Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும்,, ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும், கடத்தல்கள் கொலைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லாக் கட்சிகளும் மக்களும் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
இவ்வாறான பேர்வழிகள் கைது செய்யப்படும் போது, அரசியலரங்கில் ஒரு சலசலப்பு இருக்கும். அவர் சார்ந்தவர்கள் விமர்சிப்பார்கள். அந்தக் கைதில் மகிழ்ச்சியடைபவர்கள் அதிகமாக இருப்பதைக் கண்டிருக்கின்றோம். ஆனால், மக்களையும் உள்ளடக்கியதான ஒரு அதிர்வு பெரும்பாலும் ஏற்படுவதில்லை.
கைது செய்யப்பட்டவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என தெரிந்திருந்தும், அதனையும் மீறிய அனுதாபம் ஒன்று வெளிக் கிளம்புவதும் குறைவு. ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்க விடயத்தில் இப்படியான அபூர்வ பிரதிபலிப்புக்கள் வெளிப்பட்டுள்ளன என்றுதான் தெரிகின்றது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது, இடைநடுவில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்காக இங்கிலாந்து சென்றார் என்றும், இந்த வகையில், தான் உள்ளிட்ட குழுவினரின் இந்தப் பயணத்திற்காக ரணில் ஒரு கோடி அறுபத்தி ஒன்பது இலட்சம் அரச நிதியைச் செலவிட்டு;ளளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு வெள்ளிக்கிழமை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, அங்கு வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் ரணில். நீதிமன்றம் வழங்கிய விளக்கமறியல் உத்தரவுக்கமைய வைக்கப்பட்ட அவர், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிசிச்சைப்
பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தப் பின்னணயில் ரணிலைச் சுற்றியே இன்றைய நிலைமைகள் வட்டமிடுகின்றன.சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. குற்றம் யார் இழைத்திருந்தாலும் தண்டனை பெற்றே ஆக வேண்டும். பொதுச் சொத்துக்களை யார் தவறாக பயன்படுத்தியிருந்தாலும், அவர் தகுதி தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஊழல், கொலை, அட்டூழியங்கள் செய்தவர்கள் விடயத்தில் பாவம் புண்ணிம் பார்க்க முடியாது சட்டம் படித்த ரணிலுக்கும் இது தெரியும்.ஒரு வழக்கில் நீதிமன்றத்திற்குத் தேவை சாட்சியங்களும், ஆதாரங்களும் அதற்கான சட்ட ஏற்பாடுகளும்தான்.
எனவே, ரணில் விக்ரமசிங்க விடயத்திலும் நீதிமன்றம் அவ்விதமாகவே நடந்து கொண்டுள்ளது. வாரத்தின் கடைசி நீதிமன்ற நாளில் கைதாகி, மாலை
நேரத்தில் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ரணிலுக்கு பிணை வழங்க அரச தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.
எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட விளக்கமறியலையோ அல்லது நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு விவகாரத்தையோ நாம் விமர்சிக்க முடியாது. அது பற்றி கருத்துக் கூறவும் முடியாது. எனவே, இக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.
மாறாக, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொதுவெளியில் முன்வைக்கப்படும் கருத்துகள், மக்களின் மனநிலை, அரசியலரங்கில் ஏற்படும், ஏற்படக்கூடிய அதிர்வுகள் பற்றியே இந்தக் கட்டுரை பேச விளைகின்றது என்பதை கவனத்திற் கொள்ளவும்.
ரணில் விக்ரமசிங்க ஒரு ராஜவம்ச அரசியல்வாதி. பரம்பரையாக நாட்டை ஆண்ட குடும்பத்தில் பிறந்தவர். குளுகுளு அறையில் சொகுசாக வாழ்ந்தவர். எடலியல் ரீதியான கஷ்டங்களை அனுபவித்திருப்பதற்கான வாய்ப்பே
அவருக்கு கிடைத்திருக்காது.
பிரதியமைச்சராக, அமைச்சராக, பலமுறை பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக, ஜனாதிபதியாக கோலோச்சியவர்.ரணில் விக்ரமசிங்க ஒன்றும் புனிதரல்ல. அவர் அதிகாரத்தில் இருந்த காலங்களில் பல குற்றங்களைச் செய்ததாக,
அவற்றுக்கு துணைபோனதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதை மறுக்க முடியாது.
பட்டலந்த தொடக்கம் மத்திய வங்கி வரை என அவற்றை பட்டியலிட்டுச் சொல்கின்றார்கள்.ஆயினும், ரணில் கைது செய்யப்பட்ட பிறகு ஏன் அரசியலரங்கில் இத்தனை அதிர்வுகள் இடம்பெறுகின்றன? இப்படி நடந்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள் ஏன் முன்வைக்கப்படுகின்றன? அவர் மீது ஏன் இவ்வளவு தூரம்
அனுதாபம் ஏற்படுகின்றது? சர்வதேச நாடுகள் ஏன் இதில் கரிசனை கொள்கின்றன?
அதுதான் ரணில்!ரணில் விக்ரமசிங்க தென்னாசியாவின் மூத்த, கைதேர்ந்த அரசியல்வாதி.
இலங்கையில் அவரைப் போன்ற சாணக்கியமும் அனுபவமும் உள்ள அரசியல் வாதிகள் இல்லை கிட்டத்தட்ட 40 வருடங்களாக ஏதாவது ஒரு அதிகாரத்தில் இருந்திருக்கின்றார். பதவியில் இல்லாத காலத்திலும் நாட்டின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துமளவுக்கு வெளிநாட்டு தொடர்புகளை கொண்டவர்.
சொத்துச் சேகரித்ததாக ரணில் மீது குற்றச்சாட்டு இல்லை. மாறாக, அவர் தனது சொத்தை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இப்படியான பல காரணங்களினால் அவர், ‘மிஸ்டர் கிளீன்’ என்று அழைக்கப்பட்டவர். ஏதிர்த்தரப்பினரால் ‘மிஸ்டர் பீன்’ என்று கிண்டலடிக்கப்பட்டாலும், அவரது தந்திர அரசியல் அவருக்கு மட்டுமே உரியது.
அமைச்சராக, பிரதமாரக இருந்த காலத்தில் குற்றங்களைச் செய்ததாக ஒருபுறம் குற்றச்சாட்டுக்கள் இருக்கத்தக்கதாக மறுபுறத்தில் நாட்டின் கல்வி, பொருளாதாரம், பொதுத்துறை, தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு ரணில் கணிசமான சேமைகளை ஆற்றியிருக்கின்றார் என்பதை இப்போது பலரும் நினைவுபடுத்துகின்றார்கள்.
எவ்வாறாயினும், அதிகாரத்தில் இருந்த காலமெல்லாம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க எதனையும் செய்யவில்லை என்றும் தந்திர அரசியலையே ரணில் மேற்கொண்டார் என்றும் ஒரு விமர்சனம் முன்னர் இருந்து வந்தது. ஆனால், 2022இல் அதளையும் அவர் நீக்கி விட்டார் எனலாம்.
2021இற்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட பொளாதாரச் சரிவு நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அரகலய மக்கள் எழுச்சிக்குப் பின்னால் ரணில், வெளிநாடுகள் மற்றும் ஜே.வி.பி. போன்ற சக்திகள் இருந்ததாக அப்போது பேசப்பட்டாலும்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ராஜபக்ஷ குடும்பம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் நின்றாடிய கோட்டபாய துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று நாட்டையும் மக்களையும் விட்டு தப்பியோடிய போது, இந்த நாட்டைப் பொறுப்பெடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருந்த சஜித் பிரேமதாச பின்வாங்கினார். ஜே.வி.பியோ என்.பி.பியோ தற்போதைய ஜனாதிபதி
அனுர அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி செய்யவில்லை. இப்படி எல்லோரும் ஒதுங்கிக் கொண்டபோது, 75 வயதான முதியவரான ஒரு
அரசியல்வாதி முன்னே வந்தார்.
அவர்தான் ரணில்! தனது வயது முதிர்ச்சியை விட ரணிலின் அனுபவ முதிர்ச்சி நாட்டை மீள தூக்கி நிறுத்துவதற்கு உதவியது. இரண்டு வருடங்களுக்குள் நிலைமைகளை சீராக்கினார். இதுவும் அவரது மறைமுக திட்டம் என கூறுவோரும் உள்ளனர். ஆனால், அவர் செய்த பங்களிப்பை மறுக்க முடியாது.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதும் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்பட்ட விவகாரமாகும். இது சட்டத்தின்படி சரியான விடயமே. எவ்வாறிருப்பினும், வெளியிலுள்ள சாதாரண மக்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாக பார்க்கின்றனர்.
இந்த கைது பலரது வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ரணிலை விட பன்மடங்கு குற்றங்களையும் ஊழலையும் செய்தவர்கள் இதனை நல்ல சகுணமாகப் பார்க்கவில்லை. மேட்டுக்குடி அரசியல்வாதியான ரணிலுக்கு இது பொருத்தமான தண்டனைதான் என சொல்வோரும் உள்ளனர்.
நாட்டுக்காக சேவையாற்றிய ஒரு அரசியல்வாதிக்கு கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம் என கருதுவோரும் உள்ளர். “தான் நேசித்த தனது காதல் மனைவிக்காக அவன் சிறை சென்றான்” என்று கவிஞர்கள் எழுதுகின்றவர்களும் உள்ளனர்.
ஆனால், ரணிலை விட அதிகமான குற்றங்கள், கொலைகள், ஊழல்களை நீண்ட காலமாக செய்தவர்களை சிறையிலடைப்பதற்கு முன்னதாக,
நாட்டை பொருளாதார மீட்சியிலிருந்து காப்பாற்றிய ஒரு முன்னாள் ஜனாதிபதி
மீது சட்டம் பாய்ந்தது ஏன்? என்று சில மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவர் மீது ஒருவித அனுதாப அலையும் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.
அரசாங்கம் மேற்கொண்ட இந்த நகர்வு பழிவாங்கும் அரசியல் என்று, ரணிலுக்கு சார்பானவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.
ஆயினும், நமது நாட்டில் நடக்கின்ற எல்லா நகர்வுகளுக்கும் பின்னால் ஒரு அரசியல் காரணி இருக்கின்றது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம். இந்த சூழலிலும் எதிர்க்கட்சியின் பலவீனம் இப்போதும் வெளிப்படுகின்றது.
இந்த கைது மக்கள் மத்தியிலும் அரசியல் அரங்கிலும் என்றுமில்லாத அதிர்வை உண்டுபண்ணியிருக்கின்றது. குறிப்பாக, சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் கைது செய்யப்பட்டு இறுக்கப்பட்ட விதம், இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாடுகளில் கரிசனைக்குரிய விடயமாக மாறியிருப்பதாக விடயமறிந்தவர்கள் சொல்கின்றார்கள்.
இந்த விடயத்தில் இன்னும் கொஞ்சம் நிதானமாக நடந்திருக்கலாம் என்று சம்பந்தபட்டவாகள் நினைக்கும் ஒரு நிலைமைக்கு இது இட்டுச் செல்லுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago