2025 மே 07, புதன்கிழமை

ஈரான்: ஐ.அமெரிக்காவின் இராஜதந்திரத் தோல்வி

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஈரானுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்கள், படையெடுப்பு மிரட்டல் என்பவற்றை மேற்கொண்டதன் பின்னணியில் உள்ள சூழ்நிலையில், ஈரானில் போர், புரட்சி அல்லது ஆட்சி மாற்றம் தொடர்பில் ஐ.அமெரிக்க ஊடகங்கள், மீண்டுமொருமுறை ஊகங்களை வெளிப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், துல்லியமானதொரு பகுப்பாய்வு முறையில் இதைச் சிந்திக்கமுற்படின், ஈரானின் எதிர்காலத்தை மதிப்பிடுவதில் போர், புரட்சி, அல்லது ஆட்சி மாற்றம் ஆகியவை ஒரு போதும் இப்போதைக்கு சாத்தியமில்லாத நிலைமையிலேயே உள்ளன.

குறித்த ஐ.அமெரிக்க - ஈரான் முறுகல் நிலை என்பது, வரலாற்றில் பலதடவைகள் நடைபெற்று இருந்தாலும், ஈரானின் அரசியலைப் பொறுத்தவரை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுமளவுக்கு, ஐ.அமெரிக்கா ஒரு போதும் வெற்றிபெற்றதல்ல. மேலதிகமாக, அணுசக்தி உடன்பாட்டை 2015இல் ஈரான் வெற்றி பெற்றமையானது, ஈரானிய இராஜதந்திரத்தில் ஒரு பல தளங்களில் நன்மை செய்யும் ஒரு நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுவதுடன், அது சர்வதேச சமூகத்தை நோக்கி ஈரானிய அரசாங்கம் வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் வளர்ப்பதில் சரியான சமிக்ஞையை வழங்கியிருப்பது, ஐ.அமெரிக்காவின் இன்றைய அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், அதற்கு இராஜதந்திர ரீதியான ஒரு தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், ஈரானின் சமகால அரசியல் அமைப்புமுறை, உலக அரங்கில் நடக்கும் இராஜதந்திர நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்குமிடத்தில், தவறானதொரு கருத்தியல் மீது, ஐ.அமெரிக்கா தனது விவாதத்தைத் தனியாகக் கொண்டிருக்கும் அதேவேளை, அது ஐரோப்பிய மற்றும் ஏனைய வல்லரசுகளுடன் ஒத்திசைவானதும் விவேகமானதுமான மூலோபாயத்தைக் கண்டறியவில்லை.

ட்ரம்ப் நிர்வாகம், ஈரானிய மக்களுக்கு அதன் ஆதரவை ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக ஒரு புரட்சி ஏற்படுமளவுக்கு தெரிவிக்கும்போதிலும், ​​மறுபுறத்தில் ஈரானுக்கு எதிராக பொருளாதாரதத் தடைகளையும் வியாபாரம் சார்ந்த தடைகளையும் விதிக்கின்றமை, ஐ.அமெரிக்காவை ஈரானோ, ஈரான் மக்களோ ஏற்றுக்கொள்ளாத தன்மையையே காட்டுகின்றது. இதற்குச் சான்றாகவே, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2015இல் ஒபாமா நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து ஐ.அமெரிக்கா வெளியேறுகின்றது என அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான "கடுமையான" பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்தும்படியான ஆணை மீதான சட்டமூலத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

குறித்த ஒப்பந்தமானது 2015இல், ஐ.அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய உலக வல்லரசுகளின் P5 + 1 குழுவுடன் ஈரான், அதன் அணுசக்தித் திட்டத்தில் அணுவாயுதப் பாவனைக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில்லை என்ற நீண்டகால ஒப்பந்தம் (JCPOA) ஒன்றுக்கு உடன்பட்டதுடன், குறித்த ஒப்பந்தமானது, அணுவாயுதத்தை உருவாக்க ஈரான் முயன்றதாகக் கூறப்பட்ட பதற்றங்களைத் தவிர்க்கும் முகமாக நடைமுறைக்கு வந்தது. குறித்த உடன்படிக்கையின் கீழ், ஈரான், அதன் முக்கிய அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டதுடன், அதற்குப் பதிலாக, சர்வதேச நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும், ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்கு சர்வதேச சமூகம் உடன்பட்டிருந்தது. இதன் பிரகாரம், அன்றைய ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம், JCPOA, அணுசக்தித் திட்டமொன்றை இரகசியமாகக் கட்டமைப்பதில் இருந்து ஈரானை தடுக்கிறது என்ற நம்பிக்கையை வெளியிட்டிருந்தது.

மறுமுனையில் ஈரான், "அசாதாரண மற்றும் வலுவான கண்காணிப்பு, சரிபார்ப்பு மற்றும் ஆய்வு" ஆகியவற்றுக்கு உறுதியளித்து, அதன் அடிப்படையில் ஈரானிய அணுசக்தித் தளங்களை சர்வதேச அணுசக்தி அமைப்புத் தொடர்ந்து கண்காணிக்கவும், மேலும் இது தொடர்பில் சந்தேகத்துக்குரியதாகக் கருதப்படும் நாட்டில், எங்கும் எந்தவோர் இடத்தையும் அணுகுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்களை அனுமதித்திருந்தது.

குறித்த ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்காவின் வெளியேற்றம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்த ஈரானின் உயர் தலைவர் அயத்தொலா அலி காமேனி, "வரலாற்றுத் தவறொன்றை ஐ.அமெரிக்கா செய்துவிட்டது. இது, ஐ.அமெரிக்காவை நம்ப ஈரானிய மக்கள் விரும்பாமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டே ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விபரீதமான முடிவாகும்” எனவும் சீற்றம் வெளியிட்டிருந்தார். மறுமுனையில் ட்ரம்ப் நிர்வாகம், ஈரானிய மக்களுக்கு அதன் ஆதரவை ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக ஒரு புரட்சி ஏற்படுமளவுக்கு தெரிவிக்கும்போதிலும், ​​மறுபுறத்தில், ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் வியாபாரம் சார்ந்த தடைகளையும் விதிக்கின்றமை, ஐ.அமெரிக்காவை, ஈரானோ ஈரான் மக்களோ ஏற்றுக்கொள்ளாத தன்மையையேக் காட்டுகின்ற இந்நிலை, இரண்டுவிதமாக சர்வதேச அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

ஒன்று, ஐ.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான அதிகார மையம் தொடர்பான தாக்கம் - அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த வல்லரசாக உருமாறுதல் - இது ஐ.அமெரிக்காவின் சர்வதேச வல்லரசாண்மையை உலகில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிடுவதுடன், ஐ.அமெரிக்காவின் எல்லைக்கப்பாலான அதிகார வரம்பை இது குறுக்குவதுடன், சர்வதேச அரசியலில் தனிநாடு ஒன்று தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்துவதைச் சிதைக்கும். ஆதலால், குறித்த ஒப்பந்தத்தில் சீனாவும் ரஷ்யாவும் தொடர்ச்சியாகவே பங்காளராக இருக்க முனையும் இவ்வேளையில், ஐரோப்பிய ஒன்றியம், ஓர் இணைந்த வல்லரசாக உருமாறவும், ஐ.அமெரிக்காவின் தலைமைத்துவத்தைத் தாண்டி - ஐ.அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் போக்கில் சர்வதேச அரசியலில் வலுவேறாக்கத்தை ஏற்படுத்த குறித்த அணுகுமுறை உதவும் எனக் கொள்ளமுடியும். இதன் பிரகாரமே, இத்தாலி உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ஏற்கனவேயே ஐ.அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல், தமக்கான சொந்த அணுகுமுறைகளை ஈரானுடன் மேற்கொள்வதற்கு தெஹ்ரான் - ரோம் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. இது போன்ற ஒப்பந்தங்களை, குறிப்பாக விமான போக்குவரத்து, எண்ணெய் மற்றும் இதர வியாபாரங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் மேற்கொள்வதிலேயே, பிரான்ஸ், ஜேர்மனிய அரசாங்கங்கள் இப்போது ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை, "ஐ.அமெரிக்க ஆதிக்கத்துக்கு அப்பாலான" போக்கையே காட்டுகின்றது.

இரண்டாவது விடயமான சர்வதேச அரசியல் மட்டத் தாக்கமானது, ஈரானுடன் இணைந்த பிராந்திய அரசியல் சார்ந்ததாகும். பிராந்தியத்தைப் பொறுத்தவரை, லெபனான் தேர்தலைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்கா தனது இஸ்‌ரேலியத் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு நகர்த்துதல், ஈராக்கிய பொதுத்தேர்தல், காஸா படுகொலைக்கு எதிரான வருடார்ந்த எழுச்சி ஆகியன ஒரு புறம் சர்வதேச அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அல்லது குறித்த ஐ.அமெரிக்காவின் முடிவால் தாக்கங்களை எதிர்நோக்கக்கூடிய விடயங்களாகக் கொள்ளப்பட, மறுபுறத்தில் இராணுவ, புவியியல் சார் மூலோபாய நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஈரானுடனான எதிப்பு நாடுகளாக இஸ்‌ரேல், சவூதி ஆகியவற்றுடன் ஜோர்டான், பஹ்ரேன், குவைத் என்பன ஒரு புறமாகவும், ஈரானுடனான நட்பு நாடுகளான, சிரியா, ஈராக் என்பன மறுபுறமாகவும் பிராந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும்.

ஈராக்கைப் பொறுத்தவரை, தற்போதைய பிரதமர் அபாடியின் அரசாங்கத்தை, ஐ.அமெரிக்கா ஆதரிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் அழிவுக்குப் பின்னரான இப்பொதுத்தேர்தலில், ஈராக்கிய சுன்னி, ஷியா மக்களின் ஒன்றுபட்ட ஆதரவு, இப்போதைய பிரதமருக்கு தொடர்ச்சியாக இருந்திருந்தபோதிலும், குறித்த ஐ.அமெரிக்காவின் வெளியேற்றமானது, ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள ஷியா முஸ்லிம்களின் ஆதரவு, பிரதமரிடத்தில் குறைவடையச் செய்யும். இது, ஈராக்கில் உள்நாட்டு அரசியல் நெருக்குதலை கொண்டுவரும்.

மேலும், சிரியாவைப் பொறுத்தவரை அதன் அரசாங்கம், ஈரானின் இராணுவ உதவியை தொடர்ச்சியாகப் பெற்றுவருகிறது. குறித்த அரசாங்கத்துக்கு எதிரான போராளிகள், மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்பவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள சிரியாவின் அரசாங்கம், ஈரான் இராணுவத்துடன் இணைந்தே இராணுவக் கட்டமைப்புகளை விருத்திசெய்து வருகின்றது. சிரியாவில் ஈரானிய இராணுவம் நிலைகொண்டுள்ளமை, இஸ்‌ரேலின் நீண்டகால புவிசார் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்பது, ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் நன்றாகவே தெரியும் என்பதுடன், இதன் பின்னணியிலேயே, ஈரானிய இராணுவம், இஸ்‌ரேல் எல்லைக்குள் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது என இஸ்‌ரேல் குற்றஞ்சாட்டியமை பார்க்கப்பட வேண்டியதாகும். இந்நிலையில், குறித்த முரண்பாடான நிலைகள் மோசமடையுமாயின், ஒரு பிராந்திய யுத்தத்துக்கே அவை வழிவகுக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X