Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2016 டிசெம்பர் 28 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ திட்டவெல மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வொன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது.
‘நிலைமாறு கால கட்ட நீதி’ என்கிற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சாத்தியப்பட்டுள்ள மற்றும் சாத்தியப்படாமல் போயுள்ள விடயங்கள் பற்றி அங்கு உரையாடப்பட்டது.
அங்கு பார்வையாளராகக் கலந்து கொண்டிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு தொடர்பிலான போக்கு தொடர்பில் சில கருத்துக்களை அங்கு வெளியிட்டார்.
அதாவது, “ரவிராஜ் படுகொலை வழக்கில், படுகொலையைப் புரிந்தவர்கள் அல்லது அதற்கு நேரடியாக ஒத்துழைத்தவர்களை மாத்திரம் தண்டிப்பதற்கான சூழலையே இலங்கை அரசாங்கமும் அதுசார் தளமும் வடிவமைத்து வைத்திருக்கிறது
. மாறாக, அந்தப் படுகொலையின் உண்மையான சூத்திரதாரிகளையோ, அதற்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்களையோ தண்டிப்பதற்கான ஏற்பாடுகளைக் காண முடியவில்லை.
அவ்வாறான நிலையில், படுகொலைத் திட்டத்தை நிறைவேற்றியவர்களை மாத்திரம் தண்டிப்பதால், பூரண நீதி கிடைத்துவிடுமா? இவ்வாறான நிலை தொடர்பில் ரவிராஜின் மனைவி உள்ளிட்ட அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.” என்றார். எம்.ஏ.சுமந்திரன், ரவிராஜ் படுகொலை வழக்கில் ஆஜராகிய சட்டத்தரணியுமாவார்.
ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஐவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
ரவிராஜ் படுகொலை வழக்கு போன்றே, குமாரபுரம் படுகொலைகள் வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட எவருமே தண்டிக்கப்பட்டிருக்கவில்லை. பிரதிவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு சரியாக 9 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த வருடம் வேகம் பெற்ற வழக்கு விசாரணைகள், ஆரம்பத்திலேயே ஏவலாளிகளை (அதாவது சூத்திரதாரிகளைத் தவிர்த்து, அதனை ஏற்று கொலை புரிந்தவர்களை) தண்டிப்பதற்கான ஏற்பாடுகளுடனேயே முன்னெடுக்கப்பட்டதாக பல தரப்புக்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டன.
கடந்த காலப் படுகொலைகள் தொடர்பிலான பெரும்பாலான வழக்கு விசாரணைகளும் அதே தோரணையிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதுவும், அரச தரப்புப்புக்களோடு சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகளில் கடைநிலையிலுள்ளவர்களே தண்டிக்கப்படும் சூழலும் அதிகம் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இது தொடர்பில், சிங்கள மக்களிடமும் அதிருப்தி உண்டு. அதனை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகளின் போதான தென்னிலங்கை தாய்மார்களின் சாட்சியங்களில் அதிகம் காண முடிந்தது.
“போர்க்குற்ற விசாரணைகள் எனும் பெயரில் நடைபெறக்போகின்ற விசாரணைகளில், பெயருக்கு கடைநிலை இராணுவ வீரர்கள் சிலரை ஒப்புக்குத் தண்டிக்கப்போகின்றார்கள்.
மாறாக, ஆணை வழங்கியவர்களை தண்டிக்காது பாதுகாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது, எம்முடைய பிள்ளைகளை மாத்திரம் பலிகடாவாக்கும் முயற்சி” என்றும் கூறினர் .
ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக எம்.ஏ.சுமந்திரன், ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். அத்தோடு, ரவிராஜ் படுகொலை வழக்கு தீர்ப்பானது, இலங்கை நீதித்துறை மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கின்றார்.
இதன்மூலம், போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமென்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகின்றது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
“அரசியலமைப்பு உபகுழுக்களின் ஆலோசனைகளை நான் செவிமடுக்கப் போவதில்லை. ஆகவே, ஒற்றையாட்சிக்குக் குந்தகம் ஏற்படும் என்று யாருமே பயங்கொள்ளத் தேவையில்லை” என்று, வெளிநாடுவாழ் இலங்கைப் பிரதிநிதிகளுடனான அண்மைய சந்திப்பொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதுபோல, ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளின் பரிந்துரைகள், வரைபுகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கங்கள் கடந்த காலங்கள் போன்றே இன்றும் ஆர்வம் கொள்வதில்லை. மாறாக, அவை தொடர்பில் ஒருவித ஒவ்வாமையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அதற்கு மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன என்கிற வித்தியாசம் எல்லாம் பெரியளவில் இல்லை.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை, கடந்த மாதம், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களிடம் கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கான முயற்சிகளை அந்தச் செயலணியின் அங்கம் வகித்தவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆனால், அந்த அறிக்கையை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத் தலைமைகளினால் அவ்வளவு ஆர்வம் காட்டப்படவில்லை. இழுத்தடிக்கும் நிலை காணப்பட்டது. தற்போது, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி அந்த அறிக்கையை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியால் உறுதிப்பாடு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த விடயம் தொடர்பில் பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்கள் விசனமடைந்திருப்பதையும் காண முடிந்தது. கொழும்பு லிபரல்களுக்கு ‘மைத்திரி அரசாங்கத்தின்’ மீதான பாசம் அதிகம். ஆனால், அவர்களையே அலைக்கழிக்கும் விடயங்கள் சார்பில் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
இப்போது, தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருக்கின்ற செயற்பாட்டாளர்களும் கட்சிகளும், புத்திஜீவிகளும் எந்த விடயத்தினை முன்னிறுத்திக்கொண்டு இயங்க வேண்டும் என்கிற விடயம் முதன்மை பெறுகிறது.
அதாவது, குமாரபுரம் படுகொலைகள் வழக்கில் யாரும் தண்டிக்கப்படாத நிலை, ரவிராஜ் படுகொலை வழக்கில் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டமை, அரசாங்கம் அமைத்த உபகுழுக்களின் ஆலோசனைகளையே கருத்தில் எடுக்கப்போவதில்லை என்கிற ஜனாதிபதியின் அறிவிப்பு, நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை மீதான இழுத்தடிப்பு உள்ளிட்ட விடயங்கள் முக்கிய பேசு பொருளாகவும் எமக்கான நீதி மறுப்புக்கான சாட்சிகளாகவும் கண்முன் இருக்கின்றன.
இந்த விடயங்களை வைத்துக் கொண்டு எவ்வாறான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது கொடுக்கப் போகின்றோம்? மாறாக, தமிழ்த் தேசியப் பரப்புக்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு இதனையும் கோட்டைவிடப் போகின்றோமோ என்கிற கேள்வி எழுகின்றது.
ஏனெனில், ரவிராஜ் படுகொலை வழக்கு மீதான தீர்ப்பு வெளியானது முதல், இலங்கை அரச இயந்திரம் மற்றும் நீதித்துறை மீதான கேள்விகள் எழுவதைக் காட்டிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எம்.ஏ.சுமந்திரன் மீதே அதிக கேள்விகள் எழுப்ப்படுகின்றன.
ஓர்அழுத்தத்தை எவ்வாறு முறையாக பாவிப்பது என்பதை உணரத்தவறி, செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தினை தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதற்கான விடயமாக மாற்றிக் கொள்ள மூர்க்கமாக முயன்றுகொண்டிருக்கின்றனர்.
தென்னிலங்கையோ, இலங்கையின் நீதித்துறையின் மீது எந்தவித சந்தேகங்களையும் கொள்ள வேண்டியதில்லை என்று சுட்டிக்காட்டுவதிலும், அதனை ஆங்கில ஊடகங்களினூடு பெருமளவு சர்வதேச ரீதியில் கொண்டு சேர்ப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.
இலங்கை நீதித்துறையின் சுயாதீன இயங்குதன்மை என்பது அரசியல் ரீதியான அனைத்து விடயங்களிலும் பிறழ்ந்து வந்திருப்பதை கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம். அது, ரவிராஜ் படுகொலை விடயத்திலும் நிகழ்ந்திருக்கின்றது.
ஏனெனில், ரவிராஜ் படுகொலை வழக்கு என்பது, தனி ஒரு மனிதரின் கொலை வழக்கு அல்ல. மாறாக, அந்தப் படுகொலைக்குப் பின்னாலான நோக்கம் பெரும் அரசியல் சார்ந்தது. அது, அரசியல் படுகொலை.
எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா அமர்வுகளின் போது இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல்கள் நிறைய இருக்கின்றன. ஏற்கெனவே வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் இலங்கையினால் நியாயமான ஏற்பாடுகள் எவையும் பெரிதாகச் செய்யப்பட்டிருக்கவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்படியான நிலையில், ரவிராஜ் படுகொலை, குமாரபுரம் படுகொலைகள் உள்ளிட்ட வழக்கு விசாரணைகள் சிங்கள ஜூரிகள் மாத்திரம் முன்னிலை வகிக்க நடந்து முடிந்திருக்கின்றன.
அந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதே அவை பூரண நீதியைப் பெற்றுக் கொண்டுக்கும் என்று தமிழ் மக்கள் துளியளவும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அப்படியான நிலையில், அவை ஒட்டுமொத்தமான ஏமாற்றத்தை பதிவு செய்து போயிருக்கின்றன.
ஆக, இறுதிப் போரின் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது உள்ளக விசாரணை அல்லது உள்நாட்டு நீதிபதிகள் மாத்திரம் பங்கெடுக்கும் விசாரணை என்கிற விடயத்தின் மீதான நம்பிக்கை எவ்வளவு பொய்யானதாக இருக்கும் என்பதை வலியுறுத்த வேண்டிய தருணம் இது.
இது, சர்வதேசப் பங்களிப்பினைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான உந்துசக்தியை வழங்க வேண்டும். அதுதான், சில வடிவங்களிலாவது முன்னோக்கிய ஏற்பாடுகளையாவது செய்யும். மாறாக, தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது அபத்தங்களின் நீட்சியை மட்டுமே பதிவு செய்யும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
40 minute ago
42 minute ago