Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 10 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மப்றூக்
ஆயுத இயங்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின.
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாகுவதற்குக் காரணமானது. கடந்த 10 வருடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளால், மு.காங்கிரஸ் உடைந்ததோடு அந்தக் கட்சிக்கு எதிராக, அதிலிருந்து பிரிந்து சென்றவர்களாலேயே இரண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டன.
ஆனால், இப்போது அரசியல் கட்சிகளில் அநேகமானவை உசாராகி விட்டன. இவ்வாறான உள்ளக முரண்பாடுகள் காரணமாக கட்சிக்கும், தலைமைக்கும் ஆபத்துக்கள் ஏற்படாதவாறு, கட்சிகளுக்குள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையினை நாம் கண்டுகொள்ள முடியும்.
அதனால்தான், ஏராளமான தேர்தல்களில் தொடர் தோல்வியினைச் சந்தித்து வந்த ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து தள்ளி விடுவதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஐ.தே.கட்சியை உடைத்துக் கொண்டு போகலாமென, அக் கட்சியிலிருந்து கணிசமானோர் ஒரு காலத்தில் வெளியேறியபோதும், அந்தக் கட்சியும் தலைமையும் தம்மைத் தற்காத்துக் கொண்டன.
ஆனால், உள்ளக முரண்பாடுகளால் சில அரசியல் கட்சிகள் ஆபத்துக்குள் சிக்கிக் கொள்வதும் சிலவேளைகளில் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதற்கு அண்மைய உதாரணமாகும்.
அ.இ.மக்கள் காங்கிரஸுக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அக் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குறிவைத்துக் காத்திருந்தார். ஆனால், அந்தத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை புத்தளத்தைச் சேர்ந்த நவவிக்கு கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் வழங்கினார். இதனால், அ.இ.ம.காங்கிரஸின் செயலாளர் ஹமீட் ஏமாற்றமடைந்தார். கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் முரண்பாடு கொள்ளத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் இந்த முரண்பாடு முற்றிப்போன நிலையில், அ.இ.ம.காங்கிரஸிலிருந்தும், அந்தக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்தும், வை.எல்.எஸ். ஹமீட்டை இடைநிறுத்துவதாக, கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் அறிவித்தார். முஸ்லிம் அரசியல் அரங்கில் இந்த விவகாரம் சூடான பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், அ.இ.ம.காங்கிர
ஸின் செயலாளர் பதவியிலிருந்து தன்னை ரிஷாட் பதியுதீனால் இடைநிறுத்த முடியாது என்று, வை.எல்.எஸ். ஹமீட் வாதிட்டார். இந்த விவகாரம் தேர்தல் ஆணையாளர் வரை சென்றது. ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. கடைசியில், அ.இ.மக்கள் காங்கிரஸின் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம் என்று, தேர்தல் ஆணையாளரே கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார்.
இந்த நிலைவரமானது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு பாரியதொரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட தொண்டைக்குள் முள் சிக்கிக் கொண்ட கதைதான். தன்னோடு முரண்பட்டுக் கொண்டுள்ள ஒருவரை செயலாளராக வைத்துக் கொண்டு, கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அது இன்னும் ஆபத்தாக அமைந்து விடும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26 ஆவது பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது கட்சியில் உயர்பீட விவகாரங்களுக்குரிய செயலாளர் பதவியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை, கட்சியின் யாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில், மேற்சொன்ன செயலாளர் பதவிக்கு குறிப்பிடத்தக்க சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை செயற்படுத்துதல், தேர்தல் ஆணையாளருடன் கட்சி தொடர்பான விவகாரங்களை மேற்கொள்ளுதல் மற்றும் நாடாளுமன்ற செயலாளருடன் கட்சி சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாளுதல் ஆகியவை, மேற்படி உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளருக்குரிய அதிகாரங்களாகக் கூறப்பட்டன. அதேவேளை, இந்தப் புதிய செயலாளர் பதவியை வகிக்கின்றவர் தீவிர நேரடி அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிற நிபந்தனையொன்றும் உள்ளது.
உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளர் பதவிக்காக தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தும், முன்னர் கட்சியின் பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்தது. மு.காங்கிரஸின் பொதுச் செயலாளராக எம்.ரி. ஹசன் அலி பதவி வகிக்கின்றார்.
இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளர் பதவிக்கு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த மன்சூர் ஏ. காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதிப் பதிவாளராகப் பணியாற்றியவர். தற்போது ஓய்வுநிலையிலுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், மேற்சொன்ன புதிய செயலாளர் பதவி குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்களும், விமர்சனங்களும் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மு.காங்கிரஸின் தற்போதைய பொதுச் செயலாளர் என்கின்ற வகையில், ஹசன் அலியின் கையிலுள்ள அதிகாரங்களைக் குறைப்பதற்காகவே, புதிய உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பார் வாதிடுகின்றனர். இந்த வாதத்தினை அவர்கள் முன்வைப்பதற்கு சில காரணங்களும் உள்ளன.
மு.காங்கிரஸுக்கு ஐ.தே.கட்சியிடமிருந்து இரண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.காங்கிரஸின்
செயலாளர் எம்.ரி. ஹசன் அலி தனக்கு வழங்குமாறு கேட்டு, மு.கா. தலைமைத்துவத்தை நெருக்குவாரப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இரண்டு தடவை மு.காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் ஹசன் அலிக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுவும் ஹசன் அலியின் சொந்தப் பிரதேசமான நிந்தவூரில், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கத்தக்கதாக, இரண்டு தடவை ஹசன் அலி - தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைப் பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், மூன்றாவது தடவையாகவும் தனக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஹசன் அலி கோரி வருகின்றார்.
இவ்வாறானதொரு நிலையில், ஹசன் அலி கோருகின்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படாது விட்டால், அவர் சில கடுமையான முடிவுகளை எடுப்பார் என்று சில ஊடகங்கள் எழுதத் தொடங்கின. மேலும், மு.கா. தலைவர் மீது அதிருப்தி கொண்ட நிலையில், ஹசன் அலி தெரிவித்ததாக சில கருத்துக்களும் ஊடகங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஹசன் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாவிட்டால், கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றும் என்றும், அது கட்சியின் உடைவுக்கு வழி வகுக்கும் என்றும் கூறுகின்ற மாதிரியான பேச்சுக்கள் வெளியிலும், மறைவிலும் பேசப்பட்டு வந்தன.
இருந்தபோதும் இந்தக் கதைகள் எவற்றினையும் ஹசன் அலி மறுக்கவில்லை. போதாக்குறைக்கு, இந்தக் கதைகள் அனைத்தும் உண்மையாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் வகையில், மு.காங்கிரஸ் தலைவர் பங்குபற்றிய பல கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஹசன் அலி தவிர்ந்து வந்தார்.
ஆக, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக மு.காங்கிரஸின் தலைமையுடன் பொருதும் நிலையில் ஹசன் அலி இருந்தமையினால்தான், அவரிடமுள்ள கட்சியின் செயலாளர் பதவிக்கிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அந்த அதிகாரங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்சொன்ன தரப்பினர் கூறுகின்றனர்.
இன்னொருபுறம், அப்படித்தான் ஹசன் அலியிடமுள்ள செயலாளர் பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், அது தப்பில்லை என்கின்ற வாதமும் இன்னொருபுறம் முன்வைக்கப்படுகிறது.
மு.காங்கிரஸுக்குள் இன்னுமொரு உள்ளக முரண்பாடு ஏற்பட்டு, அதனால் கட்சிக்கும் தலைமைக்கும் பிரச்சினைகள் உருவாகுவதற்கு முன்பதாக, இவ்வாறான முன்னேற்பாடுகளை மேற்கொள்கின்றமைதான் சாணக்கியமான வியூகம் என்கின்றார்கள் மேற்சொன்ன தரப்பினர். இல்லாவிட்டால், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸுக்குள் அந்தக் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் ஏற்படுத்தியிருப்பது போன்றதொரு நெருக்குவாரத்தினை, மு.காங்கிரஸும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.
இன்னொருபுறம், மு.கா.வின் பொதுச் செயலாளர் ஹசன் அலியின் அதிகாரங்கள் கட்சிக்குள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பொன்று கட்சிக்குள் இருந்தது. சிலவேளை, உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளராக கிழக்கு மாகாணத்துக்கு வெளியிலிருக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், அதையே மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிரானதொரு பிரசாரமாக கட்சிக்குள்ளிருக்கும் சிலர் மேற்கொண்டிருக்கக் கூடும்.
மு.காங்கிரஸின் தளமான கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள கட்சியின் செயலாளர் பதவிக்கான அதிகாரங்களைப் பறித்து, கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவருக்கு ஹக்கீம் வழங்கி விட்டார் என்கிறதொரு பாரிய பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளர் பதவிக்கு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர் ஏ. காதரை நியமித்ததன் மூலமாக, தனக்கெதிரான அந்தப் பிரசாரத்தினை மு.கா. தலைவர் ஹக்கீம் இல்லாமலாக்கி விட்டார்.
இன்னொருபுறம், மேற்சொன்ன அனைத்து வாதப் பிரதிவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தினையும் உதறித்தள்ளும் வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் வேறொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது, தீவிர நேரடி அரசியலில் ஈடுபடாதவர்களுக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கும் நடவடிக்கைகள், பெரிய கட்சிகளுக்குள்ளேயே இடம்பெற்று வருகிறது.
உதாரணமாக, ஐ.தே.கட்சியில் சரத் கப்புகொட்டுவ மற்றும் அமைச்சரவைச் செயலாளராக பதவி வகித்த வீரகொட போன்றவர்கள் முக்கிய பதவிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். அதுபோன்றுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் முக்கியமானதொரு பதவி உருவாக்கப்பட்டு, அதில் தீவிர நேரடி அரசியலில் ஈடுபடாத ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார் என்பதே மேற்சொன்னவர்களின் கருத்தாக உள்ளது.
உட்கட்சிப் பிரச்சினைகள் உருவாகும் போது, இவ்வாறானவர்கள் நடுநிலையாகவும் நேர்மைத் தன்மையுடனும் செயற்படுவார்கள் என்பதனாலேயே, சில முக்கிய பதவிகளுக்கு தீவிர அரசியல் ஈடுபாடு இல்லாதவர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்பது மேற்சொன்னவர்களின் வாதமாகும். மேலும், இவ்வாறானவர்கள் தங்களுக்குள் ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும், கட்சிப் பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் குறித்த தரப்பினர் கூறுகின்றனர்.
எது எவ்வாறாறு இருந்தாலும், மு.காங்கிரஸுக்குள் புதிதாக 'உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளர் பதவி' உருவாக்கப்பட்டதன் பின்னணியில் ஒன்றுமில்லை என்கிற வாதத்தினை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், அண்மைக்காலமாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் குறிவைத்துக் கொண்டு, கட்சியின் செயலாளர் ஹசன் அலி, ஓர் உள்வட்ட அரசிலைச் செய்வதிலிருந்து தவிர்ந்திருந்தால், 'உயர்பீட விவகாரங்களுக்கான செயலாளர்' பதவியொன்றினை உருவாக்குவதற்கான தேவை, முஸ்லிம் காங்கிரஸுக்குள் இப்போதைக்கு எழுந்திருக்காது என்பதை மட்டும் உரத்துச் சொல்ல முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025