Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 29 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
'புகையிலைப் பொருட்கள் தொடர்பான தொழில் துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்'
புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றது.
அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'புகையிலை தொழில் துறை தலையீடுகளை வெளிக்கொணரும்' என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது.
புகைத்தல் பாவனையினால் அகால மரணம் அடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடு செய்வதற்காக இளைஞர்களையும் சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும் சந்தைப்படுத்தல் நுட்ப முறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது.
இவை இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் பாவனையை இயல்பாக்குதல் மாத்திரமின்றி பொது சுகாதாரக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
புகையிலை நிறுவனத்தால் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சில தலையீடுகள் கீழ்வருமாறு
- சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் புகையிலை பொருட்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காண்பித்தல்.
- இளைஞர்கள் ஒன்று கூடும் இடங்களில் மற்றும் நிகழ்வுகளில் புகையிலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சில பிரமல்யமானவர்களை சிகரெட் புகைத்தலில் ஈடுபட வைப்பது அதனூடு புகைத்தல் பாவனையை இளைஞர்கள் மத்தியில் இயல்பாக்குவதற்கு முயற்சித்தல்.
- இளம் சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு சுவைகளில் இலத்திரனியல் சிகரட்டுகளை அறிமுகம் செய்தல்.
- 'சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை தடை' எனும் வாசகத்தை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி சிறுவர்களுக்கு புகைத்தல் மீதான குதூகலத்தை ஏற்படுத்துதல்.
தற்போது இளைஞர்கள் புகையிலை பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதை தவிர்ப்பதற்காகவே தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பல்வேறு வகையான நுட்ப முறைகளை புகையிலை நிறுவனம் கையாளுகின்ற மைக் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 'பாதுகாப்பான மாற்றீடு',' பாதிப்புகள் குறைவானது','சமூகத்திற்கு ஏற்ற மற்றும் 'நாகரீகமானது என இலத்திரனியல் சிகரட்டுகளை விளம்பரம் செய்தல் தற்போது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சூட்சமமான விளம்பரமாகும்.
ஆனால் அதில் எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்தும் கருவியாக இலத்திரனியல் சிகரெட் அறிமுகப்படுத்தினாலும் அவற்றை பாவனை செய்வோர் இலத்திரனியல் சிகரெட்டுடன் இணைத்து சிகரெட் துண்டுகளையும் புகைப்பதற்கு ஆரம்பிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலத்திரனியல் சிகரெட்டை விளம்பரப்படுத்தும் இந்த நுட்ப முறைகள் மிகவும் தவறான வழிகாட்டல்களை வழங்குவதோடு ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.
எமது நாட்டில் புகைத்தல் பாவனையினால் பொது சுகாதாரம் பொருளாதாரம் மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின்படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலால் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
(1.5 மில்லியன் பேர்). எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையால் எமது சாட்டில் சுமார் 20000 பேர் அகால மரணமடைகின்றனர் இந்த நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது.
மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. எமது நாட்டில் மாத்திரம் தினமும் ரூபா மில்லியன் 520 எனும் தொகை புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது தனிநபர் குடும்பம் சமூகம் என அனைத்து தரப்பினரினதும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகின்ற நிலைமையாகும்.
புகைத்தலினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளான கல்வி உணவு உறையுள் போன்றவற்றை சரியான முறையில் தீர்த்துக் கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
அத்தோடு கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும்.
(The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019).
தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகெரட் வடிப்பான்களும் (cigarette filters ) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன.
2003 ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன.
எனினும் ஆதிக்கம் வாய்ந்த புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளால் நிறுவப்பட்ட கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வது சவாலாகக் காணப்படுகிறது.
குறிப்பாக எமது நாட்டில் வரிக்கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன. இவ்வரிக்கொள்கை சரியான முறையில் அமையாதமையின் காரணமாக சிகரட் மீது வரி அதிகரிக்கப்பட்டாலும் புகையிலை தொழில்துறை விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தை ஈட்டி வருகின்றது.
அதிகளவு விற்பனையாகும் சிகெரட் வகையின் மீதான கலால் வரி ஒரு சிகெரட்டிற்கு ரூ. 4.51 அதிகரித்த போது,சிகெரட் நிறுவனம் ஒரு சிகெரட்டிற்கான சில்லறை விலையை 10 ரூபாவாக உயர்த்தி,இலாப வேறுபாட்டில் கணிசமான பகுதியைப் பெற்றது. இலங்கையின் தவறான சிகெரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகெரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது.
அவ் விகிதாசாரம்,தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிகெரட் விற்பனை 54வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், அதே காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனத்தின் (CTC) வரிக்குப் பின்னரானஇலாபம் 179வீதத்தால் அதிகரித்துள்ளது, இது ஒரு நாட்டில் நிலவக்கூடிய மோசமான வரிக் கொள்கையினால் ஏற்படுகின்ற விளைவாகும். ஆகவே இந்நிலைமையை மிகவும் விரைவாக மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
இச்சவால்களை வெற்றிக்கொள்வதற்காக கீழ்காணும் பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது.
- தனி சிகெரட் விற்பனையை தடை செய்தல்
- எமது நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறையை நிறுவுவதற்காக 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்
- முறையான மற்றும் அறிவியல் பூர்வமாக சிகெரட் வரி விதிப்புக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்
- கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்தல்
- புகையிலை பொருட்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் புகையிலைத் தொழில் துறையால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிலையான செயற்றிட்டமொன்றை பாடசாலை மட்டங்களில் அமுல்படுத்துதல்.
- சந்தையில் காணப்படுகின்ற தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சிகெரட்டுக்களையும் பறிமுதல் செய்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க NATA சட்டத்தின் 2016 திருத்தத்தில் கீழ் காணப்படும் சட்டங்கள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளை அறிமுகப்படுத்துதல்
- வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்துதல்
- சிகெரட் வடிகட்டிகளைத் (cigarette filters) தடை செய்தல்
- இணையம் வழியாக இடம்பெறுகின்ற புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்
- NATA சட்டத்தின் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
புகையிலைத் தொழில் துறையின் தலையீடுகளிலிருந்து இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம், சமூக நிறுவனங்கள், சுகாதார திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.
எமது நாட்டில் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக,புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தல், பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல், புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
பொது மக்கள் புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை அறிந்து கொண்டு அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கான வழிப்புணர்வையும், வலுப்படுத்தல்களையும் ஏற்படுத்த வேண்டும். இறுதியாக புகையிலை பாவனையால் தனி நபரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து விதமான விளைவகளுக்கும் புகையிலை நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .