2025 மே 14, புதன்கிழமை

கேப்பாபுலவு உணர்த்திய பாடம்:போராட்டக்களத்தில் மாணவர்களின் தேவை

Administrator   / 2017 மார்ச் 08 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரிய உரிமைகளுக்காகவும் இறைமைக்காகவும் போராடும் இனக்கூட்டமொன்றுக்கு நிலமும் அதுசார் ஆட்சியுரிமையும் அடிப்படையானது. அந்த வகையில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில், ‘நில மீட்புக்கான போராட்டம்’ என்பது ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான பெரும் குறியீடு.  

அதன் வெற்றியும் தோல்வியும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒட்டுமொத்த வடிவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தவல்லது. அதனைக் கடந்த எழுபது ஆண்டுகாலப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் கண்டிருக்கின்றார்கள்.   

குறிப்பாக, 2009 மே மாதத்துக்குப் பின்னரான நாட்கள் அதன் பெரும் படிப்பினை. ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான நாட்களில், நில மீட்புக்கான போராட்டம் என்பது கிட்டத்தட்ட முடக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது.   

அதனை, ஒரு போராட்ட வடிவமாகத் தொடர்ந்தும் முன்வைக்க வேண்டிய தேவையை மீளக்கையில் எடுத்தவர்கள் வலிகாமம் மக்கள். அவர்கள், கால்நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரச படையின் ஆக்கிரமிப்பில் தமது காணிகளையும் வீடுகளையும் இழந்து முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் அயலகங்களிலும் அகதிகளாக அவஸ்தைப்படுபவர்கள்.   

நில மீட்புக்கான போராட்டத்தினை சட்டரீதியாகப் பல ஆண்டு காலமாக முன்னெடுத்து வந்த வலிகாமம் மக்கள், 2010இற்குப் பின்னர் வீதிகளில் ஒருங்கிணைய ஆரம்பித்தார்கள்.   

அது, சிறுசிறு கூட்டங்களாக இருந்தாலும் அதன் நீட்சி இன்றைக்கு வெற்றிகரமான போராட்ட வடிவமொன்றைத் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் சார்ந்ததாக இருந்தது. இன்றைக்கு, கேப்பாபுலவு - பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த நில மீட்புப் போராட்டம் முக்கிய கட்டங்களைப் பதிவு செய்திருக்கின்றது.   

குறிப்பாக, சில மணித்தியாலப் போராட்டங்கள் என்கிற கட்டங்களிலிருந்து அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து அழுத்தங்களின் அளவினை அதிகரித்துக் கொண்டு முன்செல்வது தொடர்பிலான விடயத்தினைப் பதிவு செய்திருக்கின்றது.  

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த ஜனவரியில் வவுனியாவில் முன்னெடுத்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமாக இருந்தது.  

அந்தப் போராட்டம் நான்கு நாட்களில் முடிவுக்கு வந்தது. அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்த சில நாட்களில், கேப்பாபுலவு - பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டக்களம் திறந்தது.   

உண்மையில் வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தில் சில தரப்புக்களின் திட்டமிடலும் - தலையீடும் இருந்தது. ஆனால், கேப்பாபுலவு - பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் திட்டமிட்டது அல்ல. அது, அவர்களின் காணிகளை விடுவிப்பதாகத் தெரிவித்து அழைத்துவிட்டு, ஏமாற்றியதன் விளைவினால் எழுந்தது.   

அவர்கள், வீதியில் அமர்ந்து போராடத் தொடங்கினார்கள். அந்தப் போராட்டத்தினை நோக்கி, உடனடியாகப் பல்கலைக்கழக மாணவர்களும் இளைஞர்களும் ஊடகவியலாளர்களும் ஓடி வந்தார்கள்.   

போராட்டத்தினை ஒழுங்கமைத்தார்கள்; அதன் வீரியத்தினை மெல்லமெல்ல அதிகரித்தார்கள். பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர் உரையாடல்களுக்கான விடயமாக கேப்பாபுலவு மாறியது.   

தவிர்க்க முடியாமல், அந்தப் போராட்டக்களத்தின் பின்னால் அரசியல்வாதிகளும் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் ஒருங்கிணைந்தார்கள்; பங்களித்தார்கள். 

கடந்த எட்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவிட்டன. ஆனால், கேப்பாபுலவு போராட்டக்களம் மாத்திரம் எப்படி ஒரு மாத காலத்தினையும் தாண்டி நிலைத்து நின்றது. அது, ஒரு பகுதியளவான தீர்வினையாவது எப்படி அடைந்து கொண்டது என்கிற கேள்விகள் எழுகின்றன.   

அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சில விடயங்களைப் புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும். அவையொன்றும் புதிய பதில்கள் இல்லை. ஆனாலும், அவை அவசியமான பதில்கள்.  

2000 களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்ற போர் வெற்றிகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அலையைத் தோற்றுவித்திருந்தது. அதன் நீட்சியாகத் தமிழர் தாயகப் பகுதிகளில் பெரும் எழுச்சியோடு ‘பொங்கு தமிழ்’ நிகழ்வுகள் நடத்தப்பட்டன.   

‘பொங்கு தமிழ்’ விடுதலைப் புலிகளின் உந்துதலோடு நடத்தப்பட்டாலும் அதனைப் பெரும் எழுச்சியாக நடத்தியதில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு முதன்மையானது.   

அவர்களோடு, பாடசாலை மாணவர்களின் பங்களிப்பும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் தொடங்கி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ‘பொங்கு தமிழ்’ நிகழ்வு வரை நிலைமை இப்படித்தான் இருந்தது.   

இலட்சக்கணக்கான மக்களைப் பொங்கு தமிழை நோக்கி அழைத்து வருவதற்குப் போர் வெற்றி மனநிலை காரணமாக இருந்தது. ஆனால், அதனை ஒருங்கிணைத்தல் அல்லது ஒழுங்குபடுத்தல் என்கிற நிலையில் மாணவர்களின் தலையாய பங்கிருந்தது.   

அதாவது, தமக்கும் தாம் நேரடியாக ஆளுகை செலுத்தாத பிரதேசத்திலுள்ள பொது மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் இடைவெளியை மாணவர்களைக் கொண்டே விடுதலைப் புலிகள் ஒருங்கிணைத்தார்கள்.

இந்த இடைவெளியை இணைக்கும் புள்ளியாக மாணவர்களைத் தவிர வேறு தரப்புகளினால் அதிக வெற்றிகளைப் பெற முடியாது. சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் வகிக்கும் பங்கு குறிப்பிடத்தக்கன என்கிற போதிலும் ஓர் எழுச்சிக்கான ஏற்பாட்டினை மாணவர்கள் சில நொடிகளில் ஏற்படுத்தி விடுகின்றார்கள்.   

பொங்கு தமிழில் எவ்வாறான பங்கினை ஆற்றினார்களோ, அதேபங்கினை 2004 பொதுத் தேர்தலிலும் மாணவர்கள் ஆற்றினார்கள். அது, பெரு வெற்றியினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்குக் காரணமானது.  

ஆனால், 2005 களுக்குப் பின்னரான நாட்களில் பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி ஆயுதங்கள் தொடர்ச்சியாக நீட்டப்பட்டன. பல மாணவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். அதுவும், இறுதி மோதல்க்களங்கள் வன்னியில் விரிந்தபோது, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களை நோக்கியும் துப்பாக்கிகள் தொடர்ச்சியாக தோட்டக்களை உமிழ்ந்தன.   

ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், தமிழ் மக்கள் மத்தியில் தோல்வி மனநிலையும் அதனூடான விரக்தியும் நீண்டு சென்றது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், போர் வெற்றிவாதத்தோடே தமிழ் மக்களைக் கையாண்டு சிதைத்தது. அப்படியான நிலையில், மாணவர்களின் மனநிலையும் முடக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது.  

மீண்டும் 2015 ஜனவரிக்குப் பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் வீரியத்தோடு வீதிகளுக்கு வர ஆரம்பித்தார்கள். நீதிக் கோரிக்கைகளின் பின்னால் தங்களது பங்களிப்பினை வழங்க ஆரம்பித்தார்கள். ஆனால், போராட்டங்களின் இடைவெளிகளை நிரப்புவதற்கான கட்டங்கள் குறித்து அவர்கள் அவ்வளவுக்கு சிந்தித்திருக்கவில்லை.  

எப்போதுமே சாதாரண பொது மக்களுக்கும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்புகளுக்கும் இடையில் இடைவெளியொன்று இருந்தே வந்திருக்கின்றது.   

பொதுமக்கள் அரசியல் தலைவர்களையோ, சிவில் அமைப்புகளையோ, செயற்பாட்டாளர்களையோ 100 வீதம் நம்புவதில்லை. பகுதியளவான நம்பிக்கையோடே அணுகி வந்திருக்கின்றார்கள்.   

அது, சந்தேகங்களின் சார்பிலானது. ஆனால், மாணவர்கள் குறித்துப் பொதுமக்களுக்கு எப்போதுமே சந்தேகம் இருந்ததில்லை. அவர்களைத் தங்களுடைய வீட்டின் ஒரு பகுதியாகவே சாதாரண மக்கள் கொண்டிருக்கின்றார்கள்.   

அவ்வாறான உணர்நிலையே, ஆயுதப் போராட்டத்தினை பெருமெடுப்பாக முன்னெடுக்கவும் வைத்தது. அந்த நிலையில் இப்போதும் மாற்றமில்லை. ஆக, பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான வெளியை மாணவர்கள் பெரும் அழுத்தங்களோடு நிரப்புகிறார்கள். அவர்கள், இடைநிரப்பும் தரப்பு மாத்திரமல்ல; மாறாக, அழுத்தங்களை உண்டுபண்ணும் தரப்புமாகும்.  

கேப்பாபுலவு போராட்டக்களம் மாணவர்களினூடு இடைவெளிகளை நிரப்பிப் பெரும் அழுத்தங்களை உருவாக்குவதற்கான ஏதுகைகளைச் செய்தது. அதற்குப் பக்கபலமாக ஊடகவியலாளர்கள் பங்காற்றினார்கள்.   

ஊடகங்களுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், ஊடகவியலாளர்களில் பெருமளவானவர்கள் அந்த ஊடக நிறுவனங்களின் நிலைப்பாடுகள் தாண்டி சுயாதீனத்தன்மையினைப் பதிந்து வருகின்றார்கள்.   

கேப்பாபுலவு போராட்டக்களத்தில் அவர்களின் பங்களிப்பு மக்களைத் தொடர்ச்சியாக இணைக்க உதவியது. வடக்கு, கிழக்கில் மீளவும் மாணவர்களின் வருகையும் ஊடகவியலாளர்களின் தார்மீகப் பங்களிப்பும் பெருமளவு அதிகரித்திருக்கின்றது என்பது ஆரோக்கியமான மாற்றம். அது, கடந்த இரண்டு வருடங்களில் மெல்லமெல்ல அதிகரித்து வந்திருக்கின்றது. 

கேப்பாபுலவு போராட்டக்களம் பகுதியளவான வெற்றியைப் பெற்றதும் பலரும் அதற்கான பங்கினைக் கோரினார்கள். குறிப்பாக, அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களுமாவார். அவர்களின் பங்கு அதில் இல்லை என்பதல்ல. ஆனால், பெரும் பங்கு போராடிய மக்களையே சாரும்.

அடுத்து, போராடிய மக்களோடு களமாடிய மாணவர்களையும் ஊடகவியலாளர்களையும் சாரும்.  கேப்பாபுலவு போராட்டக்களம் விரிவதற்கு முன்னர் ‘அடையாளம்’ கொள்கை ஆய்வுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்ட செயற்பாட்டாளர் ஜெராவின் ‘நிலமிழந்த கதைகள்’ ஆவணத் தொகுப்பும் கேப்பாபுலவு போராட்டம் தொடர்ந்த போது,போராட்டக்களத்தினை குறுக்கு வெட்டாகப் பதிவு செய்த ‘விதை’க் குழுமத்தின் ‘கேப்பாபுலவு: நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை’ என்கிற இணையப்பிரதியும் சில தெளிவுரைகளை நாளைய போராட்டங்கள் சார்ந்து வழங்கியிருக்கின்றன. அவற்றை இந்த இடத்தில் பதிவு செய்வதும் அவசியமானது. 

மீண்டும் தமிழ்த் தேசியப் போராட்டக்களங்களை நோக்கி மாணவர்கள் வந்திருக்கின்றார்கள். அவர்களின் வருகை தொடர்ச்சியாகத் தக்க வைக்கப்பட வேண்டியது அவசியம்.   

ஏனெனில், சுயஅரசியல் அல்லது நலன்களுக்கு அப்பால் மாணவர்களே அறப்பிறழ்வுகள் அற்ற போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் அழுத்தங்களைப் பெருமளவு உருவாக்கவும் வல்லவர்கள்.   

அந்தத் தருணங்களே போராடும் இனமொன்றின் நீட்சிக்கு அவசியமானது. அதனை, கேப்பாபுலவு நில மீட்புக்கான போராட்டக்களமும் பதிவு செய்திருக்கின்றது. இனிவரும் களங்களும் அதனை இன்னமும் புடம்போட வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X