2025 மே 17, சனிக்கிழமை

கனடாவில் நல்லாட்சிக்கான முன்மாதிரி ஆரம்பம்

Thipaan   / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஒக்டோபர் 19, 2015 என்பது, கனடாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கியமானதொரு நாளாகும். பிரதமராகவிருந்த ஸ்டீபன் ஹார்ப்பரின் அரசாங்கத்தைத் தோற்கடித்து, 43 வயதேயான ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 184 ஆசனங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, ஆட்சியும் அமைத்திருந்தது. இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வெறுமனே 36 ஆசனங்களை வென்றிருந்த அக்கட்சியின் வளர்ச்சியானது, பலராலும் எதிர்பார்க்கப்படாததாகவும் எதிர்வுகூறப்படாததாகவும் இருந்தது.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கெதிராக இத்தேர்தலில், அரசியல் அனுபவமற்ற தன்மையே, அவருக்கான பின்னடைவாகக் கருதப்பட்டது. முன்னாள் பிரதமரொருவரின் வாரிசு என்ற போதிலும் கூட, அரசியலில் அவருக்கான அனுபவமென்பது குறைவாகவே காணப்பட்டது. அவரது முதற்பெயரான 'ஜஸ்டின்' என்பதை, ஆளுங்கட்சியாக இருந்த பழைமைவாதக் கட்சியினர்,  இப்போது தான் வந்தவர் அல்லது கத்துக்குட்டி என்பதைக் காட்டுவதற்காக, ஆங்கிலத்தில் இரண்டாகப் பிரித்து 'ஜஸ்ட்' 'இன்' என, பிரசாரப்படுத்தியிருந்தனர். அவை அனைத்தையும் தாண்டியே வெற்றிபெற்றிருந்தார்.

வென்றதைத் தொடர்ந்து புதிய அரசாங்கம், கடந்த வாரம் பதவியேற்றது. அந்த அமைச்சரவையில் இருக்கின்ற பல விடயங்கள், முன்மாதிரியான ஒரு நல்லாட்சிக்கான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

தேர்தல் பிரசாரங்களின் போது, 'நான் வெற்றிபெற்றால், எனது அமைச்சரவையில் பாதிப் பேர், பெண்களாக இருப்பார்கள்' என வாக்குறுதி வழங்கியிருந்தார். சிறப்பான வாக்குறுதி போன்று தோன்றினாலும், வெறுமனே தேர்தல்கால வாக்குறுதியென்றே கருதப்பட்டது. ஆனால், 30 பேர் (பிரதமர் உட்பட 31) அமைச்சராகப் பதவியேற்கும் போது, பதவியேற்ற பெண்களின் எண்ணிக்கை? 15. ஆம், தேர்தல்கால வாக்குறுதியொன்று, அதுவும் கடினமான வாக்குறுதியொன்று, நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம், வெறுமனே, 50 சதவீத பெண்கள் காணப்பட வேண்டும் என்பதற்காக, குறியீட்டுக்காக இவர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக, ஏராளமான கல்வியறிவும், அதேபோல் அரசியலில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியவர்களாகவும் இருந்த காரணத்தினாலேயே, அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

134 ஆண்களிடத்திலிருந்து 15 பேரையும் 50 பெண்களிடத்திலிருந்து 15 பேரையும் தெரிவுசெய்வதென்பது, இலகுவானதல்ல. ஆண்களில் பலர், அனுபவசாலிகள் அல்லது மூத்த அரசியல்வாதிகளெனக் கருதப்படும் நிலையில், அவர்களில் சிலருக்கு அமைச்சரவைப் பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஆனால், தகுதியின் அடிப்படையிலேயே தெரிவு இடம்பெற்றதாக, பிரதமர் ட்ரூடோ தெரிவிக்கிறார்.

பதவியேற்பின் போது, எதற்காக இவ்வாறு 15 பெண்கள் (50 சதவீதம்) அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள் என, நிருபரொருவர் கேட்டதற்குப் பதிலளித்த பிரதமர் ட்ரூடோ, 'ஏனென்றால், இப்போது 2015(ஆம் ஆண்டு) '.

பெண்ணியவாதியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ட்ரூடோ, பெண்கள் மீதான கவனத்தை மாத்திரம் தான் செலுத்தினாரா என்றால், இல்லை. அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களும் சில அமைச்சுக்களின் பெயர் மாற்றங்களும், ஏராளமான நம்பிக்கையைத் தருகின்றன.

அவற்றில் குறிப்பிடத்தக்கனவாக, பல அமைச்சுக்களை ஒன்று சேர்த்து, புத்தாக்கம், விஞ்ஞானம் மற்றும் பொருளாதார அமைச்சு என்ற அமைச்சொன்று, இதுவரை காலமும் சுற்றுச்சூழல் அமைச்சு என்றிருந்தது, இனிமேல் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சு என்று மாறுகின்றது. உலகம் முழுவதிலும் காலநிலை மாற்றம் தொடர்பாக அரசியல்வாதிகளிடையே பல்வேறுபட்ட விவாதங்கள் இடம்பெறுகின்ற போதிலும், 2030ஆம் ஆண்டுக்குள் மேலதிகமாக 100 மில்லியன் பேரை வறுமைக்குள் தள்ளுமென உலக வங்கி எதிர்வுகூறும் காலநிலை மாற்றம் தொடர்பாக அரசாங்க மட்டங்களில் பெரிதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. ஆனால், இந்த அமைச்சானது, அவ்விடயத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தீவிரமாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இன்னொன்றாக, பல்வேறு அமைச்சுக்களின் விடயதானங்கள் மாற்றப்பட்டு, குடும்பங்கள், சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைச்சு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டில், இளைஞர்களுக்கான அமைச்சு இருந்ததில்லை, ஆகவே, பிரதமரின் கீழ் அந்த அமைச்சு வந்திருக்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, குடியுரிமை, குடிவரவு அமைச்சுக்கு நடந்தது தான். அந்த அமைச்சு, குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு எனப் பெயர் மாறியிருக்கிறது. அகதிகளுக்கான அமைச்சு.

ஜனவரி 8ஆம் திகதி, இலங்கையில் தேர்தல் நடக்கும் போது, மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சி அமைக்கப்படுமாயின், நல்லாட்சி உருவாக்கப்பட்டு, 'விஞ்ஞான முறையைப் பயன்படுத்தி' அமைச்சுப் பதவிகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஓகஸ்டில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து வழங்கப்பட்ட அமைச்சுகள், அக்கருத்துக்கு மாறாகவே அமைந்திருந்தன. சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு, பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு (பின்னர் அது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் என மாறியிருந்தது), உள்நாட்டலுவல்கள் அமைச்சு என ஓர் அமைச்சு - உள்ளக அலுவல்கள் என மற்றொரு அமைச்சு என்பன, வழங்கப்பட்ட சில அமைச்சுக்களின் உதாரணங்கள். சுற்றுலாத்துறைக்கும் மத விவகாரங்களுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் உயர்கல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இவற்றைப் பார்க்கும் போது தான், கனடாவின் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட அமைச்சுப் பதவிகளின் உருவாக்கம், அதிக நம்பிக்கையை வழங்குகின்றது.

இவற்றைவிட, அமைச்சர் சிலரின் சிறப்பியல்புகளைப் பார்த்தால், பிரதமர் பொறியியல் படித்திருக்கிறார், விஞ்ஞானம் மீது அதிக ஆர்வத்தைக் கொண்டவராவார். சுகாதார அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் ஜேன் பில்பொட், ஒரு வைத்தியர். ஆபிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் கல்வியை ஊக்குவித்தவர், எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தொடர்பாக தனது நடவடிக்கைகளுக்காகவும் உடல்நலம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும் அறியப்பட்டவர். விஞ்ஞான அமைச்சராகப் பதவியேற்றிருப்பவர், ஒரு விஞ்ஞானி என்பதோடு, நொபெல் பரிசு வெற்றியாளருமாவார். பெண்களுக்கான அமைச்சர் பொது நிர்வாகத்தில் முதுகலைமாணிப் பட்டம் வென்ற பெண். ஜனநாயக நிறுவகங்களுக்கான அமைச்சர், ஆப்கானிஸ்தானில் பிறந்த முஸ்லிம் பெண். அங்கிருந்து அவர், ஈரான், பாகிஸ்தான், ஜோர்டான் ஊடாக, கனடாவை அடைந்தவர். விளையாட்டுத்துறை மற்றும் அங்கவீனமுடைய நபர்களுக்கான அமைச்சராகப் பதவியேற்றுள்ளவர், பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய, சட்டம் தொடர்பாக பட்டத்தைக் கொண்ட, ஒரு வழக்கறிஞர் - அத்தோடு பெண். பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர், இந்தியாவில் பிறந்த சீக்கியரொருவர். பொலிஸ் துறையில் 11 வருடங்கள் பணிபுரிந்து, அதன் பின்னர் இராணுவத்தில் இணைந்து, பொஸ்னியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியவர். இவ்வாறு, அமைச்சர்களின் திறனும் தகதிகளும் மலைக்க வைக்கின்றன.

அதற்காக, விஞ்ஞானிகளால் மாத்திரம் தான் சிறப்பான ஆட்சியை வழங்க முடியுமென்ற வாதத்தை முன்வைக்க முடியாது. படித்தவர்களுக்கும் அரசியல் நேர்மைக்குமிடையில் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவும் முடியாது. அரசியல்வாதிகளென மாறிவிட்டால், எந்தளவு 'நல்லவர்களும்' கபடதாரிகளாக மாறுவதையெல்லாம் வரலாறுகள் மூலமாகக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். கல்வியறிவற்றவர்கள், சிறப்பான ஆட்சியையும் நிர்வாகத்தையும் வழங்குவதையும் கண்டிருக்கிறோம். ஆனால், பல்வகைமைப்பட்ட கல்வியலாளர்களும் அனுபவஸ்தர்களும் உள்ள இந்த அமைச்சரவையில், ஏட்டுக் கல்வியைத் தாண்டியதொரு தகுதி இருப்பதைக் காண முடிகிறது.

அதேபோல், பல்வகைமை என்று கதைக்கும் போது, மூன்று அமைச்சர்கள் கனடாவுக்கு வெளியே பிறந்தோர், இரண்டு சீக்கியர்கள், ஒரு முஸ்லிம், இரண்டு வெளிப்படையான நாத்திகர்கள், ஒருவர் வெளிப்படையான சமபாலுறவாளர், சக்கரக் கதிரையில் இருப்பவர் ஒருவர், பார்வையற்ற ஒருவர் என, இந்தப் பல்வகைமையை இரசிக்காமல் இருக்க முடியாது. நல்லாட்சியென்பது, அனைத்துச் சமூகத்தையும் ஒன்றிணைத்து, அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துச் செல்கின்ற, பொதுமக்களுக்குத் தேவையானவற்றைச் செய்கின்ற ஒன்றாகவே இருக்க வேண்டும். அந்த வகையில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான இந்த அமைச்சரவை, நல்லாட்சிக்கான முன்மாதிரியான தனது இயல்புகளைத் தெளிவுற வெளிப்படுத்தியிருக்கிறது. இனிமேல், தேர்தல் பிரசார காலங்களில் அவர்களால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய, உண்மையான மாற்றத்தை வழங்குவது தான், அவர்களுக்கிருக்கின்ற பிரதான சவால். ஆனால், பல்வகைமையும் தகைமையும் மிக்க இந்த அமைச்சரவையால், அவற்றை நிச்சயம் மேற்கொள்ள முடியுமென்றே எண்ணத் தோன்றுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .