Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், இணைந்து கொள்ளப் போவதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, ஊடகங்களில் ஒரு பரபரப்புத் தென்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிந்து சென்ற கருணா, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதும்- பின்னர், பிரதி அமைச்சர், சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும் கடந்தகால வரலாறு.
ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி, கருணாவையும் பாதித்தது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அவர், செல்லாக்காசாக மாறிய நிலையில் தான், சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் கருணா.
எனினும், இதுபற்றிய இறுதியான முடிவை அவர் அறிவிக்கவில்லை.
அதேவேளை, கருணா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தரப்பினரையும் ஒன்றிணைத்து புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி.
ஆனந்தசங்கரியும் சரி கருணாவும் சரி, அரசியல் ரீதியாக இப்போது செல்வாக்கற்ற நிலையில் தான் இருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இருவருக்குமே, 2004ஆம் ஆண்டு தீர்க்கமான ஓர் ஆண்டாக இருந்தது. அப்போது கருணா, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சக்திவாய்ந்த தளபதியாக இருந்தார்.
ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் நிலையில் இருந்தார். மு.சிவசிதம்பரத்தின் மரணத்தின் பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவி, ஆனந்தசங்கரிக்குச் சென்றிருந்தது. இதனால், அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில், தமிழ்க் காங்கிரஸ், டெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தலைமை தாங்கும் வாய்ப்பும் ஆனந்தசங்கரிக்கே கிடைத்தது. ஆனால், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஆனந்தசங்கரி, கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட மறுத்து, தனித்துப் வேட்பாளர்களை நிறுத்தினார்.
அப்போது தான், தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டது.
அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஆனந்தசங்கரி தனித்து வேட்பாளர்களை நிறுத்தி, மூக்குடைபட்டுக் கொண்டார்.
அதற்குப் பின்னர், ஆனந்தசங்கரியாலோ, தமிழர் விடுதலைக் கூட்டணியாலோ எந்தத் தேர்தலிலும் அரசியல் ரீதியாக வெற்றிபெற முடியவில்லை.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்ட போதும், அவருக்கு, 2,896 வாக்குகள் தான் கிடைத்தன.
இவரை விட ஒன்பது, பத்து மடங்கு விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களே வெற்றி பெற்றனர்.
இந்தளவுக்கு, மக்களின் தீர்ப்பினால், அரசியல் ரீதியாக அவர், நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்.
ஆனந்தசங்கரி, கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறி, நடுத்தெருவுக்கு வந்த அதேகாலகட்டத்தில் தான், கருணாவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.
அவர் தனியான குழுவாக இயங்கினார், தனிக்கட்சியை தொடங்கினார், சுதந்திரக் கட்சியில் இணைந்து பிரதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட முடியவில்லை. போட்டியிட்டால், தோல்வியடைவேன் என்பதை கருணா அறிந்திருந்தார். அதனை அவரே இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டும் இருந்தார்.
தேர்தலில் போட்டியிட துணிவற்றிருந்த அவரை சுதந்திரக் கட்சி ஓரம் கட்டி விட்ட நிலையில் தான், தமிழர் விடுதலைக் கூட்டணியின் பக்கம் அவரது காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியேறிய போது, அதனை நியாயப்படுத்துவதற்காக கருணா பிரதேசவாதத்தையே முன்வைத்திருந்தார்.
புலிகள் இயக்கத்தின் துறைசார் பொறுப்பாளர்களாக, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே இருப்பதாகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை பலிக்கடாக்களாகவே பயன்படுத்துவதாகவும், அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
அவரது அந்தப் பிரதேசவாதம் அந்தக் காலகட்டத்தில், புலிகள் இயக்கத்தையே ஆட்டம் காண வைத்தது. மட்டக்களப்பு மக்களில் கணிசமானோர் அதனை நம்பினர். கருணாவையும் ஆதரித்தனர். ஆனால் கடைசியில், அவர்களை ஏமாற்றி விட்டு சுதந்திரக் கட்சியில் தொற்றிக் கொண்டார் கருணா. இப்போது அவர், ஒஸ்லோ பேச்சுக்களில், சமஷ்டித் தீர்வுக்கு இணக்கம் தெரிவித்ததற்காக புலிகளின் தலைமை தன்னை துரோகி என்று கூறியதால் தான், இயக்கத்தில் இருந்து தான் விலகியதாக கூறி வருகிறார்.
புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிய போது அவர், இதனைக் கூறவில்லை. அவர் அப்போது பேசியதெல்லாம் பிரதேசவாதம் மட்டும் தான்.
வடக்கின் தலைமைக்கு எதிராக பிரதேசவாதம் பேசி, கிழக்கின் தனித்துவத்தை பேணப் போவதாகவும், தனித்துவமான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தப் போவதாகவும் கூறிய கருணா, இன்று ஆனந்தசங்கரியின் வடக்குத் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்.
ஆனந்தசங்கரியும், கூட புலிகளுடன் முரண்பட்டுக் கொண்டு, தனித்து வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்து விட்டு, இப்போது புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளாததால் தான், துரோகியாக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
அதனைப் பயன்படுத்தியே
இரா.சம்பந்தன் தனது ஆசனத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இன்றைக்கும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்காக கொட்டாவி விடுகிறார் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
கருணாவும் ஆனந்தசங்கரியும், 2004ஆம் ஆண்டு எடுத்த தவறான முடிவுகள் தான், அவர்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறது.
விடுதலைப் புலிகளுடன், இவர்கள் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடு, புலிகள் இல்லாத காலத்திலும் கூட இவர்களை அரசியல் ரீதியாகத் தலையெடுக்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் குறித்த மாறுபட்ட விமர்சனங்கள் தமிழ் மக்களிடம் இருந்தாலும், அவர்களைத் தமது தலைமையாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. அந்த நிலைக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்த, கருணாவும் ஆனந்தசங்கரியும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை ஆதரித்தனர். அதுவே அவர்களை அரசியல் சூனிய நிலைக்கு இழுத்துச் சென்றது.
இப்போது இவர்களை நம்பி வாக்களிக்க மக்களே தயாராக இல்லாத நிலையில், தமிழ் மக்களின் நலனுக்காக புதிய அரசியல் கூட்டணியை அமைக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அண்மைக்காலமாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆனந்தசங்கரி, கூட்டமைப்புக்குள் காணப்படும் முரண்பாடுகளைச் சாதகமாக்கிக் கொண்டு, தலையெடுக்க எத்தனிக்கிறார்.
ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியான ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் சில யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டன. அதில் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி உள்ளிட்ட சிலரும் தொடர்புபட்டிருந்தனர். எனினும் அது அரசியல் ரீதியான கூட்டணியாக உருவெடுக்கவில்லை.
இப்போது அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், உள்ள சிலரை இழுத்து, தனது கூட்டணியைப் பிரபலப்படுத்திக் கொள்ளலாம் என்று எத்தனிக்கிறார்.
அதுபோலவே, இனிமேல் சுதந்திரக் கட்சியின் ஊடாக தன்னால் அரசியல் நடத்த முடியாது என்ற கட்டத்துக்கு வந்திருக்கும் கருணாவும், ஆனந்தசங்கரியுடன் கைகோர்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
இந்த இரண்டு பேரினதும், அல்லது இவர்கள் இணைந்து உருவாக்கப் போகும் அரசியல் கூட்டணி என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றானதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், இந்தப் புதிய கூட்டணி உருவாகுமோ இல்லையோ, இதனை உருவாக்க முயற்சிப்பவர்கள், மக்களின் ஆதரவை இழந்து போயிருப்பவர்கள் தான்.
அரசியல் செல்வாக்கை இழந்து போயுள்ள இவர்கள், தற்போதைய சூழலில், எதற்காக மாற்று அணியொன்றை உருவாக்க எத்தனிக்கிறார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும், அல்லது உடைக்கும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்குள், இவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் இத்தகைய கட்டத்தில் தமிழ் மக்களுக்குள் எழுவது இயல்பு.
2004ஆம் ஆண்டு, தமிழர் தரப்பு பலமான நிலையில் இருந்த போது பலவீனப்படுத்துகின்ற கருவிகளாக மாறியிருந்தவர்கள் தான், இப்போது, அரசியல் ரீதியாக கூட்டமைப்பு வலுவுடன் இருக்கின்ற நிலையிலும், கருவிகளாக்கப்படுகின்றனரோ என்ற கேள்வியும் உள்ளது.
அதேவேளை, இப்போதுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த முனையும் சக்தி அல்லது சக்திகள் எது என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது. இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இதுபற்றிய செய்திக்கு 'நுஒ-டுவுவுநு ஊழஅஅயனெநச முயசரயெ வுழ துழin Pசழ-ஐனெயை வுருடுகு' என இட்டிருந்த தலையங்கம் கவனத்தை ஈர்த்தது.
'விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா, இந்திய ஆதரவு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.' என்பதே அதன் மொழியாக்கம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
31 minute ago
2 hours ago