Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 09 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
அரிசி விலை உயர்வில் அரசியல் இல்லை என்று யாராவது சொல்லமுடியுமா, அவ்வாறே, உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது உலக அரசியலல்ல எனச் சொல்லமுடியாது. உலகப் பொருளாதார முடிவுகள் பல பொருளாதாரத் தேவைகட்காகவல்லாது,
அப்பொருளாதாரஞ் சார்ந்த அரசியற் காரணங்கட்காகவே எடுக்கப்படுகின்றன. உலக அரசியலே பொருளாதாரத்தைத் தீர்மானிக்கிறது. எண்ணெய் விலை தொட்டு உணவுப் பொருட்கள் வரை யாவும் அரசியல் நோக்கங் கருதியவை. பொருட்களின் கிடைக்குந் தன்மையைத் தீர்மானிப்பது உற்பத்தியல்ல. அதனாலேயே பல கோடிக்கணக்கானோர் பட்டினியில் கிடக்கையில் தொன்கணக்கான கோதுமை கடலில் கொட்டப்படுகிறது.
சில வாரங்கட்கு முன், ஜேர்மனியின் மிகப்பெரிய வங்கியான Deutsche Bank ஏனைய மேற்குலக வங்கிகளுடனும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடனும் இணைந்து தங்கத்தை மதிப்பிறக்கக் கூட்டுச்சதி செய்ததை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டது. உலகின் முன்னணி வங்கிகளான HSBC, Barclays, UBS போன்ற பிரபல வங்கிகளும் சதியிற் பெயரிடப்பட்டன. இது தங்கத்தை மதிப்பிறக்குவதனூடு அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து, அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட உலகின் முக்கிய அந்நியச் செலாவணிகளின் முக்கியத்துவத்தைத் தக்கவைக்கும் முயற்சியைக் கோடு காட்டியுள்ளது. தங்கத்தின் மீது ஏன் இவ்வளவு அக்கறை, தங்கம் இன்று உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் ஒன்றாகிறது. இம் மாற்றம் திடீரென நடக்கவில்லை.
2008ஆம் ஆண்டு உலகை உலுக்கிய பொருளாதார நெருக்கடி, இன்னமும் முற்றாக முடியவில்லை. நச்சுச் சுழல் போல ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கும் கண்டம் விட்டுக் கண்டத்துக்கும் எனப் பரவி, இன்று கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தை நெருங்குகையிலும் உலக மக்கள் அதன் தீய விளைவுகளை எதிர்நோக்குகின்றனர். இந்நெருக்கடி அரசியல் சார்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இலாபம் குறைகையில் பல்தேசியக் கம்பெனிகளும் பெருநிறுவனங்களும் இலாபத்துக்கான புதிய வழிகளைத் தேடுகின்றன. அரசாங்கங்கள் அதை வசதிப்படுத்தக் கடப்பட்டுள்ளன. எனவே, போர்கள், ஆக்கிரமிப்புகள், ஆட்சிக்கவிழ்ப்புகள் எனப் பலவழிகளில் நாடுகளின் வளங்களைச் சுரண்டும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அரசியல் அறம் பிறழ்ந்து முற்றிலும் இலாபஞ் சார்ந்ததாகிறது.
தங்கம், இன்று முக்கிய பேசுபொருளாயுள்ளது. தங்கத்துக்கான கேள்வி இவ்வாண்டு முன்னில்லாதளவு உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளன. உலகின் அதி பெறுமதியான சேமிப்பாகத் தங்கம் கருதப்படுகிறது. ஐந்து ஆண்டுகட்கு முன் தங்கத்தின் முக்கியமும் அதன் தேவையும் முடிந்து விட்டன, தங்கம் இனி உலகின் முக்கியமான ஒரு சொத்தாகக் கருதப்படாது என உலகின் பெரும் வங்கிகள் கட்டியங்கூறித் தங்கத்தின் சாவை உறுதிகூறிச் சமாதி கட்டின. ஆனால், இன்று அதன் மீளுயிர்ப்பும் அதற்கப்பால் உலகப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் அது கொண்டுள்ள மிக முக்கிய இடமும் வலுவான ஒரு செய்தியை மீள எடுத்துரைக்கின்றன. தங்கம் உலக நாடுகளின் நாணயங்கள் போல கடதாசியல்ல. அது மிக விசேடமானது. பொருளாதார முறையில் தங்கத்தின் பெறுமதியையும் நம்பகத்தையும் உலகின் எந்த நாணயமும் பெற முடியாது.
சர்வதேச நாணயங்களை மையமாகக் கொண்டுள்ள உலகப் பொருளாதாரம், இன்று நெருக்கடியிற் சிக்கித் தவிக்கிறது. அதன் முக்கிய அம்சமான சர்வதேச வர்த்தகம் பாரிய சரிவைக் கண்டுள்ளது. வேகமாகச் சரியும் எண்ணெய் விலைகளின் காரணமாகச் சிக்கலை எதிர்நோக்கும் பெட்ரோ-டொலர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடி, பருவ மாற்றங்களால் விளைந்த உற்பத்திப் பற்றாக்குறை ஆகியவற்றால் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள உலகின் பிரதான அந்நியச் செலாவணியான அமெரிக்க டொலரின் ஸ்திரமின்மை, டொலரின் சரிவால் அதனுடன் பிணைந்துள்ள ஏனைய அந்நியச் செலாவணிகளின் வீழ்ச்சி என ஒன்றோடொன்று தொடர்புடைய கவலைக்கிடமான பொருளாதார நிலை, அந்நியச் செலாவணி மீதான நம்பிக்கையை முற்றாகச் சிதைத்துள்ளது. எந்த நாட்டு நாணயமும் உறுதியாயில்லாததால், நம்பிக்கையான காப்பீட்டைத் தரும் ஒன்றை எல்லோரும் தேடுகின்றனர். இலாபம் வராவிட்டாலும் முதலுக்கு மோசம் வராமையை எல்லோரும் விரும்புகின்றார்கள். எனவே பாதுகாப்பான காப்புறுதியை வழங்கக்கூடியதும் நாணயத்துக்கு மாற்றான நம்பிக்கையான பொருளாகத் தங்கம் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்துக்கும் தங்கத்துக்குமிடையிலான உறவு மிக நீண்டது. பண்டைக் காலப் பண்டமாற்று முறையின் போதே பொருட்களை வாங்கவும் விற்கவும் வசதியான உலோகமாக வெள்ளியும் பின்னர் தங்கமும் அமைந்தன. காலப்போக்கில் தங்கத்தின் அளவை மையப்படுத்திய கொடுக்கல் வாங்கல்கள் அமைந்தன. நவீன தேச அரசுகளின் தோற்றத்தின் பின், தங்கம் பொருளாதார வலிமையின் குறிகாட்டியாயிற்று. காலப்போக்கில், குறிப்பாக 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தங்கம் அவ்வந் நாட்டு நாணயங்களுடன் பற்றிறுக்கம் பெற்றது. ஒரு நாட்டின் திறைசேரியில் உள்ள தங்கத்தின் பெறுமதிக்கு நிகராக அந்நாட்டு நாணயங்களை அடிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. தங்கமே ஒரு நாட்டின் அந்நியச் செலாவணியின் அளவு கோலாகியது. இதன் பயனாக ஒருவர் தன்னிடம் இருந்த தங்கத்தை வங்கியில் கொடுத்து அதன் பெறுமதிக்கு நிகரான குறித்த நாட்டு நாணயத்தைப் பெற முடிந்தது.
முதலாம் உலக யுத்தத்தில், பிரித்தானியாவின் இழப்புக்கள் பாரிய பொருளாதாரப் பின்னடைவை உருவாக்கின. தங்கத்துடன் பிணைந்த பிரித்தானியச் செலாவணி மூலம் தொடர்ந்தும் பிரித்தானியாவால் தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்க இயலவில்லை. போரினால் ஒருபுறம் மக்கள் மடிகையில், பிரித்தானிய அரசாங்கம் சிதையும் பொருளாதாரத்தை எவ்வாறேனுந் தக்கவைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. அதற்குத் தீர்வாக, பிரித்தானிய நாணயத்தைத் தங்கத்துடன் பிணைத்திருக்கும் முறையை 1914இல் நீக்கிய இங்கிலாந்து வங்கி, நாணயத் தாள்களை வரையற்று அச்சிட்டுப் பொருளாதாரத்தைத் தக்கவைக்க முயன்றது. இவ்வாறு, தங்கத்தைக் கொடுத்து அதற்கு நிகரான அந்நியச் செலாவணியைப் பெறும் முறையைப் பிரித்தானியா நீக்கியது. இதன் வழி, நாடுகளின் நாணயங்களைப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக்கும் பணி தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், எவரும் தங்கத்தை வைத்திருப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக 1933இல் அறிவித்தார். அதன்மூலம் அமெரிக்காவில் தனியார் கைகளில் இருந்த அனைத்துத் தங்கத்தையும் பறித்து அமெரிக்க சமஷ்டி ஒதுக்ககத்தில் (Federal Reserve) வைத்து, அமெரிக்க டொலரை முதன்மைக்குக் கொண்டுவந்தார். அப்போது, தனது நாணயத்தை உலகின் பிரதானமான நாணயமாற்றுச் செலாவணியாக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கருதியது. அதேவேளை, உலக வர்த்தகத்தின் மைய நாணயமாக அமெரிக்க டொலரை நிறுவுவதனூடு உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா எதிர்பார்த்தது.
1939இல் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் அமெரிக்காவுக்கு வாய்ப்பானது. முதலாம் உலக யுத்தத்தில் எப்பாதிப்புக்குமுட்படாத நாடும் போரின் மையமான ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில் இருந்த நாடுமென்ற வகையில், தங்கள் சேமிப்புக்களைப் பத்திரமாக வைக்க உகந்த இடமாக, அமெரிக்காவை உலக நாடுகள் கருதின. எனவே பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் சேமிப்பில் இருந்த தங்கத்தை அமெரிக்க வங்கிகளில் வைப்பில் இட்டன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகின் முக்கிய வல்லரசாக அமெரிக்காவின் தோற்றமும் உலகின் முதன்மை நாணயமாக, அமெரிக்க டொலரின் விருத்தியும் தங்கத்தின் தனிப்பெரும் இடத்தைப் புறந்தள்ளி அங்கு அமெரிக்க டொலரை இருத்தின. அதன் மூலம், அமெரிக்காவில் வைப்பில் இட்ட தங்கத்தை மீளக் கொடாது அதற்கு ஈடான அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அமெரிக்கா தனது நாணயத்தை முன்தள்ளியதன் மூலம் ஒருபுறம் தங்கத்தை உலகளாவிய ரீதியில் முக்கியமற்றதாக்கும் பணியில் இறங்கியதோடு, மறுபுறம் தங்கத்தை வாங்கிப் பதுக்கியது. சர்வதேச சந்தையில் தங்கத்தை ஒட்டுமொத்தமாக வாங்குவதன் மூலம் அதைச் சந்தையில் இருந்து அகற்றி அதன் முழு ஏகபோகத்தைக் கைப்பற்ற முனைந்தது. ஆனால், அமெரிக்காவுக்கு மாற்றுச் சக்தியாக உருவான சோவியத் யூனியனும் நட்பு நாடுகளும் அமெரிக்காவின் திட்டம் வெல்வதற்குப் பெருந் தடையாகின.
1970களில் சோவியத் யூனியனின் பொருளாதாரச் சரிவு புலனான போது, அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்சன், அமெரிக்காவில் உற்பத்தியாகும் தங்கத்தை அமெரிக்க டொலர்கட்கு வாங்கும் நடைமுறையை 1971இல் நிறுத்தினார். எனவே அமெரிக்க டொலர்களைக் கொடுத்துத் தங்கத்தை வாங்க நாடுகட்கு இயலவில்லை. அந்நடைமுறை தற்காலிகமானது என நிக்சன் அறிவித்தாலும் 45 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்நடைமுறை விலக்கப்படாது இன்றும் நடைமுறையில் உள்ளது.
தங்கத்துக்கு நிகரான பெறுமதியுடைய நாணயத்தை மத்திய வங்கிகள் அச்சிடுதல் தேவையற்றது என ஜி-7 நாடுகள் 1973இல் முடிவெடுத்தன. சர்வதேச நாணய நிதியமும் தங்கம் விஷேசமான ஒரு சரக்கல்ல. அதுவும் ஏனைய சரக்குகள் போன்றதே என அறிவித்துத் தங்கத்தின் சாவுக்குச் சாசனமெழுதியது.
இன்று உலக நாடுகள் தங்கத்தை வாங்கப் போட்டி போடுகின்றன. உலகின் முக்கிய தங்க உற்பத்தியாளராக ஏகபோகத்தைக் கொண்டிருந்த அமெரிக்காவினும் அதிகமாகத் தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகளாகச் சீனாவும் ரஷ்யாவும் அமைந்தமை தங்க விலையைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க ஏகபோகத்துக்கு முடிவுகட்டியது.
இன்று அமெரிக்க டொலர் பாதுகாப்பற்ற நாணயமாகக் கருதப்படுகிறது. எந்த உலக நாட்டு நாணயமும் உலகப் பொருளாதார அதிர்வுகளால் மோசமான நிலையை அடையலாமென எல்லோரும் அறிவர். எனவே, பாதுகாப்பான சேமிப்பு முறையாகத் தங்கம் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களில் ரஷ்யா அதிகளவான தங்கத்தை வாங்கியது. தனது தங்க இருப்பை அதிகரிப்பதாக அது வெளிப்படையாக அறிவித்துள்ளது. சீனாவும் தனது தங்க இருப்பைப் படிப்படியாக அதிகரிப்பதோடு டொலர் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து தங்கத்தை மையப்படுத்திய பொருளாதாரமாகத் தன்னைத் தரமுயர்த்துகிறது. டொலரிலிருந்து விடுபட்ட வர்த்தகத்தில் இறங்கவும் டொலரில்லாத உலகுக்கு வழிகாட்டியாகவும் அது முயல்கிறது.
ஐரோப்பாவின் பொருளாதார வல்லரசான ஜேர்மனி அமெரிக்க, பிரித்தானிய வங்கிகளில் வைப்பிலுள்ள தனது தங்கத்தை முற்றாக மீளப்பெற்று ஜேர்மனிய வங்கிகளில் முதலிடும் செயற்றிட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன் முதற்படியாகக் கடந்தாண்டு மட்டும் 120 தொன் தங்கம் மீளப்பெறப்பட்டு ஜேர்மனிய வங்கிகளில் வைப்பானதோடு 2020ஆம் ஆண்டளவில் உலகெங்கும் வைப்பிடப்பட்டுள்ள ஜேர்மனிக்குரிய 674 தொன் தங்கமும் மீள ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படும் என ஜேர்மன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று, அமெரிக்க டொலரும் தங்கமும் எதிரெதிர் திசைகளிற் பயணிக்கின்றன. பொருளாதார வல்லுனர்களிடமும் வர்த்தக ஆலோசகர்களிடமும் இன்று கேட்கப்படும் கேள்வி ஒன்றே: எனது பணத்தை நான் எங்கு பத்திரமாக வைத்திருக்கலாம்? உலகப் பொருளாதாரத்தின் சரிவும் நிதியியல் நிறுவனங்களின் தோல்வியும் மக்கள் மத்தியில் நியாயமான அச்சங்களையும் ஐயங்களையும் உருவாக்கியுள்ளன.
உலகப் பொருளாதாரத்தில் தங்கத்தின் இன்றைய புத்துயிர்ப்பு இயல்பாக நிகழவில்லை. சர்வதேச நிதி நிறுவனமோ, உலக வங்கியோ தங்கத்தின் வருகையை விரும்பவில்லை. ஆனால் நிலைமைகள் அவைக்குச் சாதகமாயில்லை.
அமெரிக்க டொலரை, உலகப் பொருளாதாரத்தின் மையத் தானத்திலிருந்து புறந்தள்ளி தனக்குரிய அவ்விடத்தை மீளப்பெறுவதை தங்கத்தின் மீள்வரவு அறிவிக்கிறது. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் டொலரிலிருந்து விடுபடும் தமது முயற்சியில் நல்லதொரு கூட்டாளியாகத் தங்கத்தை இணைக்கின்றனர்.
இருபத்தோராம் நூற்றாண்டின் நிதியியல் யுத்தத்தின் ஆயுதமாகத் தங்கம் உருப்பெறுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago