2025 மே 09, வெள்ளிக்கிழமை

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் வெளியிடப்படாதது ஏன்?

R.Tharaniya   / 2025 மே 07 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

நாட்டில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் முழுமையாகவே இன்னமும் வெளியிடப்படாதமையால் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா, ஏற்பட்டு இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய இது சந்தர்ப்பமல்ல.

ஆயினும், அந்தத் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதென எதிர்க்கட்சிகள் நினைத்த இரண்டு விடயங்களை சற்று ஆராய்வது பொருத்தமானது என நினைக்கிறோம்.

அவ்விரண்டும் தமிழ் மக்களோடும் ஓரளவுக்கு முஸ்லிம் மக்களோடும் நெருங்கிய தொடர்பு உள்ளவை என்பதும் முக்கியமான விடயமாகும்.பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பற்றியும் கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பற்றியுமே இங்கு குறிப்பிடுகிறோம்.

என்ன குறை இருந்தாலும், அரசியல் கலாசாரம்  மற்றும் அரசியல் தார்மிகத்தைப் பொறுத்தவரையிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி நாட்டில் ஏனைய சகல அரசியல் கட்சிகளையும் பார்க்கிலும், இன்னமும் முன்னணியில் இருக்கிறது.

ஆனால், இந்த இரண்டு விடயங்களில் அக்கட்சியினர் அரசியல் கலாசாரத்துக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் பொருத்தமற்ற வகையிலேயே நடந்து கொள்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மூலம் கடந்த செப்டெம்பர் மாதம் இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர், பொலிஸார் இரண்டு முறை பயங்கரவாத தடைச் சட்டத்தை சந்தேக நபர்களுக்கு எதிராக உபயோகித்துள்ளனர்.

கிழக்கில் அறுகம்பேயில் இஸ்‌ரேலிய உல்லாச பிரயாணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றஞ்சாட்டிக் கடந்த டிசெம்பர் மாதம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக முதன்முறையாக அச்சட்டம் பாவிக்கப்பட்டது.

இரண்டாவதாக, காசாவில் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்‌ரேலை கண்டித்து, ஸ்டிக்கர் ஒன்றை கொழும்பில் உள்ள ‘சொப்பிங் மோல்’ ஒன்றின் குப்பைத் தொட்டியில் ஒட்டிய ஒரு இளைஞனுக்கு எதிராகவும் பொலிஸார் கடந்த மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவற்றில் இரண்டாவது சம்பவம் வித்தியாசமானதாகவே தெரிகிறது. ஏனெனில், காசா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரின் நிலைப்பாட்டுக்கும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் நாம் அறிந்த வரையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இந்த இளைஞரின் கைதுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முஹம்மத் ருஷ்தி எனப்படும் 22 வயதான இவ்விளைஞர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு இணையத்தளங்கள் மூலமாகக் கருத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் ஊடகங்களிடம் தெரித்தனர்.

அவ்விளைஞர் அவ்வாறு கருத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தால் அவரை தடுத்து வைத்து மேலும் விசாரணை செய்வதையும் ஏற்கெனவே ஏதாவது பயங்கரவாத 
செயலில் அவரோ அவர் மூலமாக மற்றவர்களோ ஈடுபட்டு இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதையும் எவரும்  எதிர்க்கப் போவதில்லை.

ஆயினும், பொலிஸார் ஏன் ருஷ்தியைப் பற்றி விசாரணை நடத்தினார்கள்? அவர் மேற்படி ‘ஸ்டிக்கரை’ ஒட்டியதனாலா? அல்லது அதற்கும் முன்னரா? ஸ்டிக்கர் ஒட்டியதால் அவரைப் பற்றி விசாரணை நடத்தியிருந்தால் இஸ்‌ரேலை எதிர்த்தும் பலஸ்தீனத்தை ஆதரித்தும் குரல் கொடுக்கும் ஏனையவர்களை பற்றியும் பொலிஸார் விசாரணை நடத்துகிறார்களா? என்ற 
கேள்வி எழுகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றியும் விசாரணை நடைபெறுமா?‘ஸ்டிக்கரை’ ஒட்ட முன்னரே பொலிஸார் ருஷ்தியைப் பற்றி விசாரணைகளை ஆரம்பித்து இருந்தால் அதற்கான காரணம் என்ன? அதேவேளை, 1979 பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முதல் அதனை எதிர்த்து வந்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது அதனை சந்தேக நபர்களுக்கு எதிராகப் பாவிக்க ஏன் பொலிஸாருக்கு இடமளித்தது? அதுவும் பலஸ்தீன பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டையே கொண்டுள்ள ஒரு இளைஞருக்கு எதிராக தமது ஆட்சியின் கீழ் அதே சட்டத்தை உபயோகிக்க மக்கள் விடுதலை முன்னணி ஏன் இடமளித்தது?

நீண்ட காலமாக நாட்டில் நிலவி வரும் ஊழல் மிகு அரசியல் கலாசாரத்தையும் அரசியல் நாகரிகத்தையும் மாற்றி அமைப்பதே தமது ஆட்சியின் முதன்மையான பணி என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறி வருகின்றனர். அவ்வாறாயின், தாம் 46 வருடங்கள் எதிர்த்து வந்த சட்டத்தை எந்த அரசியல் நாகரிகத்தின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இப்போது ஏன் நடைமுறைப்படுத்துகிறது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

இந்தியாவுடனான மேற்படி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விடயத்திலும் இது போன்ற நெறிமுறை பிரச்சினைகள் எழுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி நடந்து கொள்ளும் விதமும் அவர்களது அரசியல் நாகரிகம் மீது விழும் பலத்த அடியாகவே தெரிகிறது. அக்கட்சியின் நம்பகத்தன்மையை அது பெரும் சவாலுக்கு உள்ளாக்குகிறது.

இவ்வொப்பந்தங்கள் கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போதே கைச்சாத்திடப்பட்டன. ஏப்ரல் 5 என்பது மக்கள் விடுதலை முன்னணிக்கு பெரும் முக்கியத்துவம் உள்ள நாளாகும். 1971 ஏப்ரல் 5ஆம் திகதியே அக்கட்சியின் முதலாவது கிளர்ச்சி ஆரம்பமாகியது.

எனவே, 1971 முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5ஆம் திகதி அக்கட்சி அக்கிளர்ச்சியின் போது உயிர்த் தியாகம் செய்த தமது சகாக்களை நினைவு கூர்வதற்காக அஞ்சலி மூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

1971இல் மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதியது. இவ்வருடம் அக்கட்சி இந்தியாவுடன் பாதுகாப்பு உள்ளிட்ட ஏழு விடயங்கள் தொடர்பாக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பற்றியே நாட்டில் பெரும்பாலானவர்கள் அக்கறை செலுத்துகின்றனர்.

எனவே, அதனை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விடயத்தைப் பற்றி ஊடகவியலாளர்கள் வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் வினவியபோது, அதில் புதிதாக எதுவும் இல்லை என்றும் இது வரை இரு நாடுகளிடையே நடைமுறையில் இருந்த சில விடயங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது மட்டுமே அதன் மூலம் நடைபெற்றுள்ளது என்றும் அவர் பதிலளித்தார்.

அவ்வாறாயின், அந்த ஒப்பந்தங்களை வெளியிடுவதில் சிக்கல் இருக்கவே முடியாது. இதைப் பற்றி மேலும் குறிப்பிட்ட அமைச்சர் ஹேரத் இந்த ஒப்பந்தங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். அதாவது அவற்றை வெளியிடுவதில் சிக்கல் எதுவும் இல்லை என்பதேயாகும்.

மேலும், அவற்றை வெளிநாட்டு அமைச்சின் இணையத்தளத்திலோ ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளத்திலோ வெளியிட்டு மக்களின் தகவல் அறியும் உரிமையையும் நிறைவேற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமும் வழங்காதிருக்க முடியும். இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆயினும், இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட கருத்தொன்றின் மூலம் தெரிகிறது. இந்த ஒப்பந்தங்களை வெளியிடுவதானால் அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் வேண்டும் என்று அவர் கூறினார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்தால் அதனை வெளியிடுவோம் என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்த கருத்து உண்மையல்ல என்பது இதன் மூலம் தெரிகிறது.

அதேவேளை, அமைச்சர் ஜயதிஸ்ஸவின் கருத்து பொது மக்களின் இறைமையை மறுக்கும் கருத்தாகும் மக்களுக்குத் தெரிவிக்காத ஒரு ஒப்பந்தத்தை அரசாங்கம் வெளிநாடு ஒன்றுடன் செய்து கொள்ளலாமா?

இலங்கை மக்கள் குறிப்பாக, பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்தியாவை எப்போதும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர். பண்டையக் காலங்களில் தென்னிந்திய மன்னர்கள் பலமுறை இலங்கையை ஆக்கிரமித்தமையே இதற்குக் காரணமாகும். பல அரசியல் கட்சிகள் அடிக்கடி இந்த வரலாற்றை தமது அரசியலுக்காகப் பாவித்தும் உள்ளனர்.

1972ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தமது உறுப்பினர்களுக்கான கல்வித் திட்டத்தின் கீழ் நடத்திய இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற விரிவுரையிலும் இந்த ஆக்கிரமிப்புக்களைக் குறிப்பிட்டு இருந்தது. அக்கட்சியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, அதாவது 1980களின் இறுதியில் அக்கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர எழுதி வெளியிட்ட ‘தமிழீழத்துக்கான தீர்வு என்ன’ என்ற நூலிலும் சோழ மன்னர்களின் இலங்கை அக்கிரமிப்புக்களை குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையிலேயே, தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்தியாவுடன் கடந்த மாதம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிடாதிருப்பதை நியாயப்படுத்தி வருகின்றனர். இது மக்களின் தகவல் அறியும் உரிமையையும் மீறி தமக்கே எதிராக எதிர்க்கட்சிகளுக்கும் ஆயுதமும் வழங்கும் செயலாகும்.  

07.05.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X