Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2017 ஜூன் 01 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் அவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையும் தாக்கி, முஸ்லிம்களையும் அவர்களது சமயத்தையும் நிந்தித்து வந்த, பொது பல சேனா கும்பல், கடந்த மாதம் முதல், மீண்டும் அதன் அடாவடித்தனத்தை ஆரம்பிக்க என்ன காரணம்? இது விளங்கிக் கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது.
நாட்டில் பல இடங்களில், ஒரே காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகத்தான் இருக்க வேண்டும். ஒரே கும்பல்தான் அவற்றில் ஈடுபட்டு வருகிறது என்பதும் தெளிவாகிறது.
இதேகாலத்தில் பொது பல சேனாவின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரரும் களம் இறங்கியிருப்பதால் தாக்குதல்கள் யாருடைய கைவரிசை என்பதிலும் சந்தேகம் இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் இறுதி மூன்றாண்டிலும், இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெற்றன. அக்காலத்தில் முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்களினதும் இந்துக்களினதும் வணக்க ஸ்தலங்களும் தாக்கப்பட்டன. அப்போது பொது பல சேனா மட்டுமன்றி ராவணா பலய மற்றும் சிஹல ராவய போன்ற, பிக்குளைத் தலைமையாகக் கொண்ட அமைப்புகளும் வெறி கொண்டு இயங்கி வந்தன.
அக்காலத்தில் இந்த அமைப்புகளுக்கு, குறிப்பாகப் பொதுபல சேனாவுக்கு அரசாங்கத்தின் உதவி அல்லது ஆசிர்வாதம் இருந்தமை தெளிவாகத் தெரிந்தது. பொதுபல சேனா, பல இடங்களில் முஸ்லிம்களை மிரட்டிக் கொண்டு இருக்கும் நிலையில், அவ்வமைப்பின் அலுவலகம் ஒன்று, காலிப் பிரதேசத்தில் திறந்து வைக்கும் வைபவத்தில், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
“கலகொட அத்தே ஞானசாரவின் குமுறல்களை நியாயப்படுத்தும் வகையில், நாம் சில விடயங்களை உரத்துக் கூற வேண்டியிருக்கிறது” என்று அவர் அந்தக் கூட்டத்தின் போது கூறினார்.
எனவேதான், அக்காலத்தில் இந்த அமைப்புகளின் பின்னால், அரசாங்கம் அல்லது மஹிந்தவின் கை செயற்படுவதாகப் பலர் கருதினர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையை அழித்துவிட்டு, தமிழர்களை மானசீகமாக வீழ்த்திய பின், ஏனைய சிறுபான்மை மக்களையும் மானசீகமாக வீழ்த்தி, அவர்கள் மனதில் அடிமை மனப்பான்மையை உருவாக்குவதே இதன் நோக்கம் எனப் பலர் கூறினர். இந்தக் கும்பல்களின் அடாவடித் தனங்களைப் பொலிஸார் பார்த்துக் கொண்டு இருந்தமையினால் மேலும் அவ்வாறு நினைக்க வேண்டியிருந்தது.
போரின் இறுதிக் கட்டத்தில், அரச படைகள் வெற்றி பெறுவது நிச்சயமாகிவிட்ட பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்கத்திய நாடுகளுக்குச் சிறிதும் வளைந்து கொடுக்க விரும்பவில்லை. எனவே, அவரது ஆட்சியைக் கவிழ்க்க, நோர்வே அரசாங்கம் தீட்டிய திட்டமே, இந்தப் பொதுபல சேனாவின் தோற்றம் என்பது அக்காலத்தில் நிலவிய மற்றொரு கருத்தாகும்.
சிறுபான்மை மக்கள், மஹிந்தவின் அரசாங்கத்தைப் பற்றி, வெறுப்படையச் செய்து, அவரை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுறச் செய்வதே இந்தத் திட்டமாகும் என நோர்வே தொடர்பைப் பற்றிக் குற்றஞ்சாட்டியவர்கள் கூறினர்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராகவிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் இக்கருத்தைக் கொண்டு இருந்தார். அவரும் பொதுபல சேனாவின் குழப்பங்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பாதிக்கும் எனக் கூறியிருந்தார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலியும் பொதுபல சேனா நோர்வேயிடமிருந்து உதவிகளைப் பெறுவதாகக் கூறியிருந்தார்.
2012 ஆம் ஆண்டு நோர்வேக்குச் சென்ற எட்டு பேர்களைக் கொண்ட குழுவொன்றே, அந்த விஜயத்தை முடித்துக் கொண்டு வந்தவுடன், பொதுபல சேனா அமைப்பை உருவாக்கின.
அவர்கள் அந்த விஜயத்தின்போது, ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷவுடன் முறுகல் நிலையில் இருந்தவரும், ஒருகாலத்தில் இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்மையும் சில புலிகள் உறுப்பினரையும் சந்தித்துள்ளனர். இதனைப் பொதுபல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த வித்தானகே, பின்னர் ஓர் ஊடகப் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நோர்வேத் தொடர்பைப் பற்றி, அசாத் சாலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டதையடுத்து, நோர்வே தூதரகம், அதற்கு விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தது.
‘புலிகளுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, அவர்களுடன் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் ஒரு முயற்சியை மேற்கொள்ளத் தாம் விரும்புவதாகவும் அதற்குத் தமக்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறும் மேற்படி எட்டுப் பேர் விடுத்த கோரிக்கையின் பேரில், அவர்களது நோர்வே விஜயத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் நாடு திரும்பிய பின், சமாதானப் பணிகளுக்காக ஒரு தொகை நிதி வழங்கப்பட்டது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பின்னர் உருவாக்கப்பட்ட பொதுபல சேனாவுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தது.
பொதுபல சேனா, மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோர்வேயின் சதியாக இருந்தால், மஹிந்தவும் அவரது சகோதரர் கோட்டாபயவும் பொதுபல சேனாவுக்கு ஏன் உதவி செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், சதியைப் பற்றிய கருத்தைக் கொண்ட சிலரிடம் அதற்கும் பதில் இருந்தது.சிங்களபௌத்த அமைப்பொன்று இனவாதத்தைத் தூண்டிக் குழப்பம் விளைவித்தால், மஹிந்தவும் அவரது சகோதரர்களும் அந்தக் குழப்பக்காரர்களுடன் தான் இருப்பார்கள் என்றும் அல்லது எதிர்காலத்தில் சிங்கள வாக்குகளை கருத்தில் கொண்டு, அந்தக் குழப்பங்களுக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என்றும் சதிகாரர்கள் எதிர்ப்பார்த்தனர் என்பதே அந்தப் பதிலாகும். உண்மையிலேயே அதுதான் நடந்தது என்பதே அந்த வாதமாகும்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் அரசாங்கத்தை நிறுவிய பின்னர், பொதுபல சேனா போன்ற இனவாதக் கும்பல்கள் காணாமல்போனதைப் போன்ற நிலை உருவாகியது.
மஹிந்தவின் காலத்தில் ‘இதோ சிறுபான்மையினர், சிங்கள இனத்தையும் பௌத்த சமயத்தையும் அழித்து வருகிறார்கள்’ என்று கூச்சலிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அடங்கிவிட்டனர். ஆனால், திடீரெனக் கடந்த ஏப்ரல் மாதம் முதல், பொதுபல சேனா பழைய நிலையிலேயே குழப்பங்களை ஆரம்பித்துள்ளது.
ஞானசார தேரர் தமது ஆத்திரமூட்டும் அவதூறுகளைப் பரப்பி வருகிறார். சமூக வலைத்தளங்களும் ஆத்திரமூட்டல்களையும் துவேசங்களையும் பரப்பி வருகின்றன. பல பள்ளிவாசல்கள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஞானசாரருக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்காக, அவரைக் கைது செய்ய வேண்டும் எனப் பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், அவர் ‘தலைமறைவாகி’ இருக்கிறார்.
1992 ஆம் ஆண்டு, கொழும்பு கூட்டுப் படை முகாமைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர், தாக்கி அழித்தபோது, அதன் சூத்திரதாரியான வரதனை ஒரு நாளுக்குள் கைது செய்த பொலிஸார், ஞானசார தேரர் எங்கே எனத் தெரியாது எனக் கூறுகின்றனர்.
கடந்த வாரம், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் சுகயீனமாக இருப்பதாக, அவரது சட்டத்தரணிகள் கூறினர். ஆனால், அவரைக் கைது செய்து, கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதால், அவர் மறைவிடமொன்றில் பாதுகாப்பாக இருப்பதாக, மறுநாள் பொதுபல சேனா அறிக்கையொன்றின் மூலம் கூறியது. அவ்வாறாயின், அவர்கள் நீதிமன்றத்தையும் ஏமாற்றினார்களா?
மஹிந்தவின் காலத்தில், சிறுபான்மையினங்களை மானசீகமாக அடிமைகளாக்கிக் கொள்வதற்காக, அவரது அரசாங்கம், பௌத்த தீவிரவாதக் குழுக்களை உருவாக்கியிருப்பதாகவும் நோர்வேயின் தேவைக்காக அவ்வமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் பலகாரணங்கள் கூறப்பட்டன.
ஆனால், தற்போது திடீரெனப் பொதுபல சேனா ஏன் அல்லது எவ்வாறு, எவரது? உதவியுடன் தலைதூக்கியிருக்கிறது என்ற கேள்விக்கு இன்னமும் சந்தேகிக்கக் கூடிய வகையிலாவது காரணம் ஒன்றை எவரும் முன்வைக்கவில்லை.
எனினும், ஏற்கெனவே அரசாங்கம் இந்தப் பிரச்சினையால் நெருக்குதலுக்கு உள்ளாகி வருவது தெரிகிறது. இலங்கையில் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பிரேரணைகளை ஆறு முறை, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பதில் முன்னணியில் இருந்த அமெரிக்கா, சில நாட்களுக்கு முன்னர், பொதுபல சேனாவின் அடாவடித்தனங்கள் தொடர்பாகத் தமது கவலையைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இத்தகைய இனவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதென அமைச்சரவை கடந்த வாரம் முடிவு செய்தது.
ஆனால், அந்த முடிவு எந்தளவுதூரம் செயற்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைப் பற்றிய செய்திகளினால் இந்தப் பிரச்சினையையும் ஞானசாரவையும் மக்கள் மறந்துவிட்ட நிலையையும் அவதானிக்க முடிகிறது.
தமது அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், அரசியலில் தோல்வியடைந்த சக்திகளே, தற்போதைய பதற்ற நிலையை உருவாக்கி வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின்போது கூறியிருந்தார்.
அதேவேளை, எதிர்வரும் காலத்தில் நடத்தப்படவிருக்கும் தேர்தல்களை ஒத்திப் போடும் நோக்கத்தில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிப்பதற்காக, அரசாங்கமே இனவாதக் குழுக்கள் மூலம், நாட்டில் பதற்ற நிலையை உருவாக்கி வருவதாக, முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.
தமது வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக இதே அமைப்புகள்தான் தமது தந்தையின் அரசாங்கத்துக்கு எதிராகவும் சதி செய்தன எனவும் நாமல் கூறியிருந்தார்.
இதில் எதுவும் நடக்கக் கூடியதுதான். ஏனெனில், பின்புல உதவியின்றி, இந்த இனவாத அமைப்புகள் செயற்படும் என நம்ப முடியாது. அதேவேளை, மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பாவித்து, பொதுபல சேனா போன்ற அமைப்புகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் திட்டி வருவதைப் பார்க்கும் போது, அரசாங்கம் இந்தக் கும்பல் பின்னால் இயங்குகிறது என்பதை நம்பவும் முடியாது.
2012 ஆம் ஆண்டு, பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புகள் குழப்பங்களை விளைவிக்க முற்பட்டதை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி அந்த அமைப்புகளோடு தொடர்புகளை வைத்திருக்காதிருக்கும் வகையில் மிகவும் கவனமாக நடந்து கொண்டது.
தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி - மஹிந்த அணிகளும் இந்தக் குழுக்கள் தமக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றன. எனவே, இந்த அமைப்புகளை பகிரங்கமாக வரவேற்க, பிரதான கட்சிகள் தயங்குவது தெளிவாகத் தெரிகிறது.
எனினும், அரசாங்கமும் ஊடகங்களும் முஸ்லிம்களும் இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதை அறியாது தடுமாறுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. பிரதான பிரவாகத்தில் ஊடகங்கள், பொதுபல சேனாவின் தாக்குதல்களை அறிக்கையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
சில ஊடகங்கள் இச்செய்திகளை வெளியிடுவதனால் அவை பரவலாம் என்ற உண்மையான அச்சத்தின் காரணமாக செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்கின்றன. வேறு சில ஊடகங்கள், பொதுபல சேனாவுக்கும் பொதுவாகப் பௌத்தர்களுக்கும் அவப் பெயர் ஏற்படும் என்ற இனவாத நோக்கில் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்கின்றன. எந்த நோக்கத்தில் செய்திகளை வெளியிடாதிருந்தாலும் அது, தாக்குதல் நடத்துவோருக்குச் சாதகமாக இருக்கிறது.ஏனெனில், அவர்களுக்கு அதனால் குறைவாகவே எதிர்ப்பு எழுகின்றது.
முஸ்லிம்கள், கடந்த காலத்தைப் போலவே செய்வதறியாது தவிக்கிறார்கள். நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கோ அல்லது நிந்தனைகளுக்கோ பதிலாகத் தாம் செய்யும் சிறியதோர் பிழையாயினும் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதேவேளை, பெரும்பாலான ஊடகங்களும் முஸ்லிம்களின் செயல்கள், கருத்துகளைத் திரிபுபடுத்தி வெளியிடக் காத்திருக்கின்றன.
அதேவேளை, அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் நேர்மையற்ற செயல்களினால், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 15 சம்பவங்கள் நடைபெற்றும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை எனச் சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கடந்த வாரம் கூறியிருந்தார்.
எனவே, வழமைபோல் முஸ்லிம்களிடையே கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. ஆனால், எங்கும் தீர்வுகள் காணப்படாமலே அவை முடிவடைகின்றன. முஸ்லிம்கள் விடயத்தில், பொதுபல சேனா கூறும் பொய்களுக்குப் பதிலளித்து, சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்பதே பொதுவாக எடுக்கப்படும் முடிவாகும்.
ஆனால், பொதுபல சேனா விளக்கம் இல்லாததனால் விளைவிக்கும் குழப்பமல்ல இது. விளக்கமளிப்பதன் மூலம், சம்பந்தமே இல்லாத சிங்களவர்கள் சிலர் தெளிவு பெறுவார்கள் என்பதும் உண்மைதான்.
நிலைமையைச் சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் தலைவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறன. சிலர் பாரதூரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார்கள். பெரும்பாலானவர்கள், முன்னர் போலவே, பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
ஆனால், அந்த இரண்டும் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வல்ல என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
இதேவேளை, முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்து, பதவிக்குக் கொண்டு வந்த, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது, அதே முஸ்லிம்கள் தற்போது நம்பிக்கை இழந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
இந்தநிலையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் வேறுபாடுகளை மறந்து, இரு பிரதான கட்சிகளையும் விட்டுப் பிரிந்து, தனியாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்தும் வலுவடைந்து வருகிறது.
ஆனால், இது இலகுவான விடயம் அல்ல. பட்டம் பதவிகளுக்காகவே அரசியல் என்ற நிலை இருக்கும் நிலையில், அது சாத்தியமாகுமா என்பது சந்தேகமே.
இந்த விடயத்தில் அரசாங்கம், குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள மைத்திரி அணி நேர்மையாகச் செயற்படுமா என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில், அரசாங்கம் பிக்குகளுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதனைப் பாவித்து, அரசியல் இலாபம் அடைய மஹிந்த அணி காத்திருக்கிறது.
அதனால், அரசாங்கத்தில் உள்ள ஐ.தே.கவை விட, மைத்திரி அணியே அச்சம் கொள்ளும். ஏனெனில், அது ஸ்ரீ ல.சு.கவுக்குள் தமது நிலையை மேலும் பலப்படுத்திக் கொள்ள, மஹிந்த அணிக்கு வாய்ப்புகளை வழங்கும். அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகளிலும் பலம் வாய்ந்த அமைச்சர் மட்டத்தில் இனவாதிகளும் இருக்கிறார்கள்.
அவர்களும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடையாக இருப்பார்கள். ஞானசாரர் இன்னமும் கைது செய்யப்படாதிருக்க அதுவும் காரணமாக இருக்கலாம்.
எனினும், அரசாங்கம் பராமுகமாகமாக இருந்தால், தமக்கு ஆதரவளித்த முக்கியமானதோர் சமூகத்தின் ஆதரவை அடுத்த தேர்தலில் இழக்க நேரிடும்.
சிங்கள மக்களில் பெரும்பாலானோர் அனேகமாக மஹிந்தவையே ஆதரிப்பார்கள். அதேவேளை, சர்வதேசத்துக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியிருக்கும்.
எனவே, அரசாங்கத்தின் நிலைமையும் இரண்டும்கெட்ட நிலை தான். இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், எடுக்கவும் முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
47 minute ago