Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
எதிர்க்கட்சிகள் தமது கடமைகளை முறையாக செய்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அவற்றின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுகள் அவற்றின் பக்கச்சார்பு தன்மை மிகவும் வெளிப்படையாகத் தெரிவதால் மக்கள் மத்தியில் எடுபடுவதும் இல்லை.
வழமையாக பொதுவாக அரசாங்கத்துக்கு எதிராக அல்லது அமைச்சர்களுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்படுகின்றன. ஆயினும்.
அம்மரபுக்கு மாறாக 1981ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு எதிராக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசிய அரசாங்கத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ் ஆயுதக் குழுக்களின் கையொங்கி வந்த நிலையில், பிரிவினைவாதத்துக்கு ஆதரவு வழங்குவதாகக் குற்றஞ்சாட்டியே ஐ.தே.க அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவருமான அமிர்தலிங்கத்துக்கு எதிரான அந்தப் பிரேரணையை முன்வைத்தது. ஆளும் கட்சிக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை இருந்தமையால் அந்தப் பிரேரணை மிக எளிதில் நிறைவேற்றப்பட்டது.
இப்போதும் மரபுக்கு மாறாக மற்றொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை பேசுபொருளாகியுள்ளது. பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராகவே பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளித்துள்ளனர்.
அருண ஜயசேகர இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தபோதே 2019ஆம் ஆண்டு உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது என்றும் எனவே, அவர் அந்த விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் அந்த பிரேரணையில் வாதிடப்பட்டுள்ளது.
எனவே, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் பிரதி பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றுவது முறையாகாது என்ற அடிப்படையிலேயே அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அதனை கையேற்ற போதிலும், விவாதத்துக்காக அதனை சபையின் நாளாந்த நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது என்பது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டு வருவது மரபுக்கு முரணானது என்று அப்பிரேரணைக்கு எதிரானவர்கள் வாதிடுகின்றனர்.
அதேவேளை, பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டப்பூர்வமாக பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை என்பதால், அவர் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொட்பான விசாரணைகளில் தலையிடுவார் எனக் கூற முடியாது
என்றும் வாதிடப்படுகிறது.
அதேவேளை, சிங்கள தேசியவாதிகள் தமது கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுகின்றனர். புலிகளுக்கு எதிராகப் போரிட்ட ஒரு போர் வீரனுக்கு எதிராக இந்தப் பிரேரணை கொண்டு வருவதால் அதனை எதிர்க்க வேண்டும் என்பதே அவர்களது வாதமாகும்.
தாயக மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவும் இந்தக் கருத்தைத் தெரிவித்து இருந்தார். பழைய கதைகளை விடுத்து, தற்போது நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்க எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வருவதே பொருத்தமானதாகும் என்று அவர் வாதிட்டு இருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 2019ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னரும் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தொடர்ந்து கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக சில காலம் கடமையாற்றினார்.
அப்போதும் விசாரணையும் நடைபெற்றது. அவரும் இப்போது போலவே பாதுகாப்பு தொடர்பான முக்கிய பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் இராணுவ பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று எவரும் கோரவில்லை.
அதேவேளை, குண்டுத் தாக்குதல் இடம்பெறும் போது தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக கடமையாற்றும் ரஞ்சித் மத்தும பண்டாரவே சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார்.
அப்போது அவரது கட்சியான ஐதேகவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தேசிய பாதுகாப்பு சீர்குலைந்ததாலேயே குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது என்று அப்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி குற்றஞ்சாட்டியது.
ஆனால் அவர் அவ்வமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவில்லை. அவர் அவ்வமைச்சர் பொறுப்பில் இருக்கும் போதே குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அமிர்தலிங்கத்துக்கு எதிராக ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் கொண்ட ஆளும் ஐதேகவே நம்பிக்கையில்லாப் பிரேiணையை கொண்டு வந்தது. ஆனால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் போது அமைச்சர் இருக்கும் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது.
அத்தோடு, எதிர்க் கட்சியின் திலித் ஜயவீர போன்ற உறுப்பினர்களும் அதனை ஆதரிப்பதில்லை. இந்த நிலையில், அது நிறைவேறுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அது ஐக்கிய மக்கள் சக்திக்கும் தெரியும்.
ஆயினும், அவர்கள் ஆளும் கட்சியின் அனுமதியுடன் ஆளும் கட்சியையே விமர்சிக்க பாராளுமன்றத்தை மேடையாக பாவிக்கவே முயல்கின்றனர். இது ஒன்றும் புதிய விடயமல்ல. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஆளும் கட்சியை விமர்சிக்கப் பாராளுமன்றத்தில் இது போன்ற
உத்திகளை கையாண்டனர்.
திலித் ஜயவீர கூறுவதைப் போல, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராகவோ தற்போதைய குற்றச்செயல்கள் காரணமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக இருந்தாலும் எந்தக் கட்சி அதனைக் கொண்டு வருவது என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து
பிரதான கட்சிகளும் ஏற்கனவே நாட்டை ஆட்சி புரிந்த கட்சிகளாகும். அக்கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்திருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி புரியவில்லை என்று எவரும் வாதிட முடியாது. ஐதேகவின் தலைவர்களில் பெரும்பாலானவர்களும் பெரும்பாலான ஆதரவாளர்களுமே ஐதேகவிலிருந்து பிரிந்து 2020ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் பலர் கடந்த கால ஐதேக அரசாங்கங்களில் அமைச்சர்களாகவம் இருந்துள்ளனர். எனவே, தற்போதைய பிரதான கட்சிகளில் எவருக்கும் தமது ஆட்சிக் காலத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என்றோ குறைவாக இடம்பெற்றன
என்றோ கூற முடியாது.
பொலிஸ் அறிக்கைகளின் படி இவ்வருடம் இது வரை சுமார்
85 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சுமார்
45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் நுற்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் 103 பேர் கொல்லப்பட்டனர்.தற்போதைய நிலையில், இவ்வருடமும் கடந்த வருடத்தில் போலவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை நூறுக்கு அதிகமாகலாம்.
ஆயினும், இவ்வருடம் கடந்த வருடத்தைப் பார்க்கிலும் அதிகமாக கொலைகள் இடம்பெறும் என்று கூற முடியாது. பெரும்பாலும் கொலைகள் அதை விட குறைவாகவே இருக்கும். அதாவது, குற்றச் செயல்களைப் பொறுத்தவரை கடந்த வருடம் இவ்வருடத்தைப் பார்க்கிலும் மோசமாக இருந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளை பார்கிலும், குறைவாகவே கொலைகள் இடம்பெற்றுள்ளன. அவ்வருடமும் நூற்றுக்கு அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் 61 பேர் மட்டுமே அவற்றில் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் கடந்த வருடங்களைப் பார்க்கிலும், இந்த வருடம் குற்றச் செயல்களும் கொலைகளும் குறைந்திருந்தாலும். நாட்டில் தற்போது இடம்பெறும் குற்றச் செயல்களினதும் கொலைகளினதும் எண்ணிக்கை பாரதூரமானதாகவே கருதப்பட வேண்டும்.
ஒரு காலத்தில் நாட்டில் தூர கிராமமொன்றிலாவது ஒரு கொலை இடம்பெற்றால் அது பல வாரங்களாக ஊடகங்களுக்கு முக்கிய செய்தியாக இருக்கும். 1951ஆம் ஆண்டு இடம்பெற்ற சதாசிவம் கொலை அதற்கு ஓர் உதாரணமாகும்.
அச்சம்பவத்தைப் பல வருடங்களாக ஊடகங்கள் முக்கிய சம்பவமாகக் கருதின. 1978ஆம் ஆண்டு இடம்பெற்ற டல்ரின் இங்ரம் கொலையும் முன்னைய தலைமுறையினரிடையே இன்னமும் பேசுபொருளாகிறது.
எனவே தற்போதைய குற்றச் செயல்களின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல. எனவே அரசாங்கம் தற்போதைய குற்றச் செய்லகளை கட்டுப்படுத்த புதிய உத்திகளை கண்டுபிடிப்பது கட்டாய கட்மையாக உள்ளது.
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago