Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 02 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விரான்ஸ்கி
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை.
மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’.
போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது.
‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காண்பித்தார்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள் எல்லோரும் போய், எட்டிப்பார்த்துவிட்டு தங்கள் தலையிலேயே குட்டிக்கொண்டார்கள்.
அதே ஜனநாயகத்தை, இப்போது தானும் பெற்றெடுத்துப் பாதுகாத்து வருவதாக, ஆட்சிபீடம் ஏறியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஓயாமல் கூறிவருகிறார்; அவரது அண்ணன் மஹிந்தவும் விடாமல் கூறிக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரையும் பார்த்து, இவர்களது தலைமையிலான முழு அரசாங்கமும் “ஜனநாயகம்... ஜனநாயகம்” என்று, ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், ஜனநாயகம் என்றால் என்ன? இவர்களுக்குத் தெரிந்துதான் கூவுகிறார்களா?
எல்லோரையும் உள்ளடக்கிய, பன்முகத் தன்மை கொண்ட சமத்துவப் பொறிமுறைதான் ஜனநாயகம். அது மாத்திரமல்ல, இதில் வெளிப்படைத்தன்மை, பேச்சுச் சுதந்திரம், சமஉரிமை, இறையாண்மை, நீதிக்கான பாதுகாப்பு என்று பலவிடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன.
கொலனியாதிக்கத்தில் இருந்து, நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்படும்போது, இந்த விழுமியங்களை வலியுறுத்துவதற்காகத்தான், ‘குடியரசு’ என்ற சொற்பதத்தை, எல்லா நாடுகளிடமும் விட்டுச்சென்றார்கள் ஆண்ட தரப்பினர்.
குடியாட்சி என்பது, ஜனநாயகத்தின் முதுகெலும்பு போன்றது. ஆக, அந்தத் தளத்தில், ஜனநாயகம் என்பது பேணப்படும் என்பது, ஆண்ட தரப்பினரின் நம்பிக்கையாக இருந்தது.
இன்றுவரை, உலகம் எங்கிலுமுள்ள பொதுவான ஆட்சிமுறை, ஜனநாயகம்தான். இந்த ஜனநாயகம், சரியாகப் பேணப்படுகின்ற நாடுகளுடன்தான், இன்னொரு நாடு அரசியல் உறவை வைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது. அந்த உறவின் வழியாக, இராஜதந்திர ஊடாட்டங்களையும் பொருளாதார உறவுகளையும் மக்களாட்சியின் ஏனைய பண்புகளையும் பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகிறது.
இந்த விழுமியங்கள் பட்டுப்போன, காட்டாட்சி நடைபெறுகின்ற நாடுகளுடன், எந்த நாடுகளும் எவ்வகையான உறவுகளையும் வைத்துக்கொள்வதற்கு விரும்புவதில்லை.
அதுமாத்திரமல்லாமல், இவ்வகையான நாடுகளில், ஜனநாயகத்துக்கான இடத்தை வழங்குமாறு வலியுறுத்துகின்றன. அதற்கும் மறுக்கின்ற நாடுகளின் மீது, அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குத்தான் உலகப்பொது அமைப்புகளும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஆக, எல்லா நாடுகளும் குறைந்தபட்ச மனச்சாட்சியுடன் ஆட்சியை நடத்துவதற்கும் உலகப்பொது உடன்பாட்டுக்கு ஆதாரமாகச் செயற்படுவதற்கும், இந்த ஜனநாயகம் என்ற வஸ்து, அத்தியாவசியமாக உள்ளது; அத்திபாரமாகவும் உள்ளது.
ஆனால், தற்போதைய கோட்டாபய அரசாங்கம், இந்த ஜனநாயகத்தைப் புரிந்துவைத்திருக்கும் நிலையே வேறு. அவர்களது புரிதலின் அடிப்படையே, மிகப்பெரிய துவாரத்தோடுதான் காணப்படுகிறது.
அதாவது, முன்பிருந்த அரசாங்கத்துக்கு ஒரளவுக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கு பெருமளவும் காணப்படுகின்ற இந்தப் போக்கு என்னவென்றால், வன்முறை இல்லாத காலப்பகுதியை, இவர்கள் ஜனநாயகம் நிலவும் காலப்பகுதியாக, மக்களை நம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு சண்டைகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியை, சமாதானம் என்று முன்பு நம்பவைத்ததன் நீட்சிதான் இது.
இது எவ்வளவு பெரிய முரண்?
நடைமுறை ரீதியாகப் பெரும் பெரும் யுத்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களும் இதனை நம்புகிறார்கள்.
அது மாத்திரமல்லாமல், வன்முறைகள் இல்லாமல், தேர்தலில் வாக்களிப்பு நடைபெற்றால், அதுதான் ‘தேர்தல் ஜனநாயகம்’ என்றோர் உபபிரிவையும் ஏற்படுத்தி, அதிலும் புளகாங்கிதம் அடைகிறார்கள்.
இது எவ்வளவு பெரிய நகைச்சுவை?
இந்த முரணினதும் நகைச்சுவையினதும் நீட்சியாகத்தான் தற்போது, ஜெனீவாவில் கோட்டாபய அரசாங்கம் ‘கொடுகொட்டி’ ஆடிக்கொண்டிருக்கிறது.
அதாவது, போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நாடு ஒன்றின் இராணுவத் தளபதியை, அதுவும் குறிப்பிட்ட போரின்போது கட்டளையிடும் தகுதியோடு களத்தில் நின்றவரை, தங்களது நாட்டுக்குள் வருவதற்கு அனுமதியில்லை என்று அமெரிக்கா அறிவித்திருந்தமையானது, அந்த நாட்டின் சட்டத்தோடு சம்பந்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள், அந்த அமைப்பின் செயற்பாடுகளை இன்னமும் முன்னெடுப்பவர்கள், தங்களது நாட்டுக்குள் வருவதற்கு தடை என்று, ஒரு ‘கறுப்பு பட்டியலை’த் தயாரித்து, பெயர் விவரங்களை ஸ்ரீலங்கா அரசு வெளியிடவில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
இது, ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முடிவுதானே தவிர, இதுவே முடிந்த முடிவென்று எதுவுமில்லை.
விசாரணைகள் நடைபெற்று, தீர்ப்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் நம்புவதைப்போல, ஷவேந்தர சில்வா, சுற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால், பிரச்சினை முடிந்துவிடப்போகிறது.
ஆனால், ஸ்ரீலங்கா அரசாங்கம் என்ன செய்திருக்கிறது?
‘அடிக்கு அடி; பழிக்குப் பழி’ என்று மிகப் பழைமை வாய்ந்த, மனித நாகரிகத்துக்கு முன்னர், வேடுவர்களாக மனிதன் காடுகளில் அலைந்து கொண்டிருந்தபோது பின்பற்றிய, குணத்தைக்கொண்டு, தனது நாட்டு இராணுவத் தளபதிக்குப் பயணத்தடை விதித்த காரணத்தால், தானும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் ஒப்புக்கொண்ட உயர்ந்த உடன்படிக்கையிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக அறிவித்திருக்கிறது.
அதாவது, மேற்கொண்டு ஷவேந்திர டி சில்வாவையும் தன்னையும் சர்வதேச சமூகத்திடம் விட்டுவைக்க முடியாது; விட்டுவைத்தால் விசாரிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் அகப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தோடு, இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று இறங்கி ஓடியிருக்கிறது.
இந்த உடன்படிக்கையே, இலங்கை தொடர்பானதுதான் என்பதையும் மறந்து, தனக்கிருக்கின்ற ஜனநாயகப் பண்புகளையும் மறந்து, சண்டித்தனப் போக்குடன் அமெரிக்காவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தான் பாடம் புகட்டிக்கொண்டதன் திருப்தியோடு, சர்வதேச உடன்படிக்கையிலிருந்து விலகியிருக்கிறது.
ஸ்ரீலங்கா அரசாங்கம், நீதிக்கு புறம்பான வகையில் நடந்துகொண்டதாகக் கருதியதால், அமெரிக்கா இவ்வாறு நடந்துகொண்டதா? அல்லது, ஸ்ரீலங்காவை இவ்வாறு விலகப்பண்ணுவதன் மூலம், கோட்டாபய ஆட்சியின் சீத்துவத்தை அம்பலப்படுத்துவதற்கு, சர்வதேச சமூகம் முன்வைத்த பொறிதான் இதுவா என்பது பற்றித் தெரியவில்லை.
ஆனால், பல நாடுகளின் உடன்பாட்டுடன், தான் இணை அனுசரணை வழங்கிய ஓர் உடன்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக ஸ்ரீ லங்கா விலக, அதைத் தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரும் பன்னெடுங்கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவருமான தினேஷ் குணவர்தன கொஞ்சமும் கூச்சநாச்சம் இல்லாமல் ஜெனீவாவில் போய்க் கூறிவிட்டு வந்திருக்கிறார்.
அரசியல் மேதாவியும் சட்டப்புலமையும் கொண்ட ஜீ.எல். பீரிஸ் என்ற புத்திஜீவி, உள்நாட்டில், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை, ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆட்சியிலிருக்கும் சண்டியர்களுக்குத்தான் அரசியல் என்றால் என்ன என்று தெரிவதில்லை. ஜனநாயகம் என்றால், “கிலோ என்ன விலை” என்று கேட்கிறார்கள் என்றால், இவர்களுக்குமா புரிவதில்லை?
இவர்கள், கையைக்கட்டி வாயைப்பொத்தி, யாருக்காக சேவகம் செய்கிறார்கள்? மக்களுக்கான உயர் அதிகார சபையில் இருந்துகொண்டு, கண்ணியமான முடிவெடுக்காவிட்டாலும் பரவாயில்லை; நாய்வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டுமென்று விட்டுவிடலாம். இவர்கள் கற்ற கல்விக்கும் கடந்து வந்த அரசியல் ஞானத்துக்கும்கூட, உண்மையாக இருக்கமாட்டார்களா?
எங்கே போய்விட்டது, இவர்களது ஜனநாயகப் புரிந்துணர்வு?
இவர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் இராணுவ இரத்தம் ஏற்றப்பட்டுவிட்டதா? அல்லது, இவர்களும் கோட்டாபயவால் உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள்போல, இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர்தான் அரச சேவகத்துக்கு உள்வாங்கப்பட்டு இருக்கிறார்களா?
இதுதான் பல நாடுகளுக்குரிய பிரச்சினை. ஸ்ரீலங்காவுக்கும் காணப்படுகின்ற பிரச்சினை.
அதாவது, ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தை மாத்திரம் கவனத்திற்கொண்டு இயங்குவதும், தங்களது கதிரைகள் பறிபோய்விடக்கூடாது என்ற கனவோடு செயற்படுவதும் மலிந்துபோகும்போது, அடுத்த தலைமுறையைப் பற்றிய சிந்தனை முற்றாகவே தொலைந்துபோகிறது.
ஜெனீவா விவகாரத்தில் கோட்டாபய அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இந்தச் சர்வாதிகாரப்போக்கு, சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஸ்ரீலங்காவுக்கு எவ்வளவு பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு அப்பால், இதைச் சரிசெய்வதற்கு ஏனையவர்கள் படப்போகின்ற பாடு குறித்து, கோட்டாபய தரப்பினர் உட்பட, தினேஷ், பீரிஸ் போன்றவர்கள் மருந்துக்கும் சிந்திக்கவில்லை.
சட்ட ரீதியாகத் திருமணம் செய்து வைத்திருக்கிறேன் என்பதற்காக, சொந்த மனைவிக்கே கை நீட்ட முடியாதளவுக்கு உலக சட்டங்கள் இப்போது வளர்ச்சி பெற்றுவிட்டன. பெற்று வளர்த்த சொந்தப் பிள்ளையின் மீதே கை வைக்க முடியாத அளவுக்குச் சர்வதேச சட்டங்கள் கூர்மையாகி விட்டன.
ஜனநாயகம் என்பது, சட்ட முதிர்ச்சியின் ஊடாகப் பெரும் பெரும் தளங்களுக்குச் சென்று கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதை நிவர்த்தி செய்வதற்கான களங்கள் மிகக் கவனத்தோடு கையாளப்பட வேண்டியதாக மாறிவிட்டன.
ஆனால், கோட்டாபய தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கமோ, ‘நீ அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன்’ என்ற மனித நாகரிகத்துக்கு முற்பட்ட, காட்டு தர்பார் ஆட்சி அணுகுமுறையோடு, சர்வதேசத்தைச் சீண்டி விளையாடி, அதனை வீரம் என்று சொல்லித் தனது பெரும்பான்மையின மக்களிடம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதிலுள்ள துயரம் என்னவென்றால், இவ்வாறு தற்போது மார்தட்டுபவர்கள், நாளை ஏதாவதொரு துவாரத்தால் ஆட்சியிலிருந்து கழன்று விடக்கூடும்; சட்டங்களுக்கும் சுளித்துவிடக்கூடும்.
ஆனால், தாங்களும் தங்களது தலைமுறையினரும்தான், தற்போதைய நிலைவரங்களின் விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல், பெரும்பான்மையின மக்கள், தங்கள் தலைவர்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார்கள்.
அவர்கள் மாத்திரமல்ல, ஆட்சிக்கு கடிவாளம் போடவேண்டிய சமூக அமைப்புத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் எவருமே அரசாங்கத்தின் இந்த விட்டேந்திப்போக்குக் குறித்து, கரிசனை காண்பிக்கவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை.
கடிநாய்கள் மலிந்த ஊருக்குள், காலை தூக்கிக் கொண்டிருந்து தியானம் செய்தால், விரைவில் வரம் கிடைக்கும் என்ற கணக்கில் எல்லோரும் மௌனம் காக்கிறார்கள் போலும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago