2025 மே 09, வெள்ளிக்கிழமை

எந்த முரண்பாடு இருந்தாலும் ஜனாதிபதியும் ஐ.தே.கவும் பிரிந்து வாழ முடியாது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜனவரி 24 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளியிடும் கருத்துகளைப் பற்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் மிகவும் உணர்ச்சிகரமான உரையொன்றை ஆற்றிவிட்டு, அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் எனச் செய்திகள் கூறின.   

அது, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முறுகல் நிலையின், மிகவும் பாரதூரமான வெளிப்பாடாகும் என்பதில் சந்தேகமே இல்லை.  

ஜனாதிபதியைப் பற்றி, ஐ.தே.க அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு மேடைகளில், மிக மோசமாகப் பேசுவதைப் பார்க்கும்போது, ஒரு நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி மட்டுமல்ல, சாதாரண பிரஜைகூட தனக்கு எதிரான, அவ்வாறான அவதூறுகளைப் பொறுத்துக் கொண்டு இருக்கப் போவதில்லை என்றுதான் கூற வேண்டும்.  

இந்த அவதூறான உரைகள் மூலம், அவதூறுரைத்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்போது நாட்டில் நிலவும் சுதந்திர சூழலை, துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.   

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அவரது அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவரைப் பற்றி, ‘பிக்பொக்கட் ஜனாதிபதி’ என்றும் ‘நன்றி கெட்டவன்’ என்றும் பேசியிருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை, எவரும் ஊகித்துக் கொள்ள முடியும்.  

ஐ.தே.கவை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தற்போதைய ஜனாதிபதிக்கு உள்ள மக்கள் ஆதரவைக் கருத்தில் கொள்ளும் போது, அவர் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விட, மிகவும் பலவீனமானவர் என்பது உண்மையே. ஆனால், அதற்காக அவரைத் தாக்கிப் பேசும் ஐ.தே.க, விளங்கிக் கொள்ளாத உண்மை என்னவென்றால், ஜனாதிபதியை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பார்த்தால், ஐ.தே.கவும் மிகவும் பலவீனமான அரசாங்கம் என்பதேயாகும்.  

பொதுவாகக் கூறுவதாக இருந்தால், அரசாங்கத்தின் மீது ஜனாதிபதியின் தலைவிதியும் ஜனாதிபதியின் மீது அரசாங்கத்தின் தலைவிதியும் தங்கியுள்ளன.   

அரசாங்கத்தில் உள்ள ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், இடையிலான கருத்து வேறுபாடுகள், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது முதல் காணக்கூடியதாக இருந்தது.   

ஆனால், ஆரம்ப காலக் கருத்து வேற்றுமைகள், மோதல்கள் என்று கூறுமளவுக்கு இருக்கவில்லை. அவை வெறுமனே வாய்ச்சவடாலாகவே கருத முடிந்தது.  

ஸ்ரீ ல.சு.க அமைச்சர்களே, ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டு இருக்கும் நிலையிலேயே, தமது ஆட்சி சகாவான ஐ.தே.கவைத் தாழ்த்திப் பேசி, அதைச் சீண்ட முதலில் ஆரம்பித்தனர்.   

இந்திய உயர் சாதியினர் என்று கூறிக் கொள்வோர், தீண்டப்படாதோர் என அவர்களே அழைப்பவர்களைப் பார்த்து, இகழ்ந்து பேசுவதைப் போல், ஸ்ரீ ல.சு.க அமைச்சர்கள் அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம், தமது தூய்மை மாசுபடுத்தப்பட்டதைப் போல் அப்போது பேசலானார்கள்.   

ஐ.தே.க இதற்கு மிகவும் தாமதமாகவே பதிலளிக்க முற்பட்டது. குறிப்பாக, மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்ததை அடுத்தே, அவர்கள் ஸ்ரீ ல.சு.கவை தாக்க ஆரம்பித்தனர்.   

ஏனெனில், அந்தப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட பல விடயங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அம்பலமாகின. அதேவேளை, அந்த விடயத்தில் ஐ.தே.கவைச் சார்ந்தவர்களே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். எனவே, ஜனாதிபதியும் ஸ்ரீ ல.சு.கவும் தமக்குத் தீங்கு விளைவித்ததாக ஐ.தே.கவில் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்.   

எனவேதான் அவர்கள், ஆணைக்குழுவின் விசாரணைகளால் குழப்பமடைந்து, ஜனாதிபதியையும் ஸ்ரீ ல.சு.கவையும் சாட ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனாசிங்க, நாடளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோரே அவர்களில் ஜனாதிபதியை விமர்சிப்பதில் முன்னணியில் உள்னனர்.   

ஜனாதிபதி திருப்பித் தாக்கும் அளவுக்கு அவரை முதன் முதலாக ஆத்திரமூட்டியவர் இராஜாங்க அமைச்சர் சேனாசிங்கவே. கடந்த நவம்பர் மாதத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய அவர்,
“ஜனாதிபதியின் செயற்பாடுகளால் தாம் வெறுப்படைந்து இருப்பதாகவும், பிணைமுறி விவகாரத்துக்காக விசாரணை ஆணைக்குழு நியமித்த ஜனாதிபதி, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை விசாரணை செய்வதற்காக, ஆணைக்குழுக்களை நியமிக்காதது ஏன்” என வினவினார்.   

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவானது ஐ.தே.கவுக்கு எதிரான சதியெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.  

நிக்கவெரட்டியவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, “தமக்குத் தேவையற்ற விடயங்களில் தலையிட்டு, பின்னர் அழ வேண்டாம்” என எவரினது பெயரையும் குறிப்பிடாமல் கூறினார்.   

அதனையடுத்து, “ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார்.   

பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, ஜனாதிபதி அது தொடர்பாக, ஜனவரி மூன்றாம் திகதி, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தினார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அவரது மருமகனான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.  

இதையடுத்து, ஐ.தே.க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது தலைவரின் ஆலோசனையை மறந்தோ அல்லது அது மதிக்கத்தக்கது அல்ல என்று நினைத்தோ, மீண்டும் ஜனாதிபதியைத் திட்ட ஆரம்பித்தனர். ஜனாதிபதியின் கட்சியில்லாமல், ஐ.தே.கவின் அரசாங்கமொன்றை உருவாக்கப் போவதாகவும் சிலர் கூறலாயினர்.   

மரிக்காரே, ஜனாதிபதியை மிக மோசமாக திட்டினார். ஜனாதிபதியை ‘பிக்பொக்கட் ஜனாதிபதி’ என வர்ணித்த அவர், ஐ.தே.கவின் வாக்குப் பலத்தால் பதவிக்கு வந்த ஜனதிபதி, இப்போது ஐ.தே.கவுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் நன்றி கெட்ட மனிதர் என்றும் கூறினார்.   

பெப்ரவரி 10 ஆம் திகதி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர், ஸ்ரீ ல.சு.ககாரர்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பிப்பதாகவும் அவர் எச்சரித்தார்.   

மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை உண்மையே. ஆனால், அவ்வாறு பதவிக்கு வந்த ஜனாதிபதி, பிணைமுறி ஆணைக்குழுவை நியமித்ததனால், அவரை நன்றி கெட்டவர் எனக் கூற முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.   

முதலாவதாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, ஐ.தே.க, தியாக மனப்பான்மையினால் மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐ.தே.கவின் வேட்பாளர் ஒருவரை, குறிப்பாக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைத் தேர்தலில் நிறுத்தினால் வெற்றி பெற முடியாது என்பதாலேயே, ஐ.தே.க 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைத்திரிபால சிறிசேனவைப் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டது.   

அந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதன் நேரடி விளைவாகவே, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ.தே.க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவு, சாதாரண வாக்காளர்கள் மீது, மானசீகமாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை அதற்குக் காரணமாகும்.   

பதவிக்கு வந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் வெறும் 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார்.   

இது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களை மேலும் மானசீகமாக வீழ்த்திவிட்டது. பொதுத் தேர்தல் நெருங்கியபோது, ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த சார்பாகச் செயற்பட்ட ஸ்ரீ ல.சு.கவின் பொதுச் செயலாளர் அனுர பிரியனதர்ஷன யாப்பாவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவையும் அப்பதவிகளில் இருந்து நீக்கிவிட்டுத் தமக்குச் சார்பான இருவரை நியமித்தார்.   

பொதுத் தேர்தலில் தாம் தலைமை தாங்கும் ஐ.மு.சு.மு வெற்றி பெற்றாலும் மஹிந்தவைப் பிரதமராக நியமிப்பதில்லை எனக் கூறி, ஜனாதிபதி தேர்தல் காலத்தில், அறிக்கையொன்றின் மூலம் கூறினார்.   

அதன் மூலம், அவர் தாமே தலைமை தாங்கும் ஐ.ம.சு.முவை தோற்கடித்து ஐ.தே.க வெற்றி பெற மேலும் சாதகமான சூழலை உருவாக்கினார். எனவே, ஜனாதிபதி மைத்திரிபாலவே, ஐ.தே.கவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்றும் வாதிடலாம்.  

அரசியலில் நாகரிகம் என்று ஒன்று இருந்தால், தத்தமது வெற்றிக்காக ஐ.தே.கவும் மைத்திரியும் ஒருவருக்கு ஒருவர் கடன்பட்டுள்ளனர். தார்மீக ரீதியில் தாமே உயர்ந்தவர் என மைத்திரிக்கோ, ஐ.தே.கவுக்கோ கூற முடியாது.  

இன்னமும் ஐ.தே.கவினாலேயே, மைத்திரி ஜனாதிபதி பதவியில் தங்கியிருக்கிறார். ஐ.தே.ககாரர்களுக்கு வேண்டுமென்றால் மஹிந்தவின் ஆட்களோடு சேர்ந்து, குற்றப் பிரரணை மூலம் மைத்திரியைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.   

அதேபோல், மைத்திரியின் ஆதரவாளர்களினாலேயே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை நிறுவத் தேவையான 113 நாடாளுமன்ற ஆசனங்களை தேடிக் கொண்டார். மைத்திரியின் ஆட்கள் அரசாங்கத்திலிருந்து விலகினால் ஐ.தே.க தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியாது. மஹிந்தவின் ஆட்களுக்கும் முடியாது. எனவே நாட்டில் அராஜகம்தான் தோன்றும். ஐ.தே.ககாரர்கள் அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.   

இரு சாராருக்கும் பிரிந்து செயற்பட முடியாது. மைத்திரி கடந்த வாரம் அமைச்சரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தபோது, பிரதமர் பின்னால் சென்று, அவரை அழைத்து வர, அதுவும் ஒரு காரணமாகும்.  
பிணைமுறி ஆணைக்குழுவை நியமித்ததற்காக, ஐ.தே.க, மைத்திரியை “நன்றி கெட்டவர்” எனக் கூற முடியாது என்பதற்கான இரண்டாவது காரணம் என்னவென்றால், மைத்திரியின் அந்த நடவடிக்கை சரியானது என்பதே.   

ஊழல்களை ஒழிப்பதாகவும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் வாக்குறுதி அளித்தே, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவும் ஐ.தே.கவும் பதவிக்கு வந்தனர்.  

எனவே, இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் அல்லது மிகப் பெரிய ஊழல்களில் ஒன்றான பிணைமுறி மோசடி தொடர்பாக, விசாரணை செய்வதற்காகத் தாம் ஆணைக்குழுவொன்றை நியமித்தமை தவறா என ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியமை சரியானதே.   

ஐ.தே.க, ஜனாதிபதியைப் பதவிக்கு கொண்டு வந்தது என்பதற்காக, ஜனாதிபதி அவ் ஆணைக்குழுவை நியமித்தமை பிழையெனக் கூற முடியாது.  

ஆரம்பத்தில், பிணைமுறி மோசடி எதுவும் இடம்பெறவில்லை என ஐ.தே.க மறுத்து வந்தது. அதன்பின்னர், அதை மூடிமறைக்கப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. ஆனால், பகிரங்கமாக நடைபெற்ற பிணைமுறி ஆணைக்குழுவின் விசாரணையை அடுத்து, அவ்வாறானதொரு மோசடி இடம்பெறவில்லை என எவராலும் கூற முடியாது.   

இந்த விசாரணை, தமக்கு எதிரானது என்று ஐ.தே.கவில் பலர் நினைப்பதே இங்குள்ள பிரச்சினையாகும். ஐ.தே.கவில் சிலர், இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே, ஐ.தே.க என்ற கட்சி இந்த ஊழலைச் செய்யவில்லை என்றால், அந்த யதார்த்தத்தை அக்கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுன்ள முரண்பாடுகள் தீர்ந்துவிடும்.  

போர் குற்றங்களைச் செய்ததாக இராணுவத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்து, மொத்தமாக இராணுவம் குற்றமிழைக்கவில்லை; அதில் உள்ள தனிநபர்கள் தான் குற்றமிழைத்துள்ளனர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று வாதிட்ட ஐ.தே.க, அதேபோல் பிணைமுறி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐ.தே.ககாரர்களுக்கு எதிராக விசாரணை செய்து, கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.   

அதன் மூலம், தாம் உண்மையிலேயே ஊழல்களுக்கு எதிரான கட்சி என்பதை ஐ.தே.க நிரூபிக்க வேண்டும்.  
ஐ.தே.கவுக்கு வேறு வழியில்லை; ஏனெனில் அக்கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் தற்போதைய நிலையில் பிரிந்து வாழ முடியாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X