுவந்து, ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் நல்லாட்சி பிறந்தது. ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டில் உருவான நல்லாட்சியை மக்கள் இன்னுமே வாய்பிளந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

நல்லாட்சி, மக்களுக்கு ஏதாவது நல்லதைச் செய்யவேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஏககாலத்தில், முன்னாள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இலஞ்சம் - ஊழல் தொடர்பில் அலசி ஆராய்ந்துகொண்டே இருக்கின்றது.  

இதில்,  சட்டவிரோதமான ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் என்ற விவகாரம் அமைச்சரவைக்குள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது மட்டுமன்றி, இன்று 9ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துமளவுக்கு இட்டுச்சென்றுவிட்டது.

காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பலில் உள்ள 12 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருப்பதாகக் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கு சட்டவிரோத ஆயுதங்கள் இருந்தமை கண்டறியப்பட்டது. காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதாக காலி பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எஸ்.டீ.எஸ் குணவர்தனவுக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்தக் கப்பல், அவன்ட் காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும். அந்தக் கப்பலில் ஆயுதங்கள் பல இருந்தன. டி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரைய்பில், தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக அந்தக் கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்திருந்தார். 

இதற்குப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதற்குள் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையும் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார் என்று பொலிஸ் தலைமையகம், அன்று விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளின் போது, அவன்ட் காட் எனும் நிறுவனத்துக்கு சொந்தமாக கப்பலில் இருந்த கொள்கலன்களிலேயே ஆயுதங்கள் இருந்தமை தெரியவந்ததுடன் இந்த அவன்ட் காட் கப்பல், ரக்னா லங்கா எனும் பாதுகாப்பு நிறுவனத்தினால் குத்தகைக்கு வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம், காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னர், காலி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவன்ட் காட் கப்பலின் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட 04 கொள்கலன்களுக்கு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, சீல் வைக்கப்பட்டதுடன் கடற்படையினர் மற்றும் காலி துறைமுக பொலிஸார் இணைந்து குறித்த கப்பலுக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நவம்பர் மாதம் 4ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் எழுந்தபோது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, நல்ல பெயரைப் பெறுவதற்காக பொலிஸார், குறித்த ஆயுத கப்பலைச் சோதனை செய்ததாகவும் இது 2002

ஆம் ஆண்டு மிலேனியம் சிற்றி விவகாரம் போன்றது எனவும் கூறினார். அத்துடன் இந்த விவகாரம், மக்கள் மனதில் தவறான ஒரு விளக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் கூறினார்.

இழந்த ஆயுதங்களின் ஒரு பகுதியை மீட்டுக் கொடுத்து அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, அரசாங்கத்துக்கு உதவி செய்துள்ளதாகவும் கூறினார். நடுக்கடலில் உள்ள குறித்த ஆயுதங்களைக் கடற்படையினரால் மீட்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாரப்பனவுக்கும் நிஷங்க சேனாதிபதிக்கும் இடையில் தனிப்பட்ட உறவு இருக்கும் போது அவன்ட் காட் விவகாரத்தைப் பற்றி அவரால் எப்படி சபையில் கதைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதேவேளை, இந்த விவகாரத்தை சட்டமா அதிபர் மூடி மறைக்கப் பார்ப்பதாக, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது இவ்வாறு இருக்க, அவன்ட் காட் விவகாரத்தை சிலர், நாட்டின் இரண்டாவது பிரச்சினைபோல் பெரிதாக்கப் பார்ப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
 

'நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும் போது அவன்ட் காட் பிரச்சினைப் பற்றி பெரிதாகப் பேசுகின்றனர். நாட்டின் இரண்டாவது பிரச்சினைபோல அவன்ட் காட் இன்று மாறியுள்ளது. தூங்கும் போது அவன்ட் காட் பற்றிதான் நினைக்கின்றனர். மிலேனியம் சிற்றி போன்று அவன்ட் காட் தொடர்பிலும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருந்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் இவ்வாறு தெரிவிக்கும் போது என்ன செய்வது. இந்த நாட்டில் எதிர்க்கட்சி என்பது கேலிக்குரிய விடயமாக மாறிவிட்டது. பொதுமக்களின் பிரச்சினை பற்றி அவை பேசுவதில்லை' என்றும் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். 

அத்துடன், கடற்கொள்ளைக் காரர்களிடமிருந்து தமது கப்பல்களை பாதுகாக்க சர்வதேச நாடுகளின் படைகள்,  செல்லும் போது சீனாவினூடாக செல்ல முடியாத காரணத்தால் இலங்கை கடற்பரப்பின் ஊடாக பயணிக்கின்றன. அதன் போது ஆயுதங்களை வைத்துவிட்டு செல்வதற்கும் செல்லும்போது எடுத்துச் செல்வதற்கும் ஒரு இடம் தேவைப்பட்டது. இதற்காகவே இந்த ஆயுத களஞ்சியசாலை உருவாக்கப்பட்டது. அதற்காக சர்வதேச நாடுகள் மில்லியன் கணக்கில் இலங்கைக்கு கட்டணம் செலுத்திவருகின்றன.

'இந்த களஞ்சியசாலை ஊடாக நாட்டுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கின்றதுடன், இதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்தால் இந்த ஒப்பந்தம் மாலைதீவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ கிடைத்துவிடும். இந்த பிரச்சினையை பெரிதாக்கி இறுதியில் நாட்டுக்கு கிடைக்கின்ற பெருமளவான பணத்தை இழந்துவிட போகின்றனர்' என்றும் விமல் கூறியிருந்தார்.

ரக்னா லங்கா நிறுவனமானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட  தனியார் நிறுவனமாகும். நடுக்கடலில் ஆயுத களஞ்சியசாலை அமைக்க அரசாங்கத்துக்கு பல மில்லியன் பணம் தேவைப்படும் என்பதால், அதனை தனியார் நிறுவனமான ரத்னா லங்காவுக்கு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சு வழங்கியதுடன் ரக்னா லங்கா நிறுவனம், அவன்ட் காட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஆயுதங்களை களஞ்சியப்படுத்தியது.

இதில் பெரிதாக ஒன்றும் இல்லை, இந்த விடயத்தை பெரிதாக்கி நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகளை இழப்பதற்கு பார்க்கின்றனர் என்றும் விமல் விரவன்ச தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறு இருக்க, கடற்படையினரால் மீட்க முடியாத ஆயுதங்களை ரக்னா லங்கா மற்றும் அவன்ட் காட் நிறுவனங்கள் மீட்டதாக கூறியதை ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா மறுத்தார்.
அவன்ட் காட் கப்பலில் சட்டவிரோத ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவன்ட் காட் ஆயுதக் கப்பல் விவகாரத்தை அரசியல் பலத்தால் மூடிமறைக்க பலர் முனைவதாகவும் அதற்கு பொலிஸாரை குற்றஞ்சாட்டுவது எந்தவித நியாயமும் இல்லை எனவும் பொன்சேகா கூறினார்.

இந்த ஆயுதங்கள், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக வைக்கப்பட்டிருந்தவை. ஏனென்;றால், சர்வதேச கடற்சட்டத்துக்கு அமைவாக, நாட்டிலிருந்து 12 கடல்மைல் தூரத்தில் ஆயுதக் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதுடன் அதன் இயந்திரம் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவன்ட் காட் கப்பல் அப்படி இல்லை. அதில், அந்த கப்பலுக்கு தேவையான மின்சாரத்தை உடற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் கூட இல்லை. தரையிலிருந்தே மின்சாரம் பெறப்பட்டது.

அத்துடன், இந்த ஆயுதங்களை மறைத்து வைத்த விவகாரத்தில் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் தலையீடு நிச்சயம் இருந்திருக்கும். இதனுடைய அனுமதியின்றி இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியாது. யாரோ இதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

ரக்னா லங்கா நிறுவனம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளதாக அவன்ட் காட் விவகாரம் சட்டவிரோதமானது அல்ல என்று சட்டமா அதிபர்  திணைக்களத்தின்  அதிகாரி சுகன கமலத் அண்மையில் தனியார் தொலைக்காட்சி செவ்வியில் கூறியுள்ளார். 

அப்படியென்றால் எனது மனைவி, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவராக உள்ளார். இதுவும் பாதுகாப்பு அமைச்சு கீழ் உள்ளது. அப்படியென்றால், ஆயுதங்களை சேகரித்து வைக்க அது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள அவருக்கும் அனுமதி இருந்திருக்க வேண்டுமல்லவா? சட்டமா அதிபர் திணக்களத்தில் இரண்டாவது பதவியில் இருக்கும் பொறுப்புமிக்க ஒருவர் இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது.

நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்க  பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்குமே அதிகாரம் கிடையாது.

அவன்ட் காட் ஆயுத கப்பலுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். ஏனென்றால், அந்த விடயத்தில் பாரிய ஊழல் - மோசடி இடம்பெற்றுள்ளது, சிறிய குற்றம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய முடியும் என்றால், இவ்வளவு பெரிய தொகையை மோசடி செய்தவர்களை ஏன் கைதுசெய்ய முடியாது என்றும் பொன்சேகா கூறினார்.
அத்துடன், இந்த விடயத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மீதும் தவறு உள்ளதாகவும் அவர், இந்த விடயத்தை மறைக்க பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியும் இராணுவத்தில் மிக உயர்ந்த பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றவருமான சரத் பொன்சேகா சொல்வதையும் சற்று சிந்தித்து பார்க்கத்தான வேண்டும்.

ஏனென்றால், இலங்கை பாதுகாப்பு படைகள் எந்த விதத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான வேண்டும். 3 தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முப்படையினர், அதற்காக சிறப்பான பயிற்சியை பெற்றிருந்தை மறுக்க முடியாது.

அவ்வாறாயின், நடுக்கடலில் உள்ள ஆயுதங்களை, இலங்கை கடற்படையினால் மீட்க முடியவில்லை என்றும் அதனை தனியார் பாதுகாப்பு நிறுவனம் சாதித்தது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இலங்கை கடற்பரப்பில் கடற்படையினருக்கு உள்ள அனுபவம், பயிற்சி என்பன தனியார் பாதுகாப்புப் பிரிவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கூறுவது இந்த விவகாரத்தை திசைத்திரும்பும் முயற்சி என பொன்சேக்கா சொல்வதை மறுக்க முடியாது.
மறுபுறத்தில் விமல் வீரவன்ச சொல்வது போல, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படும் என்று சொல்வதையும் அப்படியே ஏற்க முடியாது.

ஒரு நாட்டுக்ககுள் ஆயுத களஞ்சியசாலை இருப்பது சாதாரணமான விடயம் என்றாலும் அந்நாட்டின் கடற்பரப்பில் ஆயுத களஞ்சியசாலை இருப்பது என்பது சற்று விவகாரமான விடயம்தான். அதிலும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தல் என்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்தான ஒன்று.

சட்ட ரீதியில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தினால் அது தொடர்பில் நாட்டு மக்களுக்கும் தெரிந்திருக்கு வேண்டும். அல்லது மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும் ஆனால், இந்த விடயம் தொடர்பில் அது வெளிப்படுத்தப்படும்வரை எவருமே அறிந்திருக்கிவில்லை.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன்  இந்த சட்டவிரோத ஆயுதக் கப்பல் இயங்கியதாகவும் நிச்சயம் அதற்கு உதவியர் இந்நாட்டில் உள்ளார் என்றும் சரத் பொன்சேகா கூறும் அந்த நபர் யார்? அப்படி  ஒருவர் இருந்தால் அவரை கைதுசெய்து இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படுமா? என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆயுதக்கப்பல் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் தவறு இருந்தால், இன்றைய சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சு, நீதியமைச்சு, பொலிஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் முரண்பட்ட கருத்தை முன்வைப்பது ஒருவேளை மக்களை ஏமாற்றவோ என்றுதான் தோற்றுகின்றது.

விரைவில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா அல்லது  முடிவிலியாக தொடருமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .