2025 மே 17, சனிக்கிழமை

கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்

Thipaan   / 2015 நவம்பர் 10 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றுக்காக சிட்னியிலுள்ள

ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலைக்கு சென்றபோது, அங்கு கூடியிருந்த 30-40 தமிழ் இளைஞர் கோஷ்டி போட்ட கூத்துக்களையும் சுமந்திரனை அவர்களை பந்தாடாத குறையாக - இரையைக் கண்ட விலங்குகள் போல கடித்துக் குதறுவதற்குப் பாய்ந்து திரிவதையும் பார்க்கும்போது,

புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் எவ்வளவு அரசியல் வரட்சி மிக்கவர்களாக, கருத்து வலிமையற்ற குரூர குணம் கொண்டவர்களாக, அரசியல் அநாதைகளாக மாறிவிட்டார்கள் என்று வெட்கப்படவேண்டியிருந்தது.

அந்தக் கொடூர காட்சிகள் இன்னமும் மனக் கண்ணிலேயே நிழலாடிக்கொண்டிருக்கிறன. சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த காணொலிகள் பரவிக்கிடக்கின்றன.

தாயகத்தில், 57 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி ஒருவரைக் கருத்துக்களால் எதிர்கொள்ளமுடியாத ஒரு கோஷ்டி, அவருக்கு எதிராக கூச்சல் போட்டு இந்த புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு நிகழ்வுக்கு அனுமதிக்காமல் தடைபோடுவதன் ஊடாகத்தான் தாயகத்தில் உள்ள தமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று தவியாய் தவிக்கும் அந்த தவப்பயனை கண்ணுற்றேன்.

ஜனநாயகம், நல்லிணக்கம், தேசியம் ஆகிய உயர் விழுமியங்களின் மீதெல்லாம் மதிப்பு கோருவதற்கு ஐ.நா. வரை சென்று போராடியதாக மார்தட்டும் இந்த புலம்பெயர்ந்த தமிழர் கூட்டம், சுமந்திரனை சிட்னியிலிருந்து கலைப்பதன் ஊடாகவும் எமது மக்களுக்கான விடுதலையை பெற்றுவிடலாம் என்று சீறி எழுந்த வீராப்பினை கண்டுகொண்டேன்.

ஒட்டுக்குழுக்களும் பேரினவாத தேசிய கட்சிகளும் கையில் இரத்தக்கறையுடன் தேர்தலில் வாக்கு கேட்க வந்தபோதும்கூட, அவர்களை ஜனநாயக ரீதியில் சந்தித்து அவர்களின் கொள்கைகளை கொள்கைகளால் சந்தித்த தாயக மக்களின் வழிவந்த புலம்பெயர்ந்த இந்த மக்கள் கூட்டம், ஒரு தமிழ் அரசியல்வாதியை அவரது கருத்துக்களால் எதிர்கொள்ளமுடியாமல் இந்த மண்ணை விட்டு துரத்திவிடுவதன் மூலம் தமது வீரத்தை பறைசாற்றலாம் என்ற கனல் கக்கும் கண்களுடன் வெறிகொண்டு பாய்ந்ததை கண்டு வியந்தேன்.

வேதனை... அவமானம்... வெட்கம்...

விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டிய சுமந்திரனின் கருத்துக்கள் நிச்சயம் பொதுவெளியில் உரையாடப்படவேண்டியவை. ஆனால், அவற்றை அவரிடம் நேரில் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றபோதும் இந்த கோஷ்டியினர் அவரை துரத்தியடிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள் என்றால், இவர்களது நோக்கம் சுமந்திரனை நோக்கிய ஒரு சுத்திகரிப்பாக அன்றி வேறொன்றுமாக இருக்க வாய்ப்பில்லை.

சுமந்திரனின் மீது காறி உமிழ்வதன் மூலமும் அவரை தூஷணத்தினால் அர்ச்சனை செய்வதன் மூலமும் அற்ப திருப்தியை அடைந்துவிடலாம் என்ற வெறியுடன் கூக்குரலிட்ட அந்த கும்பலிலிருந்த ஒருவர்கூட, சுமந்திரனளவுக்கு எமது மக்களுக்கு ஒரு துரும்பை அசைத்தவர்களாக இருக்கமுடியாது. ஆனாலும், அவர்கள் உரக்க கத்தினார்கள். துரோகி துரோகி என்று துவேஷ மழை பொழிந்தார்கள். இந்தச் சம்பவங்களிலிருந்து சில விடயங்களை வேதனையுடன் ஆராயவேண்டியிருந்தது.

அதாவது, சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லண்டனுக்குச் சென்றபோது அவரைக் குறிப்பிட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றவிடாது திருப்பி அனுப்பியவர்கள் அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள். 'எம்மின மக்களின் கொலைகளைப் புரிந்த இரத்தக்கறையுடன் உலகமெங்கும் புனிதவானாக சுற்றுலா சென்ற போர்க்குற்றவாளிக்கு எதிராக பழிவாங்குவோம்' - என்று புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் மேற்கொண்ட அந்த போராட்டம் உணர்ச்சிவசப்பட்ட ஒரு நிகழ்வாக கருதப்பட்டபோதும் அதில் ஒரு தார்மிக கோபம் இருந்தது.

ஆனால், தற்போது அவுஸ்திரேலியா வந்துள்ள சுமந்திரன் என்பவர் யார்? தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி. அவர் மீது பிழை கண்டாலோ அல்லது அவரது நடவடிக்கைகள் மீது தவறு கண்டாலோ அதனைத் தட்டிக்கேட்பதற்கும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு கோபத்துடன் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் தகுதியானவர்கள் யார், அவரைத் தெரிவுசெய்த மக்கள்தானே?

சரி. அப்படித்தான் அந்த மக்கள் அந்த எதிர்ப்பினை காண்பிக்கமுடியாமல், அடக்குமுறைகளுக்கு அச்சமடைந்து 'நமக்கேன் இந்த சோலி' என்ற பாராமுகத்துடன் இருந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள், சுமந்திரனுக்கு எதிரான தமது கண்டனத்தைப் பதிவு செய்வதற்கு ஒரு நாகரிகம் இருக்கிறதல்லவா?

பல்லின மக்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், எத்தனையோ எதிர்ப்பு நிகழ்வுகள் என்று பல இனத்தவர்களாலும் சரியாகவும் தவறாகவும் மேற்கொள்ளப்படும்போதெல்லாம், இந்த நாட்டு சட்டங்கள் அவற்றுக்கு கொடுக்கும் சுதந்திரமும் கட்டுப்பாடுகளும் எது சரி எது பிழை என்பதை சரியாக கோடு கிழித்துக்காட்டியிருக்கின்றன.

அப்படியிருந்தும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் சுமந்திரனை தமிழ் இனத்தை அழித்த மஹிந்தவிலும் கேவலமாக கடித்துக்குதறுவதற்கு பாய்ந்து திரிந்த இளைஞர்களின் அறச்சீற்றம் அப்பாவித்தனமாகவும் அரியண்டமாகவும்தான் இருந்தது. இந்த சம்பவத்துக்கு முன்னர் இந்தியாவில் இடம்பெற்ற முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் நாராயணனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செருப்படி தாக்குதலானது, சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவிருந்தவர்களை இன்னமும் உசுப்பேற்றிவிட்டிருந்தது என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

உண்மையில், இந்த சம்பவங்களின் பின்னணியில் தமிழ்மக்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?

உணர்ச்சி அரசியல் என்பது உலகளாவிய ரீதியில் காலாவதியாகிவிட்ட ஒரு விடயம். அதை தற்போதைய அரசியல் - இராஜதந்திர களத்தில் கையிலெடுத்தவர்கள் எவரும் தன்முனைப்புமிக்க பாதையில் பயணித்ததில்லை. அது தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி, இயக்க மரபுகளுடன் பயணிக்கவல்ல ஒரு தனித்த - பிடிவாதம் மிக்க - தரப்பாக தேங்கிநிற்குமே தவிர, சாத்தியமான விடுதலைப் பாதைக்கான விரைவான உத்திகளைக் காண்பிக்காது. இந்தியாவின் நாராயணன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை எடுத்துப்பார்த்தால் வரலாற்றைத் தீர்க்கமாகப் புரிந்தவர்களுக்கு இது எவ்வளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவல்ல ஒரு விடயம் என்பது புரிந்திருக்கும்.

அந்த நாட்டின் பிரதமர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தினால் இலங்கையில் ஓர் இனமே அழிந்ததுதான் வரலாறு. அது மட்டுமல்லாமல், இன்னமும் அந்த பழிவாங்கும் கரங்களுடன்தான் இந்திய அரசும் பாதுகாப்புத் தரப்பும் தமிழ் மக்களை எதிரிகளாக பார்த்தவண்ணமுள்ளன. மன்னிப்பு கேட்டென்ன மன்றாட்டம் செய்தென்ன இன்று இந்தியாவின் ஆசீர்வாதமில்லாமல் தமிழ் மக்கள் விடயத்தில் ஓர் அணுவைக்கூட அசைத்துவிடமுடியாத நிலையே காணப்படுகிறது. இதுதான் யதார்த்தம்.

அதற்காக இந்தியாவின் இந்த பிடிவாதம் நியாயம் என்றோ, ராஜீவ்காந்தியும்கூட நியாயவான் என்று இங்கு தர்க்கிக்கவில்லை. எதிரியாக இலக்கிடப்பட்டவனை சரியாக கையாளுவதில் காண்பித்த முதிர்ச்சியின்மை, ஈற்றில் அழிவுகளுக்கு வழிவகுத்த பாடத்தைத்தான் தமிழினத்துக்கு வழங்கிச் சென்றிருக்கிறது.

இந்தத் தருணத்தில், இந்தியாவை பொறுத்தவரை ராஜீவ்காந்திக்கு அதேயளவு பெறுமதியுடைய நாராயணன் எனப்படும் தமிழின அழிப்புக்கான சூத்திரதாரியை உணர்ச்சிவசப்பட்ட தமிழன் ஒருவன் செருப்பால் அடித்து தனது அற்ப திருப்தியை அடைந்திருக்கிறான். அவனது உணர்வை கொச்சைப்படுத்துவது இங்கு நோக்கமல்ல.

ஆனால், இந்த காரியத்தின் மூலம் தமிழகத்திலும் ஈழத்திலும் விடுதலையை நோக்கி எவ்வளவு தூரம் எமது மக்கள் முன்னகர்ந்திருக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளாலேயே மன்னிப்பு கேட்டு மீண்டும் நல்லுறவை கட்டியெழுப்ப முயற்சிக்கப்பட்ட இந்திய - ஈழமக்கள் உறவுநிலை எவ்வளவுக்கு இறுக்கமடைந்திருக்கிறது, விடை. பூச்சியம்தானே?

அதேபோன்றதொரு நிகழ்வுதான் இன்று சிட்னியில் நடந்தேறியிருக்கிறது. உணர்ச்சி அரசியலின் உச்ச வெளிப்பாடாகத்தான் இதை பார்க்கவேண்டியிருந்தது. இது எவ்வளவுதூரம் தமிழ் மக்களின் பிளவுகளின் ஊடாக அரசியல் செய்வதற்கு காத்திருக்கும் தரப்புக்களுக்கு வசதியாக போயிருக்கிறது என்பதை இந்த இளைஞர்கள் சிந்திக்கவில்லை.

தங்கள் வீரத்தை ஆவணப்படுத்துவதற்காக தங்களின் நண்பர்கள் ஊடாக பதிவு செய்த காணொலிகளே தங்களுக்கு எதிரான சாட்சியங்களாக மாறக்கூடும் என்ற அறியாமையைக் கொண்டதுபோலவே, இந்த போராட்டங்கள் எல்லாம் தாயகத்தில் உள்ள மக்களுக்கும் அவமானத்தை கொண்டுசேர்க்கும் என்ற யாதார்த்தத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் ஆர்ப்பாட்டங்கள் செய்த கடும் தேசியவாத சிங்கள அமைப்புக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவங்களை காணொளியில் பார்த்து கைகொட்டி சிரித்திருக்கும். 'பரவாயில்லையே... நாங்கள் செய்யவேண்டிய வேலையை தமிழன் தானே செய்துகொள்கிறான்' என்று உள்ளுக்குள் நகைத்திருக்கும்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர், கிளிநொச்சியிலுள்ள ஒரு போராளித்தாயுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கூறிய வாசகங்கள் இன்னமும் ஆழ்மனதில் அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.

'தம்பி, 20 வருஷமா இயக்கத்தில இருந்து என்ர பிள்ளையள் தொடக்கம் பேர்த்திமார் வரைக்கும் மாவீரராக இந்த மண்ணுக்காக குடுத்த எங்களுக்கு, வெளிநாட்டில போய் நிண்டு இந்த பெடியள் செய்யிற கூத்தை பாக்கேக... நாங்களும் அப்பவே போய் சேந்திருக்கவேணும் போல கிடக்கடா' என்றார் கவலையுடன்.

அதற்குப் பின்னர், கூட்டமைப்பின் தலைமை தொடர்ச்சியாக இழைக்கும் தவறுகள் மற்றும் சுமந்திரனின் பேச்சுக்கள் குறித்த விமர்சனங்கள் குறித்து வழமைபோல விரிவாக பேசிக்கொண்டோம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .