2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஐ. அமெரிக்காவின் தகவலறியும் சட்டமும் அதன் மட்டுப்பாடுகளும்

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஜனகன் முத்துக்குமார்

விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேயின் அடைக்கலக் கோரிக்கையை ஈக்குவடோர் அரசாங்கம் இவ்வாண்டு ஏப்ரலில் மறுதலித்ததுடன், கொடுக்கப்பட்டிருந்த ஈக்குவடோரிய குடியுரிமையை அகற்றிவிட்டு, இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸ் அவரை தூதரகத்தில் இருந்து கட்டாயமாக அகற்றும்படி அழைத்திருந்தது. தொடர்ச்சியாக விரைவிலேயே, அசாஞ்சே சுவீடன் நாடுகடத்தல் தொடர்பான வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டபோதிலும், அந்த பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இப்போது அவர் ஹெல்மண்ட்ஸ் சிறைச்சாலை பெல்மார்ஸில் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இலண்டனில் அசாஞ்சே கைது செய்யப்பட்ட நாளன்று, ஐக்கிய அமெரிக்கா, அவரை ஒரு கடவுச்சொல்லை சிதைக்க முயன்றதாகக் கூறப்பட்டதன் மூலம் கணினி ஊடுருவலை செய்யுமாறு சதித்திட்டம் போட்டார், இதனால் ஏற்கெனவே ஐக்கிய அமெரிக்க உளவுச் செய்திகளை அசாஞ்சேக்கு கொடுத்த செல்சி மன்னிங் வேறு ஒரு பயனர்பெயரைப் பயன்படுத்தி அதிகமான தகவல்களைப் பெற முயற்சித்தார் என்பதற்காக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட அதேவேளை, அசாஞ்சேக்கு எதிராக பெரும் நீதிமன்றம் முன் சாட்சியம் கொடுக்க மறுத்ததற்காக செல்சி மன்னிங் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது மீளவும், செல்சீ மன்னிங் அசாஞ்சியின் வழக்கில் 2011இல் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களில் அசாஞ்சே இன்னும் கூடுதலான 17 குற்றச்சாட்டுகளில் உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் அமெரிக்க சிறைச்சாலையில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவழிப்பதை ஒத்த கூடுதலான தண்டனையைப் பெறகூடிய வகையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சுவீடனின் வழக்கறிஞர்கள் அசாஞ்சேயை பாலியல் பலாத்காரத்துக்கான விசாரணை மற்றும் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதற்கு மற்றொரு கோரிக்கையை தயார் செய்துள்ளனர் என்பது மறுபுறத்தில் குறிப்பிடத்தக்கது.

அசாஞ்சே, ஒரு நாஸிஸ புத்திசாலித்தனமாக ஒருவராகவே, அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதிலும், சிவில் ஆர்வலர்களை பொறுத்தவரை, இது ஒரு கருத்து சுகந்திரம், தேசியமயமாதலும் அதற்கு அடுத்தபடியான நாடுகளின் சர்வாதிகார போக்கும், அதற்காக பலம் பொருந்திய நாடுகள், தகவல் தெரிவதற்கான உரிமைகளை மறுத்தல் அல்லது கட்டுப்படுத்துதலின் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சொல்லப்போனால், இந்நிகழ்வு அக்கறையுள்ள இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. முதலாவது அரசாங்க குற்றங்களை வெளியில் கொண்டுவருபவர்களை அரசாங்கங்களால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதும், இரண்டாவதாக, அசாஞ்சசேக்கு என்ன நடக்கிறது என்பதிலிருந்து நமது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்க்கான எதிர்கால விளைவுகளுமாகும்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முதலாம் உலகப் போருக்குப் பின்னரான உளவுச் சட்டத்தின் பயன்பாட்டை மீண்டும் அசாஞ்சே வழக்கில் பயன்படுத்துவது முதலாவாவது பிரச்சனைக்குரிய விடயமாகும். உளவுச் சட்டம் என்பது அரசாங்க இரகசியத்தைப் பற்றிய தகவலை குறிப்பாக முறைதவறிய தகவல்களைப் பெறுவதை தடைசெய்யும் தணிக்கை சட்டமாகும். இது ஜனநாயக மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தின் தூணாக பத்திரிகை சுதந்திரத்தை உத்தரவாதமளிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் திருத்தச் சட்டத்தை மீறுகிறது. இது ஒரு பொது நலன் உளவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

1971 ல் பென்டகன் ஆவணங்களை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை பிரசுரித்த போது, ​​குறிப்பாக, மேற்சொன்ன சட்ட வரையறை மீளவும் புதுப்பிக்கப்பட்டு அதன் தார்ப்பரியங்கள் அகலமாக்கப்பட்டு உளவுச் சட்டம் சட்டமாக மாறியது ஒரு புறமிருக்க, கடந்த 100 ஆண்டுகளில் இரகசியத் தகவலை பெறவோ அல்லது வெளியிடவோ ஒரு பத்திரிகையாளரை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஒருபோதும் குற்றஞ்சாட்டப்பட்டதாகவ அல்லது தண்டனை வழங்கியதாகவும் வரலாறுகள் இல்லை. இது ஐக்கிய அமெரிக்க அரசாங்கங்கள் பத்திரிக்கை சுகந்திரத்தை பாதுகாத்ததன் ஒரு வெளிப்பாடாகவே இன்றுவரை ஐக்கிய அமெரிக்க மக்கள் பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் அமெரிக்கா அரசாங்கம் உளவு தொடர்பான சட்டத்தை கையாள்வது பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி அமைப்புக்களிடையே கவலைகளை எழுப்புகிறது. இது, ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பத்திரிகைத் தொழிலுக்கு எதிரான ஒரு புதிய முன்னோக்கை திறக்கிறது எனவும், இது ஐக்கிய அமெரிக்க மக்களின் தகவல் பெரும் சுகந்திரத்தை மறைமுகமாக மிரட்டும் ஒரு செயல்பாடு எனவுமே சிவில் ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.

இரண்டாவது, அசாஞ்சே ஒரு அவுஸ்திரேலியர் - அவர் ஒரு ஐக்கிய அமெரிக்க குடிமகன் அல்ல, மேலும் அவர் ஐக்கிய அமெரிக்க மண்ணில் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க அதிகாரம் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கின்ற நிலைமையானது தனது நலன்களுக்காக அமெரிக்க தனது உள்நாட்டு சட்டத்தை ஒரு வெளிநாட்டவர் மீது திணிப்பதன் ஒரு விளைவாகும் என்றே பார்க்கப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்க சட்டத்தில் வெளிநாட்டு குற்றவாளிகள் ஐக்கிய அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக இருப்பின் தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. அதனையும் மீறி, ஒரு வெளிநாட்டவரை தண்டிப்பதற்கு அமெரிக்கா, சர்வதேச குற்றங்களுக்கெதிரான உலகலாவரீதியான சட்டக் கோட்பாடுகளை முன்வைக்கின்றமை, தகவல் உரிமையை உலகளாவிய ரீதியில் ஐக்கிய அமெரிக்கா கட்டுப்பாடு செய்கின்றமைக்கு ஒரு எடுத்துக்காட்டு என சிவில் ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ஆயினும், ஐக்கிய அமெரிக்க வெளிவிவகார கொள்கைகளின் அடிப்படையிலிருந்து இந்நிகழ்வுகளை பார்க்கவேண்டுமாயின், இது ஐக்கிய அமெரிக்காவின் 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா இணையம் மூலமாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு - அதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தகவல் மாற்றும் தகவல் பரிமாற்றத்தில் மேற்கொள்ளும் சட்ட மற்றும் கொள்கை மாற்றங்களில் ஒரு பகுதியே இக்குறித்த உளவு சட்டத்தின் பயன்பாடு என்பதை அறிய முடியும். ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், அந்நாட்டு தேர்தல் மற்றும் உள்நாட்டு நிர்வாகத்தில் இணையவழி தலையீட்டை முழுமையாக தடைசெய்யும் ஒரு சட்ட மார்க்கத்தை அமுல்படுத்தும் வரை, குறித்த உளவு சார் சட்டங்களின் பயன்பாடே அமுலில் இருக்கும் என்பது, மிகவும் அவதானமாக விளங்கவேண்டிய ஒரு கல்விச்செயல்பாடு ஆகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .