Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2017 மே 16 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- காரை துர்க்கா
உலகில் பிறந்த சகல ஜீவராசிகளும் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் கௌரவமாகவும் வாழ விரும்புகின்றன.
அவர்கள் விரும்பிய வாழ்வு கிடைக்கத் தவறும் பட்சத்தில், அதனைப் பெற்றுக்கொள்ளப் போராடுகின்றன; அதற்காக என்ன விலையையும் கொடுக்கவும் முயல்கின்றன; தயாராகின்றன. இவை நீதியும் நியாயமும் கூட.
அந்த வகையில், ஈழத் தமிழ் மக்களது சுதந்திர வாழ்வுக்கான தேவையும் தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது. கொலனித்துவ ஆட்சியில் கட்டுண்டு கிடந்த முழு இலங்கைத் தீவுக்கும் 1948 இல் ஆங்கிலேயரால் கத்தி இன்றி இரத்தம் இன்றி விடுதலை கொடுக்கப்பட்டது.
ஆனால், இந்த நிமிடம் வரை சிங்கள இனத்திடம் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் துர்ப்பாக்கியமும் பரிதாபமும் கூடிய நிலை தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் இனமாக இருந்தாலென்ன சிங்கள இனமாக இருந்தாலென்ன ஓர் இலங்கையனாக ஒருமித்து வாழ்வோம் என அன்றைய தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் உயர்ந்த எண்ணத்துடன் கருத, சிங்கள ஆட்சியாளர்களோ இலங்கையை தனியான, முழுமையான சிங்கள பௌத்த நாடாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
அவர்களால் ஒரு சில வருடங்கள் கூட பொறுமை பேண முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடமே (1949) கல்லோயா விவசாய அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்கும் பாரிய திட்டம் தொடங்கப்பட்டது.
அடுத்த எட்டு வருடத்துக்குள், அதாவது 1956 இல் அன்றைய ஆட்சியாளர்களால் தனி சிங்கள சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. அனைவருக்கும் கட்டாயமாக சிங்களம் கற்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டது.இவ்வாறான நிலையில் நாட்டில் ஓர் அசாதாரண நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து, அப்போது பிரதமராக ஆட்சி புரிந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவுக்கும் தந்தை செல்வாவுக்கும் இடையிலான, பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதுவே இலங்கைத் தீவில் சிங்கள, தமிழ் பிணக்குக்கு தீர்வு காணும் பொருட்டு எழுதப்பட்ட முதலாவது அரசியல் ஒப்பந்தம் என்று கூடக் கூறலாம்.
இவ்வாறான ஓர் ஒப்பந்தம் சீரான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு அமுலுக்கு வந்திருப்பின் அழிவுகளைத் தடுத்திருக்கலாம். ஆனால் நடந்ததோ கறை படிந்த வரலாறாகி விட்டது. ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டது. பெரும் கலவரம் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்து சரியாக பத்து வருடத்துக்குள் (1958) இலங்கை மாதா தனது முதலாவது இனக் கலவரத்தைக் கண்டாள். தமிழ் மக்களது சொத்துகள் தீயில் சங்கமமானது. தமிழ் மக்களை தங்களது சொந்த தேசத்துக்கு (வடக்கு, கிழக்கு) சிங்கள இனவாதிகள் விரட்டி விட்டனர். முதல் முறையாக அகதி என்ற அவதி அந்தஸ்து தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பெற்றது.
இவற்றை அடுத்து, தமிழ் மக்கள் தமது இரு கண்கள் எனக் கருதிய தாய்மண் மற்றும் தாய்மொழி இரண்டுக்கும் ஆபத்து வருவதை உணர்ந்தனர். அதனை தடுத்து நிறுத்திக் காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பை ஏற்றனர். தந்தை செல்வா தலைமையில் போராட்டக் களங்கள் திறக்கப்பட்டன.
சுதந்திரமும் அமைதியும் ஒன்றுடன் ஒன்று நேர்க்கணிய தொடர்பு கொண்டவை. தமிழ் மக்கள் சுதந்திரத்தை இழந்தமையால் அமைதியையும் இழந்தனர். இதனால் ஒட்டு மொத்த நாட்டினது அமைதியும் கேள்விக் குறியானது.
ஆனாலும் தமிழ் மக்களது அஹிம்சை ரீதியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் சிங்கள அரசுகள் கொச்சைப்படுத்தினர்; ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றை அவமதிப்பு செய்தன. தங்களது ஆயுத படை பலத்தால் அடக்க முற்பட்டன. இவ்வாறாக 1961 இல் தந்தை செல்வா தலைமையில் துளிர் விட்ட அஹிம்சை வழிப் போராட்டங்கள் அவர் இறக்கும் வரை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தன. அனைத்து விதமான அஹிம்சை போராட்டங்களும் ஆட்சியாளர்களால் ஆயுத முனையில் அசுரத்தனமாக அடக்கப்பட்டன.
அதனையடுத்து, ஆயுத முனையில் அடக்க முற்படும் அரசாங்கத்தின் முயற்சியை, அதே வழியில் ஆயுதம் மூலமே சந்திக்க முடிந்தால் மட்டுமே சுதந்திரம் சாத்தியம் என அக்காலத்தில் இளைஞர்களால் உணரப்பட்டது. ஆகவே எல்லா விதமான மாற்று வழிகளும் அடைக்கப்பட்டு வேறு எந்த விதமான வழியும் இன்றி, ஒரே ஒரு விடுதலை மார்க்கமாக அணைக்கப்பட்டதே ஆயுதம்.
ஆகவே ஈழத்தில் தமிழ் இனம் பறிக்கப்பட்ட தனது இறைமையை மீளப் பெற, அழிவை ஆயுதங்கள் தரும் என நன்கு அறிந்தும் கைகள் பற்றிக் கொண்டது. ஆனால், தமிழ் மக்களது இவ்வாறான போராட்டங்களைத் தேசத் துரோகம் என்றும் பயங்கரவாதம் என்றும் கூறி ஆட்சியாளர்கள் மேலும் மேலும் பல சட்டங்களை உருவாக்கி எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றினர்.
தமிழ் மக்களது உரிமைகளையும் அபிலாஷைகளையும் ஆரம்பத்திலேயே அங்கிகரித்திருப்பின் இவ்வாறான நிலை தோன்றியிருக்காது என்ற உயர் எண்ணம் அன்றைய ஆட்சியாளர்கள் மனதில் தோன்றவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவ்வளவு பெரிய விலையைக் கொடுத்த பின்பும் இன்றைய ஆட்சியாளர்கள் மனதிலும் மன மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதும் வினாக்குறியே. ஏனெனில், இலங்கையில் இனப் பிரச்சினை சிங்கள ஆட்சியாளர்களின் ஆட்சிக் கதிரை பிடிக்கும் கருவி என்ற நிலை மறையவில்லை.
இவ்வாறாக ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் மே மாதம் 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனம் கண்டது.
இந்த யுத்தத்தில் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் உயிர், உறையுள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களது காணி அபகரிக்கப்பட்டது. அவை தற்போது படையினரின் வசிப்பிடமாக உருமாறியுள்ளது.
யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிரச்சினைகள் என அனைத்துச் சிக்கல்களுக்கும் நிலையான தீர்வு இன்றி வெறும் கண் துடைப்பு நாடகங்களில் எட்டு வருடங்களைக் கடந்து விட்டது.
இலங்கை அரசு, தமிழ் மக்களது தேவைகளைத் தானாக நன்கு உணர்ந்து, ஆத்ம ரீதியாகத் தனது கடமையாக நிறைவேற்றி இருப்பின் வெற்றி கண்டிருக்கலாம். ஆனால் அவர்களோ சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வெறும் கடமைக்குச் செயல் ஆற்றுகின்றனர்.
தற்போது தமிழ் மக்கள் அவர்களது வாழ்வு தொடர்பில் எல்லா விடயங்களுக்கும் போராட வேண்டிய அவல நிலையில் உள்ளனர். போர் முடிவுற்று எட்டு வருடங்கள் சென்ற போதும் தமிழ் மக்களது வீட்டு திட்ட பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
தெற்கில் சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்பட்டன. தற்போது மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தவர்களின் வாழ்வை நிமிர்த்த நிரந்தர கல் வீடு மூன்று மாதங்களுக்குள் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளார்.
ஆனால், வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தமில்லாத பொருத்து வீடா அல்லது நிரந்தர கல் வீடா என பட்டிமன்றம் நடத்துகின்றனர்.
இந்துக்களின் முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயிலுக்கும் தற்போது அங்கு கட்டப்பட்ட பௌத்த விகாரைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் 67 அடி உயரமான புத்தர் சிலை 78 மில்லியன் அதாவது 780 இலட்சம் ரூபாய் செலவில் கட்ட ஏற்பாடுகள் முன்னர் செய்யப்பட்டன. அது பின்னர் தமிழ் மக்களின் வேண்டுகோளை அடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த வெசாக் தினம் தொடக்கம் மீளப் கட்டுமானங்கள் கடற்படையினரால் தொடங்கப்பட்டுள்ளன.
அம்பாறை, இறக்காமம் மாயக்கல்லி மலையில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றுமாறு கோரி போராடுகையில் நயினாதீவில் புத்தர் சிலை நிறுவுதல்; மேலும் நயினாதீவில் போராடுகையில் திருகோணமலையில் நிறுவுதல் என இவர்களின் தாச்சி மறிக்கும் விளையாட்டில் அகப்பட்டுள்ளார் ஆண்டவன்.
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் மே மாதம் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவது உலகறிந்த செய்தி. வடக்கு,கிழக்கில் ஒவ்வொரு தமிழ் மக்கள் வீட்டு வாசலிலும் ஒப்பாரி ஓல சத்தம் இன்னமும் கேட்கின்றது.
இந்நிலையில் கொழும்பு மத்திய சுகாதார அமைச்சு அதிரடியாக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளை அவசர தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக அறிவித்துள்ளது. அதனை சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளது.
இவை டெங்கு ஒழிப்பு என்ற போர்வையில் படையினர் மூலம் சோதனையிடும் நடவடிக்கையே. இதன் மூலம் படையினர் நுளம்பு பெருகும் இடங்களை அவதானிக்காமல் வீட்டில் அழுது புரண்டு அஞ்சலி செய்யும் அப்பாவிகளை அவதானிக்கும் அநாகரிக செயலே எனலாம்.
(டெங்கு ஒழிப்பு தினத்தை மே மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் செயற்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு பணித்துள்ளது)
பல வருட சிக்கலை ஓர் இரவுக்குள் தீர்க்க முடியாது எனச் சில சிங்கள அரசியல்வாதிகள் அடிக்கடி கூறி வருகின்றனர். மறுபுறத்தே மே மாதம் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை கிட்டத்தட்ட மூவாயிரம் இரவுகள் மறைந்து விட்டன. தமிழ் மக்களது சில பிரச்சினைகளாவது மறைந்தனவா?
இவ்வாறே அன்று தமிழ் மக்கள் சந்தித்த அழிவுகளும் அட்டூழியங்களும் இன்று வரை தொடர்கின்றன. சிறு விடயத்துக்குக் கூட போராடியே பெற வேண்டிய நிலையில் வாழும் வரை அல்லது இறக்கும் வரை போராட வேண்டிய இக்கட்டில் தமிழ் இனம், ஆலயம் ஆலயமாக பிரார்த்தனைகளையும் நேர்த்திக்கடன்களையும் வைத்துக்கொண்டு தொடர்கின்றது.
41 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
5 hours ago