2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

பொருளாதார நெருக்கடிகள், எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களினால் அனுரகுமார அரசு ‘ஆயுசு நூறு நித்தம் கண்டம்’ என்ற வகையில் ஆட்சியை நகர்த்துகின்ற நிலையில், இயற்கையும் தன் பங்கிற்கு   ‘டிட்வா’ புயலாக இலங்கையர்களை மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் புரட்டிப்போட்டு மரண அடி கொடுத்துள்ளது.

‘டிட்வா’ புயலும் அதன் விளைவான பெரு மழையும் இலங்கையில் ஆடிய கோரத் தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளிலிருந்து நாடும் மக்கள்  மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசும் தற்போதைக்கு மீண்டெழக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.

இலங்கையில் பதிவான வானிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு வானிலை சார் அனர்த்தமாக ‘டிட்வா’ புயல் பதிவாகியுள்ளது. 2004இல் சுனாமி ஏற்படுத்திய பொருளாதார ரீதியான அழிவை  விடவும்  பல மடங்கு அதிகமான பொருளாதார அழிவை ஏற்படுத்தி  அனுரகுமார  ஆட்சியாளர்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

‘டிட்வா’ புயல், மழையால் முழு நாடும்  வெள்ளத்தில் மூழ்கியது, மலைகள் சரிந்தன, ஆறுகள், அணைக்கட்டுகள், குளங்கள் உடைப்பெடுத்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலங்கள், வீடுகள், வீதிகள், கட்டிடங்கள், வர்த்தக நிலையங்கள் தகர்ந்தன, பாரிய மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன, பல மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டன, இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்  வெள்ளத்தில்  மூழ்கின.

250க்கும் அதிகமான வீதிகள் பாரிய அழிவுகளைச் சந்தித்தன. 15 பாலங்கள் வரை அழிந்துள்ளன. பல்லாயிரம் தொழில்கள் அழிக்கப்பட்டன. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தழிந்து போயின.

இந்த ‘டிட்வா’ புயலின்  கோரத் தாண்டவத்தினால் 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரையில்  650 வரையிலான உயிரிழப்புகளும் 200க்கு மேற்பட்டவர்கள்  காணாமல்போன சம்பவங்களும் பதிவாகின. நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி  ரூபாய் சொத்தழிவுகளும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. 

‘டிட்வா’ புயல் வெள்ளம் ஆகியவற்றின்  இந்தக் கோரத் தாண்டவங்களினால் நாடு எதிர்கொள்ள இருக்கும் நிலைமை  மிகவும் கடினமானது என்றால், அனுரகுமார அரசு எதிர்கொள்ளப்போகும் அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகள், சவால்கள் மிகப் பயங்கரமானதாக இருக்கப் போகின்றன.  

இலங்கைக்கு இயற்கை ஏற்படுத்திய இந்தப் பேரழிவை, அதன்  விளைவுகளை, அந்தப் பேரழிவிலிருந்து மீண்டெழும் சவாலை ஒரு புதிய அரசாங்கமாக, அனுபவமற்ற அமைச்சர்களைக் கொண்டவர்களாக, சிவப்பு சட்டை அரசியல்வாதிகளாக,

சீன சார்பு கொள்கையுடையவர்களாக, மேற்குலக நாடுகளினால் வேண்டத் தகாதவர்களாக பார்க்கப்படுபவர்களாக, நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளினால் மிகவும் வெறுக்கப்படுபவர்களாக, ஜே.வி.பி. கட்சித் தலைமை  எடுக்கும் முடிவையே அரசாங்கத்தின் முடிவாக அறிவிக்கும் நிலையில்  இருக்கும் இந்த அனுரகுமார தலைமையிலான ஆட்சியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இன்றுள்ள மிகப்பெரும் கேள்வி.

இந்தப்  பேரழிவு நடந்துள்ள தருணத்தில், “நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது.

பாரிய அனர்த்தத்தை  எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும்’’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த காலத்திலே சுனாமிக்குப் பின்னர் அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து ‘சுனாமி பொதுக் கட்டமைப்பு’ ஒன்றை அமைத்து அதன் மூலம்  சுனாமியால் பேரழிவைச் சந்தித்த வடக்கு, கிழக்கு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முற்பட்டபோது, இதே ஜே.வி.பி. தான் அதனை அனுமதிக்கக் கூடாது என்று பாராளுமன்றத்திற்குள் போராட்டம் செய்ததுடன்,

நீதிமன்றத்திற்குச் சென்று சுனாமி பொதுக் கட்டமைப்பை  உடைத்தெறிந்தது. அதே ஜே.வி.பி. தான் இன்று ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவைச் சந்தித்த  மக்களுக்கு உதவ எதிர்க்கட்சிகள். பொது அமைப்புக்கள்  ஒத்துழைக்க வேண்டுமென அழைப்பு விடுகின்றது.  

அனுரகுமார அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அமைச்சுப் பொறுப்புக்களில் இருப்பவர்களில் 90 வீதமானோர் புது முகங்கள். எந்த  அரசியல் அனுபவமும்  அரசியல் அறிவும் அற்றவர்கள். ஜே.வி.பி.யின் தலைமையகமான ‘பெலவத்தை’ அலுவலகம் சொல்வதை  மட்டும் செய்பவர்கள்.

தமது சம்பளத்தையே கட்சிக்கு தானம் செய்பவர்கள் இவர்கள் மூளையை நம்புவதில்லை. தமது வாய் பலத்தையே (ஆவேசப் பேச்சு-பிரசாரம்) நம்புகின்றவர்கள். சர்வதேச நாடுகளின் நன்மதிப்பைப் பெறாதவர்கள்.

இவ்வாறானவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீட்டெடுப்பார்கள்? ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவை எவ்வாறு  சீர் செய்வார்கள்? என்பதுவே பொதுவாகப்  பல தரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ள கேள்வி.

ஆனால், எப்போதும் போலவே வாயால் வடை சுடுபவர்களான அனுரகுமார அரசினர் இந்த விடயத்திலும் எதிர்க்கட்சியினரைக் கடுமையாக  விமர்சிப்பதுடன், இயற்கை பேரழிவால் பொருளாதாரத்தில் மூழ்கிய நாட்டை  மிக சுலபமாக மீட்டெடுத்து விடுவோம் என்ற கணக்கில் வாய் சவடால்களை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், ஏற்கெனவே பொருளாதார ரீதியில் படுபாதாளத்திலிருக்கும் இலங்கையை இந்த ‘டிட்வா’ பேரழிவு இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளியுள்ள நிலையில், அதிலிருந்து விரைவில் மேலெழுந்து வருவதென்பது கற்பனைக் கதையாக 
மட்டுமே இருக்க முடியும்.

இவ்வாறான நிலையில்தான் ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில், “அவசர அனர்த்த நிலைமை முடிவுக்கு வந்த நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்து மீளக்குடியேறுவதற்கு ஏற்றதாக மாற்ற ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.

அந்த தொகையை அனைவருக்கும் வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட வீடுகளில் மீளக் குடியேறுவதற்கான அத்தியாவசிய சமையலறை உபகரணங்களை வாங்குவதற்கு, உரிமையாளரைப் பொருட்படுத்தாமல், ஒரு முறை வழங்கப்படும் மானியமாக ஒரு வீட்டிற்கு ரூ.50,000வும் நாங்கள் வழங்குகிறோம்.

அத்துடன், மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் இருக்கும் குடும்பங்களுக்கு வீடு திரும்ப 3 மாத காலத்திற்கு ரூ.25,000 வழங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதை 6 மாதங்களுக்கு நீடிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

அதன் பின்னர், டிசெம்பர், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாடகை வீட்டிற்குச் செல்வதற்காக மாதாந்தம் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும். இது 3 மாதங்களுக்கு வழங்கப்படும். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு 1,50,000 உதவித் தொகை வழங்கப்படும்.

சுமார் 1,60,000 ஹெக்டெயார் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கறி விளைச்சலுக்கு ஹெக்டெயாருக்கு ரூ.2 இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும். பேரிடரால் பாதிக்கப்பட்ட கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடை வளர்ப்புப் பண்ணையையும் மீண்டும் தொடங்க தலா ரூ.2 இலட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகமும், தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ரூ.200,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் முழுமையாகச் சேதமடைந்தால், அந்த படகுகள் ஒவ்வொன்றிற்கும் 4 இலட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூ.15,000 உதவித்தொகை வழங்கவும், மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ.10,000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தின் தாக்கத்தால் சேதமடைந்த வர்த்தகக் கட்டிடங்களுக்கு ஒரு அலகுக்கு அதிகபட்சமாக 50 இலட்சம் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அனர்த்தத்தின் தாக்கத்தால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட 50 இலட்சம் வழங்கப்படும். காணி இல்லையென்றால், அரச நிலம் வழங்கப்படும்.

காணி வழங்கக் காணி இல்லையென்றால், வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்குக் கூடுதலாக, காணியைப் பெற 50 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். அனர்த்தத்தின் தாக்கத்தால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளை புனர்நிரமாணம் செய்ய அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வழங்க எதிர்பார்க்கிறோம்.  ரூ.10, 15, 20, 25 இலட்சம் என  4 பிரிவுகளின் கீழ் அந்தப் பணத்தை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்காக அவர்களின் உறவினர்களுக்கு ரூ.10 இலட்சம் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்” என உறுதிமொழிகளாக  அள்ளி விட்டுள்ளார்.

ஆனால், இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அதுவும் பாதிக்கப்பட்ட மக்களையோ சரியாக இனம் கண்டு, ஊழல் மோசடியற்ற வகையில் நிறைவேற்றுவதென்பது  அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும். 

இயற்கைப் பேரழிவைச் சந்தித்துள்ள மக்களை தைரியப்படுத்த, அவர்கள் தமது அரசின் மீது நம்பிக்கை வைக்க அனுரகுமார அரசு அள்ளி விட்டுள்ள இந்த உறுதிமொழிகள் கூட மைத்திரி-ரணில் நல்லாட்சிக்கு முடிவுகட்டிய  ‘உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்’ போல  கோட்டபாய ராஜபக்‌ஷ அரசுக்கு முடிவு கட்டிய  ‘கொரோனா’ போல அனுரகுமார ஆட்சிக்கு இந்த ‘டிட்வா’ இயற்கைப்  பேரழிவும் அரசு வழங்கியுள்ள நிவாரண வாக்குறுதிகளும் முடிவு கட்டினாலும்  ஆச்சரியப்பட முடியாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X