2025 மே 17, சனிக்கிழமை

உலகப் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி: புதிய போர்க்களம்

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

எல்லாப் போர்களும் போர்க்களங்களில் நடப்பதில்லை. போர்க்களங்கள் அமைதியாக இருக்கையிலும் போர்கள் நடக்கின்றன. இன்றைய உலக அரசியலில் யுத்தமில்லாத சத்தமில்லாத போர்கள் நடக்கின்றன. அவை நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

கடந்த சில வாரங்களாக உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் நிகழும்; தொடர்ச்சியான வீழ்ச்சி, புதிதாக எதையும் கூறாவிடினும் கடந்த பல வருடங்களாகத் தெரிந்தும் தெரியாமலும் தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடி புதிய கட்டத்தை எட்டியுள்ளதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

சீனா- அண்மையில் தனது நாணயத்தை மதிப்பிறக்கியதைத் தொடர்ந்து உலக பங்குச் சந்தைகள் பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ளன. கடந்த சில வாரங்களாகத் தொடர்கிற இச் சரிவிலிருந்து மீளுவது தனியே பொருளாதாரக் காரணிகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல. உலக ஆதிக்கத்துக்கான பூகோள அரசியலின் அதிகாரப் போட்டி அதனுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

சீனாவின் நாணய மதிப்பிறக்கத்தை 'நாணய யுத்தம்' என மேற்குலக ஊடகங்கள் அறிவித்தன. டொலர் மைய உலக வர்த்தகத்தின் வீழ்ச்சியை, சரியும் எண்ணெய் விலைகள் விரைவாக்கின்றன. பொருளாதார ரீதியில் பயனற்ற, வெல்லமுடியாத போர்கள் அமெரிக்காவின் இந் நெருக்கடிக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கின்றன.

இன்று உலகம் எதிர்நோக்கும் பங்குச்சந்தைச் சரிவு சீனாவின் நாணய மதிப்பிறக்கத்தின் விளைவானதல்ல. மாறாகச் சீனா எதிர்நோக்;கும் பொருளாதார மந்தம் காரணமாக நாணய மதிப்பிறக்கம்; சீன நாணயத்தினதும் பங்குச் சந்தை நிலைவரத்தினதும் உலகளாவிய முக்கியத்துவத்தைக் குறிப்பதோடு சீனாவின் பொருளாதாரத் தேக்கங் காரணமான அச்சம் உலகின் பல்வேறு பங்குச் சந்தைகளின் கரைவுக்குக் காரணமாகியுள்ளது. அச்சம் உருவாக்கிய நிச்சயமின்மை வழமை மீறிய பங்கு விற்பனைகட்கு வழிவகுத்து பங்குச் சந்தைகளின் துரிதமான சரிவுக்குக் காரணமாயிற்று.

சீனாவின் நாணய மதிப்பிறக்கம் பல்வேறு காரணங்களின் விளைவானது. கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக அதியுயர் வேகத்தில் வளர்ந்து வந்த சீனப் பொருளாதாரம் அதன் உயர் எல்லையை ஏறத்தாழ எட்டிவிட்டது. இந் நிலையில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாகியுள்ள சீனாவின் வளர்ச்சியின் தேக்கம் உலகளாவிய பொருளாதாரச் சரிவுக்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலை உருவானதன் அல்லது உருவாக்கப்பட்டதன் காரணங்களைத் தேடல் தகும்.

இதை விளங்க வரலாற்றைக் கொஞ்சந் திரும்பிப் பாரக்க வேண்டும். பன்னெடுங்காலமாக மனிதகுலம் பண்டமாற்று முறையையே தனது பரிமாற்ற முறையாகக் கொண்டிருந்தது. சாதாரண மனிதர்களின்; கொடுக்கல் வாங்கல் தொட்டு நாடு காண் பயணங்கள், பட்டுவழிப் பாதை வரை அனைத்தினதும் அடிப்படையாக அது அமைந்தது.

காலப்போக்கில் பிரித்தானியா பெரும்பாலான உலக நாடுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குட் கொண்டுவந்து 'சூரியன் அஸ்தமியாத சாம்ராஜ்யமாகத்' தன்னை நிலை நிறுத்திய பின்னணியில், உலக நாடுகளிடையே பணப் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு நாடும் தனது கையிருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதிக்கு நிகரான பணத்தை நாணயமாகவோ அல்லது தாளாகவோ வெளியிடும் முறை புழக்கத்துக்கு வந்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவும் அதன்; பின்பான அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் கடுமையான சிதைவும் இரண்டாம் உலகப் போரிற் பெரிய பாதிப்புக்கட்கு ஆளாகாத அமெரிக்காவிடம் இருந்து அந் நாடுகள் கடன் பெறும் நிலையை உருவாக்கியது. பல நாடுகள் தங்கள் கையிருப்பில் இருந்த தங்கத்தை அமெரிக்காவிடம் அடகு வைத்து அதற்கு நிகரான அமெரிக்க டொலர்களை வாங்கின. இது ஒருவகையில் அமெரிக்க டொலர் உலகின் அதி முக்கிய நாணயமாவதன் அடிப்படையானது.

ஆயினும் 1970களில் நிகழ்ந்த எண்ணெய் விலை உயர்வு டொலரின் உலக ஆதிக்கத்துக்கு ஒரு சவாலாயிற்று. எனவே, 1973ஆம் ஆண்டு அமெரிக்காவானது சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தது. அதன்படி சவுதி அரேபியாவுக்கு எக் கட்டுப்பாடுமின்றி அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதோடு சவுதி அரேபிய மன்னர் குடும்பத்துக்கும் சவுதி அரேபிய எண்ணெய் வயல்களுக்கும் என்றென்றைக்கும் பாதுகாப்பு வழங்கும். அதற்குப் பிரதியாக சவுதி அரேபியா தனது எண்ணெய் விலைகளை அமெரிக்க டொலர்களில் நிர்ணயிக்கும். எண்ணெய் வியாபாரத்தை டொலரில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதேவேளை எண்ணெயால் கிடைக்கும் மேலதிக வருமானத்தை அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலிட வேண்டும்.

இவ்வுடன்படிக்கை அமெரிக்க டொலரை நேரடியாக எண்ணெயுடன் இணைத்தது. 1975ஆம் ஆண்டு, எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஒபெக்) எண்ணெய் வியாபாரத்தை டொலரில் மேற்கொள்ள உடன்பட்டது. 'பெட்ரோ- டொலர்' முறை எனப்படும் இந்த ஏற்பாடு உலகின் முக்கிய இயற்கை வளமான எண்ணெயை, அமெரிக்கா பொருளாதார, அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்த இயலுமாக்கியது. எண்ணெய் வளநாடுகளில் அமெரிக்கா ஏன் போர் தொடுக்கிறது என்பதையும் எண்ணெய்க்கான ஆக்கிரமிப்புக்களை அமெரிக்கா ஏன் மேற்கொள்கிறது என்பதையும் விளங்குவதிற் சிரமம் இராது.

1970களிலிருந்து நாணய மதிப்பு சந்தையின் தேவைக்கேற்ப நாளாந்தம்; மாறத் தொடங்கியது. இதனை 'மிதக்கும் நாணயமாற்று வீதம்' என்பார்கள். திறந்த பொருளாதார முறையைப் பின்பற்றும் நாடுகள் இம் முறையையே கடைப்பிடிக்கின்றன.

மறுபுறம், திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றாத நாடுகள் இவ்வாறு நாணயமாற்று விகிதத்தை மாற்றுவதற்கு மாறாகத் தேவையினடிப்படையில் மட்டும் மாற்றும் முறையைக் கொண்டுள்ளன. இதனை 'நிலையான நாணயமாற்று வீதம்' என்பர். சீனா - அத்தகைய நிலையான நாணயமாற்று வீதத்தைப் பேணுகிறது. சீனாவினுடைய நாணய மதிப்பிறக்கத்தை மேற்குலகு அச்சத்துடன் நோக்குகிறது. மேற்சொன்ன மிதக்கும் நாணயமாற்று வீத முறையைக் கொண்டிராத சீனா, அதன் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்திற்; கொண்டு தனது நாணயத்தை மதிப்பிறக்கியுள்ளது.

சீனா - தனது நாணயத்தை மதிப்பிறக்கியதற்கு முக்கிய காரணத்தை நோக்கின், சரியும் உலகின் பொருளாதாரத்தின் விளைவுகளை மோசமாக எதிர்நோக்கும் நாடுகளிற் சீனா பிரதானமானது. அதன் நிகர ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட மிக அதிகம். நாணய மதிப்பிறக்கத்தாற்; சீன ஏற்றுமதிகள் பிற நாடுகளின் உற்பத்திகளோடு மலிவான விலையில் சர்வதேசச் சந்தையிற் போட்டியிடலாம் என்பதால் அது சீன ஏற்றுமதித் துறைக்கு உதவுகிறது.

இந் நிலையிற் சீனாவுடன் ஏற்றுமதி - இறக்குமதி செய்கிற நாடுகளுக்குச் சீனாவின் இந்த நடவடிக்கை பாரிய சிக்கலாகியுள்ளது. சீனா - தனது பொருளாதாரத்தைக் காக்கும் நோக்குடன் மேற்கொண்ட நடவடிக்கை, ஏனைய நாடுகளை நட்டப்படுத்தியுள்ளது. மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்காகச் சீனச் சந்தையைச் சார்ந்திருந்த 'எழுச்சிபெற்றுவரும் சந்தைகள்' எனப்படும் பொருளாதாரங்களில் அது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஷ்யா, துருக்கி, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளும் நாணய வீதங்களும் கூடிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ள ஆசிய நாடுகளும் சீனாவுடன் வர்த்தக ரீதியில் அதிகளவு தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது வெளிப்படையாக நாம் காணும் நெருக்கடியின் ஒரு பக்கம். எமக்குத் தெரியாத பக்கங்கள் பல இதில் உட்பொதிந்துள்ளன.

சீனாவின் ஒரு தசாப்த கால துரித பொருளாதார வளர்ச்சி முடிந்துள்ள நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சீனாவின் பங்குச்சந்தை 30 சதவீதம் சரிந்தது. முதற் காலாண்டில் உலகப் பொருளாதாரத்தின் மந்தங் காரணமாகச் சீன ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 9 சதவீதம் குறைந்தன.  இதைச் சரிக்கட்ட சீனாவிடம் பிற வழிமுறைகள் இருந்தபோதும், சீனா - நாணயத்தை மதிப்பிறக்கியதன் பின்னணியிற் பொருளாதாரக் காரணிகளை விடப் பூகோள அரசியற் காரணிகளும் உள்ளன. டொலருக்கு எதிரான நாணய யுத்தத்தின் ஒரு பகுதியாக இதைக் கருதலாம்.

2008இல் உலகப் பொருளாதார நெருக்கடியின் போது சீனப் பங்குச்சந்தை சர்வதேச வணிக நிறுவனங்களினதும் முதலீட்டு நிறுவனங்களினதும் பாதுகாப்பான முதலீட்டு மையமாக்கியது. இந் நிறுவனங்களால் சீனப் பங்குச்சந்தையில் நேரடியாக முதலிட முடியாதவாறு உள்நாட்டுச் சட்டங்கள் உள்ள போதும், தமது பதிலாட்கள் மூலம் அவை சீனப் பங்குச் சந்தையில் முதலிட்டன. 2014ஆம் ஆண்டு, சீனாவின் பங்குச் சந்தை ஹொங் கொங் பங்குச்சந்தையை உள்ளீர்த்தது. இது வெளிநாட்டவர்கள் பங்குகளை வாங்குவதை அனுமதித்தது. அதனாற் பங்குச் சந்தை மீதான சீன அரசாங்கத்தின் பிடி தளரத் தொடங்கியது. அதைச் சரியாக்கும் தேவையும் சீனாவுக்கு இருந்தது.

மறுபுறம், படுவேகமாகக் குறையும் எண்ணெய் விலைகள் அமெரிக்க டொலர்களிற் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ரஷ்யா, ஈரான், வெனசுவேலா ஆகிய எண்ணெய் உற்பத்தி நாடுகளைப் பொருளாதார நெருக்கடிக்குட்; தள்ளும் நோக்கிற், சவுதி அரேபியத் தலைமையிலான அரபு நாடுகளின் உதவியுடன், திட்டமிட்டுக் குறைத்த உலக சந்தை எண்ணெய் விலைகள் அந் நாடுகளுக்கு ஏற்படுத்திய பாதிப்பை விட அமெரிக்க டொலர்களுக்கும் அதுசார் அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கும் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம்.

இப்போது சீனாவின் மதிப்பிறக்க நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கையாகப், பங்குச் சந்தைகளில் செயற்கையான சரிவுகளை ஏற்படுத்திச் சீனாவின் நாணயம் டொலருக்குப் போட்டியான சர்வதேச நாணயமாவதைத் தடுக்க அமெரிக்கா முனைகிறது. இதன் மூலம் சீனாவின் பொருளாதாரம் பற்றி ஏற்படும் அச்ச நிலைமை சீன நாணயத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதுடன் அமெரிக்க டொலர் மீதான நம்பிக்கையை உயர்த்தி அமெரிக்க டொலரின் பெறுமதியையும் அதிகரிக்கும்.

இன்று ஆசிய, ஆபிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் தனது சொந்த நாணயமான யுவான் எனப்படும் ரின்மின்;பியில் சீனா வர்த்தகம் செய்கிறது. அந் நாடுகள் பிற நாடுகளுடன் ரின்மின்;பியில் வர்த்தகம் செய்வதைச் சீனா ஊக்குவிக்கிறது. எனவே, புதிய போரைப் பொருளாதார ரீதியாக அமெரிக்கா தொடுத்துள்ளது. 2008 பொருளாதார நெருக்கடியின் மையமாக அமெரிக்கா இருந்தது என்;பது வெளிப்படையாகத் தெரிந்ததே.

ஆனால், வெளிவெளியாக யாரும் ஏற்றுக் கொள்ள விரும்பாதபோதும் இப்போதைய நெருக்கடி தவிர்க்கவியலாமல் வெளிக்கிளம்பியுள்ளது. சீனா - அதன் மையமாக உருவகிக்கப்படினும், தவிப்பது சீனா மட்டுமல்ல என்பதே உண்மை. ஆனால், மேற்குலக ஊடகங்கள் மேற்குலகு எவ்வாறோ தப்பிப்பிழைத்துவிட்டது என்ற தோரணையில் சீனப் பொருளாதாரத்தின் முடிவைக் கட்டியங் கூறுகின்றன.

தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தாற் போதாதா..?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .