R.Tharaniya / 2025 நவம்பர் 18 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பரவலாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலிலும் அரசாங்கம் இன்னும் தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது. அடுத்த வருடம் தேர்தலை நடத்த முடியும் என்பதுதான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகபட்ச அறிவிப்பாகும்.
அரசாங்கம் பல்வேறு காரணங்களினால் உடனடியாக மாகாண சபை தேர்தலுக்குச் செல்வதற்கு விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது.
சில ‘முக்கிய தரப்புக்களை’ வைத்துத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இராஜதந்திரிகளுக்கு அரச தரப்பில் தேர்தலுக்கான தாமதங்கள் பற்றி விளக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
அரசாங்கத்தின் வாக்குகள் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாகவும், அதனால் மாகாண சபை தேர்தலை நடத்த தேசிய மக்கள் சக்தி தயங்குவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், மாகாண சபை தேர்தல் என்பது வெறுமனே வெற்றி தோல்வியுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.
அதற்கப்பாலான பல காரணங்கள் உள்ளன.நாம் முன்னைய பத்திகளில் குறிப்பிட்டதைப் போலவே, மாகாண சபை தேர்தல் என்பது 13ஆவது திருத்தத்துடனும், இலங்கை மீதான இந்தியாவின் பூகோள அரசியலுடனும் தொடர்புபபட்டது.
அத்துடன், 13ஆவது திருத்தத்தின் கீழுள்ள அதிகாரங்களை எந்தளவுக்கு மாகாணங்களுக்கு வழங்குவது என்ற முடிவை எடுக்காமல் அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல முடியாது.
இதேவேளை, சட்ட ரீதியான சில தேவைப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஒன்று, மாகாண தேர்தல் சட்டத்தில் அவசியமான திருத்தத்தைக் கொண்டு வருதல், இரண்டாவது, எல்லை மீள் நிர்ணயத்தை நிறைவு செய்தல் ஆகும்.
எல்லை மீள் நிர்ணயத்திற்காகப் பல தடவைகள் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதும், அது வெற்றிகரமாக தமது பணியை நிறைவு செய்திருக்கவில்லை.
இந்நிலையில், கடைசியாக அதாவது 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அரசாங்கம் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமா? அல்லது புதிய குழுவொன்றை நியமிக்குமா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. அதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் சட்டப்படியான எல்லை மீள் நிர்ணயங்களும், இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள் நிர்ணயங்களும் கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. பிரதேச, மாவட்ட, மாகாண எல்லைகள் குறுக்கப்பட்டதால் முஸ்லிம்களின் ஆட்புல எல்லை
குறைக்கப்பட்டதுடன், காணிப் பிரச்சினையும் மேலும் சிக்கலாக்கப்பட்டது எனலாம்
கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தெஹியத்தக்கண்டிய வரையில் மாவட்டத்தின் எல்லை விஸ்தரிக்கப்பட்டு சிங்கள மக்களின் விகிதாசாரம் எவ்வாறு அதிகரிக்கப்பட்டது என்பதையும் பற்றி அறியாதவர்கள், வரலாற்றைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
இதுபோல மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்திலும் நாட்டின் வேறு பல இடங்களிலும் முஸ்லிம்களுக்குரிய நிலப்பரப்பின் எல்லைகள் கபளீகரம் செய்யப்பட்ட வரலாறு உள்ளது. இதனாலேயே பல எல்லை முரண்பாடுகள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்குக் காணிப் பற்றாக்குறையும் ஏற்பட்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
இவ்வாறான பின்னணியில், 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவில் அதிர்ஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆளுமையும் நியமிக்கப்பட்டிருந்தார். அவர்தான் (மறைந்த) பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்.
துறைசார் வல்லுநர் மட்டுமன்றி, முஸ்லிம் சமூகம் சார்ந்த அக்கறையைக் கொண்டிருந்தவருமான பேராசியர் ஹஸ்புல்லாஹ், முஸ்லிம் பிரதேசங்களின் எல்லைகளை நியாயமான அடிப்படையில் உறுதிப்படுத்துவதற்காகக் கடுமையாகப் பாடுபட்டார்.
ஆனால், முஸ்லிம் பகுதிகள் பலவற்றின் எல்லைகள் சூறையாடப்படுவதையும், நியாயமற்ற விதத்தில் மீள் நிர்ணய பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் கண்டு அவர் கொதித்தெழுந்தார். அதனை எதிர்த்தார். அது பற்றி தனக்குத் தெரிந்த முக்கிய நபர்களுக்கும் சொல்லி வைத்தார்.
அந்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் கடுமையாக அதிருப்தியுற்று, மனமுடைந்து போயிருந்த நிலையிலேயே ஹஸ்புல்லாஹ் மரணமடைந்தார். அதன் பிறகு அவ்விடத்திற்கு ஏ.எம்.நஹியா நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த இறுதி அறிக்கை வெளிவரவில்லை.
எனவே, எல்லை மீள் நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்திற்குச் சாதகமில்லாத பல நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளது.
எனவே, இதனைப் பற்றி அறிந்து கொண்டு முஸ்லிம் சமூகம் செயற்பட வேண்டும். அதைவிடுத்து, முஸ்லிம் தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றியதைப் போல ஆழ அகலம் தெரியாமல் கதைக்கக் கூடாது.
தேர்தல் தொகுதிகள் உள்ளடங்கலாக, ஏனைய அனைத்து அடிப்படைகளிலும் வரையறுக்கப்படுகின்ற நிலங்களின் எல்லை என்பது மிக மிக முக்கியமான விவகாரமாகும். முஸ்லிம் சமூகம் ஏற்கனவே இன விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகளை இல்லாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. காணிப் பங்கீடு நியாயமாக மேற்கொள்ளப்படவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளன. கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இதில் 10 சதவீத பிரச்சினையையேனும் தீர்த்து வைக்கவில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகளில் இருவர் மட்டும் அபிவிருத்தி அரசியலில் நிறையச் செய்துள்ளார்கள். மற்றையவர்கள் அபிவிருத்தி அரசியலில் கூட ஒன்றும் செய்யவில்லை. மொத்தமாக எல்லா தலைவர்களும் எம்.பிக்களும் உரிமை அரசியலில் ஒரு அடியைக் கூட முன்னோக்கி எடுத்து வைக்கவில்லை என்பதுதான் உண்மையாகும்.
இப்போது கூட, நிந்தவூரில் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டிடத்திற்கு நிதி ஒதுக்குவதாக பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளதை உரிமை கோருவதில் காட்டுகின்ற அக்கறையை முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான, நீண்டகாலப் பிரச்சினைகளை தீர்ப்பதில் எந்த முன்னாள், இந்நாள் எம்.பியும் துளியளவும் வெளிப்படுத்தவில்லை என்பது வெட்ககரமானது.
முஸ்லிம் தலைவர்கள், எம்பி.க்கள் இவ்வாறான பிரச்சினைகளை கையாள விரும்புகின்றார்களா? அல்லது அதற்கான ஆளுமையும் தைரியமும் அவர்களுக்கு இல்லைய என்பது நீண்டகால கேள்வியாகும்.
மறுபுறத்தில், அரசியல் முன்னனுபவம் இன்றி, ஏன்.பி.பி. அரசாங்கத்தில் அதிர்ஷ்டவசமாக தேசியப்பட்டியலில் எம்.பி.யான வடக்கு, கிழக்கின் ஒரேயொரு ஆளும் தரப்பு பிரதிநிதியான ஆதம்பாவாவின்அண்மைக்கால தடுமாறும் உரைகளை பார்க்கின்ற போது, இவ்வாறான பாரதூரமான காணிப் பிரச்சினைகளை ஆவணப்படுத்தி, காத்திரமாகப் பேசி, தீர்த்து வைப்பார் என்று நம்பியிருக்கவும் முடியாது.
எனவே, முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்கள், சிவில் சமூகம்தான் இதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஜே.வி.பி. மற்றும் என்.பி.பியின் கட்டுக்கோப்பை மீறி, சமூகம் என்ற அடிப்படையில் ஆளும் தரப்பின் முஸ்லிம் எம்.பிக்கள் யாரும் முன்வருவார்கள் என்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட வேண்டும்.
மாகாண சபை தேர்தல் நடக்குமா? இல்லையா? எப்போது நடக்கும்? யார் யாரை வேட்பாளர்களாக களமிறக்குவது? என்பதை விட, எல்லை மீள் நிர்ணயம் எவ்வாறு அமையப் போகின்றது, முஸ்லிம்கள் வாழும் தேர்தல் தொகுதிகள் மற்றும் பிரதேசங்களின் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்துவது இன்றியமையாதது.
எல்லை மீள் நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், இது தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் இயங்க வேண்டும்.
அந்த அறிக்கையின் உள்ளடக்கம் முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையுமென்றால், அதனை எவ்வழியிலேனும் மாற்றியமைப்பதற்கும், எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை, பங்கை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதுதான் இப்போது அவசரத் தேவையாகும்.
23 Nov 2025
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Nov 2025
23 Nov 2025
23 Nov 2025