2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இதுவும் காணாமல் போகுமா?

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அதிரதன்

யாரிடத்தில் கையை நீட்டுகிறோம் என்று தெரியாமலேயே, ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. 

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவுப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாத இறுதி (30.11.2018) நாளன்று, கொடூரமான கொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதைத் துப்பாக்கிச் சூடு என்பதா, குத்து வெட்டுக் கொலை என்பதா, எல்லாம் முடிவு காணப்படாத விடயமாகத்தான் தொடர்கிறது.

காலி, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், காவல் கடமையில் இருந்தபோது, உயிர் பறிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், வெறுமனே எழுந்தமானமாக நடைபெற்றது அல்ல என்பதை, பொலிஸாரின் விசாரணைகள் மாத்திரமல்ல, சாதாரணமாக பொதுமகன் ஒருவரின் சந்தேகப் பார்வையிலும் வெளிப்படையாக அறிந்து கொள்ளமுடிகிறது. 

ஆனால், இந்தச் சம்பவம் அல்லது கொலைக்கான காரணம் இதுவரையில் சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை; விளக்கப்படவில்லை. இருந்தாலும் இந்தச் சம்பவத்தை, மேலோட்டமாகவோ, ஆழமாகவோ ஆராய்ந்து பார்க்கும் ஒருசாரார், இங்கு இடம்பெறும் குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பாங்கையும் காணமுடிகிறது. 

அதாவது, மட்டக்களப்பில் மண்கடத்தல்கள் பெருமளவில் நடைபெறுகின்றன. அதேபோன்று மரம், போதைப்பொருள் கடத்தல், கால்நடைகளைச் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லுதல், சட்டவிரோத காணி அபகரிப்புகள் எனப்பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இருந்தாலும், சம்பவம் இடம்பெற்ற நேரம், காலம், இடம் என்பவற்றை வைத்து பார்க்கின்ற போது, இந்தக் குற்றச்செயல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமா என்று உறுதியாகச் சொல்லிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. 

இப்படியிருக்கின்ற நிலையில், சம்பவம் நடைபெற்ற மறுநாள், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் பல விடுதலைப்புலி இயக்க முன்னாள் உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அது கைதா, விசாரணைக்கான அழைப்பா என்பது வேறு கேள்வி. கைது என்று சொல்லப்படவில்லை. 

நவம்பர் 30ஆம் திகதி அதிகாலை வேளையில், கொலைச் சம்பவம் நடைபெற்றது என்ற அடிப்படையில், டிசெம்பர் மாதம் முதலாம் திகதி பகலில் கிளிநொச்சியைச் சேர்ந்த விடுதலைப்புலி இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். அவர் கைது செய்யப்படவில்லை; பொலிஸில் சரணடைந்தார் என்றும் செய்திகள் வெளிவந்திருந்தன. 

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட இந்த  நபர், சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், வவுணதீவுப் பிரதேசத்தில் தங்கியிருந்தவர் என்ற வகையிலான தகவல்கள் பின்னர் வெளியாகி இருந்தன. அந்த வகையில்தான், இவர், இங்கு ஏன் தங்கியிருந்தார் என்பது முதல் கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்வியின் அடிப்படையிலேயே, அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அப்படியென்றால், இவர் ஏற்கெனவே கண்காணிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் தெளிவாகின்றது. குறிப்பிட்ட ஒரு மாத காலம், படுவான்கரைப் பிரதேசத்தின் வவுணதீவு, தாண்டியடியில் தங்கியிருந்தவர் என்ற அடிப்படையிலேயே அவர் கைதானார் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்பது தொடர்பான பல சந்தேகங்களும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த, பெரும்பகுதிகளைக் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலகட்டத்தில், அவ்வியக்கத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர், யுவதிகள் இணைந்திருந்தார்கள். 

அவர்களுக்கிடையில் தொடர்புகள், உறவுகள், நட்புகள் இருந்திருக்கின்றன. தன்னுடைய நண்பியை, நண்பனைப் பார்க்கவோ, அவர்களது குடும்பத்துடன் உறவாடுவதற்கோ செல்ல முடியாதா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. அதேநேரம், குறித்த நபர், குறிப்பிட்ட காலம் அங்கு தங்கியிருந்தார் என்பது தொடர்பான விவரம் எவ்வாறு பொலிஸாருக்குத் தெரியவந்தது. ஏன் இந்த விவரம் மட்டும் இங்கு கூடுதல் அழுத்தத்துடன் பார்க்கப்படுகிறது என்பவை கேள்விகளாகத் தொக்கி நிற்கின்றன. 

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர், புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்ட போதிலும்  குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவர்கள் அழைத்து விசாரிக்கப்படும் அவலம் தொடர்கிறது. வவுணதீவுச் சம்பவம் தொடர்பிலும் முன்னாள் போராளிகள் பலர் அழைத்து விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றச்செயல்கள் சார் சம்பவங்கள் நடைபெற்றவுடனேயே, முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவது பலவிதமான கேள்விகளைத் தோற்றுவித்திருக்கிறது. விடுதலைப் புலிகளது காலத்துக்கு முன்னர், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லையா என்ற கேள்வியை இங்கு பலமாக எழுப்பவேண்டியிருக்கிறது. 

அதேநேரம், முன்னாள் போராளிகளுக்குச் சரியான முறையில் புனர்வாழ்வளிக்கப்படவில்லையா,  புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளைகளைத் தவிர ஏனைய அமைப்புகள், தரப்புகள் இவ்வாறான சம்பவங்களுக்கு முனையாதா, என்கின்ற கேள்விகள் இருக்கின்றன. 

முன்னரே சொல்லப்பட்டது போல, போதைப் பொருள் கடத்தல்காரர்கள்,  மணல் கொள்ளைக்காரர்கள், சட்ட விரோதமான  செயல்களில் ஈடுபடுபவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் கிடையாதா? என்பது உள்ளிட்ட பல விதமான காரணகாரியங்கள் இந்த வவுணதீவுக் கொலைச் சம்பவம் தொடர்பாக அலசப்பட்டு வருகிறது. 

இதேவேளை, அண்மைய நாள்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏட்டிக்குப் போட்டியான ஆர்ப்பாட்டங்கள், கவனஈர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன.                                        

இந்த ஏட்டிக்குப் போட்டியான கவன ஈர்ப்புகள், உண்மையில் சமாதானம், குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துதல், அமைதியின் தேவை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் தவிரவும், அரசியல் காரணங்களையும் உள்ளே வைத்திருப்பதாகத் தெரிகிறது. நேரடியாகக் காரியத்தில் இறங்குவதற்கு அப்பால், மறைமுகமாகத் திரைக்குப்பின்னால் தீயநோக்கம் கொண்ட சக்திகளின்  இவ்வாறான முயற்சிகளும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. 

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சியால் அவசரமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு பேரணிக்கான அறிவிப்பு, ஊடகவியலாளர் மாநாடாக மாறியது. அந்தப் ஊடகவியலாளர் மகாநாட்டை நடத்திய அமைப்பின் தலைவர் இன்பராசா, “ஒரு பதற்ற நிலையுடனான அச்சம் உருவாகியிருக்கிறது. வேறு பிரதேசங்களிலிருந்து அமைப்பின் உறுப்பினர்கள் வருகை தரமுடியாமையாலேயே, பேரணி கைவிடப்படுகிறது. அதனாலேயே இச்சந்திப்பை நடத்துகிறோம்” எனத் தெரிவித்திருந்தார். 

அத்தோடு, தங்களுடைய முன்னாள் போராளிகள் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், சந்தேகப்பார்வைகள் இருப்பதை மிகவும் மனவேதனையுடன் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது வெளிப்படுத்தியிருந்தார். குற்றச்செயல் ஒன்றுக்குத் தம்மீது மாத்திரம் சந்தேகப் பார்வைகளை நகர்த்தாமல், முன்னாள் போராட்ட அமைப்புகள், முஸ்லிம் ஆயுத அமைப்புகள் குறித்தும் விசாரணைகள் நடத்த வேண்டும் என்ற வகையிலான கருத்துகளை முன்வைத்திருந்தார். இக்கருத்துகள் திடீரென வேறுவிதமான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையில், மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,  “எங்களைப் பொறுத்தமட்டில், எல்லா ஆயுதங்களையும் கையளித்து விட்டோம்; எங்களிடம் ஆயுதங்கள் இல்லை; இருந்தபோதும் மீண்டும் ஆதப் போராட்டமொன்றை ஆரம்பிக்க முயற்சித்தால், அது இன்னும் அழிவைத்தான் கொண்டு வரும்; எனவே, அப்படியான எண்ணப்பாடு எங்களுக்கும் எமது தோழர்கள் மத்தியிலும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

வவுணதீவுச் சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திடீர்ச் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அது, முன்னாள் போராளிகள், அவர்களது வீடுகள், காணிகளையே இலக்காகக் கொண்டிருந்தன. இச்சோதனைகளில் எவ்விதமான ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னாள் போராளிகள், சார்ந்தே நடத்தப்பட்ட இச்சோதனைகள், மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்த போதிலும், இருவரையில் இந்தக் கொலை தொடர்பான இறுதியான, சரியான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டார்களா என்றால், பதில் கேள்விக்குறிதான். 

இதற்கிடையில்,  மட்டக்களப்பு காந்திபூங்காவில், வவுணதீவுக் கொலைச் சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி, பிள்ளைகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கடந்த 18ஆம் திகதி காலை முதல் ஆரம்பித்தனர். 

போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், ஜனாதிபதியுடன் இது விடயமாக நேரடியாகப் பேசி, அஜந்தனின் விடுவிப்புக் குறித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். அன்றைய தினம் நள்ளிரவு, அவ்விடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மாநகர மேயர், பொலிஸார் உள்ளிட்டோர் அவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டதுடன், கணவரின் பிணை பெற்றுத்தரப்படும் என்று கூறியுள்ளனர்.

விசாரணைகள்  ஒரு கோணத்தில் முடுக்கிவிடப்பட்ட போதும், பொதுமக்களின் பார்வைகள் பல்வேறு கோணங்களில் முடக்கிவிடப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

வவுணதீவுக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது,  நாட்டில் மிகப்பெரும் அரசியல் குழப்பம், தீவிரமடைந்திருந்த காலப்பகுதியிலாகும். இந்த அரசியல் நெருக்கடி காலத்தில் தான், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக அறிவிக்கப்பட்டார். ரணில், அலரி மாளிகையிலிருந்து வெளிறே மறுத்து, ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் தொடர்ந்தன. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு, நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் நியமனங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

நாடாளுமன்றக் கலைப்பு, பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல், நாடாளுமன்றக் கலைப்புக்கு தடையுத்தரவு,  நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்கள் என நாடே அமைதியின்மையிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையிலும் படுமோசமான நிலைமைக்குச் சென்றுகொண்டிருந்தது. இவ்வாறு அரசியல் குழப்பம் உச்சம் பெற்றிருக்கையில்தான், வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்டார்கள்.

இந்த இடத்தில்தான், வவுணதீவுச் சம்பவம் ஊடாக, மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும்  தொடர்பிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மாவீரர் தினம் சார்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது;  புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற முன்னாள் போராளிகள், புலம் பெயர்ந்த தமிழர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற வெளி விம்பத்தைக் காண்பிப்பதற்கான கோணத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டனவா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன.

நாட்டில் ஆரம்பித்த தேசியக் குழப்பத்துக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மீண்டும் நாடாளுமன்றம் நிதானமாகி, புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அரசாங்கம் பயணமாக ஆரம்பித்திருக்கிறது. 

யுத்தம் நிறைவு பெற்ற பின்னர், உருவான அமைதிச் சூழலில் மட்டக்களப்பில் இதற்கு முன்னர் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்று, மதிதயன் எனப்படுகிற சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய கொலை சார்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகப் பொலிசார் தெரிவித்திருந்தாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விசாரணையும் முடிந்தபாடில்லை.

களுதாவளையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு, யாழ். மாவட்டங்களின் பணிப்பாளர் விமல்ராஜ் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. அதற்குக் காணி தொடர்பாக இருந்த பிரச்சினைகள் காரணம் என்று சொல்லப்பட்டாலும் விசாரணைகள் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.

இந்த இரண்டு சம்பவங்களுக்கு முன்னரும் பின்னரும் நகர்ப் பகுதி உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை பழுதடைந்தும் பாவிக்கக்கூடியதாகவும் இருந்திருக்கின்றன. 

இருந்தாலும் மட்டக்களப்பின் வவுணதீவில் திடீரென்று இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்தச் சம்பவம் பத்தோடு பதினொன்றாக, நீதி கிடைக்காமல் காணாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொள்ளும் விசாரணைகளின் மூலம் வௌிக்கொண்டு வருவார்கள் என்று நம்புவோமாக.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X