Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 மே 15 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூன் மூன்றாம் திகதி நடக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் விழாவும், அவர் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்த ‘வைரவிழா’வும் இந்திய அரசியலில் ஒரு புதுக் கூட்டணிக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியை எதிர்த்து, முதல் குரல் தமிழகத்தில் இருந்துதான் கிளம்பியிருக்கிறது என்பதால், அகில இந்தியத் தலைவர்கள் கூடும் இந்தப் பிறந்த நாள் கூட்டம், வித்தியாசமான களத்துக்கு அரசியல் கட்சிகளைத் தயார் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி, வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி, சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி போன்ற கூட்டணிகள் எல்லாவற்றுக்கும் விதை போட்ட மாநிலம் தமிழகம். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கடந்த கால வரலாறு.
இந்நிலையில் மத்தியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக அகில இந்தியத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் விழாவாக கருணாநிதியின் வைரவிழா கருதப்படுகிறது.
இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பொறுத்தமட்டில், பிரதமர் நரேந்திரமோடியைத் தமிழகத்தில் உள்ள
அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஆதரிக்கின்றன.
ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ ஆதரிக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 50 க்கு 50 என்பது போல் ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டொக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுக்கு திரும்பி விட்டார். இது தமிழகத்தில் உள்ள பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டின் நிலைமை.
மத்திய பா.ஜ.க அரசாங்கத்துக்கு எதிர்ப்பாகச் செயல்படும் கட்சிகள் என்று தமிழகத்தில் பார்த்தால், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. அடுத்த கட்டமாக காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மனித நேய மக்கள் கட்சி எதிர்க்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் தொல் திருமாவளவன் தீவிரமாக எதிர்க்கிறார்.
இத்தனை கட்சிகள் எதிர்த்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்புத்தான் மக்களைச் சென்றடைந்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரதமர் மோடி மீதான மோகம், தமிழக இளைஞர்கள் மத்தியில் இருந்தது.
கிராம அளவில் கூட பிரதமரின் மீது நம்பிக்கை வைத்து, “அவர்தான் இந்தியாவுக்கு மாற்றத்தைக் கொண்டு வருவார்” என்று பேசினார்கள். அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது, தமிழக உணர்வுடன் இணைந்த இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினைகளிலும், தமிழக நலன் சார்ந்த காவேரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் அன்றைக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் மீதான எதிர்ப்பே பிரதமர் மோடி மீதனா மோகமாக மாறியது.
இதன் காரணமாகவே அன்றைக்கு பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைக் கூட்டணியாகச் சந்தித்தனர்.
‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்பது போல், மத்தியில் பா.ஜ.க அரசாங்கம் அமைந்த பிறகு, தமிழக இளைஞர்கள் என்ன காரணத்துக்காக காங்கிரஸ் மீது வெறுப்பைக் காட்டினார்களோ, அதேகாரணங்கள் இன்றைக்கு பா.ஜ.க மீதும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகம் சார்ந்த பிரச்சினைகள் எதிலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படவில்லை என்ற கோபம் இன்றைக்கு, பா.ஜ.க எதிர்ப்பாக அல்ல, பிரதமர் மோடி மீதான எதிர்ப்பாக மாறியிருக்கிறது.
குறிப்பாக உச்சநீதிமன்றமே உத்தரவிட்டு, முதலில் உச்சநீதிமன்றத்தின் முன்பு ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு மத்திய அரசே உச்சநீதிமன்றத்தில், “காவேரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றம்தான் அமைக்க வேண்டும். கோர்ட் உத்தரவிட முடியாது” என்று கூறியது, தமிழக மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வரட்சி, விவசாயிகள் தற்கொலை போன்றவை எல்லாம், காவேரித் தண்ணீர் வராததால் வந்த விளைவு என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தார்போல், பா.ஜ.க மீதான எதிர்ப்பு இளைஞர்கள் மீது அதிகரித்ததற்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கியது, ஹிந்தித் திணிப்பு, அ.தி.மு.கவுக்குள் நடக்கும் உள்கட்சிக் குழப்பங்களுக்குள் மத்திய விசாரணை அமைப்புகள் ஊடுருவல் செய்வது போன்றவை காரணங்களாக அமைந்து விட்டன என்பதை மறுக்க முடியாது.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் மீது எழும் விமர்சனங்களுக்கு தமிழகத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் யாரும் உருப்படியான விவாதத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவில்லை. அதற்கு மாறாக, திராவிடக் கட்சிகளால் இந்த பிரச்சினை என்றும் மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்று பேசுவதை மக்கள் விவாதமாகப் பார்க்கவில்லை. விதண்டாவாதமாகப் பார்க்கிறார்கள்.
இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கூட, மக்களிடம் எடுத்துச் சென்று, நற்பெயர் சம்பாதிக்க மாநிலத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் தவறி விட்டார்கள்.
மாநில பா.ஜ.க தலைமையின் தோல்வியால் மத்திய பா.ஜ.க அரசாங்கம், தமிழக மக்கள் மத்தியில் வில்லன் போல் சித்திரிக்கப்படும் சூழல் உருவாகி விட்டது.
காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற நிலைமை எப்படி உருவானதோ, அப்படியொரு நிலைமை, இன்றைக்கு பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால், தமிழகத்தில் ஏற்படும் என்ற அளவுக்கு பா.ஜ.க எதிர்ப்பு என்பது தமிழகத்தில் உருவாகி விட்டது.
ஆகவே, இன்றைக்கு, பா.ஜ.க எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்லும் கட்சிக்கு, தமிழகத்தில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டு விட்டது.
இந்த எதிர்ப்பை, தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே திராவிட முன்னேற்றக் கழகம், கருணாநிதியின் வைரவிழாவைப் பயன்படுத்துகிறது.
அகில இந்திய தலைவர்கள் சோனியா காந்தி, சீத்தாராம் எச்சூரி, பாரூக் அப்துல்லா, லாலு பிரசாத் யாதவ், மாநில முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, பினராய் விஜயன், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்தான் பா.ஜ.கவுக்கு எதிரான களத்தை வலுப்படுத்த முடியும் என்ற செய்தியை விடுக்கவே இந்த கூட்டம் என்றாலும், பா.ஜ.க தரப்பில் உள்ள தி.மு.க எதிர்ப்பும் இன்னொரு காரணம்.
தி.மு.கவைப் பொறுத்தமட்டில் பா.ஜ.கவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், பிரதமர் மோடி பற்றி கருணாநிதியோ அல்லது செயல் தலைவர் ஸ்ராலினோ கடுமையான விமர்சனங்கள் எதையும் முன் வைக்காமல் இருந்தார்கள்.
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள், தி.மு.கவுக்கு எதிராக இருக்கிறது என்ற சிந்தனை, தி.மு.கவுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரு சில முறை பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்க செயல் தலைவர் ஸ்ராலின் நேரம் கேட்டு, அந்த நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
அதுமட்டுமின்றி, அ.தி.மு.கவில் உள்ள இரு அணிகளில் எதை வேண்டுமானாலும் ஆதரிப்போம்; தி.மு.கவை ஆதரிக்கக் கூடாது என்ற எண்ணவோட்டத்தில், பா.ஜ.க மேலிடத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்தும் தி.மு.க மேலிடத் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, “திராவிட இயக்கங்களை ஒழிப்போம்” என்று மாநில பா.ஜ.க தலைவர்கள் பேசுவது, தி.மு.கவுக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால்தான், பொதுவாக அரசியல் நாகரிகம் கருதி, அனைவரையும் அரவணைத்துச் செல்ல முயற்சி செய்யும் தி.மு.க கருணாநிதியின் வைரவிழா நிகழ்ச்சிக்கு பா.ஜ.கவுக்கு அழைப்பே விடுக்கவில்லை. “எங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை” என்ற விவாதத்தை மாநில பா.ஜ.க தொடக்கி வைத்தாலும், “திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்பவர்களை எப்படி கலைஞர் மேடைக்கு அழைக்க முடியும்” என்று ஸ்ராலினே பேட்டி கொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
ஆகவே, அகில இந்தியத் தலைவர்களை ‘கலைஞர் வைரவிழா’ என்ற பெயரில் அழைத்து பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் உள்ள எதிர்ப்பை இன்னும் கூர்தீட்டும் வேலையில் திராவிட முன்னேற்றக் கழகம் இறங்கியிருக்கிறது.
இது அகில இந்திய அளவில் தேசிய முன்னணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பதுபோல் உருவாகுமா என்பது கேள்விக்குறி. அதற்கான கால அவகாசம் இன்னும் நிறைய இருப்பது போலவே, இன்றைய அரசியல் சூழல் இருக்கிறது.
அப்படியொரு அணிக்கு காங்கிரஸ் முயற்சி செய்யாத நிலையில், தி.மு.க அந்த முயற்சியில் களமிறங்கியிருப்பது, காங்கிரஸ் தலைமையில் ஒரு தேசிய அளவில் அணி என்பதை விட மீண்டும் ஒரு புதிய “மூன்றாவது அணி” என்ற நிலையை நோக்கி அரசியல் நகருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலும், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலும் நெருங்கி வருகின்ற நிலையில், வழக்கம்போல் தேசிய அளவில் அணிக்கு வித்திடும் தமிழகம், இன்றைக்கு ‘கலைஞரின் வைரவிழா’ என்ற போர்வையில் புதிய மூன்றாவது அணிக்கு வித்திடுமா என்ற கேள்வி பிறந்திருக்கிறது.
காங்கிரஸ் தலைமையில் அணி சேருவார்கள் என்பதற்கு பதில், பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கு தி.மு.க, ஜூன் மூன்றாம் திகதி நடத்தும் விழா ஒரு தொடக்கமாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago