Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
கடந்த ஆறு வருடங்களாக ஒவ்வொரு எப்ரல் மாதத்திலும் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
கத்தோலிக்க திருச்சபை அன்று முதல் ஒவ்வொரு வருடமும் அப்பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காமையிட்டு பதவியில் இருக்கும் அரசாங்கத்தை சாடி வருகிறது.
நீதியென்று அவர்கள் பணத்தைக் கேட்கவில்லை. இழந்த உயிர்களைக் கேட்கவும் இல்லை. இந்தத் தாக்குதல்களின் பின்னால் இயங்கிய சூத்திரதாரி யார் என்பதை விசாரணைகள் மூலம் அம்பலப்படுத்துமாறும் இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதுமே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
இத்தாக்குதல்களைப் பற்றி இது வரை நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட உள்நாட்டு விசாரணைகள் நடைபெற்று இருக்கின்றன. பல வெளிநாட்டு விசாரணைகளும் நடைபெற்று இருக்கின்றன. சில நீதிமன்ற விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை.
முடிவடைந்த விசாரணைகள் எதன் மூலமும் இந்த சூத்திரதாரி பிரச்சினை தீரவில்லை. எனவே தாக்குதலின் பாதிக்கப்பட்ட பிரதான சமூகமான கத்தோலிக்க சமுகம் அவ்விசாரணைகள் விடயத்தில் திருப்தியடையவில்லை.
அதேவேளை, சில அரசியல் கட்சிகளும் இதுவரை நடைபெற்ற விசாரணைகள் விடயத்தில் திருப்தியடையவில்லை.
அவர்கள் இத்தாக்குதல்களின் சூத்திரதாரி என்று நினைத்தவர்கள் சூத்திரதாரிகளாக எந்தவொரு விசாரணை மூலமும் நிரூபிக்கப்படவோ தீர்ப்பளிக்கப்படவோ இல்லை என்பதே அவர்களது மனக்குறையாகும்.
காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான ஹாஷிம் என்பவரே மூன்று உல்லாச பிரயாண ஹோட்டல்கள் மீதும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட இத்தற்கொலை தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் இடம்பெற்ற நாளுக்கு மறுநாள் முதல், மூன்று விசாரணைக் குழுக்கள் (கமிட்டிகள்), ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்குப் புறம்பாக ஜனாதிபதி ஒருவர் உள்ளிட்ட பாதுகாப்புக்குப் பொறுப்பான பலருக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்கொன்று முடிவடைந்துள்ளது. அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
குண்டு வெடிப்புக்களோடு பல்வேறு விதமாக சம்பந்தப்பட்ட சஹ்ரானின் இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தைச் சேர்ந்த 25 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 108 பேர் நட்டஈடு கோரி ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்குப் பறம்பாக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், நியூசிலாந்து, டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளின் விசாரணைக் குழுக்களும் இண்டர்போல் சர்வதேச பொலிஸாரும் இத்தாக்குதல்களைப் பற்றி விசாரணைகளை நடத்தியுள்ளன.
எனினும், இந்நாட்டுக் கிறிஸ்தவ மக்கள் அவற்றின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, இலங்கை கத்தோலிக்க மக்களின் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளையும் வலியுறுத்தி வருகிறார்.
கர்தினால் முதலில் மைத்திரிபாலவிடம் நீதி கேட்டார். ஆயினும் மைத்திரிபாலவின் மெத்தனப் போக்கே தாக்குதலுக்குக் காரணம் என்ற கருத்து வலுப்பெற்று வரவே கர்தினால் அவரை சாடத் தொடங்கினார்.
தாம் பதவிக்கு வந்து தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டுபிடித்த தண்டனை வழங்குவேன் என்பதைப் போல, அப்போது ஜனாதிபதி பதவியில் கண் வைத்திருந்த கோட்டாபய கூறினார்.
எனவே, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கத்தோலிக்க மக்களில் பெரும்பான்மையினர் கோட்டாபயவுக்கே வாக்களித்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டா உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்தில் புதிதாக எதுவும் செய்யவில்லை. எனினும், அவர் பதவிக்கு வந்து சில நாட்களில் கருத்து தெரிவித்த கர்தினால் விசாரணைகள் தொடர்பாக தமது திருப்தியைத் தெரிவித்தார்.
எனினும், படிபபடியாக கத்தோலிக்கத் தலைவர்கள் கோட்டாவின் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கவே ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுபர் மௌலவியே தாக்குதலின் சூத்திரதாரி என்று
2021 கோட்டாவின் அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கத்தோலிக்கத் தலைவர்கள் அதனை ஏற்கத் தயாராகவில்லை.
இதனிடையே 2020களில் கோட்டாவின் ஆதரவாளர்களே தாக்குதலின் பின்னால் இயங்கியுள்ளனர் என்று ஒரு கருத்து எங்கோ முளைத்து பரவியது. கட்டுக்கதையாயினும் விரும்கத்தக்கதாயின், மக்கள் அதனை நம்புவார்கள் என்று தொடர்பாடல் பற்றிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவே, அக்கதைக்கு சிறகு முளைத்தது. இப்போது பலர் அதனை நம்புகிறார்கள். கத்தோலிக்கத் தலைவர்களும் அதனை நம்புவதாகவே தெரிகிறது.
“வேட்டையைத் தூக்கிச் செல்கிறவனே வேட்டைக்காரன்” என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே பலர் இக்கதையை நியாயப்படுத்துகிறார்கள்.
அதாவது கோட்டாவே பயங்கரவாத தாக்குதலால் பயன் பெற்றார். எனவே அவரே சூத்திரதாரி என்றே அவர்கள் வாதிடுகின்றனர்.
இது நடக்க முடியாத விடயம் அல்ல. ஆனால், அதனை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் அக்கருத்தைத் தெரிவிப்பவர்கள் முன்வைப்பதில்லை. 2023ஆம் ஆண்டு பிரிட்டனின் செனல்4 என்ற தொலைக்காட்சி சேவையுடன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானாவும் இந்தக் கதையையே கூறினார்.
2018ஆம் ஆண்டு தாம் பிள்ளையானின் ஆலோசனைப் படி, அரச உளவுச் செவையின் அதிபராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை சந்தித்ததாகவும் சலேயின் வேண்டுகோளுக்கு இணங்க, தாம் அவருக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாகவும் கோட்டா பதவிக்கு வர வசதியாக நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போது சலே கூறியதாகவும் மௌலானா செனல்4 தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கூறினார்.
சலேயின் அக்கருத்துப் படியே உயர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பதே அவரது வாதமாகும்.
பின்னர் கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. தாம் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் கூறினார். எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் போது, கத்தோலிக்க மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவளித்தனர்.
ஆயினும், அனுரகுமார பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்த போதும், அந்த விடயத்தில் எதுவும் நடக்கவில்லை. எனவே, தாக்குதலுக்கு ஆறு வருடங்கள் பூர்த்தியாகும் இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான எதுவும் நடைபெறாவிட்டால் தமது மக்கள் மீண்டும் வீதியில் இறங்கிப் போராட நேரிடும் என்று கர்தினால் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.
அதனாலோ என்னவோ ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளில் பல விடயங்கள் வெளிவரும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறினார். கத்தோலிக்கத் தலைவர்கள் அதனை நம்பினார்களோ என்னவோ ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் கர்தினால் கூறியதைப் போல் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஏப்ரல் 20 ஆம் திகதி ஜனாதிபதி தமது அலுவலகத்தில் இருந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும் அதனோடு சம்பந்தப்பட்ட இரகசிய ஆவணங்களையும் விசாரணைக்காக இரகசிய பொலிஸாரிடம் கையளித்தார்.
உண்மையிலேயே அவரால் அது மட்டுமே செய்ய முடியும். இது வரை தெரிய வராத தாக்குதல் சூத்திரதாரி ஒருவர் இருந்தாலும் அதனை ஜனாதிபதியால் அம்பலப்படுத்த முடியாது. அதனை விசாரணையாளர்களே செய்ய வேண்டும்.
இதற்கிடையில் 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல்போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் மூலம் உயர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பல தகவல்கள் கிடைத்தாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்ட்தில் கூறினார். அந்த சம்பவத்தோடு தெற்கில் சில அரசியல்வாதிகள் கலக்கமடைந்தமை காணக்கூடியதாக இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுப்பு காவலில் இருக்கும் பிள்ளையானுடன் தொலைபேசியில் பேசுவதற்கு இரகசிய பொலிஸ் பணிப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கடும் பேரினவாதி என தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் கருதப்படும் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தாம் பிள்ளையனின் சட்டத்தரணி என்று கூறி பிள்ளையானை சந்திக்க அனுமதி கோரினார் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்தோடு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானே என்று 2020ஆம் ஆண்டு அமெரிக்க எப்.பி.ஐ. நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்று இதே நாட்களில் வெளியே வந்துள்ளது. அவற்றின் மூலம் இதுவரை அம்பலமாகாத சூத்திரதாரி எவரும் இல்லை என்று கூற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago