2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

எதிர்பார்க்கப்படும் அரசியல் நேர்மை

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் மேற்கொண்ட இந்தியாவுக்கான முதல் வெளிநாட்டு விஜயத்தில் ஆராயப்படாத விடயமாக இலங்கைத் தமிழர் பிரச்சினை, மாகாண சபைத் தேர்தல், 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவைகள் அன்றைய வேளையில் விமர்சிக்க பட்டிருந்தன. ஆனால், அது அலட்டிக் கொள்ளப்படவில்லை.

 இதற்கு சுதந்திர இலங்கையில் எப்போதுமே ஆளும் தரப்பாக இருந்து வருகின்ற பௌத்த-சிங்கள அதிகார வர்க்கம் இலங்கை சிறுபான்மையினச் சமூகமான தமிழர்களின் உரிமை பற்றி அலட்டிக் கொள்ளாது என்பதனையே வெளிக்காட்டுகிறது.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்த அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படாமல் இருந்தமையினால், அஹிம்சைப் போராட்டங்களைத் தொடங்கினர்.

அந்த வழிமுறைகளின் தோல்வி மற்றும் அதனால் உருவான விரக்தி காரணமாகவே 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டு கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதனையடுத்து ஒடுக்கு முறையிலிருந்து மீள்வதற்குத் தனிநாடு ஒன்றைத் தோற்றுவிப்பதை இலக்காகக் கொண்டு 1977இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒருவகையில் பார்த்தால் தொடர்ச்சியான அடக்குமுறைகள், உரிமை மறுப்புகளின் பின்தான் தனிநாட்டுக் கோரிக்கை உருவானது. 1977வரை மிதவாதத் 
தமிழ் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் 
மக்கள் அதன் பின்னரே மனோநிலையை மாற்றிக் கொண்டனர்.

1956, 1958, 1977, 1983 என தமிழர்கள் மீது நடந்தேறிய வன்முறைகள் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறுவதற்கு வலுப்பெறுவதற்கும் காரணமாக இருந்தாலும் 1990களுக்குப் பின்னரே தீவிரமான ஆயுத யுத்தம் வடக்குக் கிழக்கில் உருவானது. இடையில், 1983- 1990களில், இந்தியாவின் உள் வருகை, திம்பு பேச்சுவார்த்தை, இந்திய இலங்கை ஒப்பந்தம், வடக்கு கிழக்கு இணைப்பு, இந்திய இராணுவத்தின் வருகை,

வட-கிழக்கு மாகாண சபை அமைவு, இந்திய இராணுவத்தின் வெளியேற்றம் போன்றவை இடைப்பட்ட காலத்தில் நடந்தேறியிருந்தன. 1990இல் கலைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபை  2008ஆம் ஆண்டு  கிழக்குக் தனியான மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வரையில் கூட்டப்படவில்லை. 

இலங்கைக்கு 1948ல் பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழ் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் பலன் கிடைக்கவில்லை. அஹிம்சைப் போராட்டங்கள் பலனளிக்கவில்லை.

தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கூட 1977 ல் இருந்து 1983 வரை தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்டிருந்த அரசியல் நடவடிக்கைகள் எதுவும் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டு வரவில்லை. 

ஆயுதப் போராட்டமாக மாறிய இலங்கைத் தமிழர் பிரச்சனையில் 1983இல் இந்தியாவின் நேரடித் தலையீடு 1987 ஜூலை 29இல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையில் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் வரை நீண்டிருந்தது.

அதுவே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பயணத்தில் முதலும் முடிவுமான முக்கிய மைல்கல்லாகும். அதன் பின்னர் எந்தவிதமான தீர்க்கமான முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா விரும்பி மேற்கொண்டதல்ல. அதற்கு இந்திய அழுத்தத்தினாலேயே நடைபெற்றது என்றும் கருத்துக்கள் உண்டு. 

இருந்தாலும், இந்த ஒப்பந்தத்தின் நன்மைகளைத் தமிழர்கள் அடைந்து கொள்ள முடியாதபடி பல்வேறு ஆயுத இயக்கங்கள் இருந்தாலும் தமிழ் மக்களுக்காகத் தாம் மாத்திரமே போராடுவதாகக் கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடையாக இருந்ததென்றும் விமர்சனங்கள் இருக்கின்றன.

அது ஒருவகையில், உண்மையும் கூட. ஏனெனில் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் 
பின்னர் மீண்டும் இந்தியா உருவாக்கிய 13ஆவது திருத்தத்தையே தமிழர் தரப்பு கோரி நிற்கின்றனர். 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, மாகாண சபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது.

மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மாத்திரமல்லாமல், முழு நாட்டிலும் 
9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. வடக்கு கிழக்குக்குத் தற்காலிக இணைப்பினடிப்படையில் 1988இல் வட கிழக்கு மாகாண சபைக்கு முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 199இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வட கிழக்கு மாகாண சபையின்  முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும் வெளியேறினார். 

அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச வட கிழக்கு  மாகாண சபையைக் கலைத்தார். பின்னர் 2006 இல் ஜே.வி.பி. உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டு தனித்தனி மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு முதலாவது தேர்தல் 2008இலும் இரண்டாவது தேர்தல் 2012இலும் வடக்கு மாகாண சபைக்கு 2013இலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 
 இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் இந்தியாவின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்று பேரினவாதத் தரப்பினர் கூறிவந்தனர்.

அதே போன்று தமிழ்த் தரப்பும் அன்றைய காலத்தில் ஒப்புவித்தனர். இருப்பினும், 
ஒரு குறிப்பிட்ட தமிழ்த் தரப்பினர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் உருவான மாகாண சபை முறைமையை ஏற்பதற்கும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு செயற்பட்டுக் கொண்டே இருந்தனர். 

ஆனால், இலங்கையில் சமாதானப் பணிக்காக வந்திருந்த இந்திய இராணுவத்துடன் புலிகளின் முரண்பாடு,  இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அனுசரித்துச் செயற்பட்ட முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் 1989இல் கொல்லப்பட்டமை, வட கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டமை, 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா மற்றும் 12 உறுப்பினர்கள் 1990 ஜூன் 19ஆம் திகதி சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டமை, இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி 21.05.1991இல் தமிழ்நாடு சிறிபெரும்புதூரில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமை போன்ற காரணங்கள் 13ஆவது திருத்தம் குறித்த இந்திய அக்கறை குறைக்கக் காரணமாகியது.

அதே நேரத்தில் இலங்கை அரசின்  13ஐச் சிதைக்கும் விடயத்திற்கும் உந்துதலாக அமைந்தது எனலாம். இந்த அக்கறை குறைவும் 13ஐ சிதைப்பதற்கான உந்துதலும் இணைந்திருந்த வடக்கு கிழக்கு 2006இல் சட்ட ரீதியாக பிரிவதற்கும் காலாகின. இந்த பிரிப்பினைச் செய்து வைத்தது ஜே.வி.பியே. இந்த ஜே.வி.பியே இப்போது ஆட்சியில் இருக்கிறது. இந்த ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலை நடத்தும் படி தமிழர்கள் விடுக்கும் கோரிக்கைகளைக் கணக்கெடுக்கும் என்று நம்புவது வீண் முயற்சியாக இருக்கலாம்.

அதே நேரத்தில் அரசுக்கு எண்ணம் தோன்றும் போதே நடைபெறும் என்பதுதான் யதார்த்தம். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்‌ஷ, ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க என ஜனாதிபதிகள் மாறிக் கொண்டிருந்தாலும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதில் எந்தவித கொள்கை மாற்றமும் ஏற்பட்டிராத இலங்கையில் தமிழர் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வும் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுவதற்கு ஏற்றதே.

2015இல் உருவான நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் 2017ஆம் ஆண்டு  நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது.

இந்தத் தேர்தலை நடத்துவதாக இருந்தால், புதிய தேர்தல் சட்டமொன்றைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் தேர்தலை நடத்துவது. அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை  பாராளுமன்றத்தில் ஏற்படுத்துவது. 

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தாலும் இந்த இரண்டிலொன்று நடைபெற்றாலே மாகாண சபைத் தேர்தல் என்பதுதான் நிச்சயம்.

அதற்கு இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ஜே.வி.பி. தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மனது வைக்க வேண்டும் என்பதே யதார்த்தம். அதற்கு இந்திய விஜயத்தின் போது அலட்டிக் கொள்ளாமையை நாம் உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். இதில் அரசியல் நேர்மை இருக்க வேண்டும் என்றும் நம்புவோம். 

லக்ஸ்மன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .