லக்ஸ்மன்
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு புதியவர்களையும் நம்பி ஏமாறும் மக்கள், தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று வித்தியாசப்படுவதில்லை என்பது கடந்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் வெளிப்பட்டிருந்தது.
இந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் ஏமாற்றத்தைச் சீர்செய்வதற்கான தேர்தலாக வெளிப்பட்டிருக்கிறது. அதற்கான வாய்ப்பு அவ்வளவுக்கு அவசரமாக வழங்கப்பட்டது ஒருவகையில் நல்லதே. அதாவது, ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமையின் வெளிப்பாடுதான் அது. அந்த ஒழுங்கில்தான், ஆளும் கட்சியாக இருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சித் தேர்தல் வீழ்ச்சியை நாம் அணுகமுடியும்.
தேசிய மக்கள் சக்திக்குப் பெரு நகரங்களில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருந்தாலும், கிராமப்புறங்களில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதற்குத் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை காரணமாக இருக்கலாம்.
இலஞ்சம் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தல் தண்டனை வழங்குதல் கடந்த ஆறு மாதங்களில் சரியாக நடைபெறவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பொருள்களின் விலைக் குறைப்பு நடைபெறவில்லை. இவை தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். ஆனால், வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மைகள் கிடைக்காமைக்குப் பல காரணங்களைச் சொல்லமுடிந்தாலும் எதிர்க்கட்சிகள் பலமாற்றிருப்பது தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட அளவான ஆசனங்கள் கிடைத்தமைக்கு காரணமாகும்.
வடக்கு, கிழக்கு போலவே தேசிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி சரியான முறையில் தோற்கடிக்கப்படாமைக்கு எதிர்க்கட்சிகள் தங்களை முன்னேற்றாது தங்களது தவறுகளைச் சீர்தூக்கிப் பார்க்காதிருக்கின்றமை காரணமாகும்.
தமிழ் மக்கள் தங்கள் உரிமை சார்ந்தும் இலங்கையின் இனப்பிரச்சினை சார்ந்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர சிறந்த தீர்வைத் தருவார் என்றே நம்பியிருந்தனர். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் என அது நீளும்.
இவ்வாறுதான், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பகுப்பாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த வார உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யும் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் பிரசாரம் செய்து, வியட்நாமுக்கு அவசரமாகச் சென்று பின்னர் ஒரு சிறப்பு விமானத்தில் திரும்பிய பிறகு மிகவும் சோர்வான ஒரு நிலையை எட்டினார் என்றுதான் செல்ல வேண்டும்.
இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மிகுந்த முயற்சியையும் நேரத்தையும் செலவிட்டது. ஆனால், ஒருவேளை பிரதேசங்களிலும், மாகாணத்திலும் தேசிய ரீதியிலும் மிக முக்கியமான சபைகளை இழக்க நேரிடும் என்று அது நினைத்திருக்கவில்லை. ஊழல் காரணமாக நிகழ்ந்த நாட்டின் ஆட்சி மாற்றம் தொடர்ந்தும் மேலும் வலுப்பெற்றதாக அமையும் என்றே நம்பியிருந்தனர். ஆனால், அது முழுமையாக நடைபெறவில்லை என்பது தான் உண்மை.
பிரதமர் ஹரிணி, மேற்கொண்ட பிரசாரங்கள் வெற்றியளிக்கவில்லை. அமைச்சர்களின் தீவிர பிரசாரங்கள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் எடுபடவில்லை என்பதை தங்களுக்குள்ளும், தங்கள் நண்பர்களுடனும் மிகவும் அமைதியாகப் பேசுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
இதுவும் உண்மைதான்.இந்த உண்மைகளை உற்று நோக்கும்போது, தேசிய மக்கள் சக்தி கொண்டிருந்த நம்பிக்கை வலுவிழந்தே போயிருக்கிறது. இந்த வலுவிழத்தல் மாகாண சபை தேர்தல் இலக்கில் மாற்றத்தினைக் கொண்டுவரலாம். நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களின் நடத்தைகள் வெளியே வரத் தொடங்கி இருக்கின்றன.
பாதகமான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் பாதகமான விமர்சனங்கள்
எதிர்வரும் காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவில் வீழ்ச்சியையே ஏற்படுத்தப் போகின்றது என்பது மாத்திரமே நிச்சயமானது.
தேசிய மக்கள் சக்தி 200க்கும் அதிகமான சபைகளில் வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது என்று சொன்னாலும் அவற்றில் முழுமையாக ஆட்சியை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பற்றே இருக்கிறது. ரில்வின் சில்வா மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளோடு, இணைந்து ஆட்சிகளை அமைக்கப்போவதில்லை என்ற கருத்து அவர்களின் இயலாமையையே வெளிக்காட்டுகிறது. இவ்வாறான கருத்துக்கள் அவர்களின் கவனக்குறைவே வெளிப்படுத்துகின்றன எனலாம்.
தேர்தல் முடிவுகளின் படி, தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டாவது நிலையிலும் காணப்படுகின்றனர். கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வெற்றியோடு ஒப்புநோக்கும் போது தேசிய மக்கள் சக்தியின் வெற்றி ஒன்றுமில்லை என்றே சொல்லமுடியும்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றி
தலதா மாளிகை கண்காட்சி நிகழ்வு,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்
நடைபெற்ற பிள்ளையானின் கைது போன்றவற்றினாலும், தேசபந்து தென்னக்கோனின் மீதான விசாரணை ஆணைக்குழு நியமனமும் என சில விடயங்கள் தாக்கம் செலுத்தியிருந்தன. அவற்றில் பிள்ளையானின் கைது கிழக்கில் பிள்ளையானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிகரித்ததைத் தவிர, ஏனையவை இரண்டுமே சிங்கள பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை அதிகரித்து இருக்கின்றன என்றும் கொள்ள முடியும்.
இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி தங்களது நிலைப்பாடுகள், வாக்குறுதிகளின் காரணமாகத் தோல்வியையே தழுவியிருக்கிறது. இது எதிர்கால அதிகாரத்துக்கான ஆபத்தான நிலை என்றே சொல்ல முடியும்.
அனைத்துக் கட்சிகளின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை மற்றும் ஆதரவுடன் ஒப்பிடுகையில், அதே நேரத்தில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலைக்கே தேசிய மக்கள் சக்தியைத் தள்ளி விட்டிருக்கிறது. அத்துடன், ஏனைய கட்சிகளும் இதனைச் சிந்திக்கச் சீர்தூக்கிப் பார்க்கத் தவறக் கூடாது என்பதும் நினைவில் இருத்தப்பட வேண்டும். இருப்பினும், மூன்று வீதத்திலிருந்து உயர்வுக்குச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் வாக்கு ஆறு மாதங்களில் பதினெட்டு சதவீதம் குறைந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில், பாராளுமன்றத் தேர்தலில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதனால், மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் புதிய ஆட்சியை ஏற்றிருந்தனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் பொருளாதாரம் உட்பட மிகப்பெரிய மாற்றங்களைச் செய்வார்கள் என்றே மக்கள் நம்பி இருந்தனர். ஜனாதிபதியாகி இடைக்கால அரசாங்கத்தை நிறுவிய கையோடு பாராளுமன்றத்தைக் கலைத்த வேகம் நாட்டு மக்களுக்கான நலன்களின் மீதும் காணப்படும் என்றே மக்கள் நம்பினர். ஆனால், அது நடைபெறவில்லை.
ஆட்சியைப் பெரும்பான்மையுடன் அமைத்ததன் பின்னர், அவை நடைபெறுமா? என்பதற்கான பதிலாக நிருவாகத்தின் மீதும், அதிகாரிகள் மீதும் குறைகளைக் கண்டுபிடிப்பதாகவும் அவற்றின் மீது அதிகாரம் பிரயோகிப்பதுமாகவே இருந்தது.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு என்ற பெருமெடுப்பு வரவு-செலவுத் திட்டத்தில் புஸ்வானமாகது, அதே போன்றே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த பொருள்களின் விலைக் குறைப்பு, மின்சார, நீர் கட்டணக் குறைப்பு நடைபெறவில்லை. போததற்கு உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாக இல்லாவிட்டால் அபிவிருத்திகள்
குறித்து ஆராய்வோம் என்ற விதமான கருத்துக்கள் மக்களைச் சிந்திக்க வைத்தன என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில்தான், தான் தப்பித்துக் கொள்வதற்காக காவல்துறைமீதும், அதிகாரிகள் மீது பந்தை உதைத்து விடும் உத்தியைக் கையாண்ட அரசாங்கம் இந்த உள்ளூராட்சித் தேர்தலில்
மக்களால் உதறி விடப்பட்டிருக்கிறார்கள் என்பதே முடிவாகும்.
இந்த முடிவு அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும் பாதிப்புச் செலுத்தும் என்பதே கணக்காக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்தைக் காண்பிக்காது என்பதும் நிச்சயம்.
இதனை சீர் செய்வதே இனி நடைபெறும் என்று நம்புவோம். இதற்குள் தங்கள் ஆதரவை எதிர்க்கட்சிகளும் வலுப்படுத்திக் கொள்ளும்.