2025 மே 14, புதன்கிழமை

கடக்க வேண்டிய காட்டுத் தீ

Administrator   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார் 

எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.   

அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை. 

ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், அவருக்கு அழைப்பில்லை. ஆனால், ஹசன் அலி ஏன் வரவில்லை என்கிற விவகாரம் வேறானது.   

ஹசன் அலிக்கும் மு.கா தலைவர் ஹக்கீமுக்கும் இடையிலான பிரச்சினைகள் பற்றி அறிவோம். தான் வகித்த செயலாளர் நாயகம் பதவியின் அதிகாரங்களைப் பறித்தெடுத்தமை, தனக்கு வாக்குறுதியளித்தவாறு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்துத்தான் ஹக்கீமுடன், ஹசன் அலி முரண்பட்டார்.  

இடையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் நடைபெற்றன. அப்போது ஹசன் அலியைச் சந்தித்த மு.கா தலைவர் ஹக்கீம், இரண்டு வாக்குறுதிகளை வழங்கினார் என்று, ஹசன் அலி பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.   

வாக்குறுதி ஒன்று: தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக வழங்குவேன்.   
வாக்குறுதி இரண்டு: எதிர்வரும் பேராளர் மாநாட்டின்போது, அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவி வழங்கப்படும் என்பவைதான் அந்த வாக்குறுதிகளாகும்.  

இவற்றின் அடிப்படையில், மு.காவின் செயலாளர் பதவி தொடர்பில், தேர்தல் ஆணையாளருக்கு ஹசன் அலி கொடுத்திருந்த முறைப்பாட்டினை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டதோடு, ஹக்கீமுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் முன்பாக ஹசன் அலி தெரிவித்திருந்தார்.  

ஆனாலும், ஹசன் அலிக்கு வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமைவாக, அவருக்கு உடனடியாகத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை.   

இதனையடுத்து மு.கா தலைவரை ஹசன் அலி சந்தித்துப் பேசியிருந்தார். அப்போதும் உடனடியாக அதை வழங்குவேன் என்று, மு.கா தலைவர் தன்னிடம் தெரிவித்தாக ஹசன் அலி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதன் பிறகும் அது நடக்கவில்லை.  

இந்த நிலையில்தான், கடந்த சனிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. கட்டாய உயர்பீடக் கூட்டத்தில்தான் கட்சிக்குரிய நிருவாகத் தெரிவு இடம்பெறும். மேலும், இதன்போதுதான் கட்சி யாப்பில் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.   

கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்குரிய அங்கிகாரங்கள், மறுநாள் நடைபெறும் பேராளர் மாநாட்டில் பெற்றுக் கொள்ளப்படும். சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்துக்கு ஹசன் அலியும் வந்திருந்தார்.  

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட நிருவாகத் தெரிவின்போது, செயலாளர் பதவிக்கு ஹசன் அலியின் பெயர் பிரேரிக்கப்படவில்லை. கடந்த பேராளர் மாநாட்டுக்குப் பிறகு, கட்சிக்குள் செயலாளர் நாயகம் என்கிற பதவி இருக்கத்தக்கதாக, செயலாளர் எனும் பதவியும் ஏற்படுத்தப்பட்டது.  

அவற்றில், ஹசன் அலி வகித்து வந்த செயலாளர் நாயகம் பதவியை இல்லாமல் செய்து விட்டு, செயலாளர் என்கிற பதவியை மட்டும் வைத்திருப்பதென சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், செயலாளர் பதவிக்கு, ஏற்கெனவே அந்தப் பதவியை வகித்து வந்த மன்சூர் ஏ. காதரை நியமிக்க வேண்டுமென மு.கா தலைவர் கூறினார்.   

பஷீர் சேகுதாவூத் வகித்த தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, ஹசன் அலியை, ஹக்கீம் கேட்டுக் கொண்டார். ஆயினும், ஹசன் அலி அதற்கு உடன்படவில்லை. இதன்போது, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. ஆனாலும், ஹசன் அலிக்குச் செயலாளர் பதவியை வழங்குவதில்லை என்பதில் ஹக்கீம் உறுதியாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் உணர்ச்சி மேலீட்டினால் அழுத ஹசன் அலி, உயர்பீடக் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அதற்கு முன்னதாக ஹக்கீமை முத்தமிட்டார். தான் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என்று தெரிவித்தார். இதனால், உயர்பீடக் கூட்டத்தில் ஒருவகை சோகம் தொற்றிக் கொண்டது.            

இதனையடுத்து, உயர்பீடக் கூட்டம் முடிந்த பின்னர் மு.கா தலைவர் ஹக்கீமும் உயர்பீட உறுப்பினர்கள் சிலருமாக ஹசன் அலியின் வீடு சென்றனர். அங்கு ஹசன் அலியைச் சந்தித்த ஹக்கீம், கட்சித் தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.   

மேலும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு நாட்களில் பதவியேற்றுக் கொள்ளுமாறும் கூறினார். ஹசன் அலிஅதற்குச் சம்மதிக்கவில்லை. பஷீர் சேகுதாவூத்திடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட பதவியில் தான் அமரப் போவதில்லை என்று ஹசன் அலி உறுதிபடக் கூறினார். 

தன்னிடமிருந்து எடுக்கப்பட்ட முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினைத் தவிர, வேறெவையும் தனக்குத் தேவையில்லை என்பதையும் ஹக்கீமிடம் தெரிவித்தார்.  

இந்த நிலையிலேயே, ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு முன்னதாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை, ஹசன் அலியை, ஹக்கீம் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், ஹசன் அலி தனது முடிவிலிருந்து விலகவில்லை. இந்த நிலைவரங்களுக்கு மத்தியில்தான் பேராளர் மாநாடு நடந்து முடிந்தது.  

முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பைப் பொறுத்தவரையில், அந்தக் கட்சியின் உயர்பீடம்தான் அதி உயர் சபையாகும். கட்சியின் அனைத்து முடிவுகளையும் உயர்பீடம்தான் மேற்கொள்ள வேண்டுமெனக் கட்சி யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஆயினும், கட்சிக்கான செயலாளரைத் தலைவர்தான் தெரிவு செய்வார் என்று, இப்போது கட்சியின் யாப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயலாளரை விலக்கும் அதிகாரம் உயர்பீடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்துக்கான உறுப்பினர்களில் 56 பேரை, கட்சித் தலைவர் தனது தற்றுணிவின் பிரகாரம் நியமிக்க முடியும் எனவும் கட்சியின் யாப்பில் கூறப்பட்டுள்ளது.   

மு.காவின் உயர்பீடத்தில் மொத்தமாக 90 பேர் உள்ளனர். அதாவது, உயர்பீட உறுப்பினர்களில் அரைவாசிக்கும் அதிகமானோரை, தலைவரே தனது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நியமிக்க முடியும். அதனால்தான், உயர்பீடம் எப்போதும் தலைவர் ஹக்கீமுக்கு சார்பானதாகவே இருந்து வருகிறது.   

ஆனால், இதுவே ஹக்கீம் மீதான விமர்சனத்துக்கும் காரணமாக அமைந்து விட்டது. கட்சி யாப்பில் தனக்குத் தேவையான மாற்றங்களையெல்லாம் செய்து, தனது தற்றுணிவின் பேரால் நிரப்பப்பட்ட உறுப்பினர்களை உயர்பீடத்தில் வைத்துக் கொண்டு, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு சர்வதிகாரி போல செயற்பட்டு வருகின்றார் என, ஹக்கீமுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

  ஆனால், ஹக்கீம் தரப்பினரின் வாதம் இதற்கு மாறாக உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தின் போது, ஹக்கீம் தரப்பு முன்வைத்த வாதம் இதற்கு உதாரணமாகும்.

அதாவது, கட்சிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் இருக்கக் கூடாது. அப்படி இருப்பதனால்தான், கட்சிக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, ஒரேயொரு அதிகார மையம்தான் கட்சிக்குள் இனி இருக்க வேண்டும். 

அந்த அதிகார மையம், தலைவராகத்தான் இருக்க வேண்டும். எனவே, தலைவர் தனக்கு விருப்பமான ஒருவரைச் செயலாளராக நியமித்துக் கொள்வதில் எவ்வித தவறுமில்லை.

 அவ்வாறானதொரு செயலாளர்தான் தலைவருக்கு விசுவாசமாகவும் தலைவருடன் முரண்படாமலும் நடந்து கொள்வார் என்று, கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீம் தரப்பு வாதித்தது. 

ஆனாலும், தலைவரை கேள்விக்குட்படுத்துவதற்கும், தட்டிக் கேட்பதற்கும் அதிகாரமற்ற நிலைவரமொன்று மு.காவுக்குள் ஏற்பட்டிருப்பதென்பது, ஜனநாயகப் பொறிமுறைக்கு ஆபத்தானது என்று கூறப்படுகிறது. 

முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத்தை இடைநிறுத்துவதற்கும் இவ்வாறானதொரு அதிகாரத்தினையே மு.கா தலைவர் கையில் எடுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

ஆனால், உயர்பீடத்தின் ஏகோபித்த அனுமதியுடன்தான் பஷீரை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது என்றும், இதில் தலைவர் எவ்வித அதிகாரத்தினையும் பிரயோகிக்கவில்லை என்றும் ஹக்கீம் தரப்பு பதிலளிக்கிறது.   

ஆனாலும், பசீரை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் போது, உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை தலைவர் ஹக்கீம் கூறி அழைத்து, பஷீரை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு ஆதரவாகக்  கைகளை உயர்த்த வைத்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.   

மேலும், தலைவரின் அதிகாரத்துக்குப் பயந்துதான் பஷீரை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பல உயர்பீட உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி ஆமோதித்ததாகவும் பஷீர் தரப்பு கூறுகிறது.  

 தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத்தை இடைநிறுத்தும் தீர்மானத்தின் பேரில், இரகசிய வாக்கெடுப்பொன்று உயர்பீடக் கூட்டத்தில் நடத்தப்பட்டிருந்தால், அந்தத் தீர்மானம் தோற்றிருக்கும் என்றும் பஷீருக்கு ஆதரவானவர்கள் கூறுகின்றனர்.  

எது எவ்வாறயினும், முஸ்லிம் காங்கிரஸுக்குள் தலைவர் ஹக்கீமுக்கு, அடுத்ததாக இருந்த தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோர் அந்தக் கட்சியின் அலங்காரங்களாவும் அடையாளங்களாவும் இருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.   

முஸ்லிம் காங்கிரஸை வளர்த்ததில் ஹசன் அலியின் பங்கும், அந்தக் கட்சியினைக் காப்பாற்றியதில் பஷீரின் வகிபாகமும் கேள்விக்குட்படுத்த முடியாதவையாகும்.  

ஆனால், கிட்டத்தட்ட அந்த இருவரும் இப்போது கட்சிக்குள் இல்லை என்று ஆயிற்று. பஷீரின் தவிசாளர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள போதும், அவர் மீது எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் கட்சியினால் மேற்கொள்ளப்படவில்லை.   

ஒழுக்காற்று நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு, பஷீர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, அவர் நிரபராதிதான்.

 எனவே, பஷீர் வகித்த தவிசாளர் பதவியினை அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரையில், வேறு ஒருவருக்கு வழங்குவது நீதியாக அமையாது. அவ்வாறு நடந்தால், அதனை சட்ட ரீதியாக பஷீர் கேள்விக்குட்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.  

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியினை ஏற்றுக் கொள்வதற்கு ஹசன் அலி மறுத்து விட்ட நிலையில், அந்தப் பதவியை வேறு நபர்கள் எவரையும் கொண்டு நிரப்பாமல், வெற்றிடமாக வைத்திருப்பதற்கு கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது.   

இந்தத் தீர்மானத்தினை பேராளர் மாநாட்டில் வைத்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவித்தார். தவிசாளர் பதவியினை இப்படி நிரப்பாமல் வைத்திருப்பது, இப்போதைக்கு சட்ட ரீதியாக மு.காவுக்கு நலமாக அமையக் கூடும்.  

யார் எதைச் சொன்னாலும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஹசன் அலி வகித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் என்பவர், கல்வியில் உயர் தகைமைகளைக் கொண்டவர் என்கிற போதும், ஹசன் அலியின் அரசியல் அடையாளத்தினை மன்சூர் ஏ. காதரால் ஈடுசெய்ய முடியாது.   

எனவே, மு.காவுக்குள் ஹசனலியின் வெற்றிடம் வெற்றிடமாகவே இருக்கும். அதேபோன்று, முஸ்லிம் காங்கிரஸின் ‘அன்டன் பாலசிங்கம்’ என்று புகழப்பட்டு வந்த பஷீர் சேகுதாவூத்தின் இழப்பும், அந்தக் கட்சியினால் ஈடு செய்ய முடியாததொன்றாகவே இருக்கும்.   
ஆக, ஹசன் அலி மற்றும் பஷீர் ஆகிய இரண்டு பெரும் அடையாளங்களை இழந்து விட்ட நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவிருக்கும் அடுத்த கட்டப் பயணமானது, பெரும் சவாலுக்குரியதாகவே இருக்கும் என்பதை, அந்தக் கட்சியின் உயர்பீடத்தவர்களே ஏற்றுக் கொள்கின்றார்கள்.   

இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு மு.கா தலைவரிடமுள்ள மாற்றுத் திட்டங்கள் என்ன என்பதுதான் கட்சியின் ஆதரவாளர்களிடம் இப்போதுள்ள பெரும் கேள்வியாகும். 

அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்கொள்ளவுள்ள உள்ளுராட்சி மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை மு.கா முகம்கொள்ளும் போதுதான், ஹசன் அலி மற்றும் பஷீர் ஆகியோரை இழந்தமையின் விளைவு என்ன என்பது தெரியவரும்.   

இப்போதிருக்கும் நிலையில் தேர்தலொன்றினை எதிர்கொள்வதற்கு முன்னதாக, முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் உடனடி நடவடிக்கைகள் சிலவற்றினை செய்து காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளதாகப் பலரும் பேசிக் கொள்கின்றனர்.   

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக மறுத்தல், கட்சிக்குள் ஏற்பட்ட உடைவு, அதனால் ஏற்பட்ட தொய்வு நிலையினைச் சீர்செய்தல், இந்த நிலைவரங்களால் கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள கசப்பினை இல்லாமல் செய்தல் மற்றும் தற்போது கட்சிக்கு ஏற்பட்டுள்ள சரிவினை மீளக்கட்டியெழுப்புதல் என்பவைதான் இப்போதைக்கு உடனடியாக கரிசனை செலுத்த வேண்டிய விவகாரங்களாகும்.  

இவற்றினைச் செய்து முடிக்காமல் தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வது மு.காவுக்கு தீங்காகவே அமையும். எரிபற்றும் நிலை கூடிய எண்ணைப் பீப்பாய்களுடன் ஒரு காட்டுத் தீயைக் கடந்து செல்வதைப் போன்று, அந்த நிலைவரம் அபாயகரமானதாகும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X